Skip to content

பாடகரை கல்யாணம் பண்ண மாட்டேன்!

September 16, 2012

பாடகரை கல்யாணம் பண்ண மாட்டேன்!

பின்னணிப் பாடகியாக மட்டுமல்ல, பின்னணி குரல் கொடுப்பவராகவும் தன் குரல் இனிமையால் வசீகரித்துக் கொண்டிருக்கும் சின்மயியை சந்திக்கிறார்கள் பி.ஹெச்டி மாணவி அருணா, இல்லத்தரசி தேவகுமாரி, கைவினைக்கலைஞர் உஷா குமாரி ஆகியோர். சென்னை வடபழனியில் உள்ள அம்பிகா எம்பயர் நட்சத்திர ஹோட்டலில் உள்ள ரம்மியமான கான்பரன்ஸ் ஹாலில் நடந்தது இவர்களின் அரட்டை! வயது வித்தியாசம் இல்லாமல் படு ஜாலியாக நடைபெற்ற உரையாடலிலிருந்து…
அருணா: சின்மயிங்கிற பேரே ரொம்ப வித்தியாசமா இருக்கே… என்ன அர்த்தம்?
‘‘பெற்றோர் வச்ச பேர்… லலிதா சகஸ்ர நாமத்துல வரும். அம்பாளோட பேர். ‘பரமஞானம்’னு அர்த்தமாம்!’’
தேவகுமாரி: நீங்க சினிமாவுக்கு வந்தது எப்படி?

‘‘சன் டி.வியில வந்திட்டிருந்த ‘சப்தஸ்வரங்கள்’ நிகழ்ச்சியில கலந்துக்கிட்டேன். அதுல என்னைப் பார்த்த பாடகர் ஸ்ரீனிவாஸ் சார், ஏ.ஆர்.ரஹ்மான் சார்கிட்ட அறிமுகப்படுத்தி வச்சார். முதல் படம் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’. ‘ஒரு தெய்வம் தந்த பூவே’தான் எனக்கு அறிமுகப் பாடல்…’’

உஷா குமாரி: முதல் பாட்டு பாடின அந்த அனுபவம் எப்படி இருந்தது?

‘‘ஸ்கூல்ல படிச்சிட்டிருந்தேன். ரஹ்மான் சார் ஸ்டூடியோ… வைரமுத்து சார் வந்தார். எங்கம்மா என்கிட்ட ‘யார்னு தெரியறதா’ன்னு கேட்டாங்க. ‘தெரியலையே’ன்னேன். அப்போ எனக்கு அவ்ளோதான் தெரியும். ‘தெய்வம் தந்த பூவே’ பாட்டோட இசையின் அற்புதத்தைப் புரிஞ்சுக்கிற அளவுக்கு அப்போ எனக்கு விவரம் பத்தாது. ஆடியோ ரிலீஸ் அன்னிக்கு, வைரமுத்து சார், காலையிலயே எனக்கு போன் பண்ணினார். ‘இந்த வருடத்தின் மிகச்சிறந்த பாடலாக பேசப்படும், வாழ்த்துகள்’னு சொன்னார். அவர் மட்டுமில்லை… அந்தப் பாட்டைக் கேட்டுட்டுப் பாராட்டாத ஆளே இல்லை. நிச்சயம் அவார்ட் கிடைக்கும்னு சொன்னாங்க. ‘எங்கேயோ போகப் போறே’ன்னாங்க… ஆனா, அதுக்கு ஒரு அவார்ட் கூடக் கிடைக்கலை.

‘சின்மயி’ங்கிற என் பேரைப் பார்த்துட்டு, நான் தமிழ்ப்பொண்ணே இல்லைன்னு முடிவு பண்ணிட்டாங்க. ரெண்டாவது ஹிட் கொடுக்கறது எனக்குப் பெரிய போராட்டமாதான் இருந்தது. எல்லா விருதுகளும் அப்போ ‘ஜெமினி… ஜெமினி…’ பாட்டுக்குப் போச்சு. அப்போ நாலஞ்சு வருஷத்துக்கு குத்துப்பாட்டு சீசனா இருந்தது. ஒரே பாட்டை நாலஞ்சு பாடகிகளை வச்சுப் பாட வைக்கிற டிரெண்ட் வந்தது. அதுல யாருக்கு அவார்ட் கொடுப்பாங்க? இதுக் கிடையிலேயும் ‘கிறுக்கா கிறுக்கா’, ‘என்ன இது என்ன இது…’, ‘சந்திப்போமா’ன்னு நல்ல பாடல்கள் எனக்கு வந்தது. கிட்டத்தட்ட பத்து வருஷப் போராட்டத்துக்குப் பிறகு மறுபடி நான் தலையெடுக்க ஆரம்பிச்சேன். என் கேரியர்ல மறுமலர்ச்சியை உண்டாக்கினதுன்னா ‘சிவாஜி’ படத்துல ‘சஹானா…’ பாட்டைத்தான் சொல்லணும்…’’

அருணா: உங்களோட ப்ளஸ் பாயிண்ட் என்ன? மைனஸ் பாயிண்ட் என்ன?
‘‘மனசுல பட்டதை அப்படியே போட்டு உடைச்சிடுவேன். அடுத்தவங்க என்ன நினைப்பாங்களோன்னு யோசிக்க மாட்டேன். என் பிளஸ், மைனஸ் ரெண்டுமே இதுதான். என்னோட இந்தக் குணத்துக்காகவே நான் எந்த ரியாலிட்டி ஷோவுக்கும் ஜட்ஜா போறதில்லை. ஒருத்தர் நல்லாப் பாடலைன்னா, ‘நல்லா இல்லை’ன்னு பளிச்சுன்னு சொல்லிடுவேன். ஆனா, அது மத்தவங்களுக்கு சரியா படறதில்லை. நல்லாப் பாடலைன்னாலும், அவங்களை என்கரேஜ் பண்ற மாதிரி பாராட்டிப் பேசணும்னு எதிர்பார்க்கறாங்க. எனக்கு அது வராது.’’

தேவகுமாரி: சக பாடகர், பாடகிகளோட உங்களுக்கு எந்தளவுக்கு நட்பு இருக்கு? உங்களோட க்ளோஸ் ஃபிரெண்ட் யாரு?
‘‘சொன்னா நம்ப மாட்டீங்க… பல நாள் எங்கம்மாகிட்ட பேசக்கூட டைம் இருக்காது. காலைல டப்பிங், சாயந்திரம் ரெக்கார்டிங்னு கால்ல சக்கரம் கட்டின மாதிரி ஓடிக்கிட்டே இருக்கேன். சக பாடகர்கள் எல்லாரையும் தெரியும். ஆனா, யார்கூடவும் அவ்ளோ நெருக்கமான நட்பு வச்சுக்க டைம் அனுமதிக்கிறதில்லை. பாடலாசிரியர் மதன் கார்க்கியோட ஒயிஃப் நந்தினி நல்ல ஃபிரெண்ட். நினைவு தெரிஞ்ச நாள்லேருந்து, இப்ப வரைக்கும் எங்கம்மாதான் என் பெஸ்ட் ஃபிரெண்ட். இதை நான் சொன்னா, நிறைய பேருக்கு ஆச்சரியமா இருக்கும். ஆனாலும் அதுதான் உண்மை!’’

அருணா: பாடகியா பிஸியா இருக்கிறப்பவே திடீர்னு டப்பிங் பேச ஆரம்பிச்சிட்டீங்களே… பாட்டுப் பாடுறது போரடிச்சிருச்சா?
‘‘ஐயையோ… யாரைப் பார்த்து என்ன கேள்வி கேட்டுட்டீங்க… பாட்டுதான் எனக்கு உசுரு. டப்பிங் பேச வாய்ப்பு வந்தப்ப முதல்ல ரொம்பத் தயங்கினேன். கதாநாயகிகளுக்கே உரிய கீச்சுக்கீச்சு குரலோ, கொஞ்சல் குரலோ சத்தியமா எனக்கு வராது. ‘‘சில்லுனு ஒரு காதல்’’ படத்துல பூமிகா கேரக்டருக்கு பேசணும்’’னு சொல்லி ரஹ்மான் சார் ஆபீஸ்லேருந்து போன். ‘சரி பேசுவோம்… அவங்களே வேணாம்னு அனுப்பிடுவாங்க’ன்னு நினைச்சுத்தான் போனேன். மை காட்..! என் குரல் அவங்களுக்குப் பிடிச்சிருச்சு. டப்பிங் பேசுறது அப்படி ஆரம்பிச்சதுதான். அன்னிலேருந்து தொடர்ந்திட்டிருக்கு. லேட்டஸ்ட்டா ‘மாற்றான்’ படத்துல காஜல் அகர்வாலுக்கு நான்தான் டப்பிங் பேசியிருக்கேன்.
‘பாட்டா, டப்பிங்கா’ன்னு கேட்டா, என் சாய்ஸ் பாட்டுதான். ஏன்னா, என்னால பாடாம இருக்க முடியாது. பாடலைன்னா நான் செத்துடுவேன். பாட்டுங்கிறது கடவுள் எனக்குக் கொடுத்த கிஃப்ட். மற்ற வாய்ப்புகள் எல்லாம் தேடி வந்தது. எந்தக் காலத்துலயும் என்னால பாட்டை விட்டுட்டுப் போகவே முடியாது.’’

தேவகுமாரி: டப்பிங் பேசுறப்ப நடந்த சுவாரஸ்யமான சம்பவம் ஏதாவது இருக்கா?
‘‘முதல் படமே செம எக்ஸ்பீரியன்ஸ்தான். டப்பிங்ல நினைச்சா சிரிக்கிறதும், நினைச்சா அழறதும் எனக்கு வரவே இல்லை. ‘சில்லுனு ஒரு காதல்’ படத்துல பூமிகா அழற சீன்ல, நான் என் கண்ல கிளிசரின் எல்லாம் போட்டுக்கிட்டு, நிஜமாவே அழுகையை வரவழைச்சுக்கிட்டு, அதே எஃபெக்ட்டுல பேசினேன். கிளிசரின் போட்டுக்கிட்டு டப்பிங் பேசின ஒரே ஆளு நானாதான் இருப்பேன்.
‘நடுநிசி நாய்கள்’ படத்தில சமீரா அடி வயித்துலேருந்து கத்தி, அலறுவாங்க. அந்தப் படத்துல அவங்களுக்குப் பேசிப் பேசி, கிட்டத்தட்ட ஒன்றரை மாசத்துக்கு எனக்குக் குரலே போச்சு. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ டப்பிங்ல எனக்குப் பெரிய திருப்பு முனையா அமைஞ்ச படம். மிகப்பெரிய ரீச். தெலுங்கு வெர்ஷன்ல த்ரிஷாவோட கேரக்டர் பண்ணின சமந்தாவுக்கும் நான்தான் பேசினேன். தமிழைவிட தெலுங்குல இன்னும் அதிக ரீச்சாச்சு…’’

உஷா குமாரி: நீங்க டப்பிங் பேசினதைக் கேட்டுட்டு, சம்பந்தப்பட்ட நடிகைகள் உங்களைப் பாராட்டியிருக்காங்களா?
‘‘ஓ… சமீரா ரெட்டி, சமந்தா எல்லாரும் பாராட்டியிருக்காங்க. இந்த இடத்துல நான் தெலுங்குப் பட ரசிகர்களைப் பத்தி சொல்லியே ஆகணும். சமந்தாவுக்காகப் பேசின எனக்கும், அங்க தனியா ஒரு ரசிகர் மன்றமே இருக்கு. பத்து தடவை படத்தைப் பார்த்தாலும், பத்து முறையும் தியேட்டர்ல பார்க்கிற நேர்மை அவங்களுக்கு இருக்கு. ஆனா நம்மூர் ஆளுங்க, முதல் முறையே டி.வி.டில, அதுவும் திருட்டு டி.வி.டில பார்க்கறாங்க. திருட்டுங்கிறது குற்றம்னா, இதுவும் அப்படித்தானே..? யார் உழைப்பை, யார் திருடறது?’’

அருணா: இவ்வளவு அழகா இருக்கீங்களே.. சினிமாவுல நடிப்பீங்களா சின்மயி?

‘‘நடிக்கிறதுக்கு எக்கச்சக்க வாய்ப்புகள் வந்திருக்கு. அப்போதும் இப்போதும் எப்போதும் என் பதில் – ‘ஸாரி’. என்னாலல்லாம் நடிக்க முடியுமான்னு யோசிச்சுக்கூடப் பார்க்க முடியலை. நடிகைங்களோட வாழ்க்கையை வெளியில இருந்து பார்த்து, பிரமிச்சுப் போறோம். அவங்களுக்கென்ன குறைன்னு பேசறோம். ஆனா, குளிர், மழைன்னு கண்ட சீசன்லேயும், குட்டியூண்டு டிரெஸ் போட்டுக்கிட்டு, அந்தக் கஷ்டத்தைத் துளிக்கூட முகத்துல காட்டிக்காம, சிரிச்சுக்கிட்டும், ரொமான்ஸ் பண்ணிக்கிட்டும் நடிக்கிறாங்க. பாலைவனத்துல ஷூட்டிங் நடக்கும். டாய்லெட் வசதி இருக்காது. உடம்பை உறைய வைக்கிற பனிப்பிரதேசத்துல ஷூட் பண்ணிட்டிருப்பாங்க. கொஞ்சம் குளிர் தாங்காம, விரல் முடங்கினாலும் போச்சு… அதோட அவங்க வாழ்க்கையே காலி. ஸ்கிரீன்ல பார்க்க எல்லாமே பிரமாண்டமா, அழகாத்தான் தெரியும். ஆனா, நெருங்கிப் பார்த்தாதான் நடிகை களோட வாழ்க்கை எவ்வளவு கஷ்டம்னு புரியும். அத்தனை கொடுமைகளும் எனக்கெதுக்கு? நான்பாட்டுக்கு பாடறேன்… எனக்குப் பிடிச்ச மாதிரி வாழறேன்… நடிப்பெல்லாம் வேணாம்மா… ஆளை விடுங்க…’’

தேவகுமாரி: எப்போ கல்யாணம்? பாடகர் யாரையாவது கல்யாணம் பண்ற ஐடியா இருக்கா?

‘‘கூடிய சீக்கிரம் எனக்கு கல்யாணம் பண்ணணும்னு அம்மா சொல்லிட்டாங்க. வாழ்க்கையில கல்யாணம், குடும்பம், குழந்தைகள் எல்லாம் முக்கியம்தான். கல்யாணம் பண்ணிக்கணுமேன்னு பண்ணிக்க நான் தயாரா இல்லை. பாடகரை நிச்சயம் கல்யாணம் பண்ண மாட்டேன். என் பாட்டை ரசிக்கத் தெரியுதோ, இல்லையோ பாராட்டத் தெரியுதோ, இல்லையோ எனக்குக் கவலையில்லை. ஆனா, பாடறதுக்குத் தடை விதிக்காத நபரா இருக்கணும். எந்தக் காரணத்துக்காகவும் பாட்டை நான் விட்டுக் கொடுக்க மாட்டேன். என்னையும், என் இசையையும் மதிக்கத் தெரிஞ்ச ஒருத்தரைத்தான் என்னால லைஃப் பார்ட்னரா ஏத்துக்க முடியும்.’’

– ஆர்.வைதேகி
படங்கள்: மாதவன்

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: