Skip to content

தமிழ் பேசும் நடிகைகளுக்கு வாய்ப்பு இல்லையா?

October 1, 2012

தமிழ் பேசும் நடிகைகளுக்கு வாய்ப்பு இல்லையா?

அழகான பெண்ணை மூக்கும் முழியுமாக இருப்பதாகச் சொல்வார்கள். அப்படியானால் மூக்கு சிறியதாக, விழிகள் பெரிதாக இருந்தால்..? ‘அவள் பேரழகியாகவும் இருக்கலாம்…’ என்பதன் உதாரணம் ஜனனி அய்யர். பாலாவிடம் ‘அவன் இவனி’ல் கற்ற பாலபாடமே கல்லூரிப் படிப்புக்கு நிகரானதாக மாறிப்போக, தொடர்ந்த கைநிறைந்த வாய்ப்புகளில் கவனமாக ‘பாகனி’ல் மட்டும் நடித்து விட்டு மேலும் சிறந்த வாய்ப்புகளைப் பதற்றமில்லாமல் எதிர்நோக்கியிருக்கிறார். ‘‘நான் நடிகையாகணும்னு நினைச்சதேயில்லை…’’ என்று ஜனனி சொல்லும் காரணத்தைப் பொதுவான நடிகையின் கூற்றாக ஒதுக்கிவிட வேண்டியதில்லை. காரணம், எஞ்சினியரிங் பட்டம் பெற்றவர் அவர். ‘‘அடுத்து எம்.பி.ஏவுக்காக ஆஸ்திரேலியா ‘வாலங்காங் யுனிவர்சிட்டி’யில சீட்டும் கிடைச்சு கிளம்ப வேண்டிய நேரத்துல பாலா சார் பட வாய்ப்பு வந்தது. ‘படிப்பா, பாலாவா’ன்னு மனசுக்குள்ள சின்ன பட்டிமன்றம் நடத்தி, நல்ல வாய்ப்புங்கிறதுக்காக நடிக்க வந்தேன். நடிப்பும் நல்ல புரொபஷன்னு தெரிஞ்சதுல, இனி இப்படியே தொடர இருக்கேன்…’’ என்று சிலிர்த்தபடி ஜனனி சொல்ல, அவரது கண்கள் ‘பொய்யில்லை…’ என்றன.

‘‘பாலா சார்கிட்ட நடிச்சப்ப அவர் சொன்னதை மட்டும் செய்தேன். படம் பார்த்தவங்க, ‘உன் நடிப்பு பிரமாதம்…’னாங்க. அவர்கிட்ட கத்துக்கிட்ட முக்கியமான விஷயமே, நல்ல படங்கள்ல நடிக்கணும்ங்கிறதுதான். நடிகைக்கு முக்கியத்துவம் இருக்கிற படங்கள் வர்றதே அரிதாகியிருக்கிற சூழல்ல, அப்படி வந்த ‘பாகனை’த் தேர்ந்தெடுத்தேன். இனியும் நல்ல கதைக்காகவே காத்திருக்கேன்…’’
‘‘அப்படின்னா சூர்யா, ஆர்யாவோட நடிக்க வாய்ப்பு வந்தாலும் கதை பிடிக்கலைன்னா ஒத்துக்க மாட்டீங்க..?’’

‘‘ஆரம்பிச்சுட்டீங்களா..? கதை சரியில்லைன்னா அவங்க முதல்ல ஒத்துப்பாங்களா..? நடிக்க வந்தபிறகு, முதல்நிலை ஹீரோக்களோட நடிக்கிறதுதான் சரியான தேர்வா இருக்கும். அப்படி எல்லோரையும் போலவே ரஜினி, கமல்ல தொடங்கி அஜித், விஜய், விக்ரம், சூர்யான்னு ஜோடியாகிற கனவு எனக்கும் இருக்கவே செய்யுது. நல்ல ஹீரோக்களை நம்பாம கதைகளை மட்டும் நம்பற டைரக்டரா..? அப்படின்னா பொம்பளை ‘சேது’வா நடிக்கவும் நான் ரெடி. இதுல ‘விக்ரமின் பெரிய ரசிகை நான்…’ங்கிறதும் இருக்கு. அவர் நடிப்பு ‘வாவ்..!’

நடிகைன்னா ஸ்ரீதேவிதான். இந்தக் காலகட்டத்துல த்ரிஷா. காலங்களைத் தாண்டி நிற்கிற இவங்க ஒருபக்கம் கமர்ஷியல் ஹீரோயின்களாகவும், இன்னொரு பக்கம் நல்ல நடிகைன்னும் பேரெடுத்தாங்க இல்லையா..? அதுதான் லட்சியம். சமீபத்துல ‘பர்ஃபி’ பார்த்து கலங்கினேன். அது ஆஸ்கருக்கு தேர்வானதுல சந்தோஷம்தான். அப்படி பேர் சொல்ற கேரக்டர் வந்தா ‘பர்ஃபி’ மாதிரி சாப்பிட்ருவேன். இங்கே ‘வழக்கு எண் 18/9’ பிடிச்சிருந்தது..!’’

சுத்தமாக தமிழ் பேசும் ஜனனியிடம், ‘‘இங்கே தமிழ் பேசத் தெரிஞ்ச நடிகைகளுக்கு மதிப்பு இருக்கிறதா..?’’ என்று கொக்கி போட்டால், ‘‘கண்டிப்பா இருக்குன்னுதான் நினைக்கிறேன். மேலே சொன்ன ஸ்ரீதேவியும், த்ரிஷாவுமே நல்ல உதாரணங்கள். இதோ இப்ப எனக்கும் வாய்ப்புகள் வந்துட்டுத்தான் இருக்கு. தமிழ் பேசத் தெரியறது தமிழ்ப்படங்களுக்கு நல்லதுதானே..?’’ என்கிறார்.
‘‘உங்க அழகான கண்களை இன்ஷ்யூர் செய்துட்டீங்களா..?’’

‘‘அப்படி ஒரு நிலைமை வந்தா சந்தோஷமா செய்யலாம்…’’ என்று சிரிக்கும் ஜனனி, ‘‘தளர்ச்சி யாகிடாம நல்ல ஓய்வு கொடுத்தா கண்கள் பொலிவா இருக்கும்…’’ என்று டிப்ஸும் தருகிறார். நல்ல குரல்வளத்துடன் இருக்கும் ஜனனிக்கு இசை கேட்க மட்டும் பிடித்திருக்கிறது. அதில் இளையராஜாவும், ஏ.ஆர்.ரஹ்மானும் என் கண்கள்…’’ என்கிறார். அவர்களுக்கு ஜனனி கொடுத்து வைத்திருப்பது ‘பெரிய இடம்’தான்..!

– வேணுஜி

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: