Skip to content

ஷோபா… ரேவதி…அர்ச்சனா… இப்போ சுனைனா!

October 1, 2012

ஷோபா… ரேவதி…அர்ச்சனா… இப்போ சுனைனா!

Sunaina has a Dravidian face, someone who can express the emotions in the right way, calm and collected person. She plays a different role — called Esther in Neer Paravai.  I was never friendly with her on the sets. I was little harsh on her. Because of that, she became very sincere. She understood the soul of the story and accordingly started acting accordingly. In one particular scene, she cried without any glycerin.  After the shooting is over, she told me that the “Esther” Character is still playing in my mind, so I’m going to take two months rest after the shoot is over”. In Tamil, after Neer Paravai’s release, she will join the ranks of esteemed actresses like Shobha, Revathi, Archana etc., and become an important actress in Tamil.

தரமான கதையை சரியாகக் கொடுத் தால் எந்த படைப்புக்கும் தேசிய அங்கீகாரம் நிச்சயம் என்பதை ‘தென்மேற்கு பருவக்காற்று’ மூலம் மூன்று தேசிய விருதுகளை வென்றெடுத்து நிரூபித்துக் காட்டியவர் சீனுராமசாமி. தனது அடுத்த படைப்பான ‘நீர்ப்பறவை’யிலும் அதற்கான சந்தர்ப்பங்கள் பரவிக் கிடப்பதாக சொல்பவரிடம் தென்படுகிறது கடலளவு நம்பிக்கை.

‘‘சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்பட்ட ஒருவனை ஊரே சேர்ந்து மீட்டெடுக்கும் கருதான் ‘நீர்ப்பறவை’ கதையோட ஒரு துளி. கடலும் இதில் ஒரு கதாபாத்திரம். கடல் பேசும் அரசியல் மிக முக்கியமானதா இருக்கும். 70 வருட தமிழ் சினிமா வரலாற்றில் கடல் சார்ந்த கதைகள் எத்தனையோ வந்திருக்கு. ஆனா இப்படி ஒரு கலர்ல, உண்மையை பேசுற, சுவாரஸ்யம் நிறைந்த ஒரு படம் இதுவரை வந்ததில்லைன்னு சொல்லலாம்.

என் படம் என்பதாலோ, எதிர்பார்ப்பை பற்ற வைக்கவேண்டும் என்பதாலோ நான் இதைச் சொல்லலை. பெண்களை மையமா வச்சு, உண்மை பேசுற ஒரு படத்தை எடுக்கணும்ங்கிறதுதான் என் சினிமா வாழ்க்கையோட நோக்கமா இருந்தது. அது இந்தப் படம் மூலம் நிறைவேறிட்ட திருப்தி இப்போ இருக்கு. வறண்ட பகுதி மக்களின் வாழ்க்கையைச் சொன்ன படம் ‘தென்மேற்கு பருவக்காற்று’. கடலை நம்பி வாழும் மீனவ சமுதாயம் பற்றி பேசும் படம் இந்த ‘நீர்ப்பறவை’…’’ எனும் இயக்குனர், படத்தின் கேரக்டர்கள் பற்றி சிலாகிக்கத் தொடங்கினார்.

‘‘கடலைப் பின்னணியா கொண்ட கதைக்கு கதாபாத்திரங்களின் தேர்வில் ரொம்ப கவனம் வேண்டும். ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தில் விஷ்ணுவோட நடிப்பையும் ஈடுபாட்டையும் பார்த்துத்தான் அவரை நாயகனா தேர்வு செய்தேன். ‘அருளப்பா’ங்கிற இளைஞரா வருகிறார் விஷ்ணு. அந்த கேரக்டர் எப்படி இருக்கணும்னு நான் எதிர்பார்த்தேனோ, அப்படி தன்னை உருமாற்றிக் கொடுத்திருக்கார். சில நாட்களில் 24 மணி நேரமெல்லாம் உழைத்திருக்கிறார். அடிப்படையில் ஒரு விளையாட்டு வீரர் என்பதால் தான், அவரிடம் இப்படி ஒரு வேகம் இருக்கிறது. கதாபாத்திரத்திலிருந்து இம்மியளவும் பிசகாமல் இயல்பா நடிச்சிருக்கார். அவரது நடிப்புக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்னு இப்போதே என்னால் சொல்லமுடியும்.

திராவிட முகம், உணர்ச்சிகளை சரியா வெளிப்படுத்தத் தெரிந்த சாந்தமான முகம்கொண்டவரான சுனைனாவுக்கு இதில் எஸ்தர் என்கிற மாறுபட்ட பாத்திரம். ஸ்பாட்ல அவர்கிட்ட ஒருநாள்கூட சிரிச்சுப் பேசினதில்ல. சதா திட்டிக்கிட்டே இருப்பேன். திட்டத் திட்ட சின்சியராகிட்டார். கதையின் ஆன்மாவைப் புரிந்துகொண்டு நடிக்க ஆரம்பித்தவர், ஒரு காட்சியில் கிளிசரின் போடாமலேயே தேம்பித் தேம்பி அழுதிருக்கிறார். ‘இந்த கேரக்டர் மைண்டை விட்டு போகமாட்டேங்குது சார்… அதனால படம் முடிஞ்சதும் ரெண்டு மாசம் ரெஸ்ட் எடுக்கப்போறே’ன்னு சொன்னார். ஷோபா, ரேவதி, அர்ச்சனா வரிசையில் தமிழில் முக்கியமான நடிகையாக இனி சுனைனா அறியப்படுவார்…

 

நந்திதா தாஸை நடிக்க வைக்க மெயில் மூலமா தொடர்புகொண்டபோதெல்லாம் அவர் பிடி கொடுக்கல. அப்புறம் ‘தென்மேற்கு பருவக்காற்று’ படத்தை பார்த்துட்டு, ‘தமிழில் இப்படியெல்லாம் படம் வருதா?’ன்னு கேட்டார். ‘காதல்’, ‘பருத்திவீரன்’, ‘ஆடுகளம்’னு புதிய முயற்சிகளில் நிறைய படம் வருதுன்னு சொன்னேன். பிறகு ‘நீர்ப்பறவை’ கதையைச் சொன்னதும், ‘எப்போ ஷூட்டிங்’னு கேட்டவர், தன் மகனையும் அழைச்சிக்கிட்டு வந்து, ஈடுபாட்டோட நடிச்சுக் கொடுத்தார். என்னை குட்டி இளவரசன்னு கேலி பண்ற அளவுக்கு இப்போ என் தோழியாவே மாறிட்டார்.

கிறிஸ்தவ மீனவத் தாயா வர்ற சரண்யா மேடத்துக்கு வேறொரு அடையாளத்தை இந்தப் படம் கொடுக்கும். அவங்க கண்களில் இருக்கற ரத்த நாளங்கள்கூட நடிச்சிருக்குன்னு சொல்லலாம்.
ஒழுங்கீனமான தமிழ் வாத்தியாரா தம்பி ராமையா, டீக்கடை நடத்தும் இளைஞரா பிளாக் பாண்டியும் வர்ற காட்சிகளில் காமெடி களை கட்டும். மீனவப் பகையை மூட்டும் முக்கிய பாத்திரத்தில் ‘யோகி’ தேவராஜும், அருள்தாஸும் நடிச்சிருக்காங்க. என் நண்பன் சமுத்திரகனிகிட்ட ஒரு நாள் தற்செயலா கதை சொன்னேன். ‘யாருக்குமே சொல்லாம இப்படியொரு கதையை பண்ணிக்கிட்டு இருக்கியே… நானும் இந்தப் படத்தில நடிக்கணும்’னு கேட்டார். உதுமான்கனி என்கிற இஸ்லாமியர் வேடத்தில் அவர் நடிச்சிருக்கார். கிறிஸ்துவ பாதிரியாரா அழகம்பெருமாள் நடிச்சிருக்கார்…’’
‘‘முந்தைய படத்தின் பாடலுக்கு தேசிய விருது கிடைச்சதால் ‘நீர்ப்பறவை’க்கு எதிர்பார்ப்பு இருக்கே?’’

‘‘இசைப் போராளி ரகுநந்தன் என்னோட கண்டுபிடிப்பு என்பதில் எனக்குப் பெருமை. அற்புதமா ஆறு பாடல்களைத் தந்திருக்கிறார். பாடல் எழுதுவதற்காக வைரமுத்துவை சந்தித்தேன். முழுக் கதையையும் கேட்டவர், ‘இந்தக் கதை கிறிஸ்தவ இலக்கியமாக இருக்கிறது. அதனால் விவிலிய சொற்களைக் கொண்டே ஒரு பாடலை எழுதுகிறேன்’ என்று சொல்லி எழுதிக்கொடுத்தார்.
‘தேவன் மகளே
தேவன் மகளே
சிலுவைக் காடு
பூத்ததுபோல
சிறியவன் வாழ்வை
பூக்க வைத்தாய்
தேவன் மகளே
நன்றி நன்றி
என் ஜென்மம் கழியும் உன்னை நம்பி’ என்ற அந்தப் பாடல் மனசை உருக்கி எடுக்கும்.


கிறிஸ்தவ மீனவர்களின் வாழ்க்கையை கலை அழகுடன் பதிவு செய்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் பாலசுப்ரமணியம். படத்தில் ஒரு பகுதி 80களில் நடக்கிற கதை. அதனால் விசைப் படகின் வாசனையே தெரியாத வண்ணம் கடற்கரை முழுக்க கட்டுமரம், வல்லம் என நிறுத்தி வைத்து, அந்த காலகட்டத்தை கண்முன் நிறுத்தியிருக்கும் ஆர்ட் டைரக்டர் செல்வகுமாரின் கைவண்ணத்தில் ஒரு இடத்தில்கூட இது செட் என்று கண்டுபிடிக்க முடியாது!’’
‘‘எல்லாம் சரி… தயாரிப்பாளர் என்ன சொன்னார்?’’
‘‘படத்தைப் பார்த்துட்டு உதயநிதி சார் என் கையைப் பிடித்து பாராட்டிய அந்த நிமிடத்தில், சுகப் பிரசவத்தில் கொழு கொழு குழந்தையை பெற்றெடுத்தவள் போல ஒரு திருப்தி. அந்தத் திருப்தியை படத்தின் வெற்றிக்கு வெளிச்சம் போடும் நட்சத்திரமாகவே கருதுகிறேன்!’’

– அமலன்

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: