Skip to content

நீரோடி கிராமம்… கடலோடி தனுஷ்!

December 5, 2012

 

Delicious Save to Delicious  Save to stumbleupon  Print Bookmark My Bookmark List

 

‘‘இன்னிக்கு ஒரு மணிக்கு வர்றீங்களா? ரெண்டு மணி நேரம் பேசலாம்’’ என்றார் டைரக்டர் பரத்பாலா. ரஹ்மானுக்காக ‘தாய் மண்ணே வணக்கம்’ என உரக்கச் சொல்லி உச்சம் தொட்ட மனிதர். இப்போது களம் இறங்கியிருப்பது, ‘மரியானு’க்காக.

‘‘ரத்தம், சத்தம், கூச்சல், குத்துப்பாட்டுன்னு எதுவும் இல்லாம நான் ஆசைப்பட்ட பயணம்தான் ‘மரியான்.’ கடலுக்கும் கரைக்குமான இடையறாத பயணத்தை, அந்த வாழ்க்கையின் நிச்சயமின்மையை சொல்லியிருக்கேன். இரங்கலும் இரங்கல் நிமித்தமும் என்ற உரிப்பொருளின் அடிப்படையில் நெய்தல் மண்ணின் வாசனையோடு ஒரு அசல் படத்துக்கான எல்லா அம்சங்களோடும் இருக்கு ‘மரியான்’. தன்னை அண்ணாந்து பார்க்கிற அடித்தட்டு மக்களை, தமிழ் சினிமா குனிஞ்சு பார்க்கிறதே இல்லை. சாப்பிட வச்சிருக்கிற காசுக்கு டிக்கெட் வாங்குவாங்க, வயத்தைக் கிள்ளுற பசியோட சுவிஸ் மலை காதல் காட்சியை ரசிப்பாங்க. மக்கள் திரையைப் பார்ப்பதை மாற்றி, மக்களை திரை பார்க்கணும்னு எனக்கு ஆசை. அதற்கான முழு முயற்சிதான் இந்த ‘மரியான்’…’’

‘‘‘மரியானில்’ நீங்க இன்னும் சொல்ல விரும்புவது என்ன?’’
‘‘இதுதான் கதைன்னு முடிவான வேகத்தில், அதுக்கான எல்லா ஆர்டிஸ்ட்களையும் நான் முடிவு பண்ணிட்டேன். கதையோட இடம் பெரிசா இருந்தது. லைஃப் சைஸ் படம்னு சொன்னா சரியா இருக்கும். ஆனா, கமர்ஷியல் படம்தான். ஆறு பாட்டோட ஆக்ஷனும் இருக்கு. முதலில் ‘நீரோடி’ங்கிற கிராமத்தில் ஆரம்பிச்சு, பாதிப்படம் தென் ஆப்ரிக்காவில் நடக்குது. மீனவர்கள் கதைன்னு ஒரு வார்த்தையில் இதை சொல்லிட்டுப் போயிட முடியாது.

தினமும் வாழ்விற்கும், சாவிற்கும் நடக்கிற போராட்டத்தை அழகா ஏத்துக்கிட்டு இருக்கிற மக்கள். குளம், ஆறு பார்க்கலாம். அது கூட ரெண்டு நாளில் சலிக்கும். ஆனால் தினமும் கடலைப் பார்க்க சலிச்சுப் போனவங்க உண்டா? கடல் ஒரு அதிசயம் இல்லையா? அதன் உள்ளே வரை போகும் மீனவ மக்களின் யதார்த்தம் இதில் இருக்கு. ஓயாத கடல், நமக்கு போராட்ட குணத்தை பூடகமா உணர்த்தலையா? ஊடகங்களில் பாருங்க, இப்ப மீனவர்களின் எழுச்சித்தான் பேசப்படுது. இலங்கை கடல்புரத்தில் அடிபடுற மீனவனிலிருந்து, கூடங்குளத்தில் போராடுகிற மீனவன் வரை அவங்க மனநிலை நமக்கெல்லாம் பெரிய உரம். இப்பத்தான் நாம் அவங்களை கொஞ்சம் நின்னு கவனிக்கிறோம். நான் அவங்களை வச்சே கதை பண்ணியிருக்கேன். மீனவர்களின் துல்லியமான உணர்வுநிலை, ஒரு காதல் கதையில் மிதந்து வருது. இந்த முயற்சிக்கு தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிச்சந்திரன் துணை நிக்கறது பெரும்பலம்.’’
‘‘தனுஷ் எப்படி பொருந்தி இருக்கார் இதிலே?’’

‘‘கனிவு, பாசம், காதல், அன்பு, கோபம் அத்தனையையும் வெறும் குரலால் உணர்த்த முடியும்னு நினைக்கிறீங்களா… இதில் தனுஷ் நடிச்சு, பேசியிருப்பதைப் பார்த்தா அது எப்படின்னு புரியும். கொஞ்ச நாளைக்கு முன்னாடி ஜூரியா இருந்து, ‘ஆடுகளம்’ பார்த்தேன்… நம்பவே முடியலை. சின்னப் பையன் மாதிரி இருக்கிறவருக்கு இவ்வளவு நடிப்பு சாத்தியம்தானானு நினைச்சுக்கிட்டே இருந்தேன். கடைசியில் அவரே என் கதைக்குள் வந்தார். காதலும், அதன் நிமித்தமா பிரிவும், பிறகு அன்பை மீட்டெடுப்பதும்தான் இந்த சினிமாவின் அடையாளம். அந்த ஆச்சர்யத்தையும் அனுபவத்தையும் பதிவு செய்ய மீனவர்களின் வாழ்க்கையில பயணம் செய்திருப்பதுதான் தமிழ் சினிமாவில் புதுசு!’’

‘‘தனுஷுக்கு ஜோடின்னா ஸ்ரேயா, நயன்தாரா, ஸ்ருதி… இதுதான் நடக்கும். நீங்கள் பார்வதியை தேர்ந்தெடுத்திருக்கீங்க..?’’
‘‘கதையின் உண்மைத்தன்மைக்கு பக்கத்தில் இருக்கிறவங்களை மட்டும்தான் இந்தப் படத்திற்காக விரும்பினேன். உண்மையில யதார்த்த சினிமா பக்கம் தமிழ் சினிமா திரும்பி இருக்கிறது ஆரோக்கியமான மாறுதல். பார்வதிக்கு எல்லா உணர்வுகளையும் அதன் மெருகு கெடாம, மிகை இல்லாம கொண்டு வர முடியுது. ஒரு ஸ்கிரிப்ட்டில் இறங்கி சடசடன்னு உள்ளே போய்ப் புகுந்துகொள்கிற ஆர்வம் தனுஷ்கிட்டே இருக்கு. தூக்கத்தைக் கூட மறந்துட்டார். ‘நான் எப்படியெல்லாம் இருந்தா நல்லா இருக்கும்’னு கேள்விகளால் துளைத்தெடுப்பார். அதே மாதிரிதான் பார்வதி. இப்படி ஆசைப்படுகிற ஹீரோ, ஹீரோயினைப் பார்த்தா ஒரு டைரக்டருக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கும். எனக்கும் இருந்தது. அந்த அக்கறைதாங்க வெற்றி!’’
‘‘இலக்கிய ஆளுமைகளையெல்லாம் பங்குகொள்ள வைக்கிற முயற்சி எப்படி இருக்கு?’’


‘‘படத்துக்கு வசனம் எழுதுறார் ஜோ டி குரூஸ். மண்ணின் மைந்தர். மீனவர்களின் எல்லா கஷ்ட நஷ்டங்களையும், ரத்தமும் சதையுமா கூட இருந்து பார்த்த மனுஷன். அவர் எழுதினால்தான் உயிர் இருக்கும். ஆத்மா ஒளிவிடும். மரணத்தின் வாசனையை ஒரு மீனவரா அவர் உணர்ந்திருக்கார். அவர் அனுபவங்களை அழகா பயன்படுத்திக்கிட்டேன். அது ‘மரியான்’ நல்லா வர்றதுக்கான சுயநலமே இன்றி வேறென்ன? கவிதைப் பெண் குட்டிரேவதியை குறிப்பிடணும். படத்தின் எல்லா உருவாக்கத்திலும் எங்க கூடவே இருந்திருக்கிறார். அவரின் பங்கு படம் முழுக்க இழையோடியிருக்கு.’’
‘‘உங்களுக்குன்னா ஏ.ஆர்.ரஹ்மான் ஆசை ஆசையா ட்யூன் போடுறாரே, ஏன்?’’

‘‘நண்பன்ங்க. இதுல ரெண்டு பாடல்களை பாடியும் கொடுத்திருக்கார். உலகம் முழுக்க சுத்தினாலும், அவரோட முகவரி தமிழ் சினிமாதான். ரொம்ப தேர்ந்தெடுத்துத்தான் படங்கள் பண்றார். நட்பு தானா அமைகிற விஷயம். என் சினிமாவுக்கு இசை அமைக்க அவர் ஓகே சொன்னது, இந்தக் கதை அவர்கிட்ட ஏற்படுத்திய பாதிப்பினால் மட்டுமே. இதில் நடிக்கிற, பங்கு பெறுகிற ஒவ்வொருவருக்கும் தன் பெயரைக் காப்பாற்றிக்கொள்ளக் கூடிய வாய்ப்பு இருக்கிறது. ரஹ்மான் இழைச்சு இழைச்சு பண்ணின பாடல்களைப் பத்திச் சொல்ல நிறைய இருக்கு. எங்களுக்குத்தான் அந்தப் பாடல்களுக்கு நியாயம் செய்யணுமேன்னு பயம் கூடிப்போச்சு. ‘இதாங்க, இப்படி எடுத்தா எவ்வளவு சந்தோஷமா இருக்கு!’ என என் கையைப் பிடிச்சு ரஹ்மான் அழுத்துற அந்த நாளுக்காகக் காத்திருக்கேன்!’’

– நா.கதிர்வேலன்

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: