Skip to content

“நயன்தாரா யாருக்கு?”

January 3, 2013
ஸ்டார் ‘பிரதர்ஸ்’ வார்
க.ராஜீவ்காந்தி
படங்கள் : பொன். காசிராஜன்
 

“பாஸ்… நான் ரொம்ப ஓப்பன் டைப். எல்லாரும் நல்லா இருக்கணும்னு நினைக்கிறவன். இது ஊர்ல எல்லா ருக்கும் தெரியும். ஆக்ச்சுவலா, என் படம் வந்து ஒரு வருஷம் ஆகப் போகுது. இப்ப ‘சேட்டை’ உடனே ரிலீஸ் பண்ணலாம்னு பார்த்தா, என் தம்பி நடிச்ச படம் வருது. அதனால பொழைச்சுப் போடானு விட்டுக்கொடுத்துட்டேன்!” என்று டி-ஷர்ட் சுருக்கங்களை நீவிக்கொண்டே ஆர்யா சொல்ல, ”இது செம போங்கு. என் படத்துக்குப் பயந்துக்கிட்டுதான் உன் படத்தை ஏப்ரலுக்குத் தள்ளிவெச்சுட்டாங்க!” என்று ஆர்யாவைச் சதாய்க்கிறார் அவரது தம்பி சத்யா. கோலிவுட்டின் அடுத்த ‘ஹீரோ பிரதர்ஸ்’ ஆர்யா-சத்யா!

 ‘புத்தகம்’ படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகவிருக்கும் சத்யா, ‘இன்னும் இளமை… இன்னும் இனிமை’ என அண்ணன் ஆர்யாவுக்கு செம சவால் விடுகிறார்.

”ஜம்ஷத், ஆர்யா ஆன கதை தெரியும். ஷாஹிர், சத்யா ஆன கதை என்ன?”

”டேய் சொல்றா… உன் ஹிஸ்ட்ரிதானே அது” என சத்யாவிடம் சவுண்ட்விட்டார் ஆர்யா.

”அண்ணன் சினிமாவில் நடிக்கலைன்னா, நானும் நடிக்க வந்திருக்க மாட்டேன். அவர் சினிமாவுல நடிக்க ஆரம்பிச்ச பிறகுதான், நான் நிறையப் படங்கள் பார்க்க ஆரம்பிச்சேன். அவர் மாடலிங் பண்றேன்னு வந்து நின்னப்போ, வீட்ல பயங்கர எதிர்ப்பு. ஆனா, பல எதிர்ப்புகளைத் தாண்டி அவர் ஹீரோ ஆகிட்டார். அதனால நான் நடிக்கிறதுக்கு வீட்ல அனுமதி வாங்குறது கஷ்டமாவே இல்லை. அண்ணன்கிட்ட ஆசையைச் சொன்னேன். ‘உன் விருப்பம்’னு சொன்னவர், படம் சம்பந்தமான விஷயத்துலயோ, ஷூட்டிங்லயோ நான் தலையிட மாட்டேன். சிபாரிசும் பண்ண மாட்டேன்னு ஸ்ட்ரிக்ட்டா சொல்லிட்டார். அதுவே, அவர் எனக்குப் பண்ற பெரிய உதவினு நினைச்சுக்கிட்டேன்!”

”விஷாலுக்கு ‘அவன் இவன்’ வாய்ப்புக்கு பாலாகிட்ட சொல்லி பிரேக் கொடுத்ததே நீங்கதான்னு ஒவ்வொரு பேட்டியிலேயும் அவர் சொல்றார். ஆனா, உங்க தம்பியை மட்டும் நீங்க கண்டுக்கலையே… ஏன்?”

”நான் தனியாளாத்தானே வந்தேன். அதே மாதிரிதான் அவனும் வரணும். என்னை மாதிரி கஷ்டப்பட்டு, காயப்பட்டு வந்தால்தான் உழைப்பின், வெற்றியின் அருமை அவனுக்குப் புரியும். ‘ஹீரோவா நடிக்கப்போறேன்’னு அவன் வந்து நின்னப்போ, நான் பயந்தேன். ஆனா, அவன் மும்பையில் அனுபம் கெர் நடிப்புப் பயிற்சிப் பள்ளியில் நடிப்பு கத்துக்கிட்டு வந்தான். அப்புறம் ஆறு மாசம் ஃபைட், டான்ஸ் கத்துக்கிட்டான். நான் நடிக்க வந்தப்ப இது எதுவுமே தெரியாம வந்தேன். ஆனா, இவன் அதுக்காக இப்பவே இவ்ளோ மெனக்கெடுறான். அதனால, அவன் எதிர்காலம் நல்லா இருக்கும்னு நம்பிக்கை வந்த பிறகுதான், அவன் நடிக்க ஓ.கே. சொன்னேன். ஆனா, அவன்  முட்டி மோதி, தானா வளரட்டும். அதுதான் அவனுக்கு நல்லது!”

”ஷூட்டிங் டிப்ஸ்தான் கொடுக்கலை. சரி… டேட்டிங் டிப்ஸாவது கொடுத்தீங்களா?’‘ ஆர்யாவிடம் கேட்டதற்குப் படபடவெனப் பதறினார் சத்யா. ”அச்சச்சோ… அண்ணன்கிட்ட பேசுறதுக்கே நான் பயப்படுவேன். அவர்கிட்ட எப்படி…” என்று சத்யா இழுக்க…

”டேய்… வீட்லயே நடிப்பைப் போடாதடா. ஷூட்டிங், டேட்டிங் எல்லாத்துலயும் அவன்தான் கிங். எனக்கு சென்னைப் பொண்ணுங்ககிட்ட பேசக்கூட உதறும். ஆனா, பையன் பெங்களூர்ல படிச்சவன்கிறதால ஆல் ஸ்டேட் பொண்ணுங்ககிட்டயும் கூச்சம் இல்லாமப் பேசிப் பழகுவான். எனக்கு டிப்ஸ் பேங்க்கே சத்யாதான். என்னைவிட அவன் செம கேடி… கில்லாடி!”

”ரெண்டு பேரும் அவங்கங்க காதல் கதைகளைச் சொல்லுங்க?”

சத்யா ஆரம்பிக்கு முன் முந்திக்கொண்டு இந்தக் கேள்விக்குப் பதில் சொன்னார் ஆர்யா.

”தனித்தனியாக் காதலிச்ச கதையை விடுங்க. ரெண்டு பேரும் சேர்ந்தே ஒரு பொண்ணைக் காதலிச்சோம். அண்ணன் தம்பின்னாலும் ரெண்டு பேரும் ஃப்ரெண்ட்ஸ் மாதிரிதான் பழகுவோம். பச்சையப்பா கிரவுண்ட்ல ஃபுட்பால் விளையாடப் போகும்போது, ஒரு பொண்ணைப் பார்த்தோம். நல்ல அழகு. ரெண்டு பேரும் அந்தப் பொண்ணை அப்படியே வெச்ச கண் வாங்காமப் பார்த்துட்டே இருப்போம். அந்தப் பொண்ணும் எங்க ரெண்டு பேரையுமே பார்த்து சிரிச்சுட்டுப் போகும். அதுகிட்ட என் காதலைச் சொல்லிரலாம்னு நானும் ஒவ்வொரு நாளும் முயற்சி பண்ணுவேன். ஆனா, தைரியம் வராது. ஆனா, இவன் என்ன பிட்டு போட்டான்னு தெரியலை… ஒரு நாள் பார்த்தா, இவன்கூட பைக்ல போயிட்டு இருக்கு அந்தப் பொண்ணு. சரி… தம்பியாச்சே… விட்டுக்கொடுத்திரலாம்னு நான் அமைதி ஆகிட்டேன். ஆனா இவன், ‘நான்தான் உன்னைவிட ஹேண்ட்சம்னு அந்தப் பொண்ணுக்கே தெரியுது’னு என்னைக் கலாய்க்க ஆரம்பிச்சிட்டான். வந்துச்சு பாருங்க கோபம்… அந்தப் பொண்ணுகிட்டயே இவனைப் பத்தி நாலஞ்சு நல்ல பிட் போட்டேன். மறுநாளே ரெண்டு பேருக்கும் டமால்… டமால். இவனை அடிச்சுத் தொரத்திருச்சு அந்தப் பொண்ணு. அப்ப ஆரம்பிச்சு இப்ப வரை எங்களுக்குள்ள சண்டை நடந்தா… அதுக்குக் காரணம், நிச்சயம் ஒரு பொண்ணாத்தான் இருக்கும்!”

”தம்பியே நடிக்க வந்துட்டார். இப்ப சொல்லுங்க ஆர்யா… உங்க உண்மையான வயசு என்ன?”

”21. அவனுக்கும் எனக்கும் ரெண்டு வயசு வித்தியாசம். இன்னொரு தம்பி இருக்கான். சென்னையில் படிக்கிறான். சின்னப் பையன். ரொம்ப டீடெய்ல் வேணாம். யார் கண்டா, அவனும் எதிர்காலத்துல சினிமாவுக்கு வரலாம். சினிமால மத்த ஹீரோக்கள் எனக்குப் போட்டியே கிடையாது. வீட்டுக்குள்ளேயேதான் எனக்குப் பெரிய போட்டியே!” என்று ஆர்யா பேச்சை மாற்ற, ”நம்பாதீங்க… அவருக்கு ஆக்ச்சுவலா என்ன வயசு தெரியுமா….” என்று துள்ளியெழுந்த சத்யாவை, அதட்டி, மிரட்டி, கெஞ்சி அடக்கினார் ஆர்யா.  

”சரி… அடுத்து ரெண்டு பேரும் தனித்தனியா ஹீரோவா நடிக்கிற படத்துக்கு ஹீரோயின் ஃபிக்ஸ் பண்ணணும். யாராச்சும் ஒருத்தர் நடிக்கிற படத்துக்கு கால்ஷீட் தர்றேன்னு நயன்தாரா சொல்றாங்க. அப்ப நயன்தாரா யாருக்கு?”

”அண்ணனும் நயன்தாராவும் திக் ஃப்ரெண்ட்ஸ். அதனால அண்ணன் அவங்களை கன்வின்ஸ் பண்ணிட்டு என் படத்துல நடிக்க வெச்சிருவார். அதுவும் போக, நயன்தாரா ஒருவேளை எதிர்காலத்துல என் அண்ணி ஆகணும்னா, அதுக்கு வீட்ல என் ஆதரவு அவசியம். அதனால, இந்த தியாகத்தை அண்ணன் பண்ணியே ஆகணும்!” என்று சத்யா நிறுத்த, ”அடப்பாவி!” என்று அதிர்ச்சி யில் அலறுகிறார் ஆர்யா!

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: