Skip to content

அமெரிக்காவிலிருந்து தி.சு.பா.

February 4, 2013

திரைவிமர்சனம்

அமெரிக்காவிலிருந்து தி.சு.பா.

பொதுவாக அட்லாண்டாவில் (அமெரிக்கா) கோடி கோடியாக லாபம் குவிக்கும் நம் படங்களுக்குக் கூட தியேட்டரில் ஐந்தாறு பேர்தான் இருப்பார்கள். விஸ்வரூபத்துக்கு தியேட்டர் நிரம்பி வழிந்தது. எந்த இந்தியப் படத்துக்கும் இப்படி கூட்டம் சேர்ந்ததாக ஞாபகம் இல்லை. முதலில், இப்படம் ஜிஹாத்-ஆப்கான்-அமெரிக்கா சம்பந்தப்பட்ட கதைக்களத்தைக் கொண்டது. படத்தின் கதை

பெரும்பாலும் இணையம், செய்தித்தாள்களில் ஆங்காங்கே நாம் படித்த செய்திகளை மனத்தில் வைத்தே பின்னப்பட்டிருக்கிறது.

தீவிரவாத இயக்கம் தீட்டும் திட்டம் பற்றிய காட்சிகளில் நிறைய ஆராய்ச்சி செய்து நுணுக்கமாக எடுத்திருக்கிறார் கமல். சுருங்கச் சொன்னால், திரைக்கதையைச் செதுக்கியிருக்கிறார். கிளைமேக்ஸுக்கு முன்னால் ஆரவாரமில்லாத இடத்தில் தொழுகை நடத்தி நெஞ்சைத் தொடுகிறார் கமல். டூயட், ரொமான்ஸ் காட்சிகள் எதுவும் வைக்காமல், நடுத்தர வயது மனிதராக வரும் கமலின் நடிப்பைப் பற்றி என்ன சொல்ல? கதக் நடன ஆசிரியராக வரும் கமல் கதாபாத்திரம் 10-15 நிமிடங்களே வந்தாலும், மனத்தைக் கொள்ளை கொள்கிறது. பெண் நளினத்தில் கமலைப் பார்க்கப் பரிதாபமாக இருக்கிறது. அதே மனிதர் ஆண்மை பொங்க சும்மா பறந்து பறந்து காலைச் சுழற்றிச் சுழற்றி சண்டை போட்டு மிரள வைக்கிறார். ஆங்காங்கே நகைச்சுவை தெறிக்கும் கமலின் வசனங்களை ரசிக்க முடிகிறது. பூஜாவின் பிசிறு இல்லாத நடிப்பு மற்றும் பிராமண வசனங்களின் பின்புலத்தில் கமலின் மேற்பார்வை, செய்நேர்த்தியைக் காணமுடிகிறது. முழுக்க முழுக்க அரேபிய மொழி மட்டுமே பேசி நடிக்கிறார் நாசர். ராகுல் போஸ் தன் கோணல் வாய், செயற்கைக் கண் கொண்டே மிரட்டியிருக்கிறார். கமலுக்கு பாஸ் ஆக வரும் சேகர் கபூர் நடிப்பில் எந்தவிதக் குறையும் இல்லை.

கண்கொத்திப் பாம்பாக படத்தைப் பார்க்க வேண்டும். ஒரு விநாடி தலையை இப்படி அப்படித் திருப்பினால் போச்சு. படம் புரியாது. உதாரணமாக கிளைமாக்ஸ் முடிந்த பின்னர் வரும் மாண்டேஜ் காட்சிகளில் கூட ஒருசில விஷயங்கள் இருக்கின்றன. ஆப்கானிஸ்தானில் குடும்பத்துடன் வசிக்கும் ராகுல் போஸ் மதுரையிலும், கோயம்புத்தூரிலும் ஒரு வருடம் இருந்தேன், அதனால் தமிழ் தெரியும் என்கிறார், சர்வ சாதாரணமாக.

எஃப்.பி.ஐ.யை டம்மிபீஸ் போல் காட்டியிருப்பது கொஞ்சம் உறுத்துகிறது. கிளைமாக்ஸ் காட்சியில் எஃப்.பி.ஐ. அதிகாரிகள் கூலாக இந்தியர்களான கமல், பூஜா என எல்லோரையும் நம்பிவிடுவதெல்லாம் கொஞ்சம் டூ மச்.

பலம் – இயக்குனர் கமல், சலீம் என்ற வேடத்தில் நடித்த அந்த இளைஞர், வில்லன் ராகுல் போஸ், கலை இயக்குனர் இளையராஜா. விஷுவல் மற்றும் சவுண்ட் எபெக்ட்ஸ் அபாரம். குண்டு வெடிப்புக் காட்சிகளும் அவற்றைப் படமாக்கிய விதமும் தமிழ்சினிமாவுக்கு புதுசு. ஆப்கானிஸ்தான் காட்சிகளில் கலை இயக்குனரின் திறமை கண்முன்னே நிற்கிறது. ஒளிப்பதிவு நச். ‘துப்பாக்கி எங்கள் தோளிலே’ பாடல், காட்சிகளின் பின்னணியில் ஒலிப்பது அருமை. சங்கர் மஹாதேவன் – கோ பாடல்களில் காட்டிய திறமையைப் பின்னணி இசையில் காட்டியிருக்கிறார்களா என்பது விவாதத்துக்குரியது.

பலவீனம் – ஆண்ட்ரியா உல்லலாய்க்கு வந்துவிட்டுச் செல்கிறார். படம் ஆரம்பித்து ஒரு மணி நேரம் ஆன பிறகு வரும் ஆப்கானிஸ்தான் காட்சிகள் மெதுவாக நகர்கின்றன. படத்தைப் பார்க்கும்பொழுதும், முடித்த பின்னரும் நிறைய கேள்விகள், சந்தேகங்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. ஒருசில கேள்விகளுக்குப் படத்தில் பதில் இல்லை.

கடைசியாக சுபம் போடாமல் ‘இரண்டாம் பாகம் விரைவில்’ என்று போட்டு விடுகிறார்கள். ஒருவேளை எல்லா கேள்விகளுக்கும் பார்ட்-2வில் விடை கிடைக்கலாமோ?

இருந்தாலும், படம் முழுக்க கமலின் கடின உழைப்பும் மெனக்கெடலும் கண்கூடாகத் தெரிகிறது. கமல் கமல்தான்!

விஸ்வரூபம் – பிரம்மாண்டம்!

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: