Skip to content

Dir Bala’s Interview about Paradesi (From Kungumam Magazine)

March 4, 2013

ஹீரோ ஹீரோயின்கள் தான் மனிதர்களா? ‘பரதேசி’ பாலா

 Print Bookmark My Bookmark List

 

தி.நகர் ஆபீஸில் காத்திருக்கிறேன்.
கடந்து போகும் பாலாவிடம் சின்னதாக ஒரு புன்னகை. 15 வருஷமா பார்த்த முகம்தான். ‘வாங்க… எப்படி இருக்கீங்க’ என அதிரடித் தழுவல்கள் எதுவும் கிடையாது. ‘‘பேட்டியை ஆரம்பிக்கலாமா’’ என்கிறார் உட்கார்ந்ததும். பாலா அப்படித்தான்! அவரது கதை நாயகர்களைப் போலவே முரட்டுக் கலைஞன். அறிந்தவர்களுக்கு மட்டுமே கலகலப்பும் சிரிப்புமாக இன்னொரு பாலாவைப் புரியும். ஒவ்வொரு முறையும் பாலா படங்களுக்கான தீவிரமும், எதிர்பார்ப்பும் சமகால இயக்குநர்களில் யாருக்கும் இல்லாதது.
‘‘எரியும் பனிக்காடுகள்’ நாவலைத் தழுவியதுதான் ‘பரதேசி’. அந்த நாவலில் எந்த அம்சம் உங்களைக் கவர்ந்தது?’’
‘‘இந்த உலகத்தில ஒரு மிருகம் இன்னொரு மிருகத்தை வேட்டையாடித்தான் உயிர் வாழுது. அதை அடிமையாக்கி கையோட வச்சுக்கிறதில்லை. மனுஷன்தான் இன்னொரு மனுஷனை அடிமையாக்கறான். அடிமை செய்வதுதான் ரொம்பவும் கொடுமை. அந்த வகையில உலகின் கொடூர மிருகம் மனுஷன்தான். இந்த விஷயம்தான் என்னை நாவலுக்குள் இழுத்து உட்கார வச்சது.’’

‘‘எந்த மாதிரியான கதைகள் உங்களைக் கவரும்?’’
‘‘பெரும்பாலும் கதைகளை விட கதாபாத்திரங்களே என்னை அதிகம் கவர்கின்றன. ஒரு திருமண வீட்டில் மணப்பெண், மாப்பிள்ளை, விருந்தாளிகளை விட இசைக்கருவிகளை வாசிப்பவர்களும் மந்திரம் ஓதுபவர்களும்தான் என் கண்ணில் படுகிறார்கள். அதே மாதிரிதான் சாவு வீடுகளில், பிணத்திற்கு முன்பு பொய்யாக அழுது ஒப்பாரி வைக்கும் மனிதர்களே என் கண்ணில் ஆழப் பதிகிறார்கள். எல்லோரும் எல்லோரையும் பார்ப்பதைப் போல நான் யாரையும் பார்ப்பதில்லை.’’

‘‘உங்கள் படங்கள் பெரும்பாலும் விளிம்பு நிலை மனிதர்களைப் பற்றியதாகவே இருக்கு..?’’
‘‘விளிம்புநிலை மனிதர்கள்னு தனியா யாரும் இல்லை. பிணத்தை எரிக்கிற வெட்டியானுக்கு நாம் எல்லாரும் விளிம்பு நிலை மனிதர்கள்தான். நான்தான் உயர்ந்த சாதி என்று கர்வம் கொள்கிறவர்களும், நான் தாழ்ந்த சாதி என்று தலைகுனியும் அப்பாவிகளும் நான் பார்த்த விளிம்புநிலை மனிதர்கள்தான். இவர்களைப் போலவே தன் மதம்தான் சிறந்தது, தான் வணங்கும் தெய்வம்தான் உயர்ந்தது என குறுகிய மனம் கொண்ட எல்லா மனிதர்களும் விளிம்பு நிலை மனிதர்களே.’’

‘‘ ‘பரதேசி’யை ஒரு முழுமையான படமா எடுத்துட்டோம்னு நினைக்கிறீர்களா?’’
‘‘எந்த ஒரு இயக்குநரும் 100 சதவீதம் முழுமையான படம் எடுக்க முடியாது. அப்படி எடுத்துட்டேன்னு சொல்லிக் கொண்டால், அது பக்குவப்பட்ட இயக்குநரின் வார்த்தைகளாக இருக்க முடியாது. அதைப் பார்வையாளர்களும், விமர்சகர்களும்தான் சொல்ல வேண்டும். உலகில் எந்தக் கொம்பனாக இருந்தாலும், தன் திரைப்படத்தை அதிகபட்ச முழுமை அடைந்துவிட்டதாக மட்டுமேதான் சொல்ல முடியும். ஆனால் ஒன்று, என்னுடைய முந்தைய படங்களை விட, முழுமைக்கு மிக மிக அருகில் அதாவது ஸீமீணீக்ஷீமீst tஷீ ஜீமீக்ஷீயீமீநீtவீஷீஸீ எனும் அளவுக்கு‘பரதேசி’யைக் கொண்டு வந்திருக்கேன்.’’

‘‘வேறொரு தளம். நிறைய ஆர்ட்டிஸ்ட்ஸ். ரொம்ப கஷ்டப்பட்டுட்டீங்களா?’’
‘‘எதுவும் எனக்கு கஷ்டம் இல்லை. கஷ்டம்னு எடுத்துக்கிட்டால் அதிகாலையில் எழுந்து, பல் துலக்கி, குளித்து, சாப்பிட்டு ஜீரணம் ஆகி, அன்றைய வேலைகளை முடித்துத் தூங்குறது கூட கஷ்டம்தான். தூங்கின பிறகு புரண்டு படுக்கிறதுகூட கஷ்டம்தான். கஷ்டப்படாமல் எது கிடைக்கும்? நம்ம பேருக்கு, புகழுக்கு, பணத்திற்கு நம்ம குடும்பத்திற்கு உழைத்துவிட்டு, ‘ரொம்ப கஷ்டப்பட்டேன்’னு சொல்லிக்கிறது நல்லாவா இருக்கு? கடமையையும், செய்ய வேண்டிய உழைப்பையும் கஷ்டம்னு சொன்னால் அவனை விட சோம்பேறி யாரும் கிடையாது.’’

‘‘பெரிய நடிகர்கள் உங்க படத்தில நடிக்க விரும்புவது ஏன்?’’
‘‘இது நீங்க அவங்ககிட்ட கேட்க வேண்டிய கேள்வி. இருந்தாலும் சொல்றேன். அப்படி நடிக்க வந்தால், சிறந்த நடிகனாக வர வாய்ப்பு இருக்குன்னு சொல்லிக்கிறாங்க. அதுல எனக்கு உடன்பாடு இல்லை. நான் நடிகர்களை பெரிதா நடிக்க வைக்கிறதில்லை. பொதுவா ஒருவனின் நடிப்பில் நான் குறைகளை மட்டுமே பார்ப்பேன். அந்தக் குறைகளை நீக்கிட்டால் அவன் முழுமையான நடிகன்தானே! நான் புதுசா எந்த நடிகருக்கும் எதையும் சொல்லிக் கொடுக்கிறதில்லை. பாதையெல்லாம் போட்டுக் கொடுத்தேன்னு பெருமைப்பட்டுக்கிறதுக்கு எனக்குத் தகுதியே கிடையாது. அவங்களோட குறைகளை நிவர்த்தி பண்றேன். அவங்களை களை எடுக்கிறேன். அதனால் பயிர் தனியாத் தெரியுது. இது பெரிய கம்ப சூத்திரம் இல்லை.’’
‘‘நீங்க ஹீரோக்களை கஷ்டப்படுத்துவீங்கன்னு ஒரு பேச்சு உண்டு. ஆனாலும் உங்ககிட்டேயே வர்றாங்களே..?’’

‘‘அதனால் எனக்குப் பொறுப்பு கூடுது. என்னை நம்பி வருகிற ஹீரோக்களுக்கு கதாபாத்திரத்தை வித்தியாசமா படைக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படறேன். ‘இதுவரை நீங்க பார்த்த நடிகரை நான் எப்படி காண்பிச்சிருக்கேன் பாரு’ன்னு ரசிகர்களுக்கு மாற்றிக் காட்ட வேண்டியதிருக்கு. அதுக்காக கொஞ்சம் பாடுபட வேண்டியதிருக்கு. அது என்னுடைய கடமை. அதைக் கூட செய்யாட்டி நான் எதுக்கு படைப்பாளி, கிரியேட்டர், டைரக்டர்னு பெருமை பேசணும்?’’
‘‘வேதிகா, தன்ஷிகா எல்லாம் அட்டைப்பூச்சிக்கடியால் வேதனைப்பட்டாங்க போலிருக்கே!’’

‘‘ஆமா, கடிச்சது. அதுக்கு என்ன? பெயர் வாங்கறதா இருந்தா எல்லாம் தாங்கித்தான் ஆகணும். அவங்க மட்டும்தான் கஷ்டப்பட்டாங்களா? 1000 ஜூனியர் ஆர்டிஸ்ட், 150 டெக்னீஷியன்ஸ் வேலை பார்த்தாங்களே, அவங்க கணக்கில் வரலையா? ஹீரோ, ஹீரோயின் கஷ்டப்பட்டதை மட்டும் சொல்றீங்க… மத்தவங்க எல்லாம் மனுஷங்க இல்லையா? எனக்கு எல்லாரும் ஒண்ணுதான்.’’
‘‘இந்திப் பட இயக்குநர் அனுராக் காஷ்யப் உலகறிந்தவர். அவரே ‘பரதேசி’யை ரசிக்கிறார். ‘கேன்ஸ்’க்கு அனுப்பலாம் என்கிறார். உலக சினிமா அளவுக்குப் போகணும்னு நீங்க நினைச்ச மாதிரி தோணுது…’’
‘‘உலக சினிமான்னு பேசறதே அபத்தம். இந்த உலகத்தில இல்லையா தமிழ்நாடு? அது என்ன வேற கிரகத்திலா இருக்கு? அந்தக் கேள்வியைத் தூக்கி எறிங்க. விருதுக்கு மட்டும் போகணும்னு யோசனை பண்ணி நான் படம் எடுக்க மாட்டேன். எனக்கு இந்த மக்களுக்கு போய்ச் சேரணும்.

என் படத்தில் மறைமுகமா கமர்ஷியல் இருக்கும். அந்த கமர்ஷியலை எப்படி புகுத்தியிருக்கேன்னு கூர்ந்து கவனிச்சால்தான் புரியும். ‘பிதாமகன்’ல சிம்ரனுக்கு என்ன வேலை… அவங்களை எப்படி உள்ளே கொண்டு வந்தேன்… அதுதான். அப்படிக் கொண்டு வருவேன். கிட்டத்தட்ட லங்கர் கட்டை உருட்றது மாதிரி. கமர்ஷியல், ஆர்ட் இரண்டையும் கலந்து லங்கர் உருட்டுவதில் நான் திறமைசாலின்னு பெருமைப்பட்டுக்குவேன். அட்லீஸ்ட், இந்த ஒரு விஷயத்தில மட்டுமாவது!’’
‘‘நகைச்சுவையானவர் நீங்க, ஜாலியா பழகுவீங்க. ஆனாலும் வெளியே கடுமையானவர்னு இமேஜ் இருக்கே…’’

‘‘அதுக்குப் பல காரணங்கள். அதிகம் பேசறதில்லை. பொது இடங்களுக்கு நிறைய போறது கிடையாது. யாராவது தன்னை புத்திசாலி என என்னிடம் காட்டிக்கொள்ள அபத்தமான விமர்சனங்களை முன் வைத்தால் வெடிச்சிடுவேன். அவ்வளவுதான். மத்தபடி என் கையில் இருக்கிற இந்த சிகரெட் மாதிரி என்னைப் பத்தி செய்திகளை ஊதித் தள்ளுறது நீங்கதான்!’’

‘‘வீட்டுல பிரியமான கணவரா இருக்கீங்களா?’’
‘‘சினிமா இல்லாமல் வேறு துறைக்கு போயிருந்தால், அருமையான, பர்ஃபெக்ட்டான, க்ளீன் ஆன கணவனா, தகப்பனா இருந்திருக்க முடியும். சினிமாவில் அது சாத்தியம் இல்லை. அந்த வருத்தம் எப்பவும் இருந்துகிட்டே இருக்கு.’’
‘‘என்ன ஜி.வி.பிரகாஷுக்கு மாறிட்டீங்க?’’

‘‘எப்ப பார்த்தாலும் இளையராஜா, யுவன்ஷங்கர், விக்ரம், சூர்யா, விஷால், ஆர்யான்னு மாத்தி மாத்தி பயன்படுத்திக்கிட்டே இருக்கீங்களேன்னு மீடியா ஃப்ரண்ட்ஸ் கேட்டாங்க. ஜி.வி.பிரகாஷ், வைரமுத்து சார் இருவரும் இந்தப் படத்தை இரண்டு தூண்களாக நின்று தாங்கி நிறுத்தி தங்கள் கடமையை செய்து முடித்திருக்கிறார்கள். சரி, ஒண்ணே ஒண்ணு வேற மாதிரி செய்து பார்ப்போம்னு வெளியே வந்தேன். வேறு எந்தக் காரணமும் கிடையாது. நீங்க வேற மாதிரியெல்லாம் யோசிச்சு பார்க்க வேண்டாம்!’’

– நா.கதிர்வேலன்

 

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: