Skip to content

Madhan Karky’s Kungumam Thozhi Interview

April 12, 2013

பாடலாசிரியர் மதன் கார்க்கி

சமைப்பதும் பாட்டு எழுதுவதும் ஒண்ணுதான்!
‘‘நினைவு தெரிஞ்ச நாள் வரைக்கும் கிச்சன் பக்கமே நான் போனதில்லை…’’ – சில வருடங்களுக்கு முன்பு வரை, எல்லா ஆண்களையும் போலவே சமையல் அறைப்பக்கம் எட்டிக் கூடப் பார்க்காமல் இருந்தவர்தான் பாடலாசிரியர் மதன் கார்க்கியும். இன்று? ‘‘பாடல் எழுதறதையும் சமைக்கிறதையும் நான் கிட்டத்தட்ட ஒண்ணாத்தான் பார்க்கறேன். விதம்விதமான வார்த்தைகளைத் தேடிக் கோர்த்து, பாட்டு எழுதறது மாதிரிதான், புதுசு புதுசா பொருள்களைத் தேடிப்பிடிச்சு, வித்தியாசமான உணவுகளை சமைக்கிறதும். இரண்டுக்கும் ஒரே மாதிரியான கிரியேட்டிவிட்டி தேவை. பாடலோ, சமையலோ… ரெண்டு விஷயத்துலேயும் என் நோக்கம் ஒண்ணுதான். என்னோட வேலை எனக்குப் பிடிக்கிற மாதிரியே நிறைய பேருக்கும் பிடிக்கணும்’’ என்கிற அளவுக்கு மதன்கார்க்கியிடம் அப்படியொரு மாற்றம்! யெஸ்… மதன் கார்க்கி லிரிக் என்ஜினியர் மட்டுமல்ல, கிச்சன் கிங்கும் கூட!
எப்படி இருந்தவர் இப்படி ஆயிட்டார் என்ற சந்தோஷம் ப்ளஸ் ஆச்சர்யத்தோடு இடைப்பட்ட காலத்தில் நடந்த மாற்றத்தை அறிய ஆவல் தெரிவிக்கிறோம். ‘‘கிச்சன் பக்கம் போக ஆசை இருந்தாலும், அம்மா விடமாட்டாங்க. ஒருநாள் அம்மா, வெளியே போயிருந்தப்ப, அப்பாவைப் பார்க்க நடிகர் பார்த்திபன் வந்திருந்தார். வேலை செய்யறவங்க யாரும் அன்னிக்கு இல்லை. ‘டீ போடணுமே…’ன்னார் அப்பா. ‘நான் வேணா போட்டுத் தரட்டுமாப்பா?’ன்னு கேட்டேன். ‘உனக்கு டீ போடத் தெரியுமா’ன்னு அப்பாவுக்கு ஆச்சரியம். ‘தெரியும்’னு சொல்லிட்டு டீ போட்டு எடுத்துட்டு வந்து கொடுத்தேன். அதைக் குடிச்சிட்டு, பார்த்திபன் சார், ‘பிரமாதம்’னு பாராட்டினப்ப, எனக்கு தலை கால் புரியலை. அப்புறம் அவர் கிளம்பிப்போன பிறகு, நான் போட்ட டீயை குடிச்சுப் பார்த்தேன். பால் சரியாக் காயலை. டீயை ஒழுங்கா வடிகட்டலை. முக்கியமா… சர்க்கரையே போடலை. டீ என்ற பேர்ல கேவலமா எதையோ கொடுத்திருந்தேன். அப்பதான் பார்த்திபன் சார் எவ்ளோ பெரிய நடிகர்னு தெரிஞ்சது!’’ – வார்த்தைகளுக்கு வலிக்காமல் மிக மென்மையாகப் பேசத் தொடங்குகிறார் இளைய கவிப்பேரரசு.

பார்த்திபனுக்குப் பிறகு சிக்கிய சினிமா பிரபலம்? ‘‘யாருமே இல்லை. காரணம்… அதுக்கப்புறம் நான் சமையலறை பக்கமே எட்டிப் பார்க்கலை. மறுபடிகிச்சனுக்குள்ளே நுழைஞ்சதுன்னா… மாஸ்டர்ஸ் படிக்க ஆஸ்திரேலியா போனப்பதான். அங்கே எல்லாமே காஸ்ட்லி. நானும் என் ரூம் மேட்டும் சமைச்சு சாப்பிடறதுன்னு முடிவெடுத்தோம். அதுக்காகவே சமையல் கத்துக்க ஆரம்பிச்சோம். வாடகைக்கும் மத்த செலவுகளுக்கும் காசு வேணுமே… அதை சமாளிக்கிறதுக்காக அங்கே உள்ள ஒரு இந்தியன் ரெஸ்டாரன்ட்ல வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே எனக்கு ஒரு வருஷம் சமையல்ல டிரெயினிங் கொடுத்தாங்க. அதுக்கப்புறம் அங்கேயே கொஞ்ச நாள் செஃப்பா வேலை பார்த்தேன். களிமண் அடுப்புல நாண் (ரொட்டி) போட வேண்டியிருக்கும். கையெல்லாம் வெந்து, சிவந்து போகும். ஆனாலும், அது எதுவும் என் சமையல் ஆர்வத்துக்குத் தடையா இல்லை.
அதே ரெஸ்டாரன்ட்ல எனக்கு மேலும் ரெண்டு வருஷம் வேலை பார்க்க எக்ஸ்டென்ஷன் கிடைச்சது. சமைக்கிறது மட்டுமில்லாம, டேபிள் வெயிட்டிங், பாத்திரங்களைக் கழுவறதுன்னு எல்லா வேலைகளும் பார்த்திருக்கேன். அந்த ரெண்டு வருஷங்கள் எனக்கு நிறைய அனுபவங்களைக் கொடுத்தது. சைனீஸ், அமெரிக்கன், கொரியன்னு எல்லா மக்களும் வருவாங்க. யாருக்கு என்ன பிடிக்கும், யாரோட டேஸ்ட் எப்படியிருக்குன்னு எல்லாம் கத்துக்கிட்டேன்…’’ – மெட்டுக்குள் வார்த்தைகளை அடுக்குவதுபோல் வெகு நிதானமாக பேசுகிறார் மதன் கார்க்கி.

‘‘சாம்பார், ரசம், குழம்புன்னு பாரம்பரிய சமையலும் எனக்குத் தெரியும். ஆனாலும், வீட்ல பெரும்பாலும் அதைச் செய்ய மாட்டேன். என் கற்பனைக்கேத்தபடி புதுசு புதுசா ட்ரை பண்ணுவேன். மீனை வச்சு சாம்பார், ஆப்பிளை வச்சு ஊறுகாய்னு எல்லாமே வித்தியாசமா இருக்கும். சில அயிட்டம் சூப்பரா வரும். சில அயிட்டத்தை வாய்ல வைக்கவே முடியாது’’ – வாயில் வைக்கவே முடியாத உணவை அந்தக் கணத்தில் ருசி பார்த்தது போலவே முகத்தை சுளித்து முக பாவம் காட்டுகிறார்!
‘‘நாங்க அஞ்சு பேர் ரூம் மேட்ஸ். வாரக் கடைசியில மத்த நண்பர்களையும் கூப்பிடுவோம். வீட்ல பெரிய பஃபே பார்ட்டி நடக்கும். அதுக்காக சமைக்கிற அனுபவம் ரொம்ப சுவாரஸ்யமா இருக்கும்…’’ – விவரிக்கும்போது மதன்கார்க்கியின் மனத்திரையில் சந்தேகமில்லாமல் ஆஸ்திரேலியாதான்!
‘‘ஆஸ்திரேலியாவுல இருந்தப்ப, குழந்தைங்களைப் பார்த்துக்கிற ‘பேபி சிட்டிங்’ வேலையும் பண்ணியிருக்கேன். குழந்தைங்களுக்காக சமைக்கிறதுங்கிறது இன்னொரு சுவாரஸ்யம். அவங்களோட விளையாடிக்கிட்டும் பேசிக்கிட்டும் அவங்களுக்குப் பிடிச்சதை சமைக்கிறது செம ஜாலியா இருக்கும். வீட்ல பர்த் டே பார்ட்டி நடத்துவோம். ‘ஃபியூஷன் குக்கிங்’ என்ற பேர்ல பல புதுமைகளைச் செய்வேன். பீட்சாவுக்கான பேஸ், சாஸ் உள்பட எல்லாத்தையும் நானே தயார் பண்ணுவேன். பலவகையான பீட்சாவுக்கான பொருள்களைத் தயாரா வச்சிருப்பேன். பார்ட்டிக்கு வர்ற குழந்தைங்களுக்கு மெனு கார்டு பிரின்ட் பண்ணிக் கொடுத்துடுவேன். யாருக்கு, என்ன காம்பினேஷன்ல வேணுமோ அதுக்கேத்தபடி அப்பவே பண்ணிக் கொடுப்பேன். குழந்தைங்க ரொம்ப என்ஜாய் பண்ணுவாங்க!’’
நண்பர்கள் ருசித்த கார்க்கியின் நளபாகத்தை அவரது குடும்பத்தினர் ருசித்திருக்கிறார்களா? ரசித்திருக்கிறார்களா? ‘‘ஆஸ்திரேலியாவுல இருந்தப்ப, அம்மா அடிக்கடி என்கூட வந்து தங்குவாங்க. வீட்ல ஒரு பெரிய மைக்ரோவேவ் அவன் வச்சிருந்தேன். நாண் போடறதுல நான் பயங்கர எக்ஸ்பர்ட். 70-80 பேருக்கு சர்வ சாதாரணமா நாண் பண்ணித் தந்திருக்கேன். அம்மாவுக்கு நான் வைக்கிற சாம்பார் ரொம்பப் பிடிக்கும்.

அப்பா ஒருமுறை வந்தார். மூணு வாரம் என்கூடத் தங்கினார். அவருக்கும் நான்தான் சமைச்சுக் கொடுத்தேன். சாப்பாட்டு விஷயத்துல அப்பா ரொம்ப சென்சிட்டிவ். அவரை அத்தனை சுலபத்துல திருப்திப்படுத்த முடியாது. ஆனா, நான் அவருக்கு தினம் ஒரு வெரைட்டின்னு கிட்டத்தட்ட பதினைஞ்சு வகையான பிரெட் பண்ணிக் கொடுத்தேன். அவருக்குப் பிடிச்ச எண்ணெய் கத்தரிக்காய் குழம்பும், வித்தியாசமான நூடுல்ஸும், சாலட்ஸும் செய்து கொடுத்ததைப் சாப்பிட்டுட்டு அப்பா பாராட்டினது மறக்கவே முடியாது…’’
பெற்றோர் பாராட்டியது சரி… கணவரின் கைப்பக்குவம் பற்றி திருமதி கார்க்கியின் கமெண்ட் என்ன கவிஞரே? ‘‘என் மனைவி நந்தினிக்கு வீட்டை அழகா நிர்வாகம் பண்றது மாதிரியான வேற விஷயங்கள்ல ஈடுபாடு அதிகம். அதனாலோ என்னவோ அவங்களுக்கு சமையல்ல பெரிய ஆர்வம் இல்லை. விருப்பமில்லாத விஷயத்தைக் கட்டாயப்படுத்தறதுல எனக்கும் உடன்பாடில்லை. எப்பல்லாம் முடியுதோ, அப்பல்லாம் நானே சமைச்சிடுவேன். எண்ணெய், சீஸ், மயோனைஸ் எல்லாம் என் சமையல்ல தூக்கலா இருக்கும். ஹெல்த்தி குக்கிங் தெரியாது. அதனாலயே என் மனைவி என்னை அடிக்கடி சமைக்க வேணாம்னு சொல்லிடுவாங்க. அதே நேரம், நான் பண்ற எமர்ஜென்சி சிக்கன் என் மனைவிக்கு ஃபேவரைட்.
என் பையன் ஹைக்கூவுக்கு என் சமையல் ரொம்பப் பிடிக்கும். மிக்கி மவுஸ், டொனால்ட் டக் ஷேப்ல எல்லாம் தோசை செய்து கொடுப்பேன். சீஸை ஸ்டார் ஷேப்ல கட் பண்ணி, தோசை மேல வச்சு டிசைனர் தோசை வெரைட்டி நிறைய செய்து கொடுப்பேன்’’ என்று தன் சமையல் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட மதன் கார்க்கி, நிறைவாகச் சொன்ன விஷயங்கள் இன்றைய இளைஞர்கள் நினைவில் பதித்துக் கொள்ள வேண்டிய பளிச் யோசனைகள்! ‘‘சமையல், பெண்களோட வேலைங்கிற மனோபாவத்துலேருந்து இந்தத் தலைமுறை ஆண்கள் வெளியே வர ஆரம்பிச்சிருக்காங்கன்னு நினைக்கிறேன். கணவன்-மனைவி ரெண்டு பேரும் வேலைக்குப் போறாங்க. எல்லா வேலைகளையும் ரெண்டு பேரும் பகிர்ந்துக்க வேண்டிய கட்டாயம். சமையலும் அப்படித்தான். ஒருநாள் ஒருத்தர்னு சமையலைப் பிரிச்சுக்கலாம். இது எல்லாத்தையும் தாண்டி, ஆண்கள் ஏன் சமைக்கணுங்கிறதுக்கு இன்னொரு காரணமும் இருக்கு. உங்களுக்குப் பிடிச்சதை ருசிக்கணும்னா, அதை நீங்களே சமைக்கிறதுதான் ஒரே வழி!’’ கலக்கிட்டீங்க கவிஞரே! – ஆர்.வைதேகி
ஸ்பெஷல் ரெசிபி
கார்க்கி’ஸ் ஸ்பெஷல் காக்டெயில் என்னென்ன தேவை? ஐஸ் கியூப்ஸ் – ஒரு உயரமான டம்ளர் நிறைய, அங்கோஸ்த்ரா சிரப் – 1 டீஸ்பூன், லெமனேட் – கால் டம்ளர், கிரான்பெர்ரி ஜூஸ் – கால் டம்ளர், தண்ணீர் – கால் டம்ளர், இஞ்சி – 1 சிறிய துண்டு, நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய் – 1, எலுமிச்சைப் பழம் – பாதி, டொபாஸ்கோஸ் சாஸ் – 2 துளி. எப்படிச் செய்வது? உயரமான டம்ளரில் போட்ட ஐஸ் கியூப்ஸின் மேல் முதலில் அங்கோஸ்த்ரா சிரப்பை விட்டு, டம்ளரை லேசாகச் சுழற்றவும். ஐஸ்கட்டிகளின் இடையில் சிரப் பரவும். அதன் மேல் லெமனேட், பிறகு கிரான்பெர்ரி ஜூஸ், அடுத்து தண்ணீர் விடவும். இஞ்சியைச் சேர்க்கவும். பாதியாக வகிர்ந்த பச்சை மிளகாயை உள்ளே போடவும். எலுமிச்சைப் பழச்சாற்றை, விதையுடன் பிழியவும். கடைசியாக டொபாஸ்கோஸ் சாஸை ஐஸ்கட்டிகளின் மேல் விட்டு, அப்படியே பரிமாறவும். அங்கோஸ்த்ரா சாஸ், கிரான்பெர்ரி ஜூஸ், டொபாஸ்கோஸ் சாஸ் எல்லாமே பெரிய டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் கிடைக்கின்றன. ¬ அங்கோஸ்த்ரா சாஸில் லேசான கசப்பும், லெமனேட்டில் புளிப்பும், கிரான்பெர்ரியில் இனிப்பும், டொபாஸ்கோ சாஸில் காரமும் இருக்கும். வெயில் காலத் தில் குடித்தால் புத்துணர்ச்சி பொங்கும்.
குயிக் காலிஃபிளவர் என்னென்ன தேவை? ஆய்ந்து, சுத்தம் செய்த காலிஃபிளவர் – 1 கப், மிளகுத்தூள் – சிறிது, கார்ன்ஃப்ளார் – சிறிது, ஒரு முட்டையின் வெள்ளைக் கரு,  வெங்காயம் – 1, இஞ்சி – 1 துண்டு, பூண்டு – 5 பல், செலரி தழை – சிறிது, பச்சை மிளகாய் – 2, சோயா சாஸ் – 2 டேபிள்ஸ்பூன், உப்பு – தேவைக்கேற்ப, மயோனைஸ் – 2 டீஸ்பூன், வெங்காயத்தாள் – சிறிது, எண்ணெய் – பொரிப்பதற்கு. எப்படிச் செய்வது? காலிஃபிளவர் துண்டுகளில் கார்ன்ஃப்ளார், மிளகுத்தூள், முட்டையின் வெள்ளைக் கரு சேர்த்துக் கலந்து சிறிது நேரம் ஊற வைத்து, எண்ணெயில் பொரித்துத் தனியே வைக்கவும். வெங்காயம், இஞ்சி, பூண்டு, செலரியை மிகமிகப் பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, வெங்காயம் முதல் செலரி வரை ஒவ்வொன்றாகச் சேர்த்து, பொன்னிறத்துக்கு வதக்கவும். நீளமாக நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு சேர்க்கவும். சோயா சாஸ் சேர்க்கவும். இந்த சாஸில் உப்பு இருக்கும் என்பதால் பார்த்துச் சேர்க்கவும். நன்கு கலந்ததும், பொரித்து வைத்துள்ள காலிஃபிளவர் துண்டுகளை அதில் சேர்த்து, மயோனைஸ் சேர்த்து, நறுக்கிய வெங்காயத்தாளால் அலங்கரித்துப் பரிமாறவும். இதை சப்பாத்தி, நாண், ஃப்ரைட் ரைஸ் உடன் சாப்பிடலாம். வெறுமனே சாப்பிடவும் நன்றாக இருக்கும். ¬ அசைவ ப்ரியர்கள், இதையே காலி ஃபிளவருக்கு பதிலாக எலும்பு நீக்கிய சிக்கன் சேர்த்துச் செய்யலாம்.

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: