Skip to content

மொழியைக் கடந்து உலகை அடையலாம்!

April 28, 2013
மொழியைக் கடந்து உலகை அடையலாம்! 

சப் டைட்டிலிங் பண்றதுக்கு மொழிப்புலமை எந்தளவு முக்கியமோ, அதைவிட ஸ்கிரிப்ட் பத்தின அறிவும் அவசியம்…

தமிழ் சினிமாவுக்கு வேற்றுமொழி ரசிகர்களை சம்பாதித்துக் கொடுப்பதில் ரேக்ஸ் என்கிற ரேகா ஹரிச்சரணுக்குப் பெரும்பங்கு உண்டு. மொழி தெரியாமல் படம் பார்க்கும் போது அவர்களுக்குக் கதையைப் புரிய வைக்கப் பயன்படுத்தப்படுகிற டெக்னிக்தான் சப் டைட்டிலிங். படம் ஓடும்போது, அந்த வசனத்தின் ஆங்கில மொழிபெயர்ப்பு வரிகள் திரையில் ஓடும். நடிப்பையும், திரையில் ஓடும் வரிகளையும் தொடர்புப்படுத்தி, ரசிகர்கள் கதையைப் புரிந்து கொள்வார்கள். தென்னிந்திய திரை உலகில் சப் டைட்டிலிங் துறையில் நம்பர் 1 இடத்தில் இருக்கிற பெண் கலைஞர் ரேக்ஸ்.

Òநோ மேடம்… நோ ரேகா… ரேக்ஸ்னுதான் கூப்பிடணும்… இல்லைன்னா தோப்புக்கரணம் போடணும்… சரியா…’’ – அன்புக்கட்டளையுடன்தான் அறிமுகமே செய்து கொள்கிறார் ரேக்ஸ்.
‘‘அம்மா விஜி ஸ்ரீனிவாசன் சமூக சேவகி. பயங்கர படிப்பாளி. ‘தினம் ஒரு ஆங்கிலப் புத்தகம் படிக்கணும்’னு வாசிக்கிற பழக்கத்தை எனக்குள்ள விதைச்சவங்க அவங்கதான். அப்பா ஸ்ரீனிவாசன், சினிமாவுல ஸ்டில் போட்டோகிராஃபரா இருந்தவர். எனக்கு 18 வயசுலயே கல்யாணம். கணவர் ஹரிச்சரண் டைரக்டர். ‘தூவானம்’ உள்பட பல படங்களை டைரக்ட் பண்ணியிருக்கார். அவருக்கு ஆங்கிலப் படங்கள் பத்தின அபார அறிவு உண்டு. ஆங்கிலப் படங்களைப் பார்க்க, ரசிக்க எனக்குக் கத்துக் கொடுத்தவர் அவர்தான்’’ என்கிற ரேக்ஸ், காஸ்ட்யூம் டிசைனராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவராம்!

‘‘இன்டீரியர் டிசைனிங், ஃபேஷன் டிசைனிங் படிச்சிருக்கேன். ‘சங்கல்ப்’ என்ற பெயர்ல ஒரு எம்பிராய்டரிங் யூனிட் இருக்கு. அந்த அனுபவத்துலதான், பாலாவோட ‘சேது’ படத்துல அபிதாவுக்கு காஸ்ட்யூம் டிசைனரா ஒர்க் பண்ணினேன். அடுத்து ‘வேலாயுதம்’ படத்துல ஹன்சிகாவுக்கு ‘சில்லாக்ஸ்’ பாட்டுக்கு, ‘பெருமாள்’ படத்துல நமீதாவுக்கு… இப்படி சில படங்களுக்குப் பண்ணியிருக்கேன். 2009ல ஒரு குறும்படத்துக்கு சப் டைட்டிலிங் பண்ற வாய்ப்பு வந்தது. என் கணவர் ஹரிச்சரண் டைரக்ட் பண்ணின ‘தூவானம்’ படத்துக்கு மது அம்பாட்தான் கேமராமேன். அவர்தான் அந்தப் படத்துக்கு என்னை சப் டைட்டிலிங் பண்ணச் சொன்னார். அதுதான் ஆரம்பம். அந்த டைம்ல சப் டைட்டிலிங் கான்செப்ட் பத்தின விழிப்புணர்வு ரொம்பக் கம்மியா இருந்தது. ஒரு படம், மொழியைக் கடந்து, பல ரசிகர்களைச் சென்றடைய, சப் டைட்டில் உதவும்னு எடுத்துச் சொல்ல ஆரம்பிச்சேன். நிறைய இயக்குனர்கள்கிட்ட பேசினேன். கவுதம் மேனன் ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ல எனக்குக் கொடுத்த வாய்ப்பு பெரிய பிரேக்கா அமைஞ்சது. அடுத்து ஷங்கரோட ‘எந்திரன்’, ‘முப்பொழுதும் உன் கற்பனைகள்’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘தென்மேற்குப் பருவக்காற்று’, ‘நண்பன்’, ‘காவலன்’, ‘நீர்ப்
பறவை’, ‘மெரீனா’, ‘நீதானே என் பொன் வசந்தம்’, ‘ஹரிதாஸ்’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘வத்திக்குச்சி’, 

‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘உதயம்’னு இதுவரை தமிழ்ல 85 படங்களுக்கு சப் டைட்டிலிங் பண்ணிட்டேன். தமிழ் படங்கள்ல என்னோட வேலையைப் பார்த்துட்டு, நடிகர் மம்மூட்டி ஒருநாள் போன் பண்ணினார். ‘மலையாள படங்களையும் உலக அளவுல கொண்டு போக உங்க உதவி வேணும்’னு கேட்டார். அதைத் தொடர்ந்து, ‘ஆமென்’ உள்பட, 30க்கும் அதிக மலையாள படங்களுக்கும் சப் டைட்டிலிங் பண்ணிட்டேன்…’’ – தன்னடக்கத்துடன் சொல்கிறவர், ஒரு நாளைக்கு வெறும் 5 மணி நேரம் மட்டுமே தூங்கும் அளவுக்கு தன் வேலையில் பிஸி. தூக்கமும் கருமையும் தேங்கிக்கிடக்கும் அவரது கண்களே அதற்கு சாட்சி. 

‘‘ஒரு படத்துக்கு சப் டைட்டில் பண்ண எனக்குக் குறைஞ்சது 15 நாள்கள் தேவை. மலேசியா, சிங்கப்பூருக்கு சென்சார் பண்றதுக்குப் படங்களை அனுப்பும்போது, சப் டைட்டிலோட ஒரு வாரம் முன்னாடியே அனுப்பணும். ஆனாலும், எல்லா நேரமும் இப்படி போதுமான நேரம் எடுத்துக்கிட்டு ஒர்க் பண்ண முடியாது. 72 மணி நேரத்துல ஒரு முழுப்படத்தையும் முடிச்சுக் கொடுத்த அனுபவமும் எனக்கு உண்டு. அந்த வகையில நான் என் மகள் ஷ்ரயந்திக்கு நன்றி சொல்லணும். விஸ்காம் படிக்கிற அவளுக்கும் என்னை மாதிரியே சப் டைட்டிலிங்ல ஆர்வம் அதிகம். ரொம்ப நெருக்கடியான நேரத்துல ரெண்டு பேரும் சேர்ந்து ஒர்க் பண்றதுண்டு…’’ என்கிறவர், எத்தனை பிஸியான வேலைகளுக்கு மத்தியிலும், குறும்படங்களுக்கு சப் டைட்டிலிங் செய்ய மறுப்பதே இல்லை. அவர்கள் நாளைய இயக்குனர்கள் என்பதில் ரேக்ஸுக்கு உள்ள நம்பிக்கையே காரணம்!

‘‘சப் டைட்டிலிங் பண்றதுங்கிறதை வெறும் டிரான்ஸ்லேஷன்னு நினைச்சிட்டிருக்காங்க பலரும். அப்படிக் கிடையாது. மொழிப் புலமை எந்தளவுக்கு முக்கியமோ, அதைவிட ஸ்கிரிப்ட் பத்தின அறிவும் அவசியம். எந்த மொழி ரசிகர் படத்தைப் பார்த்தாலும் நெருடல் இல்லாம ரசிக்கிற அளவுக்கு சப் டைட்டில் இருக்கணும். நடிகர் சந்தானத்தோட ஒரு படத்துக்கு சப் டைட்டில் பண்ணிட்டிருந்தேன்… அதுல ‘அகா துகா’ன்னு ஒரு வார்த்தை. எனக்குப் புரியலை. படம் பார்க்கற வேற மொழி ரசிகருக்கும் புரியணுமில்லையா? சந்தானத்துக்கிட்டயே அதைக் கேட்டுத் தெளிவுப்படுத்திக்கிட்ட பிறகுதான் எழுதினேன். பாடல்களுக்கு சப் டைட்டில் பண்றது இன்னும் சவாலான வேலை…’’ – அக்கறையாகப் பேசுகிற ரேக்ஸுக்கு சப் டைட்டிலிங் கான்செப்ட்டை இன்னும் பெரிய அளவுக்குப் பிரபலப்படுத்தும் ஆவல் இருக்கிறது.

‘‘தமிழ் படங்களுக்கு எதுக்கு ஆங்கில சப் டைட்டில்? இந்தக் கேள்வி இப்பவும் சிலருக்கு இருக்கு. சப் டைட்டில் பண்ணப்பட்ட படங்களோட ரீச் பத்தி அவங்களுக்குப் புரியறதில்லை. திரைப்பட விழாக்களுக்குப் படங்களை அனுப்பறவங்க மட்டும்தான் சப் டைட்டில் பண்ணணும்னு நினைக்கிறதே தப்பு. எல்லாப் படங்களுக்குமே அது அவசியம். இப்போதைக்கு அது தவழற குழந்தை ஸ்டேஜ்லதான் இருக்கு. அதை ஒலிம்பிக்ஸ்ல ஓடற அளவுக்குத் தயார்படுத்தணும். அதே மாதிரி சப் டைட்டில் பண்ற கலைஞர்களுக்கு அங்கீகாரமும் இல்லை. இது எல்லாம் நடந்தா, மொழியைக் கடந்து படங்கள் பேசப்படும். பாராட்டப்படும்…’’

படங்கள்: ஜெகன்

 

 

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: