Skip to content

Junior Vikatan Article

May 29, 2013

Junior Vikatan Article

நடுக்கடலில் நடிகைகள்… சொகுசுப் படகில் சூதாட்டம்!
கிரிக்கெட் கிளுகிளு

கிரிக்கெட் சூதாட்டம் சென்னையை மையம்கொண்டு புயல் வீசத் தொடங்கியுள்ளது. புக்கிகளுக்கும் அரசியல்வாதிகள், போலீஸ் அதிகாரிகளுக்கும் உள்ள தொடர்புகள் வெட்டவெளிச்சமாகி வருகின்றன.

கிரிக்கெட் புக்கி பிரசாந்திடம் இருந்து மாதம் இரண்டு லட்ச ரூபாய் மாமூலாகப் பெற்றுவந்த வட சென்னையின் பலமான ஆளும் கட்சிப் பிரமுகரை விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்திருக்கிறது போலீஸ். சௌகார்​பேட்டையைச் சேர்ந்த ஆடிட்டர் ஒருவர் கிரிக்கெட் புக்கிகளுக்கு நிதி ஆலோ​சனை வழங்குபவராம். அவரும் இப்போது போலீஸ் கண்காணிப்பில் சிக்கியுள்ளார். இவர்களுடன் மும்மூர்த்திகள் என்று அழைக்கப்படும் ஹவாலா பிசினஸில் கொடி கட்டிப் பறக்கும் மார்வாடிகள் மூவர் பற்றியும் தீவிரமாக விசாரிக்கிறது போலீஸ். உலகின் எந்த மூலையில் உள்ள நாட்டிலும் ஹவாலா பணத்தை சில நிமிடத்தில் பட்டுவாடா செய்யும் பவர்ஃபுல் நெட்-வொர்க்கில் இருப்பவர்கள் இந்த மூவர். இவர்கள் மூலம் 2013 ஐ.பி.எல். மேட்ச்சில் 500 கோடி ரூபாய் வரை பணப் பரிமாற்றம் நடந்திருக்கிறதாம். இந்த மும்மூர்த்திகளுடன் தொடர்பில் இருந்த புக்கிகள் போலீஸ் பிடியில் சிக்கியுள்ளனர்.

சொகுசுப் படகில் வெளிநாட்டுப் பெண்கள்!

பெரிய பணக்காரர்கள் தங்கள் சொந்த உபயோகத்துக்காக சிறு ரக விமானத்தை வைத்திருப்பது போலவே, சொகுசுப் படகுகளையும் பயன்படுத்துகிறார்கள். சென்னை கடற்பகுதியில் மிதந்தபடி இருக்கும் ஒரு சொகுசுப் படகில் இருந்துதான் கிரிக்கெட் சூதாட்டத் தலைமையகம் செயல்பட்டது என்றால் நம்புவீர்களா?

சென்னை கடற்பகுதியில் மூன்று சொகுசுப் படகுகள் நிற்கின்றன. அந்தப் படகில் பார், கிச்சன், சாட்டிலைட் ஃபோன் என்று சகல வசதிகளும் இருக்கின்றன. ஆஸ்திரேலிய நாட்டுத் தயாரிப்பான இந்தப் படகின் விலை பல கோடிகளாம்.

”சொகுசுப் படகில் இரண்டு முறை கிரிக்கெட் வீரர் டோனியும் அவரது மனைவி சாக்ஷியும் ரவுண்ட் போய் வந்தனர்” என்கிறார்கள். மும்பை போலீஸார், சென்னை சி.பி.சி.ஐ.டி. போலீஸாரின் கிடுக்கிப்பிடியில் சிக்கிய புக்கிகள் சிலரின் செல்போன் எண்களை கிராஸ் செக் செய்தபோது, சென்னை கடற்கரை ஏரியாவை டவர் காட்டியது. குழம்பிப்போன போலீஸார் அடுத்தக் கட்ட விசாரணையில் இறங்கியபோது புக்கிகள் படகில் இருந்தபடி பிசினஸ் டிப்ஸ் பரிமாற்றம் நடந்ததை ஒப்புக்​கொண்டனர். பரபரப்பான கிரிக்கெட் மேட்ச்கள் நடக்கும்போது, அதன் வெற்றி தோல்வி மற்றும் வீரர்களின் நண்பர்கள், அம்பயர்கள்… இவர்களிடம் சொகுசுப் படகில் நடுக்கடலில் பயணித்தபடியே பேசியிருக்​கிறார்கள். வெளிநாட்டுப் பெண்களை விமானத்தில் சென்னைக்கு அழைத்துவந்து, புக்கிகள், புரோக்கர்களுடன் சொகுசுப் படகில் கடலுக்குள் அனுப்பியதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. சொகுசுப் படகில் சென்றவர்கள் பட்டியலில் சில நடிகைகளும் அடக்கம்.

சமீபத்தில் ராயபுரம் படகுத் துறையில் ஒரு விழாவுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற பத்திரிகை புகைப்படக்காரர்கள் சிலர் விநோதமாகத் தெரிந்த சொகுசுப் படகு ஒன்றைப் படம் எடுத்தனர். அப்போது அந்தப் படகில் இருந்த விஐ.பி. கும்பலுக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் பெயர் பொறித்த தொப்பிகளை வழங்கிக்கொண்டிருந்தாராம் ஒருவர். இந்த தகவல் போலீஸுக்கு எட்ட ரகசிய விசாரணையில் இறங்கிவிட்டனர்.

சூதாட்டத்துக்கு வங்கிக் கடன்!

கிரிக்கெட் சூதாட்ட ஊழலில் புதிய பரிமாணங்கள் சென்னையில் அம்பலமாக ஆரம்​பித்துவிட்டன. மே 27-ம் தேதி கிரிக்கெட் புக்கியான சஞ்சய் பாஃனா சென்னை விமானநிலையத்தில் கைதானார். சென்னையில் உள்ள பிரபல வங்கியின் அதிகாரிகள், ”சஞ்சயின் சகோதரர் என்று சொல்லிக்​கொண்டவர் கமலேஷ். இவர்கள் ஸ்டீல் பிசினஸ் செய்வதாகச் சொல்லிக்கொள்வார்கள். கார் வாங்கி விற்கும் பிசினஸுக்காக இரண்டே கால் கோடியை கமலேஷ் 2007-ம் ஆண்டு தேசிய வங்கி ஒன்றில் கடனாக வாங்கினார். போலி ஆவணங்களைக் கொடுத்து ஏமாற்றியது பிறகுதான் தெரியவந்தது. அவரைப் பற்றி விசாரித்தபோது, எங்கள் வங்கியில் இருந்து வாங்கிய பணத்தை ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்டத்தில் போட்டு ரொட்டேஷன் செய்திருப்பதைக் கண்டுபிடித்து வங்கியின் மேலிடத்துக்குத் தெரிவித்தோம். இதுநாள் வரை நோ ஆக்ஷன். ஏதோ ஒரு இடத்தில் முட்டுக்கட்டை விழுந்தது. அதை எங்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. 2007 முதல் 2012 வரை சென்னையில் உள்ள வங்கிகளில் கடன் வாங்கிக் கட்ட முடியாமல் பதுங்கியவர்களின் லிஸ்ட்டை எடுத்தால், அவர்களில் பெரும்பாலானவர்கள் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டவர்​களாகத்தான் இருக்கும். அவர்களை நெருங்கவிடாமல் செய்யும் சக்திதான், இந்த சூதாட்டங்களுக்கு எல்லாம் ‘பாஸ்’. மாதத்தில் பல நாட்கள் வெளிநாட்டில் இருந்து சூதாட்டக் கணக்குவழக்குகளைப் பார்க்கும் அவர் தமிழகம் வந்துவிட்டால், மிகவும் அமைதியான நபராக மாறிவிடுவார்’’ என்று சி.பி.ஐ. அதிகாரிகளிடம் ஆவணங்களைக் காட்ட, திடுக்கிட்டார்களாம்.

இது கொடியது… மிகவும் கொடியது!

கிரிக்கெட் ஆர்வலரும் சினிமா இயக்குனருமான ஹரி சரண், கிரிக்கெட் சூதாட்ட விவகாரத்தில் நிறைய தகவல்களை சேகரித்து வைத்துள்ளார். அவரிடம் பேசினோம். ”கந்து வட்டிக்காரர்களைவிட மோச​மானவர்கள் கிரிக்கெட் புக்கிகள். புக்கிகளிடம் பணம் கட்ட வசதி இல்லாதவராக இருந்தால், தொகை நிரப்பாத செக்குகளில் கையெழுத்து வாங்கிக்கொண்டு ‘உங்கள் சார்பில் நாங்களே பெட்டிங் கட்டுகிறோம்’ என்று ஆசை காட்டுவார்கள். உதாரணத்துக்கு, ஆயிரம் ரூபாய் கட்டுகிறார் என்றால், அதில் 480 ரூபாயை வட்டியாக எடுத்துக்கொண்டு, 520 ரூபாயைத்தான் பெட்டிங்கில் அந்த நபர் பெயருக்கு கட்டுவார்கள். ஒரே நாள்தான் கெடு. ஜெயித்தால் சரி. தோற்றுவிட்டால், ஆயிரம் ரூபாயை உடனே திருப்பித்தர வேண்டும். இல்லையென்றால், அடியாட்கள்… லோக்கல் போலீஸ் என்று பல்வேறு தரப்பில் இருந்து மிரட்டல் வரும். இந்த ஐ.பி.எல். சீஸனில் மட்டும் 40 ஆயிரம் கோடி ரூபாய் வரை பெட்டிங்கில் பணப் பரிமாற்றம் நடந்திருப்பதாகத் தகவல்.” என்றார்.

கிரிக்கெட் சூதாட்டத்தில் இது ஆரம்பம்தான்… இன்னும் போகவேண்டிய தூரம் நிறைய இருக்கிறது!

– பாலகிஷன்

 

 

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: