Skip to content

உலகம் முழுக்க சுத்திக் காட்டணும் : என் அப்பா

September 16, 2013

உலகம் முழுக்க சுத்திக் காட்டணும் : என் அப்பா

பிரபலங்களின் வாரிசுகளுக்கு பெற்றோரின் பெயரே விசிட்டிங் கார்டு. தகுதி, திறமை எல்லாம் வாரிசுகளுக்கு இரண்டாம், மூன்றாம் பட்சம்தான். தான் ஒரு பிரபலத்தின் மகள் என்ற அடையாளத்தை வெளிக்காட்டிக் கொள்ளாமல், சினிமாவில் அறிமுகமாகி, முதல் படத்திலேயே கவுதம் மேனனின் மோதிரக் கையால் குட்டுப் பெற்று, நகைச்சுவை நடிப்பில் கவனிக்கத் தகுந்த அளவு வளர்ந்து வருகிறார் வித்யுலேகா.
யெஸ்… பிரபல நடிகர் மோகன்ராமின் மகள்தான் இவர்!

அப்பாவைப் பற்றி அவர் இங்கே பகிர்ந்துகொள்ளும் விஷயங்கள்
அத்தனையும் சுவாரஸ்யம்…
‘‘எனக்கு அப்ப ஒரு வயசு.
அப்பதான் அப்பா நடிக்க ஆரம்பிச்சார். அப்பலேருந்தே என்னைச் சுத்தி சினிமா சூழல் படர ஆரம்பிச்சது. நாங்க இருக்கிற இந்த வீட்டை எத்தனையோ தடவை ஷூட்டிங்குக்காக கொடுத்திருக்கோம். ‘லைட்ஸ்… கேமரா… ஆக்ஷன்…’ சத்தமும் வெளிச்சமும் அப்பவே எனக்குப் பரிச்சயம். ஆனாலும், எனக்கு சினிமா ஆசை இருந்ததில்லை. அப்பாகூட பல தடவை ஷூட்டிங் ஸ்பாட் போயிருக்கேன். ரஜினி சார், கமல் சாரையெல்லாம் சந்திச்சிருக்கேன். எதுவுமே எனக்குள்ள சினிமா எண்ணத்தை விதைக்கலை…’’ – சினிமாவுக்கும் தனக்குமான விட்ட குறை, தொட்ட குறை அனுபவத்துடன் பேச ஆரம்பிக்கிறார் வித்யுலேகா.

‘‘அப்பா சன் டி.வியில ‘சின்ன பாப்பா பெரிய பாப்பா’ன்னு ஒரு சீரியல்ல நடிச்சிட்டிருந்தார். அப்ப ஒரு முறை என்கிட்ட, ‘நாளைக்கு எம்.ஜி.எம்ல ஷூட்டிங். நிறைய குழந்தைங்க வருவாங்க. நீயும் என்கூட வந்து, அங்கே விளையாடிட்டிரு’ன்னு கூட்டிட்டுப் போனார். தீம் பார்க்ல விளையாடற ஆசையில நானும் போயிட்டேன். டைரக்டர் சக்திவேல் திடீர்னு அப்பாவைக் கூப்பிட்டு, ‘உங்க பொண்ணையும் ஒரு சீன்ல நடிக்க வைக்கலாமே’ன்னு சொன்னதும், அப்பாவும் ஓ.கே. சொல்லிட்டார். எனக்கு ஒரே பயம். ஸ்ரீப்ரியா மேடம் காணாமப் போற சீன்… அவங்களைத் தேடி, ஒவ்வொருத்தர்கிட்டயா அப்பா போய் விசாரிக்கணும். என்கிட்டயும் வந்து கேட்பார். ‘அவங்க பேர் சின்ன பாப்பா… ஆனா, கொஞ்சம் பெரிய பாப்பாவாதான் இருப்பாங்க’ன்ற மாதிரி காமெடியான டயலாக். அதைக் கேட்டுட்டு, நான் திருப்பி டயலாக் பேசணும். அப்பாவைப் பார்த்து நான் பேசின அந்த முதல் டயலாக் என்ன தெரியுமா? ‘யோவ் நீ என்ன லூசா?’ – இப்ப நினைச்சாலும் செம காமெடியா இருக்கும்! ஆக்சிடென்ட்டலா நடந்த அந்த ஷூட்டுக்கு பிறகும் எனக்கு நடிப்புல ஆர்வம் வரலை…’’ – அருகிலிருக்கும் அப்பாவை தர்மசங்கடத்துடன் பார்த்தபடி தொடர்கிறார்.

‘‘திடீர்னு ஒரு நாள் அப்பாகிட்ட ‘எனக்கும் மேடையில நின்னு நடிக்கணும் போல இருக்குப்பா’ன்னு சொன்னேன். ‘சரி ட்ரை பண்ணேன்’னார் அப்பா. எட்டாவது படிக்கிறபோதே டிராமா ட்ரூப்ல சேர்ந்து நிறைய தமிழ், இங்கிலீஷ் நாடகங்கள்ல நடிக்க ஆரம்பிச்சேன். அப்படியே 8 வருஷங்கள் போச்சு. என்னோட டிராமா பின்னணிதான் என்னை சினிமாவில அறிமுகப்படுத்தினது. கவுதம் மேனன் சாரோட ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்துல வாய்ப்பு தேடி வந்தது. என்னதான் டிராமா அனுபவம் இருந்தாலும், சினிமாவுக்கும் அதுக்கும் கொஞ்சமும் சம்பந்தமே இல்லை. ரெண்டும் வேற வேற உலகம். சினிமான்னா என்னன்னு கத்துக்க அப்பாவோட உதவி எனக்குத் தேவைப்பட்டது. ‘படம் பண்ணப் போறேன்’கிற என் விருப்பத்தை அப்பாகிட்ட சொன்னேன். ஓ.கே. சொன்னார். ஆடிஷனுக்கு வரச் சொன்னாங்க. போனேன். டயலாக் கொடுத்துப் பேசச் சொன்னாங்க. தமிழ்ல இருந்தது. ஏதோ தத்தக்காபித்தக்கான்னு பேசிட்டு வந்தேன். நான் சரியா பேசலைங்கிறது எனக்குத் தெரியும். வீட்டுக்கு வந்ததும் அப்பாகிட்ட சொன்னேன். ‘அதனால என்ன… இன்னொரு சான்ஸ் கேட்டுப் பாரேன்’னார். என் அதிர்ஷ்டம், ரெண்டாவது முறை எனக்கு அழைப்பு வந்தது. அந்த முறை நான் அப்பாகிட்ட நிறைய பேசிக் காட்டி, பிராக்டீஸ் பண்ணிட்டுத்தான் போனேன். அதுல செலக்ட் ஆயிட்டேன். அடுத்தடுத்து நிறைய படிகள் இருந்தது. அப்பா கொடுத்த தைரியத்துல ஒவ்வொண்ணா தாண்டி, செலக்ட் ஆனேன். கடைசி படியைக் கடக்கிற வரைக்கும், நான் இன்னாரோட பொண்ணுங்கிறதை கவுதம் மேனன் சார் உள்பட யார்கிட்டயும் சொல்லிக்கலை. அப்பாவும் என்னைப் பத்தி யார்கிட்டயும் சொல்லலை. செலக்ட் ஆன பிறகுதான், கவுதம் மேனன் சாருக்கு ஆச்சரியம். ‘மின்சாரக் கனவு’ படத்துல அவர் ஒர்க் பண்ணினப்ப, அப்பாவுக்கு சார்தான் டயலாக் எல்லாம் சொல்லிக் கொடுத்தாராம். ரொம்பப் பெருமையா இருந்தது. முதல் படமே பெரிய பேனர்… பெரிய பெரிய ஆர்ட்டிஸ்ட்டுன்னு எனக்கு அதிர்ஷ்டம்னுதான் சொல்லணும்…’’ – முதல் வாய்ப்பு தந்த பிரமிப்பான அனுபவத்தை அப்படியே வார்த்தைகளில் நமக்கு விவரித்துத் தொடர்கிறார் வித்யுலேகா.

‘‘எங்கப்பாகிட்ட எனக்கு ரொம்பப் பிடிச்ச விஷயம்னா அட்வைஸோ, ஹெல்ப்போ… தேவைன்னு கேட்டாதான் செய்வார். பெரும்பாலான அப்பாக்களைப் போல, பிள்ளைங்களைக் கட்டுப்படுத்தி, ஆயிரத்தெட்டு கண்டிஷன்ஸ் போட்டு, இதைத்தான் செய்யணும், இப்படித்தான் இருக்கணும்னு என்னிக்குமே சொன்னதில்லை. ‘உன் சுதந்திரத்துல நான் தலையிட மாட்டேன். ஆனா, நீ போற பாதையில ஏதோ தப்பு இருக்குன்னு எனக்குத் தெரிஞ்சா, அப்போ உன்னை இழுத்து நிறுத்தத் தயங்க மாட்டேன். ஒரு அப்பாவா அது என் கடமை’ன்னு அடிக்கடி சொல்வார். ஸ்கூல், காலேஜ் டேஸ்ல கல்ச்சுரல்ஸ், அது, இதுன்னு அடிக்கடி கிளாஸ் கட் பண்ணிடுவேன். அப்பாவுக்குத் தெரிய வரும் போதும் என்னைத் திட்டினதோ, அடிச்சதோ இல்லை. ‘படிப்பு கெட்டுப் போகக் கூடாது. அதே மாதிரி உன் டீச்சர்ஸ் யாரும் என்னைக் கேள்வி கேட்கற மாதிரி நடந்துக்காதே’ன்னுதான் சொல்லியிருக்கார். வார்த்தைகள்லயோ, நடந்துக்கிற விதத்துலயோ கடுமையைக் காட்டிக்கவே மாட்டார் அப்பா. எனக்கு எக்கச்சக்கமான ஃப்ரெண்ட்ஸ். அதுல அப்பாதான் நம்பர் 1. அவரும் என்னை ஒரு ஃப்ரெண்டாதான் நடத்து வார். அப்பாவோட முதல் படம் ‘இதயம்’. அதுல அவரோட எக்ஸ்பிரஷன்ஸையும் நடிப்பையும் பார்த்துட்டு, அவரைக் கன்னாபின்னான்னு கலாய்ப்பேன். ஆனா, அவர் என்கிட்ட கோபப்பட்டதே இல்லை. அப்பா பக்கத்துல இருக்கிற வரைக்கும்தான் இந்தக் கிண்டல், கேலி எல்லாம். அவர் இல்லாதப்ப, அவர் நடிச்ச காமெடி சீன்ஸை எல்லாம் பார்த்து அந்த டைமிங் சென்ஸை ரசிச்சு சிரிச்சிருக்கேன்.

‘நீதானே என் பொன்வசந்தம்‘ படத்துல நானும் சந்தானமும் பேசிக்கிட்டே நடந்து வர்ற மாதிரி ஒரு சீன். ‘எங்கப்பா பார்த்தார்னா நான் செத்தேன்’னு ஒரு டயலாக். ஷூட்டிங் நடந்திட்டிருக்கு… அந்த டயலாக்கை சொல்லிட்டு நிமிர்ந்து பார்த்தா, நிஜமாவே எங்கப்பா நின்னுக்கிட்டிருக்கார். இப்பவும் அதை நினைச்சு நினைச்சு சிரிப்பேன். எவ்ளோ நல்லா நடிச்சாலும், அப்பா வாய்லேருந்து ‘பிரமாதம்’னு ஒரு பாராட்டை என்னால வாங்கவே முடியாது. ‘ஓ.கே…’னு மட்டும்தான் சொல்வார். நல்லாருக்குன்னு பாராட்டிட்டா, அதை நான் தலையில ஏத்திப்பேனாம். இன்னும் பெட்டரா பண்ணணுங்கிற நினைப்பு வராதாம். முதல்ல கொஞ்சம் கஷ்டமா இருந்தது. இப்பல்லாம் அப்பா ஓ.கே.ன்னு சொல்றதே பிரமாதம்னு அர்த்தம் புரிஞ்சுக்கப் பழகிட்டேன்!

அப்பா பெரிய நடிகராச்சே… அவர் மூலமா நிறைய வாய்ப்புகள் வருமோன்னு பல பேர் நினைக்கலாம். முதல் படத்துலேருந்து, இதோ இப்ப விஜய் சாரோட ‘ஜில்லா’, அஜீத் சாரோட ‘வீரம்’, ஸ்ரீப்ரியா மேடம் டைரக்ட் பண்ற ‘மாலினி 22 பாளையங்கோட்டை’ன்னு தமிழ்லயும், தெலுங்குல சில படங்களும் தானா தேடி வந்ததுதான். அப்பாவோட ஒரே ஒரு அட்வைஸ்தான் என்னை தமிழ் தவிர தெலுங்கு இண்டஸ்ட்ரியிலயும் பிரபலமாக்கினது. ‘நீதானே என் பொன் வசந்தம்’ படத்தோட தெலுங்கு வெர்ஷன்ல… என் கேரக்டருக்கு வேற யாரோ டப்பிங் பேசினாங்க. எனக்கு தெலுங்கு தெரியாது. அப்பாவோ, ‘தெரியாதுன்னு சொல்றதுக்குப் பதில் ட்ரை பண்ணு… சரோஜாதேவி, சாவித்ரியில ஆரம்பிச்சு, இன்னிக்கு இருக்கிற நம்பர் 1 நடிகைகள் பலரும் தமிழ் தெரியாதவங்கதான். ஆனாலும், கத்துக்கிட்டு, தமிழ் இண்டஸ்ட்ரியை கலக்கலையா? நீயே டப்பிங் பேசும் போதுதான், அந்த கேரக்டருக்கு வெயிட் கூடும்’னு சொன்னார். என் அதிர்ஷ்டம், எனக்கு டப்பிங் பேசினவங்களோட வாய்ஸ் டைரக்டருக்கு திருப்தியா இல்லை. என்னையே பேசச் சொன்னார். பக்கத்துல தெலுங்கு தெரிஞ்ச ஒருத்தரை வச்சுக்கிட்டுப் பேசினேன். அந்தப் படம்தான், தெலுங்குல எனக்கு அடுத்தடுத்த சான்ஸை தேடிக் கொண்டு வந்து நிறுத்தினது. அந்த வகையில அப்பாவுக்கு நான் ரொம்பவே நன்றிக்கடன் பட்டிருக்கேன். அப்பா இல்லாம எனக்கு இந்த இடம், இந்த பெயர், இந்த நிலைமை எல்லாம் நிச்சயமா சாத்தியமாயிருக்காது…’’ – அதுவரை காமெடியும் கலாட்டாவுமாக போய்க் கொண்டிருந்த வித்யுவின் பேச்சில் திடீரென சென்டிமென்ட் வாடை…

‘‘கஷ்டங்களோ, போராட்டங்களோ இல்லாம வளர்ந்தவள் நான். அப்பா, அம்மாவுக்கு ரொம்பச் செல்லம். வாழ்க்கையில எல்லா விஷயங்களையும் நானே முடிவெடுத்துடுவேன். என்னால சரியான முடிவெடுக்க முடியாத சில தருணங்களும் வரும். அப்ப எனக்கு ஃப்ரெண்ட், ஃபிலாசஃபர், கைடு எல்லாமே அப்பாதான். அவர் சொல்ற யோசனைகளும், அவர் காட்டற வழிகளும்தான் எனக்கு சரியான தீர்வா இருந்திருக்கு.

நடிப்புல நான் காமெடியை செலக்ட் பண்ணினேன். இந்த ஃபீல்டுல ஹீரோயின்களோட ஆயுசு ரொம்பக் கம்மி. ஆனா, ஒரு காமெடியனா என்னால எத்தனை வருஷங்கள் வேணாலும் தாக்குப்பிடிக்க முடியும். ‘உன்னோட ரோல் மாடல் யாரு’ன்னு என்னை யார் கேட்டாலும், நான் ‘மனோரமா ஆச்சி’ன்னு சொல்வேன். அதுல எங்கப்பாவுக்கு எக்கச்சக்க பெருமை. ‘இந்தக் காலத்துலயும் இப்படியொரு பொண்ணா’ன்னு என்னைப் பத்தி எல்லார்கிட்டயும் பெருமையா சொல்லிப்பார்.

இத்தனை நாளா மோகன்ராமோட பொண்ணா தான் என்னை எல்லாரும் பார்த்தாங்க. இனிமே வித்யுலேகாவோட அப்பா மோகன்ராம்னு சொல்லணும். அந்த இடத்தை ரீச் பண்றது அத்தனை ஈஸி இல்லைன்னாலும், நிச்சயம் அதுக்காக முயற்சி பண்ணுவேன்.

எனக்கு எதுலயும் பெரிய சென்டிமென்ட்ஸ் கிடையாது. ஒரு விஷயம் தவிர… என்னோட படத்தோட ப்ரீவியூ, நான் கலந்துக்கிற அவார்ட் ஃபங்ஷன், மேடை நிகழ்ச்சிகள்னு எல்லாத்துலயும் என்கூட அப்பா இருக்கணும். இப்பவரைக்கும் அது தவறினதே இல்லை. என்னோட நடிப்புக்காக நான் ஒரு பெரிய அவார்ட் வாங்கணும். அந்த மேடையில அப்பா என் பக்கத்துல நிக்கணுங்கிறதுதான் என்  லட்சியம்…

அதே மாதிரி அப்பாவுக்கு நிறைய டிராவல் பண்றது பிடிக்கும். அவர் பார்க்காத இடமே இல்லைங்கிற அளவுக்கு அவரை உலகம் முழுக்க சுத்திக் காட்டணும்…’’ அன்பான மகளாக
ஆசையைச் சொல்கிறார்.
– ஆர்.வைதேகி
படங்கள்: ஆர்.கோபால்

வீட்டுக் வந்த லட்சுமி வித்யுலேகாவின் அப்பா மோகன்ராம்

‘‘எங்களுக்கு ரெண்டு குழந்தைங்க. மகன்தான் மூத்தவன். அவனுக்கும் வித்யுவுக்கும் 11 வயசு வித்தியாசம். நாங்க சத்யசாய் பக்தர்கள். கொடைக்கானல்ல எங்க வீட்டுக்கு ஒருமுறை சத்யசாய் வந்தார். ‘இந்த வீட்டுக்கு இன்னொரு லட்சுமி வரணுமே… இன்னொரு குழந்தை பெத்துக்கோ’ன்னு சொல்லிட்டுப் போனார். அப்படியொரு அருள்வாக்கால பிறந்தவள்தான் வித்யு. பேர் வச்சதுகூட பாபாதான்.
எட்டாவது படிக்கிற வரைக்கும் ரொம்ப அமைதியானவளா இருந்தாள். அப்புறம் அவ வெயில்ல வச்ச செடி மாதிரி, மலர ஆரம்பிச்சா. நிறைய போட்டிகள்… நிறைய பரிசுகள்னு திறமைகள் வெளியில வர ஆரம்பிச்சது. சினிமா வாய்ப்பு அவளைத் தேடி வந்தது. அதுக்காக நான் யார்கிட்டயும் சிபாரிசு பண்ணலை. ‘உங்களுக்குத்தான் எல்லாரையும் தெரியுமே… எல்லாரும் நண்பர்களாச்சே… எனக்காகப் பேசுங்களேன்’னு அவளும் என்கிட்ட வந்து நின்னதில்லை. அவளோட திறமையால அறிமுகமாகி, இன்னிக்கு கேலண்டர் ஃபுல் ஆகிற அளவுக்கு நடிப்புல பிசியா இருக்கா.

நடிக்க வர்றதுக்கு முன்னாடி ஸ்போர்ட்ஸ், அது, இதுன்னு நிறைய விஷயங்கள் பண்ணினா. இப்ப நடிப்புன்னு செலக்ட் பண்ணியிருக்கா. ஒரு அப்பாவா, அவளுக்கு ஒரு மேக்கப் கிட் வாங்கிக் கொடுத்து, ‘செய்யற தொழிலை நேசி… பணத்தை மட்டும் பார்க்காம, உன் வேலையின் மூலமா உனக்குக் கிடைக்கப் போற ஆத்ம திருப்திக்காக உழை. அதே வேளை யார் மனசையும் புண்படுத்தற மாதிரி நடந்துக்காதே’ன்னு சொல்லி, ஆசீர்வாதம் பண்ணினேன். நாளைக்கே இதுவும் பிடிக்கலைன்னு சொன்னா, அடுத்து அவ ஆசைப்படற விஷயத்துக்கு என்னோட சப்போர்ட் கண்டிப்பா இருக்கும்.
இந்த இடத்துல நான் எல்லா பெற்றோருக்கும் ஒரு விஷயம் சொல்லணும். உங்களோட நிறைவேறாத கனவுகளை குழந்தைங்க மேல சுமத்தி, அவங்க மூலமா அதை நிறைவேத்திக்க நினைக்காதீங்க. அவங்க விரும்பறதை செய்ய அனுமதியுங்க. ஒரு குறிப்பிட்ட காலம் வரைக்கும் இதுவா, அதுவாங்கிற தெளிவில்லாமத்தான் இருப்பாங்க. ஒரு கட்டத்துல இதுதான் தனக்கான துறைன்னு தெளிவடைவாங்க. அப்படி அவங்க தேர்ந்தெடுக்கிற பாதையில சுதந்திரமா இயங்க ஆதரவா இருங்க.

பெற்ற பிள்ளைகளா இருந்தாலும், தேவையில்லாம நான் எந்த விஷயத்துலயும் அட்வைஸ் பண்ணவோ, ஆலோசனைகள் சொல்லவோ மாட்டேன். அவங்களா என்கிட்ட வந்து அனுபவங்களைக் கேட்டா பகிர்ந்துப்பேன். ஆலோசனைகள் கேட்டா சொல்வேன். மற்றபடி அனுபவங்கள் அவங்களுக்கு வாழ்க்கைக்குத் தேவையான எல்லாத்தையும் கத்துக் கொடுக்கும். வித்யு இன்னிக்கு இன்டிபென்டென்ட்டானவளா, அன்பானவளா இருக்கக் காரணமும் எங்களோட இந்த அணுகுமுறைதான். இப்படியொரு மகளைப் பெற்றதுக்காக நான் ரொம்பவே பெருமைப்படறேன்…’’

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: