Skip to content

‘ஐ’ ஆச்சர்யங்கள் சொல்கிறார் ஷங்கர்!

October 24, 2013

ஷங்கர்… ஹாலிவுட் கலைஞர்களே புருவம் உயர்த்திப் பார்க்கும் தமிழன். ரஜினியை வைத்து அடுத்தடுத்து இரண்டு ஹிட்ஸ். ‘இதற்கு மேல் இவரால் நம்மை ஆச்சர்யப்படுத்த முடியுமா?’ என்று அனைவரும் காத்திருக்க, ‘ஒல்லி விக்ரம்’ ஸ்டில் கொடுத்து இண்டஸ்ட்ரியைத் தீப்பிடிக்கவைத்திருக்கிறார் மாஸ்டர் பிளாஸ்டர் இயக்குநர்.

சூப்பர் ஸ்லிம் விக்ரம் – ஏ.ஆர்.ரஹ்மான் – பி.சி.ஸ்ரீராம் கூட்டணி, சீன லொகேஷன்கள் என கோடம்பாக்கத்தின் பல்ஸ் எகிறவைக்கும் ‘ஐ’ பட ஷங்கரின் ஓப்பன் பேட்டி இங்கே…

” ‘ஐ’… என்னென்ன விசேஷங்கள்?”

”ரொம்ப க்ரிஸ்ப்பான ரொமான்டிக் த்ரில்லர். இதுவரை நான் தொடாத சப்ஜெக்ட். படத்தில் விக்ரம் உள்பட, நிறைய கேரக்டர்களுக்கு ஸ்பெஷல் மேக்கப் தேவைப்பட்டது. சர்வதேச அளவில் மேக்கப்ல யார் பெஸ்ட்னு தேடி சலிச்சா, ‘லார்ட் ஆஃப் தி ரிங்ஸ்’, ‘ஹாபிட்’ படங்களுக்கு மேக்கப் பண்ணின ‘வேட்டா ஸ்டுடியோஸ்’ பத்திச் சொன்னாங்க. உடனே நியூஸிலாந்து போய் அவங்ககிட்ட பேசினோம். ‘ரொம்ப வித்தியாசமான கதை. எங்களுக்கு நிறைய சவால் இருக்கு’னு ஆர்வம் காட்டினாங்க. அவங்க ‘எந்திரன்’ படத்தைப் பார்த்திருக்காங்க. அதோட க்ளைமாக்ஸ் பார்த்து அசந்துட்டாங்க. ‘ஹாலிவுட்ல நிறைய ரோபோ படங்கள் பார்த்திருக்கோம். ஆனா, இந்த க்ளைமாக்ஸ் ரொம்ப ஃப்ரெஷ்ஷா இருக்கு’னு உற்சாகமாகி ‘ஐ’ பட வேலையில் உடனே கமிட் ஆனாங்க. அதோட, ‘அடுத்தடுத்து இனி என்ன ஸ்கிரிப்ட் பண்ணினாலும் எங்ககிட்ட முதல்ல டிஸ்கஸ் பண்ணுங்க. பிசினஸ் விஷயங்கள்லாம் அப்புறம் பார்த்துக்கலாம்’னு சொல்லிருக்காங்க. ‘ஐ’ ரொம்பக் கச்சிதமா டேக் ஆஃப் ஆகியிருக்கு!”

” ‘மீரா’ பட விக்ரமைவிட ‘ஐ’ விக்ரம் ரொம்ப ஹேண்ட்சம்… இவ்ளோ பாலீஷ் பண்ற அளவுக்கு அவருக்கு அப்படி என்ன கேரக்டர்?”

”அதை தியேட்டர்ல ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பாருங்களேன். ஆனா, நீங்க எந்த எதிர்பார்ப்போட வந்தாலும், விக்ரம் உங்களை ஆச்சர்யப்படுத்துவார். ஸ்லிம் விக்ரம் சம்பந்தப்பட்ட காட்சிகள் ஒவ்வொண்ணும் பட் படீர் பட்டாசு!

மேக்கப்தான் என் ஐடியா. இவ்ளோ எடை குறைச்சது விக்ரமோட ஐடியா. ‘எல்லாரும் எடையைக் கூட்டிதான் நடிச்சிருக்காங்க. யாரும் எடையைக் குறைச்சது இல்லை. நான் பண்றேனே’னு கேட்டுப் பண்ணார். இவ்ளோ ஸ்லிம் ஆக அவர் சரியா சாப்பிடுறது இல்லைனு சொல்றதைவிட, சாப்பிடுறதே இல்லைனு சொல்லலாம். ஸ்பாட்ல மத்தவங்க பிரியாணி சாப்பிடும்போது, அவர் பச்சைக் காய்கறிகள், இலைதழைகள்னு மென்னுட்டு இருப்பார். தமிழ் சினிமாவில் டெடிகேஷன்னா, அது விக்ரம்தான்!”

”இந்தப் படத்துக்கு ஹீரோயினா நடிக்க பிரிட்டிஷ் பெண் ஏமி ஜாக்சனைவிட வேற சாய்ஸ் கிடைக்கலையா?”

” ‘ஐ’னா அழகு. கதையும் அழகைப் பத்திப் பேசுவதால், ரொம்ப ரொம்ப ஏஞ்சலிக்கான ஒரு பொண்ணு தேவைப்பட்டாங்க. ஏகப்பட்ட இந்தியப் பெண்களை ஆடிஷன் பண்ணோம். யாரும் செட் ஆகலை. அப்புறம்தான் சின்ன சந்தேகத்தோட ஏமியை போட்டோ ஷூட் பண்ணோம். பிரிட்டிஷ் பொண்ணு கதைக்கு சரியா இருப்பாங்களானு எனக்கும் குழப்பமாத்தான் இருந்தது. ஆனா, பி.சி.ஸ்ரீராம் டெஸ்ட் ஷூட் பண்ணி ரிசல்ட் பார்த்ததும் ரிலாக்ஸ் ஆகிட்டோம். பெர்ஃபார்மன்ஸ்லயும் ஏமி டாப். தமிழ் வசனங்களை தமிங்கிலீஷ்ல எழுதிக் கொடுத்திருவோம். அதை நல்லாப் படிச்சிட்டு மறுநாள் ஷூட்ல பிரமாதப்படுத்திடுறாங்க!”

”ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராமுக்கும் உங்களுக்கும் படப்பிடிப்பில் மனவருத்தம்னு செய்தி வந்ததே..!”

”அவர் ரொம்ப அடர்த்தியான ஒளிப்பதிவாளர். அவர் ஃப்ரேமுக்கு ஸ்க்ரீன்ல நாம மெட்டீரியல் கொடுப்பதே பெரிய வேலை. பட வேலைகள் ஆரம்பிச்சப்ப பிரபுதேவா, ‘யார் உங்க கேமராமேன்?’னு கேட்டார். ‘பி.சி. சார்’னு சொல்லவும், ‘சூப்பர்… உங்க ரெண்டு பேருக்கும் நச்னு செட் ஆகும்’னு சொன்னார். அது அப்படியே நடந்திருக்கு. பி.சி. சார் வெளியில இருந்து பார்க்க டஃப்பா இருப்பார். ஆனா, பழகிட்டா அவர் குழந்தை மாதிரி!”

” ‘ஜென்டில்மேன்’ ரஹ்மானுக்கும் இப்போ ‘டபுள் ஆஸ்கர்’ ரஹ்மானுக்கு என்ன வித்தியாசம்?”

”இன்னும் ரொம்ப சின்சியரா இருக்கார். ஆரம்பத்துல ஒரு ட்யூன் போட்டுக் கொடுத்தார். ‘இது வேற சிச்சுவேஷனுக்கு மேட்ச் ஆகும்’னு சொல்லி தனியா வெக்கச் சொன்னேன். அப்புறம் அதை எடுத்தப்போ, ‘அது ட்யூன் பண்ணி ஒரு வருஷம் ஆச்சு. இப்ப வேற ஃப்ரெஷ்ஷா போட்டுத் தர்றேன்’னு சொல்லி வொர்க் பண்ணிக் கொடுத்தார். ரஹ்மான் இன்னும் உயரங்கள் போவார்… ப்ளீஸ் வெய்ட்!”

” ‘ஜென்டில்மேன்’ தொடங்கி ‘ஐ’ வரை இயக்குநர் ‘ஷங்கருக்கு’ வயசு 20. ஆனா, சினிமா ரசிகன் ‘சங்கருக்கு’ வயசு 50. இந்த நீண்ட பயணத்தில் சினிமா பற்றிய புரிதல் மாறியிருக்கா?”

”எனக்கென்னவோ இந்த 20 வருஷம் வெறும் நாலைஞ்சு வருஷம் மாதிரிதான் மனசுல தோணுது. ஒவ்வொரு படம் பண்ணும்போதும், அதை முதல் படமா நினைச்சுத்தான் பண்றேன். அதே சமயம் இங்கே ‘டைம்லைனோட’ சேர்ந்து அப்டேட் ஆகிட்டே இருக்கணும். இல்லைனா, எல்லாரும் நம்மளைத் தாண்டிப் போயிருவாங்க. கதைனு ஒரு விஷயத்தை யோசிக்கிறேன். யோசிக்கும் நாள்ல இருந்து ஒண்ணு, ரெண்டு வருஷம் கழிச்சு படம் ரிலீஸ் ஆகும்போதும் அது புதுசா ஈர்க்கணும். அப்படி யோசிக்கும்போது, தன்னால புதுப்புது விஷயங்களைத் தேட ஆரம்பிச்சிருவோம். அந்தத் தேடல் இருக்கிற வரைதான் பந்தயத்துல நாம போட்டி போட முடியும். நான் தேடிட்டே இருக்கேன்!”

” ‘இந்தியன்’, ‘முதல்வன்’, ‘எந்திரன்’னு எழுத்தாளர் சுஜாதாவுடனான உங்க தீம் எல்லாமே க்ளாஸிக். இப்போ அவரை மிஸ் பண்றீங்களா?”

”நிச்சயமா! சில வசனங்களை வாசிக்கும்போது, ‘இதை சுஜாதா சார் எழுதியிருந்தா எப்படி இருக்கும்’னு யோசனை ஓடுறதைத் தவிர்க்கவே முடியலை. ஆனா, எல்லா இழப்பும் இயற்கைதான். இப்போ எழுத்தாளர்கள் சுபா காம்பினேஷன் செமத்தியா இருக்கும். எல்லா எக்ஸ்பெரிமென்ட்டுக்கும் தயாரா இருக்காங்க!”

”சமீபத்தில் பார்த்ததில் பிடித்த தமிழ் சினிமாக்கள்?”

” ‘மூடர்கூடம்’ ரொம்ப நல்லா இருந்தது. இம்ப்ரெஸிவ், இன்டலிஜென்ட், காமெடினு ஒவ்வொரு சீன்லயும் யோசிக்கவெச்சார் நவீன். புத்திசாலித்தனமான முயற்சி. ‘எஸ் பிக்சர்ஸ்’ ஆரம்பிச்சப்ப நான் பண்ண நினைச்ச படங்களின் வரிசையில் செட்டாகி இருந்த படம். ‘ச்சே… இந்தப் படத்தை நாம தயாரிச்சிருக்கணுமே’னு நினைக்கவெச்ச படங்கள், ‘மூடர்கூடம்’, ‘சூது கவ்வும்’, ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’. இந்த மாதிரியான படங்கள்தான் சினிமாவுக்கு ஆக்சிஜன்!”

”நீங்களும் ‘காதல்’, ‘வெயில்’, ‘இம்சை அரசன்’, ‘ஈரம்’னு நல்ல சினிமாக்கள் தயாரிச்சிங்க… அப்புறம் என்ன ஆச்சு?”

”தயாரிப்பு வேலைகளைப் பார்த்துக்க எனக்கு சரியான ஆள் வேணும். அப்படி சரியான ஆள் அமையலைனா, அதையும் நான்தான் பார்த்துக்கணும். ‘எந்திரன்’ படத்துக்கு அவ்வளவு உழைச்சேன். அந்த உழைப்புக்கு நடுவுல என் நேரத்தைத் திருடித்தான் ‘எஸ் பிக்சர்ஸ்’க்குக் கொடுத்தேன். ஆனா, இப்போ அந்த நேரத்துலயும் ‘ஐ’ வேலைகள் குவிஞ்சுகிடக்கிறதால, தயாரிப்பைக் கவனிக்க முடியலை. ‘எஸ் பிக்சர்ஸ்’க்காக நான் கேட்டதில் ராஜு முருகன் சொன்ன ‘குக்கூ’ கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. அந்தப் படத்தை நான்தான் தயாரிச்சிருக்கணும். ஆனா, ‘ஐ’ வேலைகள் என்னை மொத்தமா அமுக்கிருச்சு.

இன்னொரு விஷயம்… படத் தயாரிப்பில் எனக்குப் பெரிய நஷ்டம் ஏற்பட்டது. ‘இவருக்கென்ன கஷ்டம்?’னு உங்களுக்குத் தோணும். ‘சின்னச் சின்ன அலட்சியங்கள் எல்லாம் சேர்ந்து மெகா அலட்சியமாயிடுது’னு ‘அந்நியன்’ல ஒரு வசனம் வரும். அந்த மாதிரி சின்னச் சின்ன நஷ்டங்கள் சேர்ந்து மெகா நஷ்டமாயிடுச்சு. அந்த நஷ்டத்தைச் சமாளிக்க ரொம்பவே தடுமாறிட்டேன். ஆனாலும், நல்ல படங்களைத் தயாரிக்கும் ஆசை இன்னும் இருக்கு. அழகான, அர்த்தமுள்ள விஷயங்கள் பண்ணலாம்!”

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: