Skip to content

சமூகத்துக் பயன்படும் வகையில் இருப்பவனே புறம்போக்கு! : ஜனநாதன் புது வாய்ஸ்

November 18, 2013

சமூகத்துக் பயன்படும் வகையில் இருப்பவனே புறம்போக்கு! : ஜனநாதன் புது வாய்ஸ்

 Print Bookmark My Bookmark List

 

தமிழ் சினிமாவில் தரமான படைப்பாளி எஸ்.பி.ஜனநாதன். வெறும் பொழுதுபோக்கு பூச்சாக இல்லாமல் சமூக அக்கறையுடன் கதை சொல்பவர். வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்வையும் கூர்ந்து கவனிக்கும் படிப்பாளி. ஆனால், எதுவும் தெரியாதவர் போன்ற எளிமை, அவரின் ப்ளஸ். அடுத்த படைப்பான ‘புறம்போக்கு’ பட வேலையில் இருந்தவரை சந்தித்தோம்… 
‘‘எல்லாருமே எங்கிட்ட கேட்கணும்னு நினைக்கிற முதல் கேள்வி, ‘ஏன் இந்த இடைவெளி’ என்பதுதான். நல்ல கதைக்காக காத்திருந்தேன் என்று பொய் சொல்ல மாட்டேன். ‘இயற்கை’ படம் முடிச்சிட்டு கடைசியா 500 ரூபாய் மிச்சமிருந்தப்பதான் ஜீவாவுக்கு கதை சொல்லி, ‘ஈ’ படம் பண்ணினேன். அந்தப் படம் ரிலீசாகி நல்லா ஓடியும் என் கையில பத்து பைசாகூட இல்லாத நிலையில்தான் ‘பேராண்மை’ பண்ணினேன். படம் பெரிய வெற்றி அடைந்ததும் நிறைய பேர் படம் பண்ணச் சொல்லி கேட்டாங்க. நான்தான் பொறுப்பே இல்லாம இருந்துட்டேன். 

இடையில் இயக்குனர் சங்கப் பொறுப்பை ஒழுங்கா செய்யணுமேன்னு அதிலேயே கவனமா இருந்துட்டேன். படங்களில் இடைவெளி எடுத்துக்கிட்டாலும் எல்லா படத்தையும் குறிப்பிட்ட நாட்களில் எடுத்திருக்கேன். சினிமாதான் என் தொழில் என்பதை தாமதமாகத்தான் உணர்ந்திருக்கேன். இனி இடைவெளி இருக்காது…’’

‘‘அதென்ன ‘புறம்போக்கு’?’’
‘‘சென்னை வாசிகள் திட்டுவதற்கு பயன்படுத்தும் ‘புறம்போக்கு’ வார்த்தை இல்லை இது. புறம்போக்கு என்பது நல்ல சொல். தமிழ் நாகரிகத்தில் 15க்கும் மேற்பட்ட புறம்போக்குகள் இருக்கிறது. ஏரி புறம்போக்கு, வெட்டியான் புறம்போக்கு, ஆற்று புறம்போக்கு, சுடுகாட்டு புறம்போக்கு என்று மக்களுக்கு அத்தியாவசியமான இடம்தான் புறம்போக்கு. அந்த வகையில் இந்த சமூகத்துக்குப் பயன்படும் வகையில் இருப்பவனை நான் புறம்போக்கு என்றே கருதுகிறேன். படத்தில் இரண்டு நாயகர்கள். ஆர்யா சமூகப் போராளியாகவும் விஜய்சேதுபதி ரயில்வே கலாசியாகவும் வருகிறார்கள். இந்த இருவரையும் இணைக்கும் ஒரு சூழ்நிலையும், அதன் தொடர்ச்சியாக நிகழும் சம்பவங்களுமே கதை. சென்னைதான் கதைக்களம் என்றாலும் வெளியிலும் டிராவல் ஆகும். இதற்காக குளு மணாலி, ஜெய்ப்பூர், ஜெய்சால்மர், பொக்ரான் என்று நிறைய லொகேஷன் பார்த்து வந்திருக்கிறேன்.’’

‘‘அப்படியானால் நில அபகரிப்புதான் படத்தின் பிரதானமாக இருக்குமா?’’
‘‘நில அபகரிப்பு என்பது ஒரு குறுஞ்செய்திதான். உலகம் முழுவதும் மக்களை புழு, பூச்சிகளைப் போல எள்ளல் செய்யும் அரசியல், கண்ணுக்குத் தெரியாமலே நடக்கிறது. நான் எடுக்கும் படங்களில் இருப்பது கதை என்பதை விட நான் எழுதும் கட்டுரை என்றே சொல்வேன். அதில் நிறைய செய்திகள் இருக்கும். அதை எல்லோரும் ரசிக்கும்படியான கலை வடிவத்தில் தர முயற்சிக்கிறேன். ‘ஈ’யில் மக்களை பரிசோதனை எலிகளாகப் பயன்படுத்துவதையும் ‘பேராண்மை’யில் வேறொரு அரசியலையும் சொல்லியிருந்தேன். அதுபோல, ‘புறம்போக்கு’ படத்தில் நில அபகரிப்பு ஒரு பகுதியாகத்தான் இருக்கும். நம் வீட்டில் சின்னதாக நடக்கும் ஒரு பிரச்னைக்கும் சர்வதேச அரசியலுக்கும் சம்பந்தம் இருக்கிறது. இதனை என் பார்வையில் மக்களுக்கு சொல்வதைத்தான் என் ஃபார்முலாவாக நினைக்கிறேன்…’’

‘‘முதலில் ஜீவா, ஜெயம் ரவி நடிப்பதாகத்தானே இருந்தது..?’’
‘‘ ‘இயற்கை’ படம் பண்ணும்போது எனக்கும் ஷாமுக்கும் ஒத்துப்போகவில்லை. நான் எடுப்பது படமா என்கிற சந்தேகம் கூட அவருக்கு இருந்திருக்கலாம். படம் முடியும் சமயத்தில்தான் புரிதல் வந்தது. புரிதல் இருந்திருந்தால் அந்தப் படம் இன்னும் நன்றாக வந்திருக்கும். ‘ஈ’யில் ஜீவாவுடன் ஒத்து வரலை. பாதி படத்துக்கு மேல்தான் ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டோம். ‘பேராண் மை’யிலும் கடைசி நேரத்தில்தான் ரவிக்கும் எனக்கும் ஒத்துப்போனது. ஒரு படத்துக்கு ஹீரோ – ஹீரோயின் கெமிஸ்ட்ரி மட்டுமில்லை… இயக்குனர் – ஹீரோ கெமிஸ்ட்ரியும் முக்கியம். 

ஏற்கனவே ஜெயம் ரவி, ஜீவாவை வைத்து படம் பண்ணியதால் அவர்கள் என்னைப் புரிந்துகொள்வார்கள் என்பதால் அவர்களை வைத்து இயக்க முடிவு செய்திருந்தேன். ஆனால், ரெண்டு பேருக்குமே அடுத்தடுத்து படங்கள் இருக்கிறது. நண்பர்களும், ‘வேற ஹீரோக்கள் பண்ணினால் புது சாயல் கிடக்கும்’ என்றார்கள். அதன் பிறகுதான் முடிவை மாற்றினேன். ஆர்யா, ‘பேராண்மை’யிலேயே நடிக்க வேண்டியது. ‘நான் கடவுள்’ தேதிகளால் அது முடியாமல் போனது. இருவரும் நடிக்கும் படங்களும் தொடர்ச்சியாக ஹிட் கொடுத்திருக்கிறது. இந்த இருவரும் சேர்ந்து நடிப்பது படத்துக்குப் பெரிய பலமாக இருக்கும்.’’

‘‘ஆர்யா என்றாலே கதாநாயகி யார் என்ற எதிர்பார்ப்பு இருக்குமே?’’
‘‘ஏன், அவருக்கேகூட இருக்கு. ‘சீக்கிரமா ஹீரோயினை கண்ணுல காட்டுங்க சார்’ என்கிறார். விஜய்சேதுபதியும் கேட்டுட்டு இருக்கார். படத்தில் ஒரு ஹீரோயின்தான். அது யார் என்று இன்னும் முடிவு பண்ணல. நடிக்கத் தெரிந்த… அதே சமயம், கிளாமரான கதாநாயகியாகத்தான் இருப்பார். தொடாமலே காதல் என்பதில் எனக்கு உடன்பாடில்லை. காதல் என்பது உடல் சார்ந்ததும்தான். பெண் உடலை ஆண் ரசிப்பதும், ஆண் உடலை பெண் ரசிப்பதும் யதார்த்தமே. இதைப் புரிந்த நிலையில், நான் விரசம் இல்லாத காட்சிகளையே எடுக்கிறேன். மீண்டும் என்னுடன் ஒளிப்பதிவாளர் ஏகாம்பரம் இணைகிறார். ‘இயற்கை’ படத்துக்காக ஒரே ஒரு ஓட்டில் அவருக்கு தேசிய விருது கிடைக்காமல் போனது. அவரது பங்கும் படத்துக்கு பலமாக இருக்கும். ‘புறம்போக்கு’ மக்கள் ரசனைக்கும் அறிவுக்கும் தீனியாக இருக்கும்!’’

– அமலன்
படங்கள்: புதூர் சரவணன்

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: