Skip to content

நயன்தாரா காதல் அவ்வளவுதானா? ஆர்யா ஃபீலிங்

November 25, 2013

உதடு பிரியாத புன்னகை, சிநேகம் ததும்பும் கண்கள்… சீக்கிரமே அணுகலாம் ஆர்யாவை. ‘‘அந்த பி.ஆர்.ஓவைப் பாருங்க… இந்த டைரக்டரைக் கேளுங்க…’’ என ஒரு பஞ்சாயத்தும் இல்லை. அதனாலேயே அவரை இன்னும் பிடிக்கிறது. வீட்டில் காரசாரமான ‘டீ’யை ஆர்யாவின் அப்பாவே வந்து சிநேகபூர்வமாக கொடுக்க, ஆரம்பித்தது உரையாடல்…
‘‘ ‘இரண்டாம் உலகம்’ உங்களுக்குப் பெரிய அடையாளத்தைக் கொடுத்திருக்கே..?’’


‘‘எல்லா நடிகர்களுக்குமே பாலா, செல்வராகவன்னா ஒரு பிடித்தம் இருக்கு. ஏன்னா… நடிப்பில் வேடிக்கையா இல்லாமல் ஒரு ட்ரிப் போயிட்டு வரலாம். ‘இரண்டாம் உலகம்’ கொஞ்சம் லேட்டானது உண்மைதான். ஆனால், அந்த விஷுவல், கதை, பின்னணி எல்லாத்துக்கும் அந்த டைம் வேணும். அதனால் எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. இப்படியான படத்திற்கு இந்த உழைப்பு அவசியம். இந்தப் படத்தை முடிக்கணும்னு எந்த அவசரமும் படலை. ஐ லவ் சினிமா.

வேடிக்கையா சினிமாவுக்கு வந்தவன், இந்த அளவுக்கு ஆனது செல்வா மாதிரியான டைரக்டர்கள் பார்வை பட்ட பிறகுதான். ‘சட்’னு உடம்பை ஏத்தி ‘இரண்டாம் உலக’த்தில் என்னை வேறு மாதிரி செய்தார் செல்வா. அடுத்து மகிழ் திருமேனி, ஜனநாதன்னு படு ஆக்ஷன் படங்கள் பண்றேன். காதல், ப்ளேபாய் இமேஜ்னு சம்பந்தமில்லாமல் ஒட்டிக்கிட்டதை தள்ளி வைக்கவே இப்படி இறங்குறேன். இப்ப இருக்கிற பொசிஷன்… நிஜமாகவே நான் ஹேப்பி!’’

‘‘ப்ளேபாய் இமேஜில் இஷ்டமில்லையா ஆர்யா..?’’
‘‘அதெல்லாம் சும்மாங்க. பாருங்க… வீட்டில அப்பா, அம்மா, தம்பி, நண்பர்கள்னு இருக்கிற உலகம் என்னோடது. கூட நடிக்கிற நடிகைகள் ஏதாவது பிரச்னைன்னு காதில் போட்டால், கொஞ்சம் கூர்ந்து கேட்பேன். நல்லதா ஆலோசனைகள் சொல்வேன். ஃப்ளைட் பிடிக்க போகணும்னு அவசரப்பட்டால்… சீக்கிரம் ஏர்போர்ட் போக ஏற்பாடு பண்ணுவேன். ஏதாவது பார்ட்டிக்கு போகணும்னு துணைக்குக் கூப்பிட்டால் போவேன். ‘ஒரு ஆளா சாப்பிடணுமா… நீங்களும் வாங்களேன்’னு சொன்னா, ‘சரி’ன்னு போய் ஒரு ஜூஸ் குடிச்சிட்டு வருவேன். அவ்வளவுதான். இதுக்குத்தான் ‘ப்ளேபாய்… அது… இது…’ன்னு ஏகப்பட்ட ‘பட்டம்’ சுமக்குறேன். 

யாரும் கஷ்டப்படுறது எனக்குப் பிடிக்காது. நடிகைகளுக்கு மட்டுமில்லை, நடிகர்களும் எனக்கு நண்பர்கள்தான். என்கிட்டே நெருங்கி இருக்கிற நடிக நண்பர்கள் பட்டியல் ரொம்ப பெரிசு. நண்பர்களோடு வெளியே போவேன், சுத்துவேன். அது எதுவும் செய்தியா வெளியே வர்றதில்லை. பெண்களோட வெளியே போனால் அவ்வளவுதான்… இப்படி நீங்க கேள்வி கேட்கிற அளவுக்கு வந்துடுது!’’ ‘‘நானே உங்களை நிறைய இடங்களில் பார்த்திருக்கேன்…’’

‘‘நீங்க ஏன் அங்கே வர்றீங்க? ஏதோ நண்பர்களோடு ஜாலியா இருக்கத்தானே! நாள் முழுக்க ஷூட்டிங், வெளிச்சம், இறுக்கம், இன்னொரு கேரக்டரா வாழ்ந் திட்டு இருக்கிறது… இதுக்கெல்லாம் கொஞ்சம் விடுதலை, இப்படி வெளியே வர்றதுதான். அடுத்த நாளைக்கு என்னை ரெடி பண்ற விஷயம்தான். எங்க அப்பா, அம்மாவுக்கு என்னைத் தெரியும். ஃப்ரெண்ட்ஸ் எல்லோரும் வீட்டிற்கு வந்து பிரியாணி சாப்பிட்டுட்டுப் போயிருக்காங்க. விஷால் ‘முணுக்’ன்னா இங்கே வந்திடுவான். அங்கே சாப்பாடு ரெடி ஆகலன்னா இங்கேதான் என்னோடு சாப்பிடுவான். இதையெல்லாம் எழுத மாட்டீங்க. ‘அனுஷ்காவோடு ஓட்டலுக்கு வந்தார்’னு மட்டும் பளிச் பளிச்னு எழுதுவீங்க…’’

‘‘அதெல்லாம் சரி… நீங்க கல்யாணம் செய்த பிறகுதான் தனக்குக் கல்யாணம்னு விஷால் சொல்றாரே?’’
‘‘அதெல்லாம் சும்மாங்க. அவன் ஒண்ணும் தெரியாத மாதிரி நடிப்பான். ஏகப்பட்ட ரகசியம் அவன்கிட்ட இருக்கு. நீங்க அடுத்த வாரமே கூட அங்க போகலாம். கொஞ்சம் ஆரம்பிச்சா, அவனே கொட்டிடுவான். ஆனால் ரொம்ப நல்லவன் தெரியுமா..? இப்ப பாருங்க, ‘பாண்டிய நாடு’ன்னு செம ஹிட் கொடுத்திட்டு ‘ஜம்’னு நிக்கிறான். அவன் இன்னும் சாதிப்பான்…’’
‘‘நீங்க பாலா படத்தில் நடிக்கப் போறீங்கன்னு பேச்சு இருந்தது..?’’

‘‘பாலா எப்பக் கூப்பிட்டாலும் உடனே ஒரு மேஜிக்குக்கு ரெடியா இருப்பேன். ‘சார்… ஏதாவது ஸ்கிரிப்ட் ரெடி பண்ணுங்க சார்…’னு மத்தவங்ககிட்ட கேட்கிற மாதிரி அவர்கிட்ட கேட்க முடியாது. அவரே நாம் தேவைன்னா கூப்பிடுவார். பாலா சார் வாத்தியார் மாதிரி. அவர் சொன்னதை நான் கேட்பேன். நாங்க இரண்டு பேரும் சேர்ந்தால், அதற்கான விஷயமும் பெரிசா இருக்கணும்னு இரண்டு பேருமே நினைப்போம். நான் எப்பவும் ரெடி. பாலா சார்தான் சசிகுமாரை வச்சு அடுத்த அதிரடிக்கு இறங்கிட்டாரே… இப்ப அவருக்கு கவனம் பூரா அதில்தானே இருக்கும்!’’
‘‘அனுஷ்கா கூட ‘இரண்டாம் உலகம்’ சமயம் அன்பு அதிகமாச்சுல்ல..?’’

‘‘வரும்ல. இருந்த இடம் அப்படி. கிட்டத்தட்ட 100 நாட்கள் ‘ஜார்ஜியா’ன்னு ஊர், பெயர் தெரியாத நாடு. சிட்டிக்கு ரொம்பத் தொலைவு, அடிக்கடி வெளியே வர முடியாது. கிட்டத்தட்ட அறுபது பேர்… 10 டென்ட் அவ்வளவுதான். எல்லோரும் ஒண்ணுமண்ணா சேர்ந்து இருப்போம். ஒருத்தர் முகத்தை ஒருத்தர் பார்த்துக்கிட்டேதான் இருக்கணும். அசிஸ்டென்ட் டைரக்டரும், டைரக்டரும் ஒரே இடம்தான். நடிகைகள் எல்லோரும் ஒரே இடம்தான். நாமதான் ஒரு இடத்துல இருக்க மாட்டோமே… நல்லா பழகினோம். அது படத்திற்கு மட்டும் பயன்பட்டது. நீங்க ஆழமா கேள்வி கேட்குற அளவுக்கு அதில் ஒண்ணும் இல்லை பிரதர்!’’

‘‘அப்ப நயன்தாரா எபிஸோட் ஓவரா?’’
‘‘கல்யாணம் இல்லை சார்… மத்தபடி நட்பு எப்பவும் நிலைச்சு நிற்கும். இப்பதான் நயன்தாரா-ஆர்யா அலை அடிச்சு ஓய்ஞ்சு இருக்கு. நட்பில் இருக்கிற ஆனந்தம் காதலில் இருக்காது போல. எனக்கு அது நல்லாவே தெரியுது. பழகுவதற்கு நயன்தாரா மாதிரி ஒரு பொண்ணைப் பார்க்க முடியாது…’’
‘‘ஹன்சிகா-சிம்பு கல்யாணம் நடக்குமா ஆர்யா?’’

‘‘நான் ஹன்சிகாவோடு இப்ப நடிக்கலை. பேசவும் இல்லை. ஏதாவது சொல்லப் போய் சிம்பு கோபிச்சா என்ன ஆகறது? என்னைப் பத்திக் கேளுங்க, சொல்றேன்… அவங்க ஸ்பேஸ் அது… அதுல நாம் போய் தலையிடக் கூடாது. அவங்களே விரும்பி ஏத்துக்கிட்ட வாழ்க்கையைப் பத்தி நாம் கேள்வி கேட்கக் கூடாது… ஓகே!’’

– நா.கதிர்வேலன்
படங்கள்: புதூர் சரவணன்

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: