Skip to content

எனக்குள்ளே ஒரு டைரக்டர்! விக்ரம் பிரபு

December 9, 2013

அன்னை இல்லத்தின் அடுத்த வாரிசு விக்ரம் பிரபு. நடிகனாக ‘கும்கி’யில் போட்ட பிள்ளையார் சுழி, விக்ரமின் கையில் வெற்றியைத் திணிக்க, அடுத்த வெற்றியை ருசிக்க ‘இவன் வேற மாதிரி’ ரிலீசுக்காக காத்திருக்கிறார். தொடர்ச்சியான படப்பிடிப்பின் பரபரப்பில் இருந்தவர், ‘‘வாங்களேன்… டிராவல்ல பேசிடலாம்…’’ என்று காரில் திணித்துக் கொள்ள, கேள்விகளால் கியர் போட்டோம். இரண்டாவது படம். ரிசல்ட் எப்படியிருக்கும்னு டென்ஷன் இருக்கா?

‘‘எந்த டென்ஷனும் இல்ல. ‘இவன் வேற மாதிரி’யும் புதுமாதிரியா இருக்கும்ங்கிறதால கண்டிப்பா ஆடியன்ஸ் ரசிப்பாங்க. ‘கும்கி’ கொடுத்த வெற்றி எனக்கு மலைப்பையும், அதே சமயத்தில் பொறுப்பையும் கொடுத்துச்சு. அடுத்தடுத்து எடுத்து வைக்கும் அடிகளில் கவனம் தப்பாமல் இருக்கணும் என்று மனசுக்குள்ளிருந்து தாத்தா ஆசீர்வதிக்கிற மாதிரியும், அறிவுரை சொல்ற மாதிரியும் இருந்துச்சு. அந்த நேரத்தில்தான் தயாரிப்பாளர் சுபாஷ் சந்திர போஸ் போன் பண்ணி, ‘டைரக்டர் சரவணன் உங்ககிட்ட ஒன்லைன் சொல்லணும். வர்றீங்களா?’ன்னு அழைத்தார்.

‘எங்கேயும் எப்போதும்’ எனக்கு பிடிச்ச படம். சரவணனோட ஸ்கிரீன்ப்ளே ஸ்டைல் என்னை வியக்க வச்சது. அதே வேகத்தோட ‘இவன் வேற மாதிரி’ கதையும் இருந்தது. அடுத்த நிமிஷமே ‘சரி’ன்னு சொல்லிட்டேன். மனசுக்கு பிடிச்ச கதை, எல்லோருக்கும் பிடிச்ச டைரக்டர், மறுபடியும் லிங்குசாமி சாரோட பேனர்னு ஆரம்பத்திலேயே பாசிட்டிவ் எனர்ஜியோட இந்தப் படத்தில் எல்லோருமே டிராவல் பண்ணியிருக்கோம். 

படத்துல நான் விஸ்காம் படிச்ச இளைஞனா வர்றேன். சாதாரணமா ரோட்ல போறப்போ, நம்மை பதைபதைக்க வைக்கிற ஒரு சம்பவம் நடக்கும். அதைப் பார்த்துட்டு ‘நமக்கும் அதுக்கும் சம்பந்தமில்ல’ என்பதுமாதிரிதான் பலரும் கடந்து போவாங்க. அப்படி சராசரியா இல்லாம, நமக்கு ஏன் வம்புன்னு நினைக்காத ஒரு பொறுப்புள்ள இளைஞன்தான் என் கேரக்டர்.’’
பரபரப்பான ஆக்ஷன் படம்னு பேச்சு இருக்கே?

‘‘உண்மைதான். ஸ்டன்ட் மாஸ்டர் ராஜசேகர் பெரும்பாலும் டூப் பயன்படுத்தாம, ஒரிஜினலா ஹீரோவையே பண்ண வைப்பார். பழைய தொழிற்சாலை, புதுசா கட்டிட வேலை நடக்கிற உயரமான கட்டிடம் என்று சண்டைக் காட்சிகளுக்காகவே தேடித் தேடி லொகேஷன் பிடித்திருந்தார்கள். பழைய மகாபலிபுரம் ரோட்டில், லிப்ட் வசதி இல்லாத 18 மாடிக் கட்டிடத்தில் சண்டைக் காட்சியை எடுத்தப்பதான் ரொம்ப கஷ்டமா இருந்தது. ஷூட்டிங் போறதுக்கு முன்னாடியே 40 நாட்கள் டிரெயினிங் எல்லாம் போய் கட்டுக்கோப்பான உடம்போட தயாராகிட்டேன். ஆனாலும் ஆக்ஷன் காட்சிகளில் தினமும் எங்கயாவது அடிபட்டுடும். ஒருநாள் தோள் பட்டையே கிழிஞ்சு போச்சு. அப்பா பதறிப் போய், ‘எச்சரிக்கையா இரு’ன்னு அக்கறையா சொன்னார். கஷ்டப்பட்டு நடிச்சிருந்தாலும் இப்படி ஒரு படம் பண்ண நான் கொடுத்து வச்சிருக்கணும். ஆக்ஷன் மட்டுமில்லாம, காதல் காட்சிகளும் ரொம்ப சுவாரசியமா இருக்கும். டெல்லியைச் சேர்ந்த புதுமுகம் சுரபிதான் எனக்கு ஜோடி. அவங்களோட நடிப்பும் பேசப்படும்…’’

தாத்தா, அப்பாவிடமிருந்து நீங்க கற்றுக் கொள்ளும் விஷயம்?
‘‘எல்லா நடிகர்களுக்குமே தாத்தாவோட பாதிப்பு இருக்கும்போது எனக்கு மட்டும் வேற யார் ரோல் மாடலா இருக்க முடியும்? அவர்கிட்ட கத்துக்கவேண்டிய முதல் விஷயமே, நேரம் தவறாமைதான். அதை ஃபாலோ பண்றேன். உடம்பை கட்டுக்கோப்பா வைக்கறதுக்கு ஏதாவது நல்ல பழக்கம் இருக்கணும்னு சொல்லி தாத்தா என்னை சிலம்பாட்டம் கத்துக்க வச்சார். ஒரு கேரக்டர் நம்மை சிரமப்படுத்தாது என்று தோன்றினால், கண்டிப்பா அது வெற்றி சிகரத்தைத் தொடாது. இதைப் பின்பற்றினாலே நல்ல கதைகளை தேர்வு செய்யலாம் என்பது என் நம்பிக்கை. எதை செஞ்சாலும் நூறு சதவீத ஈடுபாட்டுடன் செய்யணும் என்பதுதான் அப்பாவோட அட்வைஸ். எனக்கும் அதுதான் பிடிக்கும்.’’

அமெரிக்காவில் டைரக்ஷன் கோர்ஸ் படிச்சிருக்கீங்க இல்ல?

‘‘டைரக்ஷன் கோர்ஸ் என்று மட்டும் சொல்ல முடியாது. தியேட்டர் ஆர்ட்டிஸ்டா இருந்திருக்கேன். அதிலேயே உடை அலங்காரம், அரங்க வடிவமைப்பு என்று நிறைய கற்றுக்கொள்ள வாய்ப்பு கிடைச்சது. டெக்னிக்கலாவும் தெரிந்துகொள்ள நினைத்து டைரக்ஷன், கேமரான்னு சில விஷயங்களை கத்துக்கிட்டேன். எனக்குள்ள டைரக்ஷன் ஆசை இருந்தாலும் இப்போதைக்கு அந்த ஆசைக்கு அணை போட்டு வச்சிருக்கேன். என்னோட கவனமெல்லாம் முழுக்க முழுக்க நடிப்பிலேயே இருக்கு. அந்த ஜன்னலி லிருந்து வெளியே குதிக்க விரும்பவில்லை. அடுத்து தாணுசார் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸின் அசோசியேட் ஆனந்த் சங்கர் இயக்கும் ‘அரிமா நம்பி’, யு டி.வி தயாரிப்பில் ‘தூங்கா நகரம்’ கௌரவ் இயக்கும் ‘சிகரம் தொடு’ படங்கள் இருக்கு. என் தாத்தாவுக்கும்,
அப்பாவுக்கும் கொடுத்த அதே ஆதரவை தமிழ்நாட்டு ரசிகர்களிடம் தொடர்ந்து எதிர்பார்க்கிறேன்!’’

-அமலன் 

 

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: