Skip to content

விகடன் விருதுகள் 2013 – 2

January 2, 2014
விகடன் விருதுகள் 2013 – 2

சிறந்த குழந்தை நட்சத்திரம் – பிருத்விராஜ் தாஸ் – ஹரிதாஸ்

ஓவர் சவடால், வயதுக்கு மீறிய வீராப்பு காட்டித் திரிந்த தமிழ் சினிமா சிறுவர்களிடையே, ‘ஹரிதாஸ்’ கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சர்யம். ஆட்டிஸம் பாதித்த சிறுவனாக, நிலையில்லாமல் ஆடிக்கொண்டே இருக்கும் தலையும் கவலை தோய்ந்த முகமுமாக ‘சிறப்புச் சிறுவன்’ ஹரிதாஸ் பாத்திரத்துக்கு உணர்வும் உருக்கமுமாகப் பொருந்தினான் பிருத்விராஜ் தாஸ். முதல் பார்வையில் பரிதாபம் கொள்ளவைத்த பிருத்வியின் நடிப்பு, அடுத்தடுத்த அத்தியாயங்களில் ஹரிதாஸின் உற்சாகத்தை நமக்குள்ளும் கடத்திய தேர்ச்சியில், சிறப்பு அந்தஸ்து பெறுகிறது. கதையின் மைய இழையே தாம்தான் என்ற புரிதலுடன் சிறு மில்லிமீட்டர்கூட கூடுதல் குறைவாக நடிக்காத அந்தக் கலை, பிருத்வியின் வயதுக்கு அதிசயம்!

சிறந்த இசையமைப்பாளர் – இளையராஜா – ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ போன்ற அரிதான படங்கள்தான் இசைக்கும் கதைக்குமான நெருங்கிய தொடர்பை உணரவைக்கின்றன. ஓர் இரவில் நடக்கும் கதையின் உச்சகட்டப் பதற்றத்தை ரசிகனுக்குக் கடத்தி சீட் நுனிக்குத் தள்ளியதில் ராஜாவின் ‘முன்னணி’ இசைக்கு பெரும் பங்கு. பாடல்களே இல்லாத படத்தில் வசனமே இல்லாத பல இடங்களில் தன் பின்னணி இசையின் துணைகொண்டு த்ரில்லிங் சேர்த்திருக்கிறது இளையராஜாவின் மாஸ்டர் நோட்ஸ். பின்னணி இசையை மட்டுமே வெளியிட்டு அதற்கும் ரசிக மனங்களைப் பழக்கி, இசை ரசனையை அடுத்த கட்டத்துக்குக் கவ்விச் சென்றிருக்கிறது ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’!

சிறந்த ஒளிப்பதிவு – செழியன் – பரதேசி

முட்டுச்சந்துகளும் இருட்டுக் குடிசைகளுமான சாலூர் கிராமம், பஞ்சம் பிழைக்கச் செல்லும் வதைப் பயணம், பச்சைப் பசேல் சித்ரவதை முகாமாக விரியும் தேயிலைத் தோட்டம்… என ‘பரதேசி’ படத்தின் துன்பியல் உணர்ச்சிகளை, உள்ளது உள்ளபடி கடத்தியது செழியனின் ஒளிப்பதிவு. ஊர், உறவு சனமே நடுவழியில் விட்டுச் செல்ல, துளி உயிர் சேகரித்து உயரும் ஒற்றைக் கை, ‘நியாயமாரே…’ என்று அதர்வா கதறும்போது எட்டுத் திக்கும் சுற்றி வரும் கேமரா… என ‘பரதேசி’ படத்தின் துயரத்தை பெரும்பாரமாகப் பதிவுசெய்தது செழியனின் ஒளிப்பதிவு வியூகங்கள்!

சிறந்த படத்தொகுப்பு – அல்ஃபோன்ஸ் புத்தரன் – நேரம்

முதல் சில நிமிட ‘பில்ட்-அப்’களுக்குப் பிறகு ஒரே நாளின் மாலை 5 மணிக்குள் நடக்கும் சம்பவங்கள்தான் ‘நேரம்’ படத்தின் திரைக்கதை. இந்தச் சவாலை மிகவும் சுவாரஸ்யமாகச் சமாளித்திருந்தது அல்ஃபோன்ஸ் புத்தரனின் படத்தொகுப்பு. நிவின்,  பணத்தைப் பறிகொடுப்பது, நஸ்ரியா செயின் திருடுபோவது, நிவினை வில்லன் தேடுவது, நஸ்ரியா கடத்தப்படுவது, தங்கை கணவனின் வரதட்சணைப் பஞ்சாயத்து, நாசர் – தம்பி அத்தியாயங்கள், ‘மாலை 5 மணி டெட்லைனுக்குள்’ பிரச்னைகள் அனைத்துக்கும் தீர்வு என பரபர சம்பவங்களின் விதவித அடுக்குகளை, கச்சிதமாகத் தொகுத்திருந்தது அல்ஃபோன்ஸின் எடிட்டிங். 100 மீட்டர் ஓட்டப்பந்தயத்தின் 10 விநாடிப் பரபரப்பை 100 நிமிடங்களுக்கும் மேலாகத் தக்கவைத்ததில் ஸ்கோர் செய்கிறார் படத்தின் இயக்குநருமான அல்ஃபோன்ஸ்!

சிறந்த திரைக்கதை  – நலன் குமரசாமி – சூது கவ்வும்

காமெடி, திகில், சென்ட்டிமென்ட், ஆக்ஷன், கிளாமர்… என எதற்கும் தனித்தனி சீன் பிரிக்காமல், அனைத்துக் காட்சிகளிலும் அனைத்தையும் நீக்கமற நிறைந்திருக்கச் செய்த ‘சூது கவ்வும்’ திரைக்கதை… பிரதி எடுக்க முடியாத ஸ்பெஷல். அச்சுபிச்சுக் கடத்தல்காரர்கள் ஐந்து லாஜிக்குகளோடு ஆள் கடத்தலில் ஈடுபடும் கதை, சற்றே கரணம் தப்பினாலும் சொதப்பியிருக்கக்கூடும். ஆனால், அதை சாகச சாதனையாக மாற்றி ரெவ்யூ, ரெவின்யூ இரண்டிலும் ஹிட் அடித்தது ‘சூது கவ்வும்’ படை. முதல் காட்சியிலேயே கதையை ஆரம்பித்து இறுதிக் காட்சி வரை கலகலப்பு சேர்த்தது, படம் நெடுக கதாபாத்திரங்கள் அறிமுகமானாலும் சோர்வு உண்டாக்காதது, நம்பமுடியாத சம்பவங்களையும் லாஜிக் மேஜிக் மறந்து எக்ஸ்பிரஸ் வேகத்தில் கடத்தியது என ரசிகர்களை ‘ஒன்ஸ்மோர்’ பார்க்கவைத்ததில் திரைக்கதையின் ஃபேன்டசிக்கு ஆயிரம் லைக்ஸ்!

சிறந்த கதை – வி.இசட்.துரை – 6 மெழுகுவத்திகள்

வாரத்தில் மூன்று முறையேனும் ‘குழந்தைக் கடத்தல்’ செய்திகளை வாசிக்கிறோம். படிக்கும் கணத்தில் உறைந்து, பின் மறந்து, கடந்தும்போகிறோம். ஆனால், அந்தக் குழந்தைக் கடத்தல் நெட்வொர்க்கின் வேர் தேடி வெளிச்சம் பாய்ச்சிய ‘6 மெழுகுவத்திகள்’ கதை… திக் திகீர் அதிர்ச்சி. குக்கிராமம் வரையிலான குழந்தைக் கடத்தலின் ஊடுருவல், தேசம் முழுக்கப் பயணிக்கும் நெட்வொர்க் பரவல், கடத்தப்படும் குழந்தைகள் பலப்பல தொழில்களில் சிதைக்கப்படும் தகவல்… என திரைக்கதையின் ஒவ்வோர் அத்தியாயமும் அத்தனை கனம்… ரணம். பொது இடங்களில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைக் கூடுதல் பாதுகாப்புடன் அரவணைத்துக்கொள்ளவும், குழந்தைத் தொழிலாளர்கள் மீது கரிசனம் கொள்ளவும் ஒருசேரக் கற்றுக்கொடுத்த ‘6 மெழுகுவத்திகள்’ படம்… நிச்சயம் பாடம். இதற்கான வி.இசட்.துரையின் உழைப்புக்கும் மெனக்கெடலுக்கும் ஒரு பெரிய பூங்கொத்து!

சிறந்த வசனம்  – நவீன் ஷேக் தாவூத் – மூடர் கூடம்

‘எடுக்கிறவன் மட்டுமில்லை… எடுக்க விடாமத் தடுக்கிறவனும் திருடன்தான்’, ‘நாம நாலு பேர்ல நீங்க மட்டும் ஹீரோனு யாராச்சும் சொன்னாங்களா பாஸ்?’, ‘ஒண்ணுக்கைக்கூட கன்ட்ரோல் பண்ணத் தெரியாதவன், ஒரு ஏரியாவையே எப்படி கன்ட்ரோல் பண்ணுவான்?’, ‘எவனோ ஒருத்தன் எழுதிவெச்ச வாழ்க்கையை அப்படியே வாழ்ந்துட்டுப் போக நாம ஒண்ணும் கம்ப்யூட்டர் புரோகிராம் இல்லை’, ‘சுடுறதுக்குத்தான்டா துப்பாக்கி வேணும். சுட மாட்டேன்னு சொல்றதுக்குக்கூடவா துப்பாக்கி வேணும்?’ – பிஸ்டல் தோட்டாவாக பளீர் சுளீரென வெடித்தது ‘மூடர்’களின் ஒவ்வொரு ஸ்டேட்மென்ட்டும். எளிய மனிதர்களின் நியாயங்கள், புத்திசாலிகளின் திருட்டுத்தனம், திருட வந்தவர்களின் மனிதாபிமானம்… என ஒவ்வொரு கட்டத்திலும் பின்னணி அரசியலைப் புரியவைத்தது ‘மூடர் கூடம்’ இயக்குநர் நவீனின் வசனங்கள்.

சிறந்த சண்டைப் பயிற்சி – கேச்சா – லீ விட்டேக்கர் – ரமேஷ் – விஸ்வரூபம்

நளினம் மிளிரும் கதக் கமல், சட்டென ஒரு நொடியில் ‘சதக்’ கமலாகும் விஸ்வரூபத்தின் அந்த ஆக்ஷன் அத்தியாயம்… பட்படீர் பட்டாசு. ”சாகிறதுக்கு முன்னாடி ஒருதடவை பிரேயர் பண்ணிக்கிறேன்” என்று அழுது விம்மிவிட்டு, எதிரிகள் சுதாரிக்கும் ‘நீர்த்துளி’ நொடிக்குள் கமல் அனைவரையும் பொளந்தெடுக்கும் அதிரடி ஆக்ஷனைப் பொறிபறக்க வடிவமைத்தது கேச்சா, லீ விட்டேக்கர், ரமேஷ்… ஆகியோரின் நேர்த்தி. தாய்லாந்து ஆக்ஷன் இயக்குநரான கேச்சா, ஏற்கெனவே சில இந்தியப் படங்களிலும் பணியாற்றி இருக்கிறார். ‘பேர்ள் ஹார்பர்’ உள்ளிட்ட 70-க்கும் மேற்பட்ட ஹாலிவுட் படங்களுக்கான சண்டைக் காட்சிகள் அமைத்தவர் லீ விட்டேக்கர். ஹாலிவுட் ஆக்ஷன் இயக்குநர்களுக்கு சமமாக சண்டைக் காட்சிகளை வடிவமைத்து ஸ்கோர் செய்தார் ரமேஷ். சென்ட்டிமென்ட்டில், உருக்கத்தில் ‘உலக சினிமா’ தரத்தை எட்டியிருக்கும் தமிழ் சினிமாவின் ஆக்ஷன் அத்தியாயங்களை ‘ஹாலிவுட் தரத்துக்கு’க் கொண்டுசென்றது விஸ்வரூபம்!

சிறந்த நடன இயக்குநர் – பண்டிட் பிர்ஜூ மஹாராஜ் –
‘உன்னைக் காணாது நான் இன்று…’  – விஸ்வரூபம்

பெண்மையும் மென்மையும் நிரம்பி நளினம் ததும்பும் கதக் கலைஞனாக கமல் ஹாசனை முதல் பார்வையிலேயே நம்பவைத்தன ‘உன்னைக் காணாது நான் இன்று…’ பாடலில் பிர்ஜு மஹாராஜின் கதக் அசைவுகள். 13 வயது முதல் கதக் கற்றுக்கொடுத்து வரும் பிர்ஜு மஹாராஜ், சினிமா பாடல்களுக்கு விரும்பி நடனம் அமைக்காதவர். ஆனால், கமல்-பிர்ஜு கூட்டணியின் ரசவாதம், சிறந்த நடன அமைப்புக்கான தேசிய விருதை வென்றிருக்கிறது. சேனல்களில் தடதடத்துக்கொண்டு இருக்கும் டிஸ்கொதெ, ராப் நடனங்களுக்கு இடையே இந்த கதக் ஆட்டத்தை சினிமா பிடித்தவர்கள்/பிடிக்காதவர்கள், கதக் ரசிகர்கள்/அறிமுகமே இல்லாதவர்கள், கமல் ரசிகர்கள்/மற்றவர்கள் என அனைவரிடமும் அழகிய கலையாகப் பதிவுசெய்ய வைத்தது பிர்ஜுவின் அனுபவ சாமர்த்தியம்!

சிறந்த கலை இயக்கம் – ‘தோர்’ தவிபசாஸ்  லால்குடி ந.இளையராஜா – விஸ்வரூபம்

‘விஸ்வரூபம்’ படத்தின் கதைக்களமான ஆஃப்கானிஸ்தான், கஜகஸ்தான், உஸ்பெகிஸ்தான் என உலகின் பதற்றப் பிரதேசங்களை சென்னை மைதானங்களில் எழுப்பி மிரளச்செய்தது ‘தோர்’ தவிபசாஸ்-லால்குடி ந.இளையராஜா கூட்டணியின் கலை இயக்கம். தீவிரவாத முகாம்கள், அமெரிக்க இல்லங்கள், ஹெலிபேடுகள்… என படம் முழுக்க அசல் எது, நகல் எது என கண்டுபிடிக்க முடியாத வார்ப்பு படிந்திருந்ததே, ‘சிறந்த கலை இயக்கத்துக்கான’ தேசிய விருதை இந்த இருவர் கூட்டணி வசம் சேர்த்திருக்கிறது. ”கலை இயக்குநர்கள் கேமரா ஃப்ரேமுக்காக செட் அமைப்பார்கள். ஆனால், என் செட்டுக்காக கேமரா ஆங்கிளை இயக்குநர் மாத்தும் அளவுக்கு உழைக்கணும். மத்தவங்களை மலைக்கவைக்கணும்!” என்று சொல்லும் இளையராஜா, கும்பகோணம் கலைக் கல்லூரி விஸ்காம் அண்ட் டிசைனிங் துறைப் பட்டதாரி. தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த ‘தோர்’ தவிபசாஸ் தாய்லாந்து மற்றும் ஆங்கில சினிமாக்களில் முத்திரை படைக்கும் படைப்பாளி!

சிறந்த ஆடை வடிவமைப்பு – பூர்ணிமா ராமசாமி,  பெருமாள் செல்வம் – பரதேசி

‘பரதேசி’ படக் கதாபாத்திரங்களுக்கான ஆடைகள், சந்தைகளிலும் மால்களிலும் கிடைக்காத மெட்டீரியல். கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு முந்தைய ஆடைகளை வடிவமைத்ததில் பூர்ணிமாவின் அறிவுத்தேடலுக்கும் பெருமாள் செல்வத்தின் அனுபவத் தையலுக்கும் சம பங்கு. ஆடை விற்பனைத் தொழிலைப் பாரம்பரியமாகக் கொண்ட குடும்பத்தில் பிறந்த பூர்ணிமா, சுதந்திரத்துக்கு முந்தைய காலகட்டத்தின் நாகரிக மாதிரிகளைத் திரட்டியிருக்கிறார். படத்தின் ஆடை வடிவமைப்பாளரான 51 வயது பெருமாள் செல்வம், அடிப்படையில் ஒரு தையல்காரரின் மகன். புதுத் துணிகளைப் பண்படுத்தி அழுக்கேற்றி கந்தல் ஆடைகளாக்கினர். ‘கந்தலானாலும் கசக்கிக் கட்டு’ என்பதைப் புரட்டிப் போட்டு, கசக்கிக் கசக்கியே கந்தலாக்கிய உழைப்பே படத்தின் கதாபாத்திரங்களை ‘பரதேசி’களாக்கியது!

சிறந்த ஒப்பனை – ராலிஸ்கான், கேஜ்ஹப்பர்ட் – விஸ்வரூபம்

‘தசாவதாரம்’ படத்தில் 10 கமல்களையும் வித்தியாசத்துடன் வடிவமைத்த அமெரிக்கர் ராலிஸ்கானுடன் விஸ்வரூபத் துக்காக கூட்டணி சேர்ந்தார் கேஜ் ஹப்பர்ட். இவர்கள்தான் ‘விஸ்வரூபம்’ படத்தில் அமெரிக்கா, ஆஃப்கானிஸ்தான், காஷ்மீர் என வெவ்வேறு தேசத்தினரை ஒரே சாயல் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்களிடையே உருவாக்கியிருக்கிறார்கள். இதில் கமல் ஹாசனுக்கு மூன்று வித்தியாசமான கெட்-அப்கள் கொடுத்தது இன்னோர் அத்தியாயம். விஸ்வரூபத்தில் ஒற்றைக்கண் வில்லன், ஆஃப்கான் ஜிகாத்கள், கதக் கலைஞர்கள், அமெரிக்க ராணுவத்தினர் என எட்டுத்திக்கு மாந்தர்களையும் கண் முன்னே உலவவைத்தார்கள் இவர்கள்!

சிறந்த பாடலாசிரியர்  – நா.முத்துக்குமார் – ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்…’ தங்கமீன்கள்

ப்ரோ, ட்யூட், ஹனி, மினிகளுக்கு இடையில் ஆனந்த யாழை மீட்டியது நா.முத்துக்குமாரின் ஆனந்த வரிகள். படா பப்ளிசிட்டி, நட்சத்திர ஓப்பனிங், மாஸ் மசாலா என வணிகக் காந்தங்கள் இல்லாத ‘தங்கமீன்கள்’ நோக்கி ரசிகர் தூண்டில்களை ஈர்த்ததில் ‘ஆனந்த யாழ்’ மெலடிக்கு பெரும் பங்கு இருக்கிறது. யுவன் ஷங்கர் ராஜாவின் துள்ளல் இசைப் பள்ளத்தாக்குகளில் பாசப்பசுமை வார்த்தைகளை இட்டு நிரப்பியது நா.முத்துக்குமாரின் பேனா. எஃப்.எம். கோரிக்கைகள், இசை சேனல் டெடிகேட்கள், செல்போன் காலர் டியூன், ரிங்டோன்கள் என தமிழகத்தை ‘யாழ் சூழ் உலகாக’ சில காலம் ஆக்கியிருந்தது அந்த மென்மெலடி. அம்மா-மகன் பாச மெலடிகளுக்கு ஏகப்பட்ட சாய்ஸ்கள் கொட்டிக் குவிந்திருக்க, அப்பா-மகள் பாச அத்தியாயத்தின் கீதமாக ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்…’ பச்சக்கென மனதில் ஒட்டிக்கொண்டது!

சிறந்த பின்னணிப் பாடகர்  – ஹரிஹரசுதன் – ‘ஊதாக்கலரு ரிப்பன்…’
வருத்தப்படாத வாலிபர் சங்கம்

‘ஊதாக்கலரு ரிப்பன்’தான் இந்த ஆண்டின் ஆல் கிளாஸ் மாஸ் ஹிட் நம்பர். பாடலின் ஆரம்பத்தில் ‘ஊதா££…’ என்று ஹரிஹரசுதனின் குரல் சுதி மீட்டும்போதே, உள்ளம் முதல் உள்ளங்கால் வரை தன்னாலே துள்ளாட்டம் போடுகின்றன. எம்.கே.தியாகராஜ பாகவதர் காலத்து ஹரிஹரசுதனின் குரல் டோனுக்கு டி-20 யுக இமானின் துள்ளல் இசை பக்கா பேக்கேஜாக அமைந்து சிட்டி முதல் பட்டி வரை ஊதா நிற ரிப்பனைப் பறக்கவிட்டது! அப்பாவுடன் பூஜைகளுக்குச் செல்லும்போது ஐயப்பப் பாடல்கள் பாடுவதில் தொடங்கிய ஹரியின் ஆர்வம், விஜய் டி.வி. சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி வரை கொண்டுவந்தது. கோரஸ் குழுவில் இருந்த ஹரி, இமான் கொடுத்த சோலோ அறிமுகத்தை நச்செனப் பிடித்துக்கொண்டார். வருட இறுதியில் ‘பாண்டிய நாடு’ படத்தில் ‘ஒத்தகட ஒத்தகட மச்சான்…’ பாடலிலும் கணீர் ஹிட் அடித்திருக்கிறது ஹரிஹரசுதனின் கம்பீரக் குரல்!

சிறந்த தயாரிப்பு – லோன் வுல்ஃப் புரொடக்ஷன்ஸ் – ஓநாயும் ஆட்டுக்குட்டியும்

தனக்கென தனித்துவமான கதை சொல்லல்தான் மிஷ்கினின் பலம். நடைமுறையில் வணிக சாத்தியம் உண்டா, இல்லையா என்று தீர்மானிக்க முடியாத ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’ படத்தை துணிந்து தன் சொந்த தயாரிப்பில் உருவாக்கினார் மிஷ்கின். நாயகன், நாயகி, நகைச்சுவை நடிகர்கள், பாடல்கள் என வழக்கமான சினிமா அம்சங்கள் எதுவும் படத்தில் இல்லை. நட்சத்திர மதிப்பு, பற்றிக்கொள்ளும் பரபரப்புகளும் இல்லை. ஆனாலும் திரைக்கதை அடுக்குகள், யதார்த்த கதாபாத்திரங்கள், கதை சொல்லும் உத்தி ஆகியவற்றால், இரண்டு மணி நேரம் நம்மைக் கட்டிப்போட்டார் இயக்குநர் மிஷ்கின். தமிழ் சினிமாவில் தரமான தடம் பதித்திருக்கிறது இந்த ஓநாய்!

சிறந்த பின்னணிப் பாடகி – சக்திஸ்ரீ கோபாலன் ‘நெஞ்சுக்குள்ள…’  கடல்

வைரல் யுகத்திலும் மெலடிக்கு, கோடிகளில் லைக், ஷேர்களைக் குவித்த குயில். கேரளாவைச் சேர்ந்த சக்திஸ்ரீ, சென்னை அண்ணா பல்கலைக்கழக ஆர்க்கிடெக்ட் பட்டதாரி. வருடம் முழுவதுமே மெலடி ஹிட்ஸ் பட்டியலில் டாப் ரேங்கைத் தக்கவைத்திருந்தவர் ‘நெஞ்சுக்குள்ள…’ பாடகி. ‘கடல்’ படத்துக்கே பெரும் எதிர்பார்ப்பைத் தூண்டிய அந்தப் பாடல், ப்ளேலிஸ்ட், எஃப்.எம்., இணையம், ஆல்பம் என சகல திக்குகளிலும் ஹிட் அடித்த மென் மெலடி. தொடர்ந்து ‘எங்க போன ராசா…’ (மரியான்), ‘மன்னவனே…’ (இரண்டாம் உலகம்) பாடல்களிலும் இதயம் சுண்டிய சக்திஸ்ரீயின் குரல், நம் ‘நெஞ்சுக்குள்ள’ இன்னும் இன்னும் இனிக்கட்டும்!

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: