Skip to content

ஜாலி சோடா

January 20, 2014

ஜாலி சோடா

 Print Bookmark My Bookmark List

 

 

பாண்டிராஜின் ‘பசங்க’ படத்தில் நடித்த வாண்டுகள் இப்போது வளர்ந்து நிற்கிறார்கள். அவர்களை மறுபடியும் இணைத்து ‘கோலி சோடா’வை இயக்கியிருக்கிறார் விஜய்மில்டன். படத்துக்கு வசனம் எழுதியிருக்கும் பாண்டிராஜுடன் சேர்த்து… சேட்டு, சித்தப்பா, குட்டிமணி, புள்ளி என்ற சுவாரஸ்யமான கேரக்டர்களோடு நடித்திருக்கும் ஸ்ரீராம், பாண்டி, முருகேஷ், கிஷோர், ஹீரோயின் சாந்தினி உள்ளிட்ட ‘கோலிசோடா’ குழுவினரை ஒன்றிணைத்து கலகல பேட்டிக்கு பேஸ்மென்ட் போட்டோம்.

‘‘தி.நகர்ல மேட்சிங் பிளவுஸ் வித்துகிட்டு, பாரிமுனை பகுதியில் இஞ்சி முரப்பா வித்துகிட்டு, ஒர்க் ஷாப்ல முண்டம், மூதேவின்னு திட்டு வாங்கிட்டு… இப்படி எல்லா இடத்திலும், ‘நமக்கு ஒரு அடையாளம் இல்லையே’ என்பதை உணராமலே வாழ்ந்துகொண்டிருக்கும் கூட்டம் பரவலா இருக்கு. 

கோயம்பேடுல மட்டும் இது போல 15 ஆயிரம் பேர் இருக்காங்க. இந்தக் கூட்டத்துல இருக்குற நாலு பசங்க, நமக்கு ஒரு அடையாளம் வேணும்னு முடிவு பண்ணினா என்ன நடக்கும் என்கிற முடிச்சுதான் படத்தோட ஜீவநாடி’’ – இயக்குனர் விஜய்மில்டன் ஆரம்பித்து வைக்க, ‘‘விட்டா மொத்த கதையையும் சொல்லிடுவீங்க போல…’’ என இயக்குனரையே கலாய்க்கிறது ‘பசங்க’ கும்பல்.

‘‘ஷூட்டிங் ஸ்பாட்டிலும் இப்படித்தான் இவங்க என்னை டைரக்ட் பண்ணிக்கிட்டு இருந்தாங்க. ஷூட்டிங் ஆரம்பிக்கறதுக்கு முன்னாடியே ஹோம் வொர்க்குக்காக ஒரு மாசம் கோயம்பேட்டில் சுற்ற வைத்து வாட்டி எடுத்தேன். அதை மனசில் வச்சுக்கிட்டு, ஆளாளுக்கு அராத்து வேலை காட்ட ஆரம்பிச்சுட்டாங்க’’ என விஜய்மில்டன் முடிப்பதற்குள், ‘‘இதோ இவன்கூட படத்தில டைரக்டரா வொர்க் பண்ணியிருக்கான்!’’ என பாண்டி பக்கம் கை காட்டுகிறார் முருகேஷ். ‘‘என்னது, நீங்களும் டைரக்டரா?’’

‘‘ஆமா சார்… கர்நாடகாவுல டேம் நடுவில் சர்ச் இருக்கிற ஒரு லொகேஷன்ல ஒரு சீன் ஷூட் பண்ணோம். அந்த சீனை நான்தான் எடுத்தேன். டேய் முருகேஷ்… நீதானே அந்த சீன்ல நடிச்ச. நான் எப்படி ஷாட் வச்சேன்னு சொல்லேன்’’ முகத்தில் பெருமை பொங்க பாண்டி கேட்டு முடிப்பதற்குள், ‘‘ம்க்கும் கிழிச்ச… 3 ஷாட்டுக்கு நூறு ஷாட் எடுத்து என் உயிரை எடுத்துட்டியே’’ என பாண்டியை பல்பு வாங்க வைக்கிறார் முருகேஷ்.

‘‘என்ன சார், சின்ன புள்ளைங் களை நம்பி கேமரா கொடுத்திருக்கீங்க. விளையாட்டுத்தனமா இருக்கே?’’ ‘‘சேச்சே… சும்மா ஜாலியா கலாய்ச்சிக்கிறாங்களே தவிர, அத்தனை பேரும் ரொம்ப சின்ஸியர். இப்படித்தான் படமும் கலகலப்பா இருக்கும். இடைவேளைக்குப் பிறகு சீரியஸ் டிராக்கிற்கு கதை நகரும்போது செம விறுவிறுப்பா போகும். 

ஆழமான நட்பும் ஜாலியான காதலும் இருக்கும். ‘நண்பேன்டா’ங்கற மாதிரி வசனமோ, கவிதை பிழியும் காதல் காட்சிகளோ இருக்காது. ஆனா, படம் பார்க்கிறவங்க இரண்டையுமே அழுத்தமா ஃபீல் பண்ணுவாங்க. பாண்டிராஜோட வசனமும் படத்தில் ஒரு கேரக்டர்னு சொல்லலாம். ‘நாங்க தூக்குற மூட்டைக்குக் கூட அட்ரஸ், அடையாளம் இருக்கு. எங்களுக்கு ஒரு அடையாளம் இல்லையே…’ன்னு ஏங்குற இடம் செம டச்சிங்!’’
‘‘பன்ச் டயலாக் இல்லையா பாண்டிராஜ்?’’

‘‘கதை என்ன கேட்டுதோ, அதை மட்டுமே எழுதியிருக்கேன். ‘திருப்பி அடிக்கிறதுக்கு நாங்க பெரிய பசங்களும் இல்ல. பயந்து ஓடுறதுக்கு சின்னப் பசங்களும் இல்ல’ என்கிற இடத்தில் மட்டும் லேசா பன்ச் சாயல் இருக்கும். எல்லாமே யதார்த்தம் மீறாத
வசனங்கள்தான்.’’

‘‘படத்தில் உங்க மனசில் வட்டமடிக்கிற பையன் யாரு?’’ என்று சாந்தினிக்கு கொக்கி போட, ‘‘நான்தான் அந்த துரதிர்ஷ்டசாலி. சூப்பர் ஃபிகரா இருக்கணும்னு நினைச்சேன். ஆனா, சுமாரான ஃபிகரை தலையில் கட்டிட்டார் டைரக்டர்’’ என கிஷோர் வெறுப்பேத்த, ‘‘யேய்… அப்படியே தலையில் நங்குன்னு வச்சேன்னு வையி… ‘காதல்’ பரத் மாதிரி தலையைப் பிச்சுக்கிட்டு அலைவ மவனே…’’ என செல்லமாக கோபிக்கிறார் சாந்தினி.

‘‘இவனுங்கள்ல யாருமே எனக்கு டீப் இல்லை. ஆனா, பாண்டியும் முருகேஷும் அப்பாவின்னா ஸ்ரீராமும் கிஷோரும் பாவிப் பசங்க’’ என்று அவர் பதில் அஸ்திரம் விட்டதும், ‘‘அடிப்பாவி…’’ என வன்முறையில் இறங்கி கையை முறுக்குகின்றனர் அந்த இருவரும். ‘‘படத்தில சாந்தினி தவிர, ஏ.டி.எம் என்கிற கேரக்டரில் சீதாங்கற பொண்ணு நடிப்புல பின்னி எடுத்திருக்கு. ஒரு நாள் நெசப்பாக்கத்தில் சீதாவைப் பார்த்துட்டு, 

‘உங்க அப்பா போன் நம்பர் இருந்தா குடும்மா…’ன்னு கேட்டதும், ‘எதுக்கு’ன்னு முறைச்சது. ‘இல்லம்மா… என் பேரு  விஜய்மில்டன்’னு ஆரம்பிக்கிறேன். ‘இருந்துட்டுப் போகட்டும்… அதுக்கு என்னா’ன்னு சொல்லிட்டுப் போயிடுச்சு. அந்தப் பெண்ணோட அட்ரஸ் கண்டுபிடிச்சு, சம்மதம் வாங்கி நடிக்க வச்சது தனிக் கதை.’’

‘‘பசங்களா… எந்த நடிகர் மாதிரி வரணும்னு ஆசைப்படுறீங்க?’’ என்றதும் ‘‘நான் தளபதி ரசிகர். என்னை அவராக நினைச்சி சில சமயம் ஃபீல் பண்ணுவேன்’’ என ஸ்ரீராம் இரண்டு கைகளையும் விரித்து தலையாட்டி விஜய் ஸ்டைல் காட்டியதும், ‘‘நான் சூர்யா’’ என்கிறார் பாண்டி. 

‘‘இப்போதைக்கு ஹீரோக்களைவிட நாள் சம்பளத்தில் உச்சத்தில் இருப்பது சந்தானம்தான். அதனால நான் அவராகணும்’’ என முருகேஷ் சொல்லி முடிக்க, ‘‘கமல் சார்தான் என்னோட மானசீக குரு’’ என்கிறார் கிஷோர். ‘‘சந்திரமுகி ஜோதிகா மாதிரி ஒரு கேரக்டர் பண்ணணும்’’ என்று சாந்தினி சொன்னதும், ‘‘ரா ரா…’’ என்று அவரை மொத்த டீமும் சேர்ந்து கலாய்க்கிறது. படத்துக்கு ‘ஜாலி சோடா’ன்னு பேர் வச்சிருக்கலாம்!

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: