Skip to content

புது ஒலி… முது மொழி!

January 30, 2014

”யுவனுக்கு நினைவிருக்க வாய்ப்பு இல்லை. இளையராஜா, ஒரு புது கார் வாங்கியிருந்தார். அதில் முதல் சவாரி சென்றோம். முன் இருக்கையில் நான். என் மடியில் யுவன். பின் இருக்கையில் இளையராஜாவும் அவரது துணைவியார் ஜீவாவும். அப்போது யுவன் மிகவும் சிறுவன். ஆனால், அதிக கனம். இவரின் கனத்தைத் தாங்க முடியாத நான், ‘உங்க பையனை நீங்களே வெச்சுக்குங்க’ என்பது போல யுவனை அப்படியே அள்ளி, பின் இருக்கையில் இருந்த ராஜாவிடம் தந்தேன். அன்று தந்த யுவனை இன்று திரும்பப் பெற்றுக்கொண்டேன்!” – வைரமுத்து சொல்வதைக் கேட்டு அதிர்ந்து சிரிக்கிறார்கள் யுவன் ஷங்கர் ராஜாவும் சீனுராமசாமியும். ‘இடம் பொருள் ஏவல்’ படத்தின் ஆச்சரியக் கூட்டணி அது!

‘பத்மபூஷண்’ பட்டம், வைரமுத்துவை அலங்கரித்த தினம் அது. மலர் மாலைகள், பூச்செண்டுகள், வாழ்த்து மழைக்கு நடுவே, பேட்டிக்கு அமர்ந்தார் வைரமுத்து.

இளையராஜா இசையில் வைரமுத்து பாட்டு எழுதி, 28 ஆண்டுகள் ஆகின்றன. இத்தனை நீண்ட இடைவெளிக்குப் பிறகு, இளையராஜாவின் மகன் யுவனுடன் இப்போது கை கோக்கிறார் வைரமுத்து. ‘இடம் பொருள் ஏவல்’ படத்தின் இயக்குநர் சீனுராமசாமிக்கு இந்தக் கூட்டணியைச் சாத்தியப்படுத்தியதில் பெரும் பங்கு!

”இந்த இணைவுக்குக் கனவு கண்டவர் பலர். பலிக்கவைத்தவர் சீனுராமசாமி. அதற்குத் துணை நின்றவர் லிங்குசாமி!” என்று பேசத் தொடங்கினார் வைரமுத்து.

”சிறுவயதில் இருந்தே யுவனையும் சமீப காலமாக அவருடைய பாடல்களும் எனக்குப் பிடிக்கும். பழைய நினைவு ஒன்றைச் சொல்கிறேன்.

அப்போது இளையராஜா உஸ்மான் ரோடு வீட்டில் குடியிருந்தார். அந்த வீடு ‘சிவகங்கைச் சீமை’ காலத்தில்,  கண்ணதாசன் அலுவலகம். அவரை முதலில் நான் சந்தித்த வீடும் அதுதான். அந்த வீட்டில் இந்தப் பையன் தவழ்ந்து விளையாடியபோது ஒருமுறை இளையராஜா சொன்னது இன்றும் என் நினைவில் உள்ளது. ‘நான் 40 வயதில் அடைந்த புகழை, இந்தப் பையன் 20 வயதில் எட்டுவான்’ என்றார். ‘பொன்குஞ்சாக நினைத்துப் பேசுகிறார்’ என நினைத்தேன். ஆனால், அவரது கணிப்பு பின்னர் பலித்ததில், எனக்கு ஆச்சரியம்!

ராஜா குடும்பத்தில் என் மீது அதீத அன்பு காட்டியவர் அவரது துணைவியார், என் பாசத்துக்குரிய சகோதரி ஜீவா. அந்தச் சகோதரி கையால் பலமுறை உணவு அருந்தியவன் நான். அவர் என்னிடம் ஒருமுறை கேட்டார், ‘அவரோடதானே உங்களுக்கு முரண்பாடு. என் மகனுக்குப் பாட்டு எழுத என்ன தயக்கம்?’ என்று. அப்போது, ‘இருக்கட்டும்மா… ஒரு காலம் வரும்’ என்றேன். ஆனால், அந்தக் காலம் வரும்போது அதைப் பார்த்து மகிழ, சகோதரி இல்லாமல் போய்விட்டார்.

சில ஆண்டுகளுக்கு முன், ‘எனக்குப் பாட்டு எழுத முடியாதா அங்கிள்?’ என்று யுவன் கேட்டார். எனக்கும் ஆசைதான். யுவனின் புதுப்புது ஒலியோடு என் முது மொழி சேர்ந்தால், புது இசை வருமே என்ற ஆவல். ஆனாலும்கூட அந்த இணைப்பினால் அவருக்குப் பாதிப்பு வந்துவிடக் கூடாது என நினைத்து, ‘தம்பி… வளர்ந்துட்டு வர்றீங்க. உங்களுக்கு ஒரு சின்ன இடையூறும் வந்துவிடக் கூடாது’ என்று அந்தச் சந்தர்ப்பத்தைத் தட்டிக் கழித்தேன். ஆனால், இன்று யுவன், அசைக்க முடியாத உயரத்துக்குச் சென்றுவிட்டார். இப்போது நேரம் கனிந்ததாக நினைத்தேன். ‘இடம் பொருள் ஏவல்’ மூன்றும் கூடிவந்தது போலவே மூவரும் கூடிவிட்டோம்!” என்று சீனுராமசாமியையும் யுவனையும் இறுக்கி அணைத்துக்கொள்கிறார் வைரமுத்து.

சின்னச் சின்ன வார்த்தைகளாகப் பேசினார் யுவன். ” ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்துக்குப் பாட்டு எழுத சார்கிட்ட கேட்டேன். அப்ப வொர்க்-அவுட் ஆகலை. இப்போ செய்தி கேள்விப்பட்டு, ‘யுவன் எதுவும் பிரச்னை ஆகிடாதே’னு எனக்கு நெருக்கமானவங்களே விசாரிக்கிறாங்க. சினிமா, பெர்சனல் ரெண்டையும் நான் தனித்தனியா வெச்சுக்கிறது இல்லை. எல்லாமே எனக்கு ஒண்ணுதான். என் அம்மாகிட்ட இருந்து நான் கத்துக்கிட்டது அன்பு செலுத்துறது மட்டும்தான். வாழ்க்கை, இசை… எதையும் அன்பால் வெளிப்படுத்தினால் எந்தப் பிரச்னையும் இருக்காது. அதைத்தான் நான் இப்போ கடைப்பிடிக்கிறேன்!” என்கிறார் ஜென் துறவி போல!

”கொடைக்கானல் மலைதான் கதைக்களம். பாடல் முழுக்கவே மண் சார்ந்த விஷயங்கள் நிறைய இருக்கும். கதையையும் சூழலையும் சொன்னதுமே அந்த மனநிலையிலேயே யுவன் முதல் பாடலுக்கு டியூன் அமைத்துவிட்டார். அதை கவிஞரிடம் எடுத்து வந்தேன். ஒரு முறைக்கு இருமுறை கேட்டவர், ‘டியூனிலேயே குளிர் அடிக்குதய்யா’ என்றார். அழுத்தமான கதைகொண்ட ஒரு சினிமாவுக்கு அனுபவம் வாய்ந்த கவிஞர், இன்றைய இளைஞர்களின் இசைஞர்… இருவரும் சேரும்போது அர்த்தமுள்ள பாடல்கள் வரும். அப்படி ஒரு ரசனைக் கூட்டணி அமைந்ததில் மகிழ்ச்சி!” என்கிறார் சீனுராமசாமி.

”இளையராஜா இசையில் வைரமுத்து எழுதிய பாடல்களில் உங்களுக்குப் பிடித்த பாடல்?” – இந்தக் கேள்வி யுவனுக்கு!

”எக்கச்சக்கம். சிம்பிளா… எல்லாப் பாடல்களும்!” – யோசிக்கவே இல்லை யுவன்.

கேட்பதற்கு முன்னரே பதில் தாவி வருகிறது கவிப்பேரரசிடம் இருந்து… ”யுவன் இசையில், ‘நந்தா’ படத்தின் ‘முன்பனியா… முதல் மழையா…’, ‘தங்கமீன்கள்’ படத்தின் ‘ஆனந்த யாழை மீட்டுகிறாய்…’ ஆகிய இரண்டு பாடல்களும் எனக்கு மிகவும் பிடித்தவை. கிறங்கவைத்த இசை. இரண்டிலும் இளமையோடுகூடிய முதிர்ச்சி, நரைக்காத இளமை… அற்புதமான கலவையாக சுதி சேர்ந்திருக்கும்!”

”இசை, பாடல் வரிகளுக்கு வழிவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார் வைரமுத்து. உங்கள் இசையில் மெலடி மட்டுமே பெரும்பாலும் அந்த ரகம். ஆக, உங்கள் கூட்டணியில்… ‘மெட்டுக்குப் பாட்டா… பாட்டுக்கு மெட்டா’..?” – இந்தக் கேள்விக்கு முதல் பதில் யுவனிடம் இருந்து.

” ‘மங்காத்தா’, ‘பிரியாணி’யில் ஃபாஸ்ட் பீட்லயும் வரிகள் தெளிவாக் கேக்குமே! நான் எப்பவும் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பேன். அதனால எந்தச் சிக்கலும் இருக்காது!” தொடர்கிறார் வைரமுத்து.

”யுவனின் மனம் அறிந்து இந்த விஷயத்தைச் சொல்கிறேன். ஒரு படத்தில் மனதின் குரல், சமூகத்தின் குரல் என இரண்டு வகையான பாடல்கள் உள்ளன. மனதின் குரலில் வரிகள் கேட்க வேண்டுமே என கவிஞர்கள் தவிப்போம். சமூகக் குரல் என்பது கூட்டுக் குரல். அது கொண்டாட்டக் குரல். வாத்தியங்களின் ஊழிக்கூத்து. அதில் வாத்தியங்களுக்கே முதல் இடம்.

ஒரு படத்தின் வசனத்தில் ஒரு வார்த்தைகூட கேட்காமல் இருக்குமா? வசனத்தின் மீது வாத்தியங்கள் ஒலிக்குமா? அப்படி இருக்கையில் பாட்டு, அதைவிட உயர்ந்த மொழி அல்லவா? ஆகவே, அதற்கு வழிவிடுங்கள் என்றுதான் நான் எப்போதும் கேட்பேன். இது என் சின்ன வேண்டுகோள். அதற்காக வாத்தியமே வேண்டாம் என்று சொல்லவில்லை. வாத்தியம் இல்லை என்றால் பாட்டும் இல்லை. எங்கள் தமிழ் மட்டும்தான் கேட்க வேண்டும் என்றால், நாங்கள் புத்தகம்தான் போட்டுக்கொண்டு இருக்க வேண்டும்!

நான் எப்போதும், ‘எழுதிக்கொடுத்து இசையமைப்பதற்கு இந்தப் படத்தில் இடம் இருக்கிறதா?’ என்று கேட்பேன். இல்லை என்றால் ‘மெட்டு கொடுங்கள்’ என கேட்டு வாங்கி எழுதிக் கொடுத்துவிடுவேன். எழுதிய பாட்டுக்கு மெட்டு போடப்பட்டால், பாடலில் வடிவம் கவிஞர்களால் தீர்மானிக்கப்படும். ஆனால், பாடல் என்றாலே இசைதானே. இசைக்கு மொழி, உடலில் சட்டை போல் இருக்கக் கூடாது. இசையும் மொழியும் உடலின் உறுப்பாக ரத்தமும் சதையுமாக இருக்க வேண்டும். குத்துப்பாட்டு என்பதுகூட கூத்துப்பாட்டு என்பதில் இருந்து மருவி வந்த சொல்லே தவிர வேறல்ல. இயல், இசை வரிசையில், ‘கூத்து’ மூன்றாம் தமிழ். ஆனால், அதை, தமிழன் ‘குத்து’ என நான்காம் தமிழாக மாற்றிவிட்டான்!” என்று சிரிக்கிறார் வைரமுத்து, இருவரையும் அணைத்தபடி!

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: