Skip to content

Vikatan Interview – “இது தமிழ் இனம் உணர வேண்டிய ரணம்!

February 27, 2014

”உலகம் முழுக்க நண்பர்கள்… பல நாடுகளில் அலுவலகங்கள்… இந்தியனா இருந்தாலும் ஏதோ எல்லைகளே இல்லாதவன் மாதிரி சுத்திட்டு இருக்கேன். உண்மையைச் சொல்லணும்னா இது எனக்கான பெருமை இல்லை; சினிமா என்ற கலைக்கான பெருமை!” – கலகலவெனப் பேசத் தொடங்குகிறார் சந்தோஷ் சிவன்.

உலகம் அறிந்த இந்திய ஒளிப்பதிவாளர். 11 தேசிய விருதுகள் பெற்றவர். ஆஸ்கர் விருதுகளைத் தேர்வு செய்வதில் முக்கியப் பங்கு வகிக்கும் ‘அமெரிக்கன் சொஸைட்டி ஆஃப் சினிமாட்டோகிராபர்ஸ்’ அமைப்பின் உறுப்பினர்… என ஒவ்வோர் அடையாளத்திலும் கண்ணிய அங்கீகாரம் சேர்த்திருப்பவர். சாகச வித்தைகளுக்கு கமர்ஷியல் சினிமா, ரசனைப் பதிவுகளுக்கு கிளாசிக் சினிமா என இயங்குபவர், இப்போது ‘இனம்’ என்ற படத்தை இயக்கியிருக்கிறார். ஈழப்போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் மனநிலையை விவரிக்கும் படத்தின் டீஸர் அதிரடிக்கிறது!

”ஒரு போர் முடிஞ்சதும் அது தொடர்பான பதிவுகள், படங்கள் வருவதை உலகம் நெகிழ்வோடு வரவேற்கும். உங்களுக்கு எப்படி இந்த யோசனை வந்தது?”

”என் நண்பர் ஒருவரைச் சந்திக்கப் போயிருந்தேன். அந்த வீட்டில் ஒரு சிறுமி இருந்தாங்க. அவங்க கண்ணில் அவ்வளவு சோகம். ‘யார்?’னு விசாரிச்சேன். அவங்க போரில் தன் குடும்பத்தைப் பறிகொடுத்தவங்க. அவங்க சொன்ன கதை என்னை உலுக்கிருச்சு. ஒரு போர் எப்படியெல்லாம் ஒரு குடும்பத்தைச் சிதைக்கும்னு தெரிஞ்சு அதிர்ச்சி ஆகிட்டேன். அப்போ வந்த எண்ணம்தான் ‘இனம்!”’

”ஏற்கெனவே ஈழம் தொடர்பான சரியான புரிதல் இல்லாமல் எடுத்த இந்திப் படம் இங்கே பிரச்னைகளை சந்திச்சதே?”

”’இனம்’ எந்த அரசியலையும் முன்வைக்காது. போரினால் பெற்றோர்களை, உறவினர்களை இழந்து அநாதையான குழந்தைகள் பற்றி மட்டுமே பேசும் படம் இது. இந்தப் படம் முடியும்போது சில கேள்விகள் உங்கள் மனதில் அலையடிக்கும். அதுக்குப் பதில்களும் கிடைக்கலாம். அப்படி உங்களுக்குப் பதில் கிடைச்சா, அதுதான் படத்துக்கான வெற்றி. இது இலங்கையில் நடக்கும் கதை. ஆனால், உலகம் முழுக்கப் போரால் பாதிக்கப்படும் எல்லாக் குழந்தைகளின் கதைகளையும் பேசும் படம் இது!”

”இந்தப் படத்தை ஷூட் பண்ண இலங்கையில் அனுமதி கிடைச்சதா?”

”இலங்கையில் நடக்கிற கதை. அதை இலங்கையிலேயே எடுத்திருக்கலாம். ஆனால், ‘இப்படித்தான் எடுக்கணும்’ என ஏதும் முட்டுக்கட்டைகள் வரலாம். அதனால் ஈழத்தை அப்படியே இங்கே க்ரியேட் பண்ணிட்டோம். கொஞ்சம் ராமேஸ்வரத்திலும் ஷூட் பண்ணியிருக்கோம். நடிகை சரிதா ‘சுனாமியக்கா’ங்கிற கேரக்டரில் நடிச்சிருக்காங்க. சுனாமியில் மொத்தக் குடும்பமே சாக, இவர் மட்டுமே தப்பியிருப்பார். ‘இவ்வளவு பேர் இறந்த பிறகும், நான் மட்டும் உயிரோட இருக்கேன்னா… ஏதோ நல்லதுக்குத்தான்’னு நினைச்சு ஒரு காப்பகத்தை நடத்திட்டு இருப்பாங்க.

போரில் உறவினர்களை இழந்த குழந்தைகள், அங்கே அடைக்கலம் தேடி வருவாங்க. அதை ‘காப்பகம்’னு சொல்றதைவிட ஒரு ‘குடும்பம்’னு சொல்லலாம். இந்தச் சூழலில் இறுதி யுத்தம் வருது. அவங்க வாழ்க்கை என்ன ஆகுதுங்கிறது கதை. இந்தக் கதை தமிழ் இனம் உணர வேண்டிய ரணம்!”

”யாரெல்லாம் நடிச்சிருக்காங்க?”

”கேரளாவில் எனக்கு டாக்டர் ஃப்ரெண்ட் ஒருத்தர் இருக்கார். அவரோட குழந்தை ஸ்பெஷல் சைல்டு. டவுண் சிண்ட்ரோமால் பாதிக்கப்பட்டவன். அவனை நான் ஷூட் பண்ணணும்னு ரொம்ப நாளா சொல்லிட்டு இருந்தார். ஒருநாள் டைம் கிடைச்சப்ப, அவனை ஷூட் பண்ணப் போனேன். அந்தக் குழந்தையின் உலகமே வேறு. அவனோட உலகத்துக்குள் போய் அவனோட நண்பனா நின்னு, நான் ஷூட் பண்ணப்ப ‘இதுவரை பண்ணதுலேயே இதுதான் நம்மளோட பெஸ்ட் வொர்க்’னு தோணுச்சு.

‘இனம்’ கதைக்கு அப்படி ஒரு ஸ்பெஷல் சைல்டு கேரக்டர் தேவைப்பட்டப்ப, எனக்கு அறிமுகம் ஆனான் கரண். 16 வயசுப் பையன். ஒன்பது மாசம் அவனுக்கு நடிக்கப் பயிற்சி கொடுத்தோம். அவனைத் தவிர முகாமில் உள்ள நிஜ அகதிகளும் நடிச்சிருக்காங்க!”

”இந்தப் படத்துக்கு, உலகத் திரைப்பட விழாக்களில் என்ன ரெஸ்பான்ஸ்?”

”பாடல்கள் உள்ள இண்டியன் வெர்ஷனை புசான்ல திரையிட்டோம். நல்ல ரெஸ்பான்ஸ். அடுத்து நார்வே போகுது. உலகத் திரைப்பட விழான்னதும் படம் ஏதோ டாக்குமென்டரி ஃபீல்ல இருக்கும்னு நினைக்காதீங்க. கமர்ஷியலான படம். நான் ஒளிப்பதிவு பண்ற ‘அஞ்சான்’ படத்தோட டைரக்டர் லிங்குசாமி இந்தப் படம் பார்த்துட்டு, ‘நானே ரிலீஸ் பண்றேன்’னு சொல்லியிருக்கார்!”

” ‘தளபதி’ படத்துக்கு முன்னாடியே இங்க வந்துட்டீங்க. ஆனால், தமிழ் பேச இவ்வளவு திணறுறீங்களே.. தமிழ் கத்துக்க ஆர்வம் இல்லையா?”

”வேலை காரணமா அதிகமா இங்கிலீஷ்தான் பேசுறேன். மணிரத்னம் டீம் உள்பட நான் வொர்க் பண்ற டீம் எல்லாமே அப்படியே அமைஞ்சிருச்சு. பிறகு எப்படி தமிழ் கத்துக்க முடியும்? இப்பதான் லிங்குசாமி டீம்ல தமிழ் பேசிக் கத்துட்டு இருக்கேன். அடுத்து நம்ம மீட்டிங்கில் பெட்டரா தமிழ் பேச முயற்சி பண்றேன். கிராமத்துக்குப் போகும்போது இன்னும் பெட்டராப் பேசுவேன்னு நினைக்கிறேன்.”

”கமர்ஷியல் படங்களுக்கு ஒளிப்பதிவு பண்றீங்க.. சீரியஸ் படங்களை டைரக்ட் பண்றீங்க.. இதுக்கு என்ன காரணம்?”

”இதுதானே இன்ட்ரெஸ்ட்டிங். சின்ன வயசுல கேரளாவில் இருக்கும்போது நான் எம்.ஜி.ஆர். ரசிகன். குழந்தைகள் எல்லாருக்கும் அவரோட ஹீரோயிசம் பிடிக்கும். ஆனால், பயணங்கள், அனுபவங்கள்னு வளர்ந்த பின்னாடி யதார்த்தமாப் படம் பண்ணணும்னு ஆசை வந்துச்சு. எங்க பாட்டி ஒரு பெயின்டர். அவங்க நிறைய ராஜா கதைகள் சொல்வாங்க. அப்படித் தான் ஹிஸ்டாரிக்கல் ஃபிலிம் மேல் ஆர்வம் வந்தது. ராஜா ரவிவர்மன் கேரக்டரில் நடிக்கவும் செஞ்சேன். எந்த சமரசமும் இல்லாமல் உண்மைக்கு நெருக்கமா படம் எடுக்க நினைச்சேன். அப்படித்தான் ‘மல்லி’, ‘டெரரிஸ்ட்’ எடுத்தேன். பணத்துக்காக கமர்ஷியல் படங்களில் ஒளிப்பதிவு பண்றேன். எனக்குப் பிடிச்சது எல்லாம் பண்றேன். அதனால்தான் நான் சந்தோஷ் அப்புறம் சிவன்!”

”யார்கிட்டயும் நீங்க உதவியாளரா இருந்தது இல்லை. இவ்வளவு பெரிய உயரம் எப்படிச் சாத்தியம்?”

”புனே ஃபிலிம் இன்ஸ்டிட்யூட்ல படிச்சேன். ‘யார்கிட்டயாவது உதவியாளரா இருக்கணும், இல்லைனா வேலையே கிடைக்காது’னு சொன்னாங்க. யார்கிட்டயும் உதவியாளரா சேர எனக்கு விருப்பம் இல்லை. கொஞ்ச நாள் ஸ்டில் போட்டோ கிராபி பண்ணிட்டு இருந்தேன்.

ஒருமுறை அருணாசலப்பிரதேசத்துல உள்ள ஒரு ஸ்கூலுக்கு போட்டோகிராபி டிரெய்னிங் தரப் போயிருந்தேன். காட்டுக்கு நடுவில்தான் அந்த ஸ்கூல் இருக்கு. பசங்க எல்லாரும் புத்தகத்தோட கையில் கத்தியும் வெச்சிருந்தாங்க. ‘படிக்கும் பசங்க கையில் கத்தியா?’னு விசாரிச்சா, ‘இங்கே அடிக்கடி புலிகள் நடமாடும். புலி வந்தா எல்லாரும் ஓடிருவோம். இல்லைன்னா மரத்துல ஏறிடுவோம். முடியலைன்னா… அதை பயமுறுத்தத்தான் கத்தி’னு பதில் சொன்னாங்க. எனக்குப் பதற்றம் ஆகிருச்சு. ‘எனக்கு ஓடவோ, மரம் ஏறவோ தெரியாதே… புலி வந்தா என்ன பண்றது?’னு கேட்டேன். ‘பிரச்னையே இல்லை. புலியை நேரில் பார்த்தா எல்லாத்தையும் நீங்களே கத்துப்பீங்க’னு சிரிச்சுக்கிட்டே சொன்னார் ஒருத்தர். அவ்வளவுதான் வாழ்க்கை. வளரணும்னா சவாலைச் சந்திக்கணும். கடுமையா உழைக்கணும்னு தோணுச்சு. நேரடியாக் களத்தில் இறங்கிட்டேன்!”

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: