Skip to content

Vikatan Interview – “நல்ல சினிமாவுக்காக ஆசைப்படுறதுகூட தப்பா?”

February 27, 2014

”அல்லியோ புது ரோசா
பார்த்தான் அர்ஜுன மகராசா…
அல்லி மலருல கள்ளு வடியுது
அர்ஜுனன் முகத்துல ஜொள்ளு வடியுது
ஆரம்பமாகுது நாடகக் காதலு…
ஆணுக்கும் பெண்ணுக்கும் நடக்குது மோதலு…

‘காவியத் தலைவன்’ படத்துக்காக காவியக் கவிஞர் வாலி எழுதின பாட்டு இது. அந்தப் பாட்டு, நாடக மேடை செட், மேக்கப் கிட்னு எங்க யூனிட் மொத்தமும் ‘டைம் மெஷின்’ல ஏறி நாடகக் காலத்துக்குப் போயிட்டோம். திரும்ப 2014-க்கு வரணுமானு யோசனையா இருக்கு!” – அதிர அதிரச் சிரிக்கிறார் இயக்குநர் வசந்த பாலன்.

சுதந்திரப் போராட்டக் காலத்தில் தென் தமிழகத்தின் நாடக மேடை சூழலைப் பின்னணியாகக்கொண்டு ‘காவியத் தலைவன்’ படத்தை உருவாக்கி வருகிறார் வசந்த பாலன். ஒவ்வொரு ஸ்டில்லும் ஒவ்வொரு கதை சொல்ல, ‘காவியத் தலைவன்’ குறித்து வசந்த பாலனிடம் பேசினேன்…

” ‘அங்காடித் தெரு’ படப்பிடிப்பு சமயம் எழுத்தாளர் ஜெயமோகனிடம் பேசிட்டு இருந்தப்போ, நாடகக் கலைஞர்களின் வாழ்வு குறித்துச் சொன்னார். அந்த உரையாடல் என் உறக்கத்தைத் திருடிவிட்டது. சங்கரதாஸ் ஸ்வாமிகளின் நாடக உலகத்துக்குள்ளேயே போனேன். எஸ்.ஜி.கிட்டப்பா – கே.பி.சுந்தராம்பாள் காதல் கதை உள்பட ரத்தமும் சதையுமாக எத்தனையோ கதைகள் கொட்டிக்கிடந்தன. அரிதாரம் பூசிய ராஜபார்ட்களும், கள்ளபார்ட்களும், ஸ்திரீபார்ட்களும் என்னை ஆக்ரமித்தனர். அந்த மனவேட்கையில் எழுதியதுதான் ‘காவியத் தலைவன்’.

அரவானுக்கு முன்னாடியே இதைப் பண்ணிருக்கணும். ஏன்னா, இதுக்குப் பெரிய பட்ஜெட் தேவைப்பட்டது. அதனால் ‘அரவான்’ முடிச்சிட்டு நாடக உலகத்துக்குள் புகுந்தேன். சித்தார்த் படத்தை, ஒரு பத்திரிகையில் பார்த்தேன். கிட்டப்பாவின் சாயல் அவரிடம் இருந்தது. அவருக்குக் கதை ரொம்பப் பிடிச்சிருந்தது. புராஜெக்ட் ஆரம்பிச்சுட்டோம். முக்கியமான ஒரு கேரக்டரில் பிருத்விராஜ் வேணும்னு ஆசைப்பட்டுக் கேட்டேன். சந்தோஷமா சம்மதிச்சார்!

மேடை நாடகக் கலைஞர்களைப் பற்றிய கதை. அவர்களின் வாழ்வை ரத்தமும் சதையுமாகச் சொல்கிறேனே தவிர, தனிப்பட்ட யாரோட நிஜ வாழ்க்கையையும் நான் படமாக்கலை. கிட்டப்பாவின் நேரடி வாரிசுகள், ‘எங்க தாத்தாவைப் பத்தி படம் எடுக்கிறீங்களா?’னு கேட்டாங்க. இல்லை… இது மேடை, நாடகம், ஒப்பனைனு மொத்த ஆயுளையும் நாடகத்துக்காக அர்ப்பணித்து வாழ்ந்த பெருங்கூட்டத்தின் கதைனு சொன்னேன்!”

”உங்க படத்துக்கு முதல்முறையா ஏ.ஆர்.ரஹ்மான்-வாலி கூட்டணி பிடிச்சிருக்கீங்களே!”

”எல்லா கேன்வாஸிலும் படம் பிரமாண்டமா இருக்கணும்னு ஆசை… அதான். ‘நம்ம படத்துக்கு ரஹ்மான் சார் மியூசிக் இருந்தா நல்லா இருக்கும்’னு சித்தார்த்கிட்ட சொன்னப்போ, உடனே அவர் முன்னாடி போய் நிறுத்திட்டார். ரஹ்மான்கிட்ட எப்படி கதையைச் சொல்றதுனு பதற்றமா இருந்தது. அவரே என்னை இயல்பாக்கிக் கதையைக் கேட்டார். ‘இன்ட்ரெஸ்ட்டிங்கா இருக்கு… யோசிச்சு சொல்றேன்’னு சொன்னார். ரெண்டு வாரம் கழிச்சு ரஹ்மான் சார்கிட்ட இருந்து, ‘கிட்டப்பா ரெடி’னு மெசேஜ் வந்தது. படம் மேல் எனக்கு டபுள் நம்பிக்கை கொடுத்தது ரஹ்மான் சாரின் ஆர்வம். இசைக்கு முக்கியத்துவம் உள்ள படம் என்பதால் பாடல்களில் அழுத்தம் இருக்கணும்னு அவரே, ‘யாராவது சீனியர் பாட்டு எழுதினா நல்லா இருக்கும். நீங்க வாலி சார்கிட்ட கேட்டுப் பாருங்க’னு அனுப்பினார்.

‘வாய்யா வாய்யா… உன் படம்லாம் பார்த்திருக்கேன். ‘அங்காடித் தெரு’, ‘வெயில்’லாம் எனக்கு ரொம்பப் பிடிச்ச படம்யா’னு உற்சாகமா வாலி சார் வரவேற்றார். ‘காவியத் தலைவன்’ கதை கேட்டுட்டு, ‘நானும் நாடகக் கம்பெனிக்கு பாட்டு எழுதிருக்கேன்; நடிச்சிருக்கேன்’னு ஆரம்பிச்சு நாடக மேடைகள் பத்தி அவ்வளவு சுவாரஸ்யமாப் பேசினார்.  படத்துக்காக வாலி ஐயா எழுதிய ‘கிருஷ்ண விஜயம்’ கதைப் பாடல் கிளாசிக்.

உடம்பு சரியில்லாமல் மருத்துவமனைக்குப் போற கடைசி நிமிஷம் வரை உழைச்சுக் கொடுத்துட்டுப் போனார். அவர் இழப்பு எங்க டீமுக்கு தனிப்பட்ட பேரிழப்பு. அவர் இல்லாத குறையை பா.விஜய், நா.முத்துக்குமாரின் தமிழ் பூர்த்தி செய்திருக்கிறது!”

”பிரமாண்ட எதிர்பார்ப்பு, கடுமையான உழைப்பு, சின்சியர் மேக்கிங் இருந்தும் ‘அரவான்’ ஏன் ரீச் ஆகலை. என்ன தப்புனு கண்டுபிடிச்சீங்களா?”

”எவ்வளவு யோசிச்சாலும் எனக்கே பதில் தெரியலை. ஒரு பெரும் போருக்குச் சென்று சோர்ந்து திரும்பிய போர் வீரனின் மனநிலையில்தான் இன்னமும் இருக்கேன். அந்தப் படத்துக்குக் கொடுத்த உழைப்பு ரொம்பப் பெருசு. நாலு படங்களுக்கான உழைப்பு அது. ஆனாலும் படம் தோற்றுப்போனதை இன்னும் ஜீரணிக்க முடியலை.

‘படத்துல ரெண்டு கதை இருக்கு, திரைக்கதை சரியில்லை, இன்னும் பெரிய நடிகர்களைப் பயன்படுத்தியிருக்கணும்,  இரண்டாவது பாதியை மட்டும் முழுப் படமா எடுத்திருக்கணும், எந்தத் தப்பும் செய்யாத ஹீரோ ஏன் சாகணும்?’னு படத் தோல்விக்குப் பலப்பல காரணங்கள் சொல்றாங்க. ஆனா, எந்தக் கருத்தோடும் எனக்கு உடன்பாடு இல்லை. அதே சமயம் எங்கே சறுக்குச்சுனும் தெரியலை.

என் குரு ஷங்கர் சார் எப்பவும் என் படங்கள் பார்த்துட்டுப் பேசுவார். ஆனா, ‘அரவான்’ பத்தி அவர் பேசவே இல்லை. படம் வெளியாகி பல மாசம் கழிச்சு ஒரு திருமணத்தில் அவரைச் சந்திச்சேன். ‘பாலன், ‘அரவான்’ பாத்தேன்யா. உன்கிட்ட எதுவும் பேசலை. தப்பா எடுத்துக்காத. படம் எனக்குப் பிடிச்சிருந்தது. ரொம்ப அழகான விஷ§வல்ஸ். 18-ம் நூற்றாண்டைத் திரும்ப க்ரியேட் பண்ணது அபாரமான உழைப்பு. சின்னச் சின்ன விஷயங்களையும் ரொம்ப நுட்பமாப் பார்த்துப் பார்த்துப் பண்ணியிருக்க. ஆனா, கதைல ஏதோ சின்னத் தப்பு இருக்கு. அதை எப்படிச் சொல்றதுனு தெரியலை. அதான் பேசலை. ஆனா, இதுக்காக வருத்தப்படாத. எனக்கும் ‘பாய்ஸ்’ தவறலையா! எப்பவும் நீ எஸ்க்பெரிமென்டலான படங்களைத்தான் எடுக்கிறே. ‘அங்காடித் தெரு’ மாதிரி படம் பண்ற துணிச்சல்தான் உன் அடையாளம். இதுக்காக எல்லாம் ஒருநாளும்  சோர்ந்துடாத’னு ரொம்ப ஆதரவாப் பேசினார். இதோ அடுத்து ஓட ஆரம்பிச்சிட்டேன்!”

” ‘கேடி பில்லா கில்லாடி ரங்கா’, ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’னு அடுத்தடுத்து கமர்ஷியல் படங்கள் ஹிட் ஆனபோது, ‘சினிமாவின் சாபம்’கிற ரீதியில் விமர்சிச்சு இருந்தீங்களே… ஏன் அவ்ளோ கோபம்?”

”இங்கே எல்லாவிதமான சினிமாக்களும் வரணும். அதான் என் ஆசை. நீங்கள் குறிப்பிட்ட படங்கள் கமர்ஷியல் படங்கள். அந்தப் படங்களின் வெற்றி குறித்து எனக்குக் கவலையோ, பதற்றமோ இல்லை. ஆனா, அப்படியான  கமர்ஷியல் படங்கள் 10 வந்தால், அதுக்கு நடுவுல ஒரு நல்ல சினிமா வரணும்னு விரும்புறவன் நான். அப்படியான ஏதோ ஒரு நல்ல சினிமாதான் இத்தனை இயக்குநர்களையும் கோடம்பாக்கத்துக்கு இழுத்துட்டு வந்திருக்கு. ஊரை, உறவை, காதலை விட்டுட்டு இங்கே ஓடிவந்து ஒவ்வொரு நிமிஷமும் கஷ்டப்படுறதுக்கு, அந்த மாதிரி ஒரு நல்ல சினிமாவைக் கொடுக்கணும்கிற வேட்கைதான் காரணம்.

ஒரு வருஷத்தில் நூத்துக்கணக்குல வெளியாகும் படங்களில், தமிழ் அடையாளமும் பண்பாடும் எத்தனை சினிமாக்களில் இருக்கு? கொரிய இயக்குநர் கிம் கி டுக் இயக்கிய ‘Moebius’ படத்தைப் பார்த்துவிட்டு ஒரு மாசத்துக்கும் மேலே அந்தப் பரவசத்திலேயே கிடந்தேன். தமிழில் அந்த மாதிரி ஒரு படம் வரணும்னு ஆசைப்படுறது தப்பா?

நாம வாழும் வாழ்க்கையை நம்ம சினிமாக்களும் அழுத்தமாப் பிரதிபலிக்கணும்னு விரும்புகிறேன். நிசப்தத்தால் ஒரு காட்சியைச் சொல்வது நம்ம வழக்கம் இல்லை. நமது வாழ்க்கை ரொம்பவே இரைச்சலானது. நாம சத்தமாகப் பேசக்கூடியவர்கள். நமது படங்களில் அந்த இரைச்சலும் சத்தமும் இருக்கணும். ஜன்னல் வழியா வரும் அரை இருட்டில் படம் பிடிப்பது அல்ல நமது கலாசாரம். வெயில் மூர்க்கமாகத் தலையில் இறங்கும் வாழ்க்கை நம்முடையது. நாம் தொடர்புகொள்ளும் மொழி, வாழ்க்கைமுறை எல்லாத்தையும் பிரதிபலிக்கிற சினிமாக்களைத்தான் நான் எதிர்பார்க்கிறேன்… வரவேற்கிறேன்!”

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: