Skip to content

Kavingar Vaira Muthu’s Interviews (Vikatan & Kungumam)

March 6, 2014

Vikatan:

“கதை தேடுகிறார் ரஜினி!”
எஸ்.கலீல்ராஜா
 

‘கோச்சடையான்’ படத்துக்காகத் தான் எழுதிய பாடல் வரிகளை வாசிக்கக் கொடுக்கிறார் ‘கவிப்பேரரசு’ வைரமுத்து. வாசித்து முடித்து நிமிர்ந்ததும், ‘எப்படி இருக்கு?’ என்று ஆர்வமாக, அக்கறையாக விசாரிக்கிறார். எத்தனை உயரம் தொட்டாலும், அந்த ஆர்வமும் துடிப்பும் வைரமுத்து ஸ்பெஷல்!  

”கோச்சடையான் என்கிற படைத்தலைவன், ஒரு பெரிய போரில் வெற்றிவாகை சூடித் திரும்புகிறான். அவனுக்குப் பொதுமக்கள் மத்தியில் அவ்வளவு நல்ல பெயர். அவன் வீரன். அதே நேரத்தில் ஞானம் நிறைந்தவன். மக்கள் அவனைப் புகழ்ந்து பாடுகிறார்கள். நடுநடுவே கோச்சடையான், மக்களுக்கு நல்மொழிகளைச் சொல்கிறான். இதுதான் காட்சி.

பாடலை ரஜினியையே பாட வைத்தோம். ஒலிப்பதிவு முடிந்து பாடலைக் கேட்டபோது, காந்தமாக ஈர்த்தது ரஜினியின் குரல். இத்தனைக்கும் அவர் பாடவில்லை. தன் கணீர் குரலில் அந்த வரிகளைத் துணிவும் கனிவுமாக வாசிக்கத்தான் செய்தார். அதற்கே அப்படியொரு வசீகரம்!” – பாடல் உருவாக்கம் பற்றிய அறிமுகத்துக்குப் பிறகு அந்தப் பாடல் வரிகளை தனது குரலிலேயே வாசிக்கிறார் வைரமுத்து.

”மக்கள் குழு:

உண்மை உருவாய் நீ
உலகின் குருவாய் நீ
எம் முன் வருவாய் நீ
இன்மொழி அருள்வாய் நீ

உன் மார்போடு காயங்கள்
ஓராயிரம்
உன் வாழ்வோடு ஞானங்கள்
நூறாயிரம்

தாய் மண்ணோடு உன்னாலே
மாற்றம் வரும்
இனி உன்னோடு உன்னோடு
தேசம் வரும்

ரஜினி:  

எதிரிகளை ஒழிக்க
எத்தனையோ வழிகள் உண்டு
முதல் வழி மன்னிப்பு

மாறு – மாற்றம் ஒன்றுதான் மாறாதது
மாறுவதெல்லாம் உயிரோடு
மாறாததெல்லாம் மண்ணோடு

பொறுமைகொள்
தண்ணீரைக்கூட சல்லடையில் அள்ளலாம்
அது பனிக்கட்டி ஆகும் வரை பொறுத்திருந்தால்

பணத்தால் சந்தோஷத்தை
வாடகைக்கு வாங்கலாம்
விலைக்கு வாங்க முடியாது

பகைவனின் பகையைவிட
நண்பனின் பகையே ஆபத்தானது.

சூரியனுக்கு முன் எழுந்துகொள்
சூரியனை ஜெயிப்பாய்

நீ என்பது உடலா… உயிரா… பெயரா?
மூன்றும் இல்லை – செயல்

‘நீ போகலாம்’ என்பவன் எஜமான்
‘வா போகலாம்’ என்பவன் தலைவன்
நீ எஜமானா, தலைவனா?

நீ ஓட்டம் பிடித்தால்
துன்பம் உன்னைத் துரத்தும்
எதிர்த்து நில்
துரத்திய துன்பம் ஓட்டம் பிடிக்கும்

பெற்றோர்கள் அமைவது விதி
நண்பர்களை அமைப்பது மதி

சினத்தை அடக்கு
கோபத்தோடு எழுகிறவன்
நஷ்டத்தோடு உட்காருகிறான்

நண்பா… எல்லாம் கொஞ்ச காலம்!  

இப்படி, ஒவ்வொரு பாடலையும் புது ட்யூன், எழுதாத மொழி எனக் கலவையாக உருவாக்கி இருக்கிறோம். ஒவ்வொரு ரசிகனும் இசைக்கு ஒரு காதும், மொழிக்கு ஒரு காதும் கொடுப்பான் என்று நம்புகிறேன்!”  

”பொதுவா பாடல் எழுதும்போது இசையமைப் பாளருக்கும் பாடலாசிரியருக்கும் நிறைய சண்டை வருமே… ரஹ்மான்கூட நீங்க அப்படி சண்டை போட்டிருக்கீங்களா?”

”சண்டை, சர்ச்சைகள் ஆரோக்கியமான விஷயம். சண்டை இல்லாமல் கலை வராது; வளராது. ஆனால், இந்தப் படத்தைப் பொறுத்தவரை எனக்கும் ரஹ்மானுக்கும் பெரிய சர்ச்சைகள் வரவில்லை. ரஹ்மானோட  ரொம்ப சண்டை வந்தா, நான் அவர் வீட்டு ஊஞ்சலில் உட்கார்ந்து டீ சாப்பிடப் போயிடுவேன். அதை அவரும் புரிஞ்சுப்பார். ‘கவிஞர், டீ சாப்பிடுறாரா?’னு விசாரிப்பார்.

ரஹ்மான், ஒரு ஜப்பானியர் மாதிரி. அவருக்குக் கோபம் வந்தா, ரொம்பத் தீவிரமா வேலை பார்க்க ஆரம்பிச்சிருவார். ஏன்னா, ஜப்பானியத் தொழிலாளர்கள் கோபம் வந்தா ஸ்ட்ரைக் பண்ண மாட்டங்க. அதிகமா உற்பத்தி பண்ணிட்டு, அதை விற்க முடியாதபடி பண்ணிருவாங்க.

எங்களுக்குள் பெரிய சண்டை வந்தது ‘ரட்சகன்’ படத்தின் ‘சந்திரனைத் தொட்டது யார் ஆம்ஸ்ட்ராங்கா?’ பாடல் பதிவில்தான். அதில் அவர் ‘ஆம்ஸ்ட்ராங்’கிற வார்த்தை ரொம்பக் கடுமையா இருக்கு. ட்யூன்ல ஒட்டலை. அதை எடுத்திரலாம்’னு சொன்னார். ‘நீங்க சொல்றது உண்மைதான். ஆனா, அந்த வார்த்தை இல்லைன்னா அந்தப் பல்லவியில் புதுமை இல்லையே…’னு நான் சண்டை போட்டேன். ரெண்டு பேருமே விட்டுக்கொடுக்கலை. ‘சரி பாடுறதுக்கு ஹரிஹரன் வந்துட்டு இருக்கார். அவர் பாடும்போது இடிக்குதுனு சொன்னா எடுத்துருவோம்’னு நான் சொன்னேன். ஹரிஹரன் வந்தார். பாட்டு வரியைச் சொன்னதும், ‘ஸோ பியூட்டி!’னு சொல்லிட்டுப் பாடினார். பாடும்போது ‘ஆம்ஸ்ட்ராங்’கிற வார்த்தையில் ‘ஸ்ட்ராங்’கை மென்மையாப் பாடிட்டார். ட்யூன் இடிக்கலை. பாடல் இன்றும் பெரும் ஈர்ப்புடன் ரசிகர்களைத் தக்கவைத்திருக்கிறது!

அதேபோல ‘மின்சார கனவு’ படத்தின் ‘ஊலல்ல்லா…’ பாடல் ட்யூனை ரஹ்மான் வாசித்தார். எனக்கு அது பிடிக்கவே இல்லை. ‘நான் இந்த ட்யூனுக்கு பாட்டு எழுதலை’னு சொல்லிட்டு வந்துட்டேன். பிறகு, ரஹ்மானும் ராஜீவ் மேனனும் வந்து பேசினாங்க. ‘பிரமாதமான ட்யூன் அது. நீங்க நிச்சயம்  பாட்டு எழுதணும்’னு சொன்னாங்க. எனக்கு அப்போ புரியலை. அரை மனசோட எழுதிக் கொடுத்தேன். ஆனா, இசையும் வரிகளுமா பாடல் கம்போஸ் ஆகி வந்தப்போ, அற்புதமா இருந்தது. அந்தப் பாட்டு பிரமாண்ட ஹிட் ஆனதோட, பாடகி சித்ராவுக்கு தேசிய விருதையும் பரிசளித்தது. எங்களுக்குள் நடக்கிற இந்த ஆரோக்கியமான சண்டைகள்தான், நல்ல நல்ல பாட்டுகளை ஊற்றெடுக்க வைக்குது!”

”ரஜினி அடுத்த படத்துக்குத் தயாராகிவிட்டாரா?”

”புகைபிடிப்பதைச் சுத்தமா விட்டுட்டார்; மதுவும் தேவை இல்லை எனும் முடிவுக்கு வந்துட்டார். முன்னாடி எல்லாம் அவர் நினைச்ச நேரத்துக்குச் சாப்பிடுவார். இப்போ குறித்த நேரத்துக்குச் சாப்பிடுகிறார். மிக அமைதியாக இருக்கிறார். கடந்த 30 வருடங்களாக நாள் ஒன்றுக்கு 16 மணி நேரம் உழைத்த மனுஷன், இப்போது ஒரு நாளில் 15 மணி நேரம் எந்த வேலையும் செய்யாமல் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்பது துன்பமான காரியம். அந்தத் துன்பத்தையும் அவர் ஏத்துக்கிட்டார்.

சிங்கப்பூர் சிகிச்சை முடிந்து வந்தவரை நான் சந்தித்தபோது, ஒரு விஷயம் சொன்னார். ‘சென்னை மருத்துவமனையில் எனக்கு எந்தத் துன்பமும் இல்லை; சிங்கப்பூர் மருத்துவ மனையில்தான் நான் ரொம்பத் துன்பப்பட்டேன். அவ்வளவு கடுமையான சிகிச்சை.’மத்தவங்களைப் போல நீங்களும் ஒரு நோயாளி. ட்ரீட்மென்ட் கடுமையா இருக்கும். தாங்கித்தான் ஆகணும்’னு சிங்கப்பூர் மருத்துவர்கள் சொல்லிட்டாங்க’ என்றார் சிரித்துக்கொண்டே.

ஏன்னா, சென்னையில் அவர் நோயாளி அல்ல… ரஜினிகாந்த். சிங்கப்பூரில் அவர் ரஜினிகாந்த் அல்ல… நோயாளி. அந்தக் கடுமையான சிகிச்சை மற்றும் கட்டுப்பாடான வாழ்க்கைமுறை மாற்றம் காரணமாக இப்போ பழைய ரஜினியா, ஆரோக்கியமா, புயல் வேகத்துக்குத் திரும்பிட்டார். பழைய ரஜினியா நடிக்கிறதுக்கான நல்ல கதையைத் தேடிட்டு இருக்கார்!”

 

Kungumam: 

கோச்சடையான் எனக்கு இன்னொரு பாட்ஷா

 Print Bookmark My Bookmark List

 

 

வைரமுத்துவிடம் ரஜினி பரவசம்

மெட்டுக்குள் பொருந்திவிடும் வரிகள் போலக் கச்சிதமும் கம்பீரம் கலந்திருக்கிறது கவிப்பேர ரசு வைரமுத்துவின் பெசன்ட் நகர் மாளிகை. பாடலின் பல்லவியாக வீட்டின் முகப்பில் விரிந்திருக்கிறது அழகுப் புல்வெளி. மடியில் கனமான புத்தகம் ஒன்றை மழலை போல உறங்க வைத்து வானம் அளந்துகொண்டிருக்கிறார் கவிஞர். அவரின் கற்பனை வலையில் கவிதை மீன்கள் விழுந்துகொண்டிருந்த நேரம், ‘அந்திமழை பொழிகிறது…’ என நம் ரிங்டோன் கவனம் கலைக்க, கைலுக்கி வரவேற்கிறார்.

எதிர்பார்ப்பை குவித்துக்கொண்டிருக்கும் ‘கோச்சடையான்’ படத்தின் பாடல் உருவான விதம், ரஜினியுடனான நட்பு எனப் பரவச நிமிடங்களைப் பகிர்ந்துகொண்டதிலிருந்து…
‘‘தமிழில் தயாரிக்கப்பட்ட உலகப்படம் ‘கோச்சடையான்’. இந்தப் படம் தொழில்நுட்பத்தின் விளைச்சல் என்றும் சொல்லலாம். இவ்வளவு பெரிய தொழில்நுட்பத்தைத் தாங்குகிற சக்தி ரஜினி போன்ற புகழ்பெற்ற கலைஞர்களுக்கு மட்டுமே சாத்தியம்.

இதில் க்ளைமாக்ஸ் பாடல் எழுதியது தனி அனுபவம். குருக்ஷேத்திரம் மாதிரியான பெரிய யுத்தம் நடக்கிறது. யுத்தத்தில் எதிரிகளைத் தலை வாங்கி வீரனாக உயர்ந்து நிற்கிறான் ‘கோச்சடையான்’. அதோடு, படத்தை முடிப்பது வழக்கமான ஒன்று. ஆனால், இந்த வெற்றி அந்த வீரனுக்கு மமதை கொடுக்காமல் சமநிலையை கொடுக்க வேண்டும் என்பதுதான் அந்தப் பாடலின் சூழல். 

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் ஒவ்வொரு வீரனும் ‘இது தன்னுடைய பாடல்’ என உணரும்விதமாக இது இருக்க வேண்டும் என ரஹ்மானும் நானும் முடிவு செய்தோம். எந்த ஒரு பாடலுமே பாத்திரத்தைத் தாண்டி சமூகத்துக்குப் போய்ச் சேர்ந்தால் மட்டுமே வெற்றிப் பாடலாக அமையும். பாத்திரத்தின் கொள்ளளவு குறைவு. பாத்திரம் நிறைவதற்கு மட்டும் பெய்தால் அது குழாய். பாத்திரம் தாண்டிப் பொழிந்தால்தான் மழை. எங்கள் பாட்டு மழையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டிருக்கிறோம். போர்க்களத்தில் தான் பெற்ற வெற்றியை தாய்நாட்டுக்காக அர்ப்பணிக்கும் படைத்தலைவனின் அந்தப் பாட்டு இது…

‘ஆகாய மேகங்கள் பொழியும்போது
ஆதாயம் கேளாது 
தாய்நாடு காக்கின்ற உள்ளம் என்றும் 
தனக்காக வாழாது 
ஏ வீரனே கர்ம வீரனே கடமை வீரனே 
தோல்விகளாலே துவண்டு விடாதே 
வெற்றிகளாலே வெறி கொள்ளாதே
கல்லடி கல்லடி படுமென்பதாலே
மரம் காய்க்காமல் போவதில்லை
சொல்லடி சொல்லடி படுமென்பதாலே
வெற்றி காணாமல் போவதில்லை 
மாலைகளைக் கண்டு மயங்காதே
மலைகளைக் கண்டு கலங்காதே
காற்றே காற்றே நீ தூங்குவதே இல்லை
கர்ம வீரனே வீரனே நீ ஓய்வதே இல்லை
வாழ்வே வாழ்வே நீ தீருவதேயில்லை – உன்
வாழ்விலே சத்தியம் தோற்பதேயில்லை
நின்ற இடத்தில் நிற்க வேண்டுமா – நீ
ஓடிக்கொண்டே இரு
நிம்மதி வாழ்வில் வேண்டுமா 
பாடிக்கொண்டே இரு
கோழை மகன் மன்னித்தால் – அது
பெரிதல்ல பெரிதல்ல
வீர மகன் மன்னித்தால் – அது
வரலாறு வரலாறு
பொன்னும் மண்ணும் 
வென்று முடிப்பவன்
கடமை வீரனே – அந்தப்
பொன்னை ஒருநாள் 
மண்ணாய்ப் பார்ப்பவன் கர்ம வீரனே’

பாடலை ரஹ்மானே பாடியிருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு இரவுப் பறவை… நான் பகல் பறவை. அவரோடு சேர்ந்தால் மட்டுமே இரவு நீண்ட நேரம் செலவழிப்பேன். இதன் ஒலிப்பதிவு இரவு ஏழு மணிக்குத் தொடங்கி 2 மணி வரை நடந்தது. இது ரஜினிக்கு மகிழ்ச்சியும் ரஹ்மானுக்கு திருப்தியும் கொடுத்த பாடல்!’’
‘‘ரஜினி என்ன சொன்னார்?’’

‘‘இயக்குனர், இசையமைப்பாளர், பாடல் ஆசிரியர்களை யோசித்து முடிவு செய்வார் ரஜினி. அதன்பிறகு அவர்கள் விஷயத்தில் தலையிடுவதில்லை. கலைஞர்களுக்கு சுதந்திரம் கொடுப்பார், மதிப்பார், பாராட்டுவார். பாடல்களைக் கேட்டுவிட்டு உணர்ச்சியோடு கூப்பிட்டுப் பாராட்டும் மிகச்சில நடிகர்களில் ரஜினியும் ஒருவர். 

‘கோச்சடையான்’ படத்தின் ஒவ்வொரு பாடலையும் கேட்டுவிட்டுப் பாராட்டினார். ரஜினி படத்துக்குப் பாடல் எழுதுவதற்காகக் கிடைக்கும் ஊதியம் இரண்டாம் பட்சம்தான். அவர் தரும் உற்சாகம்தான் பெரும் சம்பளம். ரஜினியோடு நான் பணியாற்றும் முப்பத்து நான்காவது வருடம் இது…’’

‘‘சௌர்ந்தர்யாவுடன் பணியாற்றிய அனுபவம்?’’ ‘‘மூத்தவர்கள் இளையவர்களோடும் இளையவர்கள் மூத்தவர்களோடும் பணியாற்ற வேண்டும். மூத்தவர்களின் அனுபவம், இளையவர்களின் துடிப்பு இரண்டும் கலக்கும்போது, கலை செழுமை அடைகிறது. சௌந்தர்யா துடிப்பான பெண். தொழில்நுட்பம் படித்தவர். 

எதையும் சரியாக முடிவு செய்யும் அறிவு கொண்டவர். ஆரம்பத்தில் ரஹ்மானையும் என்னையும் பார்த்துத் தனக்கு வேண்டியவற்றைக் கேட்டு வாங்கும் தயக்கம் அவர் கண்களில் மிதப்பதை கவனித்துவிட்டோம். ‘எங்களை நண்பர்களாக நினைத்துக் கொள். திருத்தம் இருந்தால் தைரியமாகச் சொல்’ என்று அவரிடம் இருந்த அந்நியத்தின் கட்டுமானத்தை உடைத்தெறிந்த பிறகு நாங்கள் குதூகலமாகப் பணியாற்றினோம்.’’

‘‘ரஜினியிடம் நீங்களும் உங்களிடம் ரஜினியும் வியப்பது?’’ ‘‘எல்லா மனிதர்களின் உள்முகங்களையும் எளிதாகக் கண்டுகொள்ளக்கூடியவர் ரஜினி. ஒருவரிடம் பேசிய பத்தாவது நிமிடத்தில் அவருடைய குணத்தை அடையாளம் கண்டுவிடுவார். 

எல்லாப் பெரிய மனிதர்களின் இரண்டு பக்கங்களையும் தெரிந்து வைத்திருப்பார். நல்ல விஷயங்களைக் கொண்டாடுவார்; கெட்ட விஷயங்களைத் தெரிந்து மட்டும் வைத்திருப்பார். எல்லோரிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டார், என்னைப் போன்ற மிகச்சிலரைத் தவிர! ரஜினியின் இந்த குணம் எனக்குள் இருக்கும் சில நல்ல விஷயங்களை மேம்படுத்திக்கொள்ளப் பயன்பட்டிருக்கிறது. 

என்னுடைய நேரக் கட்டுப்பாடு, ஒழுங்கு, வாழ்க்கை முறை எல்லாம் ரஜினிக்குப் பிடிக்கும். ‘தொழில், வாழ்க்கை இரண்டிலுமே சரியா இருக்கீங்களே… எப்படி?’ என்று ஒவ்வொரு முறையும் அவர் கேட்கும்போதும், புன்னகை மட்டுமே என் பதிலாக இருக்கும். காற்று வீசுவது போல, மொட்டு மலர்வது போல அதுவும் இயல்பு என்று நினைத்துக் கொள்வேன்.’’
‘‘ ‘கோச்சடையான்’ பற்றி உங்களிடம் பகிர்ந்துகொண்டாரா?’’

‘‘தொழில்நுட்ப அளவில் இது அனிமேஷன் படமே தவிர, எல்லாப் படங்களையும் போலவே அனைத்து அம்சங்களுடன் ரசித்துப் பார்க்கக்கூடிய படமாகவே இருக்கும். ‘அவதார்’ படத்தில் ரஜினியைப் பொருத்திப் பார்ப்பது போன்ற உணர்வைத் தரும். படம் பார்த்துவிட்டு ரஜினி என்னிடம் பேசினார். ‘இரண்டாம் பாதி படம் பார்த்தேன். நல்லா வந்திருக்கு. எனக்கு ரொம்பப் பிடிச்சிருக்கு. ‘பாட்ஷா’ படம் பார்த்த ஃபீலிங் இருக்கு’ என்று பரவசத்தார். இந்த பரவசம் விரைவில் ரசிகர்களையும் பற்றிக்கொள்ளும்!’’

அமலன்

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: