Skip to content

குக்கூ – சினிமா விமர்சனம் (Vikatan)

March 27, 2014
குக்கூ – சினிமா விமர்சனம்
 

இருள் என்றால் என்னவென்றே தெரியாத காதல் குருவிகளின் வாழ்க்கையில் பெருவெளிச்சம் பாய்ச்சும்… குக்கூ!

பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள் தினேஷ்-மாளவிகா நாயர் இடையிலான காதலும் அந்தக் காதல் நிமித்தமுமான சம்பவங்களே குக்கூ.

அதில் மாற்றுத்திறனாளிகளின் கொண்டாட்டத் தருணங்கள், நாட்டின் அரசியல் நடப்பை சுளீரெனச் சாடும் அரசியல் அங்கதம், ‘சர்வீஸ் மைண்ட்’களின் பொய் பூரிப்புகள், குடும்ப வாழ்வின் ‘நீக்குபோக்கு’ சாமர்த்தியங்கள், சினிமா நட்சத்திரங்களைப் பற்றிய நையாண்டிகள்… என குறுக்கும் நெடுக்குமாக பலப்பல அத்தியாயங்களைக் கோத்திருக்கும் அறிமுக இயக்குநர் ராஜுமுருகனின் அக்கறை…  வொண்டர் வொண்டர்!  

படம் தொடங்கும் புள்ளியில் திரையில் பரவிக்கிடக்கும் இருளுக்கு இடையே, ‘வெளிச்சம் எப்படி இருக்கும்னு தெரியுமா?’ ‘ஹாஹா… இருட்டு எப்படி இருக்கும்னே தெரியாதே?’ என்கிறது ஓர் உரையாடல். ‘பிங்க் கலர்னா எனக்கு என்ன தோணும் தெரியுமா? ம்ம்ம்… இந்தப் பாட்டுதான் தோணும்!’ என்று ‘இதயம் ஒரு கோயில்…’ பாடலை ஒலிக்கவிடுவது, திரையில் முதல் காட்சிக்கு முன்னரே நம்மை மாற்றுத் திறனாளிகளின் உலகத்தில் உலவவிடுகிறார்கள். அதன் பிறகு ஒவ்வொரு நிமிடமும் அந்த மின்சார ரயில் பயணம் நம்மைத் தாலாட்டி, ரயில்வே ஸ்டேஷன் பிளாட்பாரத்தின் ஐந்தாவது படிக்கட்டில் தரை இறக்குவது வரை… சுகானுபவம்!  

தினேஷ§க்கு இனி ‘குக்கூ’வே ஐ.டி. கார்டு! கருவிழிகள் இரண்டையும் வித்தியாச கோணங்களில் நிலைகுத்தி, மாற்றுத்திறனாளியின் உடல் மொழி, விழி மொழியை ‘கண் முன்’ நிகழ்த்துகிறார். ”ஏன் தி.மு.க. கொடி, அ.தி.மு.க. கொடினு பேரு வெச்சுக்க வேண்டியதுதானே?” என்று எகத்தாளம் பேசுவதும், முதன்முதலாக மாளவிகாவிடம்  சொட்டேரென அடி வாங்கித் திகைத்து நிற்பதும், அம்மாவின் முகத்தை கடைசி முறையாகப் ‘பார்ப்பதும்’… அசத்தல். க்ளைமாக்ஸ் உதறல் மட்டும் எக்ஸ்ட்ரா தூக்கல் பாஸ்!  

அறிமுக நாயகி மாளவிகா… அபாரம்!  ஒருதலைக் காதலில் அவமானத்தைச் சந்திக்கும்போது ஆற்றாமையும் கோபமுமாகத் தடுமாறுவது, ‘நீ எப்படி இருக்கேனு ஒரு தடவை பார்த்துக்கட்டுமா?’ என்று தினேஷ் அணைக்கும்போது திடுக்கென சிலிர்ப்பது… என படம் நெடுக ‘சுதந்திரக் கொடி’ பறக்கிறது.  

மாற்றுத்திறனாளி இளங்கோ, டிராமா ட்ரூப் சந்திரபாபு… இருவரும்தான் படத்தின் காமெடி ஃபில்லர் கம் பில்லர்கள்! ‘வக்கீல் படிப்பா..? அவன் கண் டாக்டருக்கே படிப்பான்!’ என்று குறும்பு கமென்ட் கொடுப்பதில், சீரியஸ் சூழ்நிலையில்கூட சிரிப்பு சிக்ஸர் விளாசுகிறார் இளங்கோ. ”எல்லா ஆம்பளைங்களும், வீட்டுக்கு வெளியேதான் புரட்சித்தலைவரு; வீட்டுக்குள்ளே நடிகர்திலகம்” என்று ‘சொம்புத் தாக்குதலை’ சமாளிக்கும் மூன்று பெண்டாட்டிக்கார சந்திரபாபு… ஆஸம் ஆஸம்!

நாடக ட்ரூப்பில் சிபாரிசு மூலம் இடம் பிடிக்கும் ‘விஜய்’, ‘அஜித்’, அந்த டம்மி ‘தல-தளபதி’களின் பெர்ஃபாமன்ஸ் எல்லாமே… காமெடி ராவடி! இருவருக்கும் தலா 35 ரூபாய் சம்பளம், ஆம்லெட் கொடுத்து ஆரத்தி எடுக்கும் ‘தல’, ‘மஞ்சுளா’வை கரெக்ட் செய்யும் ‘தல’யைப் பற்றி, ‘நான் சொல்லலை.. தல எப்பவும் ரேஸ்லயே இருக்காரு’னு என்று ‘தளபதி’ கோள் சொல்வது என… சினிமாவை வைத்தே 10,000 வாலா சிரிப்பு வெடி கொளுத்தியிருக்கிறார்கள்.    

பிச்சையெடுப்பவர்களுக்கு கவர்னர், பி.எம். என்று பெயர் வைத்திருப்பது, திருப்பதி வெங்கடாசலபதியை, ‘ஓ… தொழிலதிபரா..!’ என்று கமென்ட் அடிப்பது, தன் அருகில் நடப்பதைக் கண்டுகொள்ளாமல், எங்கோ நடக்கும் அவலத்துக்கு வாய்விட்டுப் பதைபதைக்கும் ‘அத்திம்பேர்’ பார்ட்டி, மாளவிகா சாப்பிடும்போது படம் எடுத்து, ‘இது ஃபேஸ்புக்ல நிறைய லைக்ஸ் வாங்கும்!’ என்று ‘சர்வீஸ் மைண்ட்’கள் செயற்கைத் திருப்திகொள்வது,  ‘பெரியவருக்குலாம்  இப்போ பவர் இல்லை… சின்னவருக்குத்தான் பவரு’ என்று ‘டாப்பிக்கல் அரசியல்’ பேசுவது, போலீஸ்காரரின் ‘லிமிடெட் நேர்மை’… என நிஜத்தில் நிலவும் சுயநல சூழலையும் மனங்களையும் போகிறபோக்கில் துகிலுரித்துக்கொண்டே செல்கிறது திரைக்கதை.  

திப்பித் திப்பியாக பவுடரை அப்பிக் கொண்டிருக்கும் தினேஷ் முகத்தைத் திருத்தும் திருநங்கை, பிரதிபலன் எதிர்பார்க்காமல் உதவும் நண்பன் முருகதாஸ், எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிப்பதாலேயே அவரைப் போன்றே வள்ளல் குணம்கொண்டிருக்கும் எம்.ஜி.ஆர்., இரவில் தனியாகத் தப்பி வரும் மாளவிகாவிடம் கண்ணியமாகவும், அடிபட்டுக்கிடக்கும் தினேஷிடம் மனிதநேயத்துடனும் நடந்துகொள்ளும் தமிழ்த்தாய் அச்சக நபர்… என எதிர்பாராத இதயங்களில் இருந்து பெருகும் சிநேகத்தைக் காட்சிப்படுத்தியவிதம்… கிரேட்!

மாற்றுத்திறனாளிகளின் உலகம் மெதுவாகவே நகரும்… அதை அதீத விஷ§வல் அழகியலுடன் வெளிப்படுத்த முடியாது என்ற தடைகளை, ஒளிப்பதிவாளர் பி.கே.வர்மாவுடன் அநாயசமாகக் கடந்திருக்கிறார் இயக்குநர். ‘சர்வீஸ் மைண்ட்’ பெண் தனக்கு அளித்த பழைய துணி லக்கேஜ் மீது தன் கர்ச்சீப்பை வைத்துவிட்டு மாளவிகா கிளம்புவது, ‘நான் குடும்பத்துக்காக எவ்வளவு உழைச்சிருக்கேன் தெரியுமா?’ என்று மாளவிகாவின் அண்ணன் சொல்லும்போது அண்ணி கர்ப்ப வயிறைத் தடவுவது… எனக் காட்சிகளில் அத்தனை நுணுக்கம்.  

‘ரேடியோவைக் கண்டுபிடிச்சது  மார்க்கோனி. ஆனா, அதைக் கேட்கவெச்சது நம்ம  இசைஞானி’, ‘கர்ணனும் துரியோதனனும் ஏண்டா நார்த் மெட்ராஸ்ல வந்து பொறந்தீங்க?’,  ‘தமிழ்நாட்டுல பட்டம் கொடுத்தா தலைக்கு மேல ஏறிக்குவானுங்க’, ‘எமோஷன் ஆயிடுவேண்ணா… எமோஷன் ஆயிடுவேண்ணா!’ என ஒவ்வொரு கதாபாத்திரமும் பேசும் ஒவ்வொரு வசனத்தையும் ஹைக்கூ ஆக்கியிருக்கிறது ராஜுமுருகன், பரமுவின் வரிகள்!  

இத்தனை ‘நல்லன’களுக்கு மத்தியில், பற்பல ‘பழகிய க்ளிஷே’க்களையும் அடுக்கியிருக்க வேண்டுமா ராஜு? மாற்றுத்திறனாளிகளின் காதலுக்கு வரும் வழக்கமான சிக்கல், எளிய மனிதர்கள் அத்தனை பெரிய தொகையை சடுதியில் புரட்டி தினேஷிடம் தனியாகக் கொடுத்தனுப்புவது, நீளமான க்ளைமாக்ஸ் எல்லாமே… சினிமா, சினிமா! மிக மெதுவாக நகரும் பின்பாதி, ‘சீக்கிரம் க்ளைமாக்ஸுக்கு வாங்கப்பா’ என்று ஸ்டேட்டஸ் போடச் சொல்கிறதே!  

சந்தோஷ் நாராயணனின் இசையில் ‘பொட்டப்புள்ள..’, ‘ஆகாசத்த..’, ‘மனசுல சூரக்காத்தே..’ என யுகபாரதியின் பாடல்கள் தூரத்துக் குயில் கூவலாக மனம் கரைக்கிறது. ஆனால், படத்தின் ஆன்மாவைச் சுமந்திருக்க வேண்டிய பின்னணி இசை… ப்ச்!

அறிமுக வாய்ப்பிலேயே இத்தனை கனமான பின்புலத்தை வணிகக் காரணங்களுக்காக  சமரசம் செய்துகொள்ளாமல் படமாக்கி இருக்கும் ராஜுமுருகனுக்கு நல்வரவு!

– விகடன் விமர்சனக் குழு

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: