Skip to content

மல்லுவுட்டில் த்ரில்லர் மழை!

May 8, 2014
மல்லுவுட்டில் த்ரில்லர் மழை!
பா.ஜான்ஸன்
 

கிளாசிக்கல்லில் இருந்து சற்றே தடம் மாறி மசாலா படங்களின் வாசத்தில் மயங்கிக்கிடந்த மலையாள சினிமா, தற்போது த்ரில்லர் ரூட்டில் றெக்கைக் கட்டிப் பறந்துகொண்டிருக்கிறது. அந்தப் பயணத்தின் சமீப மைல்கல் ‘செவன்த் டே’. ஷ்யாம்தர் இயக்கத்தில் பிருத்விராஜ், ஜனனி ஐயர் நடிப்பில் பாக்ஸ் ஆபீஸ் ஹிட் அடித்திருக்கிறது படம்.

மலையாள சினிமாவில் செகண்ட் கிரேடில் ஆடிக்கொண்டிருந்த பிருத்விராஜ், ‘மும்பை போலீஸ்’, ‘மெமரீஸ்’, இப்போது ‘செவன்த் டே’ என மூன்று அதிரிபுதிரி ஹிட்கள் மூலம் முன் வரிசைக்கு வந்திருக்கிறார்.

‘மும்பை போலீஸ்’ படத்தில் நினைவு தப்பிய ஹோமோ செக்ஸ் பழக்கம் உள்ள போலீஸ், ‘மெமரீஸ்’ படத்தில் குடிக்கு அடிமையான அநாதையான போலீஸ் என, காக்கி உடுப்பிலேயே வெரைட்டி காட்டியவர், இதில் இன்னும் வித்தியாசமாக ‘சால்ட் அண்ட் பெப்பர்’ லுக்கில் சட்டைக்கு மேல் ஜெர்கின், பவர் கிளாஸ் என 42 வயது போலீஸாக நடித்திருக்கிறார். ‘மும்பை போலீஸ்’ ரிலீஸாகி ஒரு வருடத் துக்குள்ளேயே பிருத்விக்கு இது மூன்றாவது த்ரில்லர் படம். கொஞ்சம் அசந்தாலும் ‘ஒரே மாதிரி பண்றாப்ல… போர் அடிக்குது’ என்று ரசிகர்கள் சலித்துக்கொள்ளும் சூழல். ஆனாலும், ‘செவன்த் டே’-வில் அசத்தியிருக்கிறார்.

கதை?

கிறிஸ்துமஸ் இரவில் பைக்கில் சென்ற இரு இளைஞர்கள் மீது, ஜீப்பை மோதிவிடுகிறார் ஐ.பி.எஸ்., அதிகாரியான பிருத்விராஜ். அவரே அவர்களை மருத்துவமனையிலும் சேர்க்கிறார். ஆனால், அங்கிருந்து ஒருவர் மட்டும் தப்பிவிட ஆரம்பமாகிறது ஏன், எதற்கு, எப்படி சஸ்பென்ஸ் முடிச்சுகள். மருத்துவமனையில் இருந்து தப்பிய வினு, மறுநாளில் இறந்தும்விடுகிறார். ஏதோ சிக்கல் என்று உணர்ந்த பிருத்விராஜ், மற்றொரு நபரான ஷானிடம் விசாரணையைத் தொடங்குகிறார். வினு, ஷான், எபி, சைக்கிள், ஜெஸ்ஸி… என ஐந்து நண்பர்களின் வாழ்க்கை ஃபிளாஷ்பேக்காக விரிகிறது.

ஒருநாள், வினு நடத்தும் பிரவுஸிங் சென்டரில் போலீஸ் நுழைந்து சோதனையிடுகிறது. ஆனால், அவர்களுக்கு அங்கே ஒன்றும் கிடைக்கவில்லை. அன்று இரவே வில்லன்களின் கூட்டம் வினுவை அடித்து உதைத்து, ‘எங்கே எங்களுடைய பணம் 1வு கோடி? 36 மணி நேரத்துக்குள் பணம் திரும்ப வரலைன்னா, உனக்குக் குடும்பமே இருக்காது!’ என்று மிரட்டிவிட்டுச் செல்கிறது. எப்படி இப்படித் திடீரென பிரச்னைகள் முளைக்கின்றன என வினு விடை தேட, பதில் சொல்கிறான் அவனது நண்பன் சைக்கிள்.

போலீஸ் சோதனைக்கு முதல் நாள் இரவு, வினுவின் பிரவுஸிங் சென்டரில் அநாதையாகக் கிடக்கும் ஒரு பையைப் பார்க்கிறான் சைக்கிள். அதில் கட்டுகட்டாகப் பணம். அந்தப் பையை வேறோர் இடத்தில் ஒளித்து வைக்கிறான். அதைத் தேடியே போலீஸும் வில்லன் கும்பலும் நண்பர்களை இம்சிக்கிறது.

வில்லன்களிடம் பணத்தைக் கொடுத்து விடலாம் என்று வினு சொல்ல, நண்பர்கள் ஐவரும் பணத்தை ஒளித்து வைத்த இடத்துக்குச் சென்று பார்க்கிறார்கள். அங்கே பணம் இல்லை. வில்லன்களுக்குப் பயந்து வினு தற்கொலை செய்துவிடுகிறான் என்பதோடு முடிகிறது ஃப்ளாஷ்பேக்.

இனி அந்தப் பணம் என்ன ஆனது, மற்ற நண்பர்கள் என்ன ஆனார்கள்? சாதாரணமாகக் கோடிகளில் புரளும் வில்லன்கள் கூட்டம் 1.75 கோடி பணத்துக்காக வெறியோடு ஏன் துரத்துகிறார்கள் என்ற சுவாரஸ்யமான முடிச்சுகளை மிக நிதானமாக அவிழ்க்கிறது மீதிக்கதை.

படத்தின் ஆகப் பெரிய பலமே அகில் பாலின் திரைக்கதைதான். ஒவ்வொருவர் மூலமாகக் கிடைக்கும் ஒவ்வொரு தகவலும், அடுத்தவர் மீது சந்தேகத்தைத் திசை திருப்புவது, படத்தின் கடைசி நிமிடம் வரை நீடிக்கும் சஸ்பென்ஸ் என செம கிரிப்பான திரைக்கதை அமைத்திருக்கிறார்.

படத்தில் பிருத்விராஜ் தவிர, ஜெஸ்ஸியாக நடித்திருக்கும் ஜனனி ஐயர், வில்லன்களின் கேங்க் லீடராக நடித்திருக்கும் யோக் ஜெப்பி (‘சூது கவ்வும்’ என்கவுன்டர் போலீஸ்) என நமக்குப் பரிச்சியமான முகங்கள் படம் முழுக்க.

வயதான போலீஸ் கெட்டப்பிலும் செம ஸ்கோர் எடுக்கிறார் பிருத்விராஜ். தன்னிடம் ‘வழியும்’ பெண்ணிடம், செல்போன் எண்ணைக் கொடுத்துவிட்டு, ‘மிஸ்டு கால் கொடுத்தால் போதும்’ எனக் கூறிக் குறும்பாகச் சிரிப்பது என சீரியஸ் படத்தில் கலர்ஃபுல், சியர்ஃபுல் சங்கதிகளும் உண்டு.

த்ரில்லர் சினிமா ரசிகர்களுக்கு செம தீனி இந்த செவன்த் டே!

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: