Skip to content

Dir AR Murugadoss Interview about Kaththi

June 26, 2014
கதிர்… ஜீவா – டபுள் ரகசியம் சொல்லும் முருகதாஸ்
ம.கா.செந்தில்குமார்
 

”தமிழனுக்கு எதிரானவர்கள் எப்பேர்ப்பட்ட ஆளா இருந்தாலும் சரி, எங்க உழைப்பில் இருந்து அஞ்சு பைசாகூட அவங்களுக்குப் போகாது. தமிழர்களுக்கு எதிரானவங்களோட எந்தக் காரணம்கொண்டும் நானும் விஜய் சாரும் கைகோக்கவே மாட்டோம். தமிழுக்கும் தமிழினத் துக்கும் யார் எதிரிகளோ… அவங்க எங்க எதிரிகள்!”

– ‘நீங்கள் இயக்கும் ‘கத்தி’ படத்தின் தயாரிப்பாளர்கள் சிங்களர்கள் என்கிறார்களே..?’ என்ற டென்ஷன் கேள்விக்கு இப்படிப் பதில் அளிக்கிறார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ். ‘துப்பாக்கி’யின் இந்தி ரீமேக் ‘ஹாலிடே’ பட வசூல் 100 கோடி களைத் தாண்டிய உற்சாகத்தை, மில்லி மீட்டர் புன்னகையில் மட்டுமே காட்டிவிட்டு, ‘கத்தி’ பிடித்தார் முருகதாஸ்.

”விஜய் சார்கூட பண்ண ‘துப்பாக்கி’ ஹிட். அதனால் அடுத்த படத்துக்கு தலைப்பு ‘கத்தி’னு போறபோக்குல தலைப்பு வைக்கலை. ‘கத்தி’க்கும் இந்தக் கதைக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கு. மனித இனம் கண்டுபிடித்த முதல் கருவி ‘கத்தி’னு சொல்வாங்க. அந்த விஷயத்தை கதையில் ஜஸ்டிஃபை பண்ணுவோம்.

படத்தில் விஜய் சாருக்கு ரெண்டு கேரக்டர்கள்… கதிரேசன், ஜீவானந்தம்! ஆனா, அப்பா-மகன் கிடையாது. இது கேங்ஸ்டர் கதையும் கிடையாது. சென்னையில் தொடங்கி சென்னையிலேயே முடியும். இதுக்கு மேல படம் பத்தி பேசினா, இன்னும் நிறையக் கதைகள் கிளப்பிடுவாங்க.

”துப்பாக்கி’க்கு அடுத்த படம் கமிட் பண்றதுக்கு முன்னாடி, கண்டிப்பா உங்ககிட்ட கதை சொல்லிடுவேன்’னு விஜய் சார்ட்ட சொன்னேன். ‘தேவை இல்லை. இப்பவே நாம கமிட் பண்ணிக்குவோம்’னு சொன்னார். ‘இல்லை சார்… என்ன படம் பண்றோம்னு உங்களுக்குத் தெரியணும்’னேன். ‘இந்த மாதிரியான படம்தான் பண்ணப்போறோம்’னு மொத்தக் கதையையும் சொல்லிட்டு வெளியே வந்தேன். அவர்கிட்ட இருந்து ஒரு மெசேஜ்… ‘சூப்பர்ண்ணா’! ‘துப்பாக்கி’க்குக்கூட அவர் அப்படிச் சொல்லலை. ஏன்னா, ‘கத்தி’ விஜய் சார் இதுவரை பண்ணாத வித்தியாசமான முயற்சி!”

”விஜய் தவிர எல்லாருமே ‘கத்தி’ டீம்ல புது ஆட்களோ?”

”மொழி தெரியாத இடத்தில்கூட நான் வேலை பார்த்திருவேன். ஆனா, மொழி தெரியாதவங்ககூட வேலை பார்க்கிறது எனக்கு சிரமம். அதனால், என் ஹீரோயின்கள் தமிழ் புரிஞ்சுக்கணும், தமிழ் சாயல் இருக்கணும்னு எதிர்பார்ப்பேன். இந்த எதிர்பார்ப்புகளுக்கு மேலயும் ‘அங்கீதா’ கேரக்டருக்கு உயிர் கொடுத்திருக்காங்க சமந்தா. சிரிச்ச முகம், எப்பவும் எனர்ஜினு ஒவ்வொரு சீன்லயும் நல்ல ஃப்ளேவர் சேர்த்திருக்காங்க. மியூசிக் அனிருத். படம் பண்றோம்னு முடிவு பண்ண நாலாவது நாள்ல, தீம் மியூசிக் போட்டுட்டார். ‘இன்னும் கதையே சொல்லலை, அதுக்குள்ள தீம் மியூசிக் எப்படி?’னு கேட்டா, ‘எப்படி இருந்தாலும் படத்துல ஹீரோவுக்குனு ஒரு தீம் இருக்கும்ல’னு சிரிக்கிறார். ஒளிப்பதிவாளர் ஜார்ஜ். நிறங்களை அவ்வளவு பிரமாதமாக் கையாள்கிறார். கலை இயக்கத்துக்கு தேசிய விருது வாங்கின இளையராஜா, ஆக்ஷனுக்கு அனல் அரசுனு பல நம்பிக்கைத் தூண்கள் இருக்காங்க படத்துல!”

”சம்பளம், மாஸ் ஹீரோ கால்ஷீட், 100 கோடி வசூல்னு தமிழ் இயக்குநர்களில் ஷங்கருக்கும் உங்களுக்கும்தான் இப்ப கடுமையான போட்டினு சொல்றாங்களே..?”

”நான் ஷங்கர் சாரின் ரசிகன். அவரோட அணுகுமுறை, கடின உழைப்பு… இதெல்லாம் சீனியர், ஜூனியர் எல்லாருக்குமே ஒரு இன்ஸ்பிரேஷன். நான் எப்பவுமே அண்ணாந்து பார்க்கும் நபர் அவர். அவரை மாதிரினு சொன்னாலே, எனக்குப் பெருமைதான். ஆனா, அவரைத் தாண்டிப் போகணும்னு நான் எதையும் பண்றது இல்லை. மத்தபடி எங்களுக்குள்ள போட்டி எதுவும் கிடையாது. அப்படி ஒண்ணு இருக்குனு நீங்க நினைச்சா, சந்தேகமே வேண்டாம்… எங்க ரெண்டு பேர்ல அவர்தான் பெரிய ஆள்!”

”உங்க முதல் பட ஹீரோ அஜித்கூட அடுத்து எப்போ படம் பண்ணப்போறீங்க?”

”நான் காத்துக்கிட்டே இருக்கேன். ‘துப்பாக்கி’ முடிஞ்சதும் மூணு தடவை அவரைச் சந்திச்சேன். ஆனா, ஏன்னு தெரியலை… புராஜெக்ட் தள்ளிப்போயிட்டே இருக்கு. ‘அடுத்த மாசம் ஷூட்டிங் போகலாம்’னு சொன்னாக்கூட, ஆரம்பம் முதல் கிளைமாக்ஸ் வரை அவருக்காக ஒரு ஸ்கிரிப்ட் என்கிட்ட இப்பவும் தயாரா இருக்கு!”

”விஜய்-அஜித் ரெண்டு பேரையும் இயக்கியிருக்கீங்க. ரெண்டு பேரையும் சேர்த்து ஒரு படம் பண்ணலாமே?”

”அது அவ்வளவு ஈஸியான புராஜெக்ட்டா இருக்காது. ஆனா, அப்படி அவங்க வந்தாங்கனா, நான் ரெடி. ‘ஓ.கே.’ சொன்ன ரெண்டு மாசத்துல என்னால கதை ரெடி பண்ண முடியும். அப்படி நடந்தா, அது தமிழ் சினிமாவுல ரொம்பப் பெரிய விஷயமா இருக்கும்!”

”சமீபத்தில் பார்த்த தமிழ் சினிமாக்களில் பிடிச்ச படங்கள்?”

”நான் பார்த்ததே கொஞ்சம் படங்கள்தான். அதில் பிடிச்ச ரெண்டு படங்கள்… ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’, ‘பண்ணையாரும் பத்மினி’யும். அம்மா, அப்பா, தங்கை, குழந்தைனு ஏகப்பட்ட சென்டிமென்ட் படங்கள் பார்த்திருப்போம். ஆனா, ஒரு காரை கேரக்டரா வெச்சு சினிமா பண்ணலாம்னு ஒரு டைரக்டருக்குத் தைரியம் வந்ததே பெரிய ஆச்சர்யம். அதை ‘பண்ணையாரும் பத்மினி’யும் படத்துல அழகா பிரசன்ட் பண்ணியிருந்தாங்க. வேற எந்த மொழியிலும் எந்த இயக்குநரும் நினைச்சே பார்க்க முடியாத கான்செப்ட் ‘ஓநாயும் ஆட்டுக்குட்டியும்’. இந்த வருஷத்துல நான் பார்த்த பெஸ்ட் படம் அதுதான். ஆனா, தமிழ் ரசிகர்கள் அந்தப் படத்துக்குச் சரியான மரியாதை தரலைங்கிற ஆதங்கம் எனக்கும் இருக்கு!”

”நிறைய புது ஹீரோக்கள் வந்துட்டாங்க. ‘இவங்களோட சேர்ந்து பண்ணலாம்’னு உங்களுக்குத் தோணும் ஹீரோ யார்?”

”தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி. இவங்களால இன்னும் நிறைய வெரைட்டி பண்ண முடியும்னு தோணுது. அதிலும் விஜய் சேதுபதியின் டயலாக் டெலிவரி, சினிமா பார்த்துட்டு இருக்கோம்கிற நினைப்பே கொடுக்காம, யாரோ ஒருத்தரோட பெர்சனலாப் பேசிட்டு இருக்கிற மாதிரி நினைக்கவைக்குது. எதிர்காலத்துல இவங்களை வைச்சு நிச்சயம் படங்கள் பண்ணுவேன்!”

” ‘கத்தி’ படத்தைத் தயாரிக்கும் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் ஒரு சிங்கள நிறுவனம்னு எதிர்ப்பு கிளம்பியதே… எது உண்மை?”

”அது உண்மை இல்லை. நாங்க முதல்ல ஐங்கரன் நிறுவனத்தோட ஒப்பந்தம் போட்டோம். அவங்கதான் லைகா புரொடக்ஷன்ஸோட டை-அப் பண்ணிக்கிட்டாங்க. ‘ஏதோ இலங்கையைச் சேர்ந்தவங்க’னு சொல்றாங்களேனு விசாரிச்சா, அவங்க ஈழத் தமிழர்கள்னு தெரியவந்தது. மத்ததெல்லாம் பரபரப்புக்காகக் கிளப்பிவிடப்பட்ட வதந்திகள்!”

”இந்திய அளவில் பிரபலமான உங்களைப் போன்ற இயக்குநர்கள் ஏன் ஈழத் தமிழர்களின் வலிகுறித்து ஒரு சினிமா இயக்கக் கூடாது?”

”ஈழத் தமிழர்களின் உண்மையான எதிரிகள் யார், அங்கே இறுதிக் கட்டப் போர்ல என்ன நடந்துச்சுனு கடந்த ஆட்சியில் சொல்ல முடியாத சூழல். ஆனா, இப்ப அதைப் பத்தி பேசக்கூடிய சுதந்திரம் இருக்குனு நினைக்கிறேன். ஈழத் தமிழர்களின் வலியை உண்மையும் நேர்மையுமா உலகத்துக்குப் புரியவைக்கணும்னு எனக்கும் ஆசை.

சினிமாவுல நடிக்க வெளிநாட்டுல இருந்து ஒரு ஃபைட்டரை வரவழைக்கிறோம். அவரைப் பத்திரமா ஊருக்குத் திருப்பி அனுப்புற வரை அவ்வளவு பயம், பதற்றமா இருக்கும். அவர் டிராஃபிக்ல சிக்கிட்டு தாமதமாச்சுனாகூட, ‘என்னாச்சு?’னு தூதரகங்கள்ல இருந்து கேள்வி, விசாரணைனு பிரிச்சு மேய்ஞ்சிருவாங்க.

ஆனா, நம்ம மீனவர்களை சிங்கள ராணுவம் சுட்டே கொன்னாலும் ‘வழக்கமான செய்தி’னு கடந்து போயிடுறாங்க. இதே இந்தியாவில் கேரள மீனவர்களை வேற நாட்டு ராணுவம் சுட்டப்ப, அவங்களைக் கைது பண்ணாங்களா, இல்லையா? அந்த மாதிரி ஒரு சிங்கள ராணுவ வீரராவது இதுவரை கைதுசெய்யப்பட்டு இருக்கிறாரா? இது பத்தியெல்லாம் தமிழ் சூழல் புரிந்த இயக்குநர்கள் படமெடுத்து, நம்ம நிலைமையை உலகத்துக்கு எடுத்துச் சொல்லணும். என் பங்குக்கு என்ன பண்ண முடியுமோ, நிச்சயம் நானும் அதை செய்வேன்!”

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: