Skip to content

ஆல் நியூ அஜித்!

September 1, 2014

இளமை லுக்…நான்கு கெட்டப்…
சீக்ரெட்ஸ் சொல்லும் கௌதம் மேனன்

ரொம்பத் தெளிவுதான் கௌதம் மேனன். அஜித் காட்சிகள் எடுக்காத நேரம் பார்த்து, ‘‘ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்துடுங்களேன்… பேசலாம்’’ என்றழைக்கிறார். ‘தல’ படத்தின் தலைப்பு என்னவாயிருக்கும் என ரசிகர்கள் பரபரக்க, ஓ.எம்.ஆரில் பரபரக்கிறது ஷூட்டிங். பிரேக்கில் இயக்குனருடன் அமர்கிறோம். படபடப்பு காட்டாத கௌதமின் பேச்சு, அறையின் ஏ.சியைக் காட்டிலும் கூல்!

‘‘முதல் முறையா ‘தல’ கூட்டணி… எப்படியிருக்கு?’’

‘‘ ‘காக்க காக்க’ படத்திலேயே அஜித்தும் நானும் சேர வேண்டியது. சில காரணங்களால் நடக்கல. ‘அசல்’, ‘மங்காத்தா’ படங்களின்போதும் எனக்குத்தான் தேதி கொடுத்திருந்தார். சூழ்நிலை சூறாவளி, அப்பவும் எங்களை சேர விடல. எது எப்போ நடக்கணுமோ அது அப்போதான் நடக்கும். இதோ இந்த முறை தலயுடன் கைகோர்த்துட்டேன்.

என் படத்தோட டைட்டிலை அறிவிப்பதில் இந்த தடவை கொஞ்சம் லேட். மொத்தம் மூணு தலைப்பைப் பதிவு செஞ்சிருக்கோம். அதில் எதை வைக்கிறது என நான், அஜித், தயாரிப்பாளர் எல்லாரும் கலந்து பேசிக்கிட்டு இருக்கோம். ரசிகர்கள் கொண்டாடுற மாதிரியான தலைப்பை விரைவில் வெளியிடுவோம். அது வரைக்கும் வெயிட் ப்ளீஸ்!’’

‘‘படத்தோட ஸ்டில்ஸ் அஜித்துக்கு போலீஸ் ஆபீஸர் வேடம் என்கிறதே..?’’

‘‘படம் ரிலீஸ் ஆகும் வரை அது சஸ்பென்ஸ். படம் ஆரம்பிச்சு 45 நிமிடங்கள் வரை அஜித் கேரக்டர், அவருடைய பின்னணி, என்ன வேலையில் இருக்கார்… இப்படி பல கேள்விகள் புதிராவேதான் இருக்கும். இது ஒரு கேரக்டர் பற்றிய படம். அதுதான் அஜித். அவரைப் புதிய கோணத்தில் காட்ட முயற்சி எடுத்திருக்கேன்.

அதை விரிவா சொன்னால், கதையோட மொத்த உருவமும் தெரிஞ்சிடும். இந்த கேரக்டர் வரவேற்பைப் பெற்றால், தொடர்ந்து அந்த கேரக்டரை அடிப்படையா வச்சி படம் பண்ணுவேன். அதை அஜித் சாரே பண்ணலாம். நான் இந்தப் படத்தில் கமிட் ஆனதுமே, ‘உங்க படத்துக்குள்ளே நான் இருக்கணும். ‘நான்தான்’ என்கிற மாதிரி படமே பண்ணக் கூடாது’ எனத் தெளிவாச் சொல்லிட்டார் அஜித்.

ஷூட்டிங் தொடங்கின முதல் நாளே எல்லாரிடமும் இருபது நிமிஷம் பந்தா இல்லாம பேசி, நட்பான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுத்தார். ஒரு சூப்பர் ஸ்டாருடன் வொர்க் பண்றோம் என்ற பயமோ தயக்கமோ இல்லாமல், மொத்த யூனிட்டுமே அவங்களோட வேலையில் இயல்பா இருக்குற மாதிரி மரியாதை கலந்த நட்புடன் வேலை நடந்துக்கிட்டு இருக்கு!’’
‘‘பன்ச் டயலாக் போன்ற பில்டப்புகளுக்கெல்லாம் ஸ்டாப் போர்டு காட்டிட்டார் அஜித். படத்தில் வேறென்ன ஸ்பெஷலா இருக்கு?’’

‘‘அஜித் இதுவரை நடிச்ச படங்களோடு ஒப்பிட்டால் அவருடைய லுக் ரொம்பப் புதுசா இருக்கும். பெரிய ஹீரோக்களின் படங்களில் ஆடியன்ஸ் எப்போதுமே புது தோற்றத்தை எதிர்பார்ப்பாங்க. அது பிடிச்சிருந்தா குட் ஃபீலுடன் படம் பார்ப்பாங்க. அதுக்காக நிறைய நேரம் எடுத்துக்கிட்டோம்.

28 வயசிலிருந்து 35 வயசு வரைக்குமான நாலு வேற வேற தோற்றங்களில் அஜித் வர்றார். ரொம்ப மேக்கப்பெல்லாம் இல்லாமல், வயதின் அடுத்தடுத்த பருவங்களுக்கு ஏற்ற மாதிரியான சின்னச் சின்ன மாற்றங்களை மட்டும் செய்திருக்கோம். ‘இப்படிப் பண்ணலாம்… அப்படிச் செய்யலாம்’ என்று அஜித்தும் ஆர்வமா மெனக்கெட்டிருக்கிறார்.’’

‘‘அனுஷ்கா ஹீரோயின், த்ரிஷா வில்லியா?’’

‘‘சேச்சே! அவரும் ஹீரோயின்தான். அனுஷ்கா, த்ரிஷா ரெண்டு பேருக்குமே படத்தில் முக்கியத்துவம் இருக்கு. அனுஷ்கா சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலை செய்யும் 28 வயது மாடர்ன் பெண்ணா வர்றாங்க. அனுஷ்காவுக்கும் அஜித்துக்கும் சில சீன்ஸ் இருக்கு. அது கதைக்கு நெருக்கமா இருக்கும்.

த்ரிஷாவுக்குக்கூட படத்தில் லவ் இருக்கு. ஆனால், அஜித் யாரை லவ் பண்றார் என்பதெல்லாம் இப்போதைக்கு சொல்ல முடியாது. த்ரிஷாவுக்கு இதுவரை பண்ணாத பியூட்டிஃபுல் கேரக்டர். அனுஷ்கா இல்லைன்னா இந்தக் கதையே நகராது… த்ரிஷா இல்லைன்னா இந்தப் படமே இல்லை!’’‘‘ஹாரிஸ் ஜெயராஜுடன் மறுபடியும் சேர்ந்துட்டிங்களே?’’

‘‘ஐந்து வருடங்கள் கழிச்சி இணைஞ்சிருக்கோம். இருவரும் சேர்ந்து வொர்க் பண்ணலையே தவிர, ஒருத்தருக்கொருத்தர் பேசிக்கிட்டுத்தான் இருந்தோம். ஏன்னா, நாங்க ஃபிரண்ட்ஸ். ஒருபோதும் பிரிய முடியாது.

படத்தில் ஆறு பாடல்கள் இருக்கு. ரெண்டு பாடல்களை ஷூட் பண்ணிட்டோம். ‘மழை வரப்போகுது துளிகளும் தூவுது நனையாமல் என்ன செய்வேன்..’ என்ற தாமரையின் பாடல் அஜித் பாயின்ட் ஆஃப் வியூவில் அழகா வந்திருக்கு.’’‘‘ஆக்ஷனில் தல ரிஸ்க் எடுத்திருக்கிறாரா?’’

‘‘அழகான காதல், விறுவிறுப்பு கூட்டும் ஆக்ஷன், பைக், கார் துரத்தல்… எல்லாம் கலந்த எமோஷனல் படமா இது இருக்கும். 120 அடி உயரம் உள்ள ஒரு கட்டிடத்தின் மேலிருந்து கீழே இறங்கி வரும் காட்சியில், டூப்பே இல்லாமல் ‘நானே பண்றேன்’ என்று நடித்தார் தல. நீங்க கேட்டதால் இதைச் சொல்றேனே தவிர, பில்டப்புக்காக சொல்லலை.

அது அஜித்துக்கும் பிடிக்காது. ஒரு டயலாக் தூக்கலா தெரிந்தாலும் ‘இது தேவையா… ஓவரா இருக்காதா?’ன்னு நிறுத்தி நிதானமா கேள்வி கேட்கிறார். சூழ்நிலைக்கு பொருத்தமா இருக்கும்னு சரியான விளக்கம் கொடுத்தா மட்டுமே சம்மதிக்கிறார். கதையைத் தாண்டி செயற்கையா எதையும் சேர்க்கணும்னு நானும் நினைக்கல; அவரும் விரும்பல!’’

‘‘சூர்யா படம் டிராப் ஆனதால்தான் அஜித் உங்களுக்குக் கை கொடுத்ததாகவும், இதனால் சிம்பு படத்தைக் கைவிட்டதாகவும் செய்திகள் உலவியதே..?’’

‘‘அப்படிச் சொல்ல முடியாது. நான் சொன்ன கதை சூர்யாவுக்குப் பிடிக்காததால்தான் அந்தப் படம் டிராப் ஆனது. என் படத்தில் நடிக்கவில்லை என்று சூர்யா அறிக்கை விட்ட அன்றைக்கே சிம்புவை போனில் கூப்பிட்டு கதை சொன்னேன். ‘நாளைக்கே ஷூட்டிங் போகலாம்’னு அவர் ரெடியாகிட்டார். ஒரு வாரம் ஷூட்டிங் போன பிறகு, அஜித் சார் கூப்பிட்டு, ‘ரொம்ப நாளா நாம் பேசிக்கிட்டு இருக்கோம். ரத்னம் சாருக்கு நான் டேட் கொடுத்திருக்கேன்.

நீங்க ஃப்ரீயா இருந்தா, படம் பண்ணலாமா’ன்னு கேட்டார். அந்த நேரத்தில் அஜித் என்னிடம் அப்படிக் கேட்டது… என் தோளில் தட்டிக் கொடுத்தது மாதிரி இருந்தது. அப்போ அவர்கிட்ட, ‘சிம்பு படம் இருக்கே’ன்னு சொன்னேன். ‘ரெண்டையுமே பண்ணுங்க’ன்னு சொன்னார். ‘அஜித் படத்தை முடிச்சிட்டு வந்திடுறேன்’னு சிம்புகிட்ட சொல்லிட்டுத்தான் இந்தப் படத்துக்குள்ள வந்தேன். அது டிராப் ஆகலை.

ஏ.ஆர்.ரஹ்மான் எல்லா பாட்டையும் போட்டுக் கொடுத்திருக்கார். இன்னும் 30 நாட்கள் ஷூட்டிங் போனால் போதும். இதுவரை 8 கோடி ரூபாய் செலவாகியிருக்கு. அதை நான் கைவிட்டால் ஒண்ணு நான் பணக்காரனா இருக்கணும்; இல்லைன்னா சினிமா பற்றி கவலைப்படாதவனா இருக்கணும். நான் இந்த ரெண்டுமே இல்லை!’’

-அமலன்

From → Uncategorized

Leave a Comment

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s

%d bloggers like this: