என்னை அறிந்தால்
அதிரடி போலீஸ் அதிகாரி அஜித்தின் வாழ்க்கையிலே எதிரிகள் புகுந்து அதகளம் செய்ய, பதிலுக்கு அஜித் புகுந்து ரணகளம் செய்வதே ‘என்னை அறிந்தால்’. இந்தத் தடவை கௌதம் துணையோடு இந்த வேட்டை.
நேர்மையும், தூய்மையும் கொண்ட அதிரடி அஜித்திற்கு இடையில் நேர்கிறது இடையூறு. அவருக்கு காதல் துணையாகப் போகும் த்ரிஷா, எதிரிகளின் பழிவாங்கலுக்குப் பணயமாக… அஜித்தின் துணிச்சலுக்கு கேள்விக்குறி இடுகிறார் எதிரி அருண் விஜய். விடுக்கப்பட்ட சவால்களை அஜித் முறியடிப்பதுதான் மொத்தக் கதையே.
போலீஸ் அதிகாரி வேடத்திற்கு கச்சித உடம்பில் பொருந்தாவிட்டாலும், கம்பீரத்தில், தோற்றத்தில், நடையில் சத்யதேவாக நெஞ்சை அள்ளுகிறார் அஜித். முறைத்து விறைத்துக் கொண்டு தான் நிற்கும் சினிமா போலீஸ் என நினைத்தால், ஆச்சரியம் காட்டி மாற்றுகிறார் டைரக்டர் கௌதம்.
ஒரு தகப்பனாக, அருமையான காதலனாக, எதுவும் செய்ய முடியாமல் கதறி நிற்பவராக, இரக்கம் கொண்ட போலீஸ் அதிகாரியாக என மனிதநேயத்தில் பல வண்ணம் காட்டுகிறார் அஜித். கௌதம் மேனனின் துணையின்றி அஜித் இத்தனை இயல்பு காட்டியிருப்பாரா என்பது சந்தேகமே.
அப்படியிருந்தும் ஆக்ஷனில் அஜித் வரும்போது அலறுகிறது தியேட்டர். கதையின் தேவைகளுக்காக தன் ஹீரோயிசத்தைக் குறைத்துக்கொண்ட அழகிற்கே அஜித்திற்கு ஒரு பொக்கே! ‘‘நீங்க இப்படி அழகாகிட்டே போனா, நாங்க என்ன பண்றது?’’ எனப் படத்தில் த்ரிஷா கேட்டிருக்கா விட்டால் நாமே கேட்டிருக்கலாம். பேசும் அத்தனையும் ‘பன்ச்’சாக அடித்து நொறுக்கும் அஜித் இதில் காணாமல் போனது பரவசம்.
நடன ஸ்கூல் நடத்துகிற த்ரிஷா அத்தனை பாந்தம். கண்களிலே காதல் கொட்டும் கனிவு அழகு. குறைந்த பேச்சில், பாவனைகளில் பயணம் செய்யும் த்ரிஷா இன்னும் பளிச்! அனுஷ்கா பெரிய கண்களில் அஜித்தைப் பார்த்து முதல் பார்வையிலேயே மனசைப் பறிகொடுக்கிறார்.
கண்டதும் காதல் க்ளிஷேயெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு பாஸ்?அருண்விஜய்… ஆச்சரியம்! கண்ணில் விழுகிற முடியோடு, வெறி மின்னும் கண்களோடு அதிரடியில் கலங்கடிக்கிறார். கடைசி இருபது நிமிடக் காட்சிகளில் அஜித்திற்கு இணையாக நின்று விளையாடுவது சூப்பர். குழந்தை அனிகா, அஜித்திற்கு பொருத்தமான மகள்.
பாடல்களில் காதல் ததும்பினாலும் காட்சிகளில் வேறு வண்ணம் காட்டுவது புதுமை. இறுதிக்காட்சிகளில் ரகளையான வேகத்தில் வெறியாட்டத்தில் புகுந்து புறப்படுகிற சண்டைக் காட்சிகளுக்காக ஸ்டன்ட் மாஸ்டர் சில்வாவுக்கு சபாஷ்!டேன் மொகார்தர் கேமரா. சமயங்களில் கேமராவும் சண்டையில் இறங்கிவிட்டதோ என்ற அளவுக்கு பரபரப்பு… துறுதுறுப்பு! பின்னணி இசையில் ஹாரிஸ் பின்னுகிறார். பாடல்களில் கொஞ்சமாய் மட்டுமே ஈர்ப்பு. கௌதம், ஹாரிஸ், தாமரை கூட்டணி மீண்டும் சேர்ந்ததற்கு எவ்வளவோ எதிர்பார்த்தோம்… இவ்வளவுதானா?
விவேக்கை வீணடித்திருக்கிறார்கள். கொஞ்சமே வந்தாலும் நாசர் நச்! இவ்வளவு வகைதொகை இல்லாத ஆக்ஷன் கொஞ்சம் அலுப்பூட்டவே செய்கிறது. படத்தின் மெயின் ட்ராக்கான உடல் உறுப்புகளுக்காக ஆளைக் கொல்லும் ‘ரெட் மார்க்கெட்’ புதுசு. ஆனால் இதையே வடிவேலு ‘கிட்னி காமெடி’யாக செய்துவிட்டது நினைவுக்கு வருகிறது. அருண்விஜய்யின் இவ்வளவு வஞ்சினத்திற்கு காரணம் என்னவோ? ஆத்திரம்தான்… அதற்காக இவ்வளவு கெட்ட வார்த்தைகளையா கொட்டுவது?‘தல’ படம்தான்… கௌதம் மேனன் ‘டச்!’