அப்பா ரஜினிதான் என் குழந்தைகளைப் பார்த்துக்கறாங்க!
ஐஸ்வர்யா தனுஷ்
‘3’ படத்திற்குப் பிறகு இயக்குநரா என் அடுத்த முயற்சிக்கு கொஞ்ச காலம் தேவைப்பட்டது. ஏன்னா முதல் படம் என்பது ஒரு வேகம்… மனசில் ரொம்ப நாள் இருந்த தாகம். எனக்கு பெரும் அங்கீகாரத்தை தந்த விதத்தில் ‘3’ என் செல்லக்குழந்தை. இனி அடுத்தது என யோசிக்கும்போது வந்ததுதான் இந்த ‘வை ராஜா வை’. எல்லா மட்டத்திலும் புழக்கத்தில் இருக்கிற வார்த்தை…
என் கதைக்கு ரொம்பப் பொருத்தமா இருந்தது. ஒரு சுவாரசியமான சினிமாவிற்கான எல்லா தகுதியும் இந்தப் படத்தில் இருக்கு. இப்ப என்கிட்ட இருந்த பொறுப்பை நிறைவா செய்திருக்கேன். அது ஒரு மாஸ் சினிமாவுக்கான பொறுப்பு!’’ – நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ்.
‘‘திடீரென ‘3’லிருந்து மாறுபட்டு இறங்கிவிட்டீர்களே..?’’‘‘காதல் கதையை மறுபடியும் செய்ய முடியாது என்பதல்ல. கொஞ்சம் யோசித்தால் போதும்… பெரிதாக சிரமம் எடுத்துக்கக் கூட தேவையில்லை. ஆனால், ஒரு டைரக்டராக… வேறு வேறு உலகத்தை… அனுபவங்களைத் தரவேண்டியது என் கடமை. எனக்கு ‘வை ராஜா வை’ ஒரு ஐடியா மாதிரிதான் கைவசம் இருந்தது. என் சிநேகிதி அர்ச்சனா கல்பாத்தியை ஒரு காபி ஹவுசில் சந்திக்கும்போது, பேச்சோடு பேச்சாக இதையும் பேச வேண்டி வந்தது.
அதை அவங்க அப்பாவிடம் சொன்னதும், அவர் ‘ஆபீஸுக்கு வரச்சொல்லு… கேட்கலாம்’ என ஆரம்பிக்க, சடசடவென எல்லாமே நிகழ்ந்தது. எனக்குத் தெரிந்த தமிழ் சினிமா இதுவரை பார்க்காத ஒரு கதைக் கருவை தரணும்னு ஆசை. எவ்வளவுதான் யோசித்தாலும், இப்படி ஒரு தினுசில் படம் வரலை. எனக்கு சைக்காலஜி விஷயங்களில் கொஞ்சம் ஆர்வம் உணடு. அது இதிலேயும் வருது.
கௌதம் கார்த்திக்கிற்கு இருக்கிற சில பவர்… ஒரு தப்பு செய்ய வேண்டிய நிலைமையில் அவர் சிக்கிக் கொள்வது… அதில் எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதை. கதையின் தன்மையைப் பொறுத்து அதை வெளியில் சொல்லவும் இயலாது. சூதாட்டமும் இருக்கு… சில விஷயங்களை எடுத்துக்கொண்டு, புரியும்படியும் செய்திருக்கிறோம். காமெடி, லவ் இருக்கு. இது தவிர, முக்கியமாக கதை இருக்கு!’’‘‘இவ்வளவு பெரிய கதையில் புது கௌதம் கார்த்திக்..?’’
‘‘பொருத்தமாக இருந்தார். கதை உருவாகி முழு வடிவத்திற்கு வந்ததும் முதலும் கடைசியுமாய் பொருந்தியது கௌதம்தான். முதல் படத்திலேயே மணிரத்னம் மாதிரியான பெரிய டைரக்டரின் பிரஷரை தாங்கின தைரியம் எனக்குப் பிடிச்சது. அப்ப சில படங்களில் நடித்துக்கொண்டு இருந்தார். அவரை கம்ப்ளீட் மேக் ஓவர் பண்ண நினைத்தபோது ரொம்ப ஒத்துழைப்பு கொடுத்தார்.
படப்பிடிப்புக்கு வந்தா அவ்வளவு கவனம், முடிஞ்சிட்டா ரகளைன்னு அருமையான மனிதர். இரண்டு வருஷமாக எடுத்ததில் படம் முடியும்போது எல்லோரும் இரண்டு பிறந்த நாட்களைக் கொண்டாடி இருந்தோம். இன்னும் குடும்பம் மாதிரி நெருங்கியிருந்தோம்!’’
‘‘இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக, ஸ்டார் நடிகருக்கு மனைவியாக இருந்துகொண்டு சினிமா செய்வது கஷ்டம் இல்லையா?’’‘‘வீட்டுக்குப் போயிட்டால் என் செல்போன் அவுட் ஆஃப் ரீச் ஆகிடும். வீட்டுக்கு வெளியே வந்ததும்தான் பேச முடியும். என் யூனிட்ல அத்தனை பேருக்கும் என் குடும்பப் பொறுப்புகள் புரியும். ஷூட்டிங், வேலை, டைரக்டரின் பங்கு…
இதெல்லாம் தனுஷுக்கு நல்லாவே தெரியும். முதல் படத்தில் அவர் என் கூடவே இருந்தது பெரிய தைரியம். என் மாமனார், மாமியார் ஒரு வார்த்தை சொன்னாலும் முகம் சுருங்கிப் போகும். ஆனால், என் படம் நல்லா வரணும்னு எதிர்பார்க்கிற, ஆசீர்வதிக்கிற மனசு அவங்களோடது. அம்மா, அப்பாகிட்டே குழந்தைகளை விட்டுட்டு போயிடுவேன். எங்களை விட அவங்க குழந்தைகளை பார்த்துக்கிறதுதான் சிறப்பு!’’
‘‘கௌதம், ப்ரியா ஆனந்த் காம்பினேஷன் அள்ளுதே?’’
‘‘அது ப்ரியாவோட சின்சியர் எஃபெக்ட். கொடுத்த டயலாக்கையும், பாடல்களையும் எடுத்துப்போய் படிச்சு மனசில் ஏத்திக்கிற அளவுக்கு அக்கறை. கௌதமுக்கு முன்னால் படத்திற்கு ஒப்பந்தமானது அவங்கதான். அவங்க இருக்கிற இடத்தில் உற்சாகம் குடியிருக்கும். இப்ப தமிழ் தெரிஞ்ச ஹீரோயின்கள் எங்கே இருக்காங்க?
ப்ரியா ஆனந்த் மாதிரியானவங்க நமக்கு கிடைச்சது பெரிய ஆறுதல். ஒரு படத்தில் தன்னோட ரோலை புரிஞ்சுக்கவும், ஒத்துழைப்பு தரவும் அவங்க தயங்குவதில்லை. நம்ம ஊர் பாணியில் சொன்னால், நான் பெண் இயக்குநரா இருந்தாலும் என் கதையில் நடிக்கத் தயாராக இருந்த கௌதமிற்கு நன்றி சொல்லணும். அவருக்கான நல்ல இடங்கள் நிறைய இருக்கு. ஒரு குழந்தை மாதிரி அவர் பழகின விதம் மறந்து போகாது!’’
‘‘டாப்ஸியும் இருக்கார்…’’
‘‘மிகவும் முக்கியமான ரோலில் இருக்கார். அவரைத்தான் ‘காஞ்சனா’வில் பார்த்தீங்களே. எப்படி பயமுறுத்தியிருந்தார்? அப்புறம் டேனியல் பாலாஜி. அவருக்கு வந்த ரோல்கள் பிடிக்காமல் கொஞ்ச நாள் நடிப்பை நிறுத்தியிருந்தார்.
இதில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். அவரது அனுபவம் பேசுகிறது. டைரக்டர் வஸந்த் சாரை மறக்க முடியாது. அவர்தான் கௌதமின் அப்பாவாக வருகிறார். தவிர்க்க முடியாதபடிக்கு அவரது போர்ஷனை கொஞ்சம் குறைக்க வேண்டி வந்தது. ஆனாலும், கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை. அதே மாதிரி விவேக் சார். ‘பாபா’ காரணமோ என்னவோ… அவர் எங்களுக்கு பெரும் உதவியாக இருந்தார்!’’
‘‘அனிருத் இல்லாமல் யுவன் ஏன்?’’‘‘ ‘3’ பாடல்கள் பெரும் புகழ் பெற்றது. அதை இதிலும் எதிர்பார்ப்பார்கள். இருக்கிற பிரஷரோடு இதையும் தாங்க முடியாது. தவிர, யுவனோடு சிறு வயதிலிருந்தே அறிமுகம். நான் என் படத்திற்கு இசையமைக்க கேட்டதும் பேமன்ட், கதை என எதையும் கேட்கவில்லை. உடனே சம்மதம் சொன்னார்.
இளையராஜா என் அப்பா மாதிரியானவர். அவர் ஒரு பாடலைப் பாடியும் கொடுத்தார். எங்களுக்கு யுவன் கொடுத்த பாடல்கள் நேர்த்தியானவை. நான் கேட்டதும் தனுஷ் அவருடைய வேலைகளையும் மீறி ஒரு சிறிய ரோலில் நடித்துக் கொடுத்தார். யாரும் எதிர்பார்க்காத ரோல் அது. எல்லா விதங்களிலும் ‘வை ராஜா வை’ நிறைவோடு இருப்பதுதான் எனக்கு மகிழ்ச்சி!’’
– நா.கதிர்வேலன்
.