Skip to content

என்னை அறிந்தால்…

தொடர்வெற்றி கண்டுவரும் அஜித்தின் தோள்களில் தொங்கிக்கொண்டிருக்கும் இன்னொரு வெற்றி இந்தப்படம். இயக்குனரின் முந்தைய காக்கிப்படங்களின் காப்பி இதிலும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்று பேசப்பட்டாலும், ‘இருந்தாலும் என்னவோ இருக்குதுப்பா’ என்று அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஆறுதலடைய வைத்து, ‘தல’யுடைய ரசிகர்களின் அன்புக்குப் பாத்திரமாகியிருக்கிறார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.

புறத்தோற்றம் குறித்த கோட்டுக்குள் சிக்காமல், இயல்பாக வலம் வந்து, ரசிகர் மனதில் இடம்பிடிக்கிறார் அஜித். அவர் ஏற்றிருக்கும் சத்யதேவ் கதாபாத்திரம், சினிமா உள்ளவரை சிலாகித்துப் பேசப்படும்.

ஒலியடக்கப்பட்டாலும், உதட்டசைவால் புரிந்துகொள்ளக்கூடிய கெட்டவார்த்தையை அவர் பேசும்போது, தியேட்டரில் விசில் ஒலிக்கிறது; கைதட்டல் காதைப் பிளக்கிறது. ஒரு குழந்தைக்குத் தாயாக இருந்துகொண்டு, காதலில் விழும் தடுமாற்றக் கதாபாத்திரத்தில் தடம் மாறாமல் நடித்து, கண்ணியம் சேர்க்கிறார் திரிஷா.அஜித் மீது காதல் வயப்படும் அனுஷ்காவின் நடிப்பை நிச்சயம் ரசிகர்கள் காதலிப்பார்கள்.

விக்டர் என்கிற எதிர் நாயகன் கதாபாத்திரத்தில், தனக்கான புதிய இடத்துக்கு பட்டா போட்டிருக்கிறார் அருண் விஜய். குறைந்த அளவே வாய்ப்பு இருந்தாலும், புதிய தோற்றத்தில் நிறைவான காமெடி வழங்குகிறார் விவேக். அனிகா சுரேந்திரன், பார்வதி நாயர் ஆகியோரின் பங்களிப்பு, கதையின் போக்குக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது.பாசத் தந்தையாக மனசுக்குள் நிற்கிறார் நாசர்.

சுமன், ஆசிஷ் வித்யார்த்தியின் நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது.ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் விக்னேஷ் சிவனின் ‘அதாரு…’ பாடல் அமர்க்கள ரகம். தாமரையின் ‘மழை வருதே…’ பாடல் மனதை நனைக்கிறது.ஒளிப்பதிவு செய்திருக்கும் டேன் மெக்கார்த்தர் கவனிக்கத்தக்க கேமராக்காரர். ஸ்டண்ட் சில்வாவின் ஆக்ஷன் காட்சிகள் அதிரடி.எத்தனை முறை எடுத்தாலும் காக்கிச்சட்டையைக் கம்பீரமாகக் காட்டுவேன் என்று உறுதிகூறுகிறார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். – See more at: http://www.kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=4951&id1=45&issue=20150216#sthash.FcIVLNyo.dpuf

என்னை அறிந்தால் – சினிமா விமர்சனம்

மெல்லிசா ஒரு கோட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கும் வில்லன்களை அழிப்பதே… ‘என்னை அறிந்தால்’!
கௌதம் வாசுதேவ் மேனன் ஸ்பெஷல் போலீஸ் கதைகளின் இன்னும் ஓர் அத்தியாயம். ஆனால் ஆச்சர்யமான அஜித் படம்!
கதையை அனுஷ்காவில் ஆரம்பித்து அஜித் – அருண் விஜய் நட்புக்குத் தாவி, மாஃபியா – போலீஸ் சேஸ் அடித்து, த்ரிஷா காதல், ஆசிஷ் பகை, உறுப்புக் கடத்தல்… எனப் பல சுற்றுகளுக்குப் பிறகு க்ளைமாக்ஸ். ‘அதான் அஜித் இருக்காரே… எல்லாம் அவர் பார்த்துப்பார்’ என ஆர்ப்பாட்ட ஆக்ஷன்களை அடுக்காமல், ஒரு போலீஸ் ஆபீஸர், முதிர்ச்சியான காதல், காதலின் இழப்பு தரும் தடுமாற்றம்… என அஜித்தை வேறு ட்ரீட்மென்ட்டில் காட்டியிருக்கிறது கௌதம் மேஜிக்!

படத்தில் அஜித்துக்கு கோட் இல்லை; ஆனால், கோடு இருக்கிறது. மெல்லிசான கோட்டுக்கு அந்தப் பக்கம் முரட்டுப் போலீஸாகவும், இந்தப் பக்கம் நல்ல வில்லனாகவும் மாஸ் காட்டியிருக்கிறார். ஆக்ஷனில் வெடிப்பதும் காதலில் உருகுவதும், மகளின் அப்பாவாகக் கதறுவதுமாக… ‘தல’க்கு படத்தில் பல அவதாரங்கள். ‘விக்டரை எனக்குத் தெரியும். அவன் நிச்சயம் வருவான்…’ என இறுகுவதும், ‘நமக்குனு குழந்தை வேண்டாம். என்ன இப்போ… அடிக்கடி மெடிக்கல் ஷாப்புக்கு ஓட வேண்டியிருக்கும். அவ்வளவுதானே?’ எனக் காதலியைச் சமாதானப்படுத்துவதுமாக… வெல்டன் அண்ட் வெல்கம் அஜித்!
அஜித்துக்கு சவால் கொடுக்கும் செம தில் வில்லனாக உதார் பண்ணுகிறார் அருண் விஜய். மிடுக் உடம்பும் முணுக் கோபமுமாக அனலடிக்கிறது அருணின் ஆவேசம். ‘நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?’ என அஜித் கேட்க, ‘ஊரே பேசுதில்ல’ என்ற த்ரிஷாவின் ரியாக்ஷன்… லவ்லி. ஆறு வயது மகளின் அம்மாவாகவும் பிரியம் ததும்பும் காதலியாகவும்… க்யூட் த்ரிஷா. ‘அய்யோ… அவன் என்னை முதல்தடவை பார்க்கிறப்ப நான் இப்படியா இருக்கணும்?’ எனப் புலம்பும் விமானப் பயணக் காட்சியில் மட்டும் கவனம் ஈர்க்கிறார் அனுஷ்கா.
பிக்பாக்கெட் அடிப்பதுபோல உறுப்புக் கடத்தல் ஒரு முட்டுச் சந்துக்குள் நடப்பதெல்லாம்…மெடிக்கல் மிராக்கிள். பிளாட்பார பிரஜைகளே சல்லிசாகக் கிடைக்கும்போது, போலீஸின் பாதுகாப்பில் இருக்கிற அமெரிக்க ரிட்டர்ன் அனுஷ்காவை அருண் விஜய் கடத்த மெனக்கெடுவது நம்பவே முடியவில்லை. அத்தனை ரணகளத்தில் குழந்தையை பள்ளிக்கு அனுப்புவது… சினிமா மிராக்கிள்!
பெண் மனதின் பிரியம் பேசும் ‘இதயத்தை ஏதோ ஒன்று…’ பாடலில் தாமரையின் ரசனை கற்பனை… கொலுசொலி ஹைக்கூ . ‘தேன்மொழினு பேர் வெச்சுட்டு தமிழ் தெரியலைன்னா, நல்லா இருக்காதுல?’, ‘ஏய் வேணாம்ப்பா… அவன் முதுகுல பேக் எல்லாம் மாட்டியிருக்கான்’ போன்ற க்யூட் குட்டி வசனங்களுக்கு இடையே, பொளேர் பொளேரென விழுது கெட்ட வார்த்தைகள்… காது வேர்க்குது!
பெரும் திருப்பங்களும் ஆச்சர்யங்களும் இல்லாத திரைக்கதையில் ரேஸ் சேஸ் சேர்த்திருக்கிறது டேன் மெக்கார்த்தரின் ஒளிப்பதிவு. பின்னணி இசையில் மிரட்டல் ஸ்கோர் அடித்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.
ரொம்ப உதாரு!

என்னை அறிந்தால்

அதிரடி போலீஸ் அதிகாரி அஜித்தின் வாழ்க்கையிலே எதிரிகள் புகுந்து அதகளம் செய்ய, பதிலுக்கு அஜித் புகுந்து ரணகளம் செய்வதே ‘என்னை அறிந்தால்’. இந்தத் தடவை கௌதம் துணையோடு இந்த வேட்டை.

நேர்மையும், தூய்மையும் கொண்ட அதிரடி அஜித்திற்கு இடையில் நேர்கிறது இடையூறு. அவருக்கு காதல் துணையாகப் போகும் த்ரிஷா, எதிரிகளின் பழிவாங்கலுக்குப் பணயமாக… அஜித்தின் துணிச்சலுக்கு கேள்விக்குறி இடுகிறார் எதிரி அருண் விஜய். விடுக்கப்பட்ட சவால்களை அஜித் முறியடிப்பதுதான் மொத்தக் கதையே.

போலீஸ் அதிகாரி வேடத்திற்கு கச்சித உடம்பில் பொருந்தாவிட்டாலும், கம்பீரத்தில், தோற்றத்தில், நடையில் சத்யதேவாக நெஞ்சை அள்ளுகிறார் அஜித். முறைத்து விறைத்துக் கொண்டு தான் நிற்கும் சினிமா போலீஸ் என நினைத்தால், ஆச்சரியம் காட்டி மாற்றுகிறார் டைரக்டர் கௌதம்.

ஒரு தகப்பனாக, அருமையான காதலனாக, எதுவும் செய்ய முடியாமல் கதறி நிற்பவராக, இரக்கம் கொண்ட போலீஸ் அதிகாரியாக என மனிதநேயத்தில் பல வண்ணம் காட்டுகிறார் அஜித். கௌதம் மேனனின் துணையின்றி அஜித் இத்தனை இயல்பு காட்டியிருப்பாரா என்பது சந்தேகமே.

அப்படியிருந்தும் ஆக்ஷனில் அஜித் வரும்போது அலறுகிறது தியேட்டர். கதையின் தேவைகளுக்காக தன் ஹீரோயிசத்தைக் குறைத்துக்கொண்ட அழகிற்கே அஜித்திற்கு ஒரு பொக்கே! ‘‘நீங்க இப்படி அழகாகிட்டே போனா, நாங்க என்ன பண்றது?’’ எனப் படத்தில் த்ரிஷா கேட்டிருக்கா விட்டால் நாமே கேட்டிருக்கலாம். பேசும் அத்தனையும் ‘பன்ச்’சாக அடித்து நொறுக்கும் அஜித் இதில் காணாமல் போனது பரவசம்.

நடன ஸ்கூல் நடத்துகிற த்ரிஷா அத்தனை பாந்தம். கண்களிலே காதல் கொட்டும் கனிவு அழகு. குறைந்த பேச்சில், பாவனைகளில் பயணம் செய்யும் த்ரிஷா இன்னும் பளிச்! அனுஷ்கா பெரிய கண்களில் அஜித்தைப் பார்த்து முதல் பார்வையிலேயே மனசைப் பறிகொடுக்கிறார்.

கண்டதும் காதல் க்ளிஷேயெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு பாஸ்?அருண்விஜய்… ஆச்சரியம்! கண்ணில் விழுகிற முடியோடு, வெறி மின்னும் கண்களோடு அதிரடியில் கலங்கடிக்கிறார். கடைசி இருபது நிமிடக் காட்சிகளில் அஜித்திற்கு இணையாக நின்று விளையாடுவது சூப்பர். குழந்தை அனிகா, அஜித்திற்கு பொருத்தமான மகள்.

பாடல்களில் காதல் ததும்பினாலும் காட்சிகளில் வேறு வண்ணம் காட்டுவது புதுமை. இறுதிக்காட்சிகளில் ரகளையான வேகத்தில் வெறியாட்டத்தில் புகுந்து புறப்படுகிற சண்டைக் காட்சிகளுக்காக ஸ்டன்ட் மாஸ்டர் சில்வாவுக்கு சபாஷ்!டேன் மொகார்தர் கேமரா. சமயங்களில் கேமராவும் சண்டையில் இறங்கிவிட்டதோ என்ற அளவுக்கு பரபரப்பு… துறுதுறுப்பு! பின்னணி இசையில் ஹாரிஸ் பின்னுகிறார். பாடல்களில் கொஞ்சமாய் மட்டுமே ஈர்ப்பு. கௌதம், ஹாரிஸ், தாமரை கூட்டணி மீண்டும் சேர்ந்ததற்கு எவ்வளவோ எதிர்பார்த்தோம்… இவ்வளவுதானா?

விவேக்கை வீணடித்திருக்கிறார்கள். கொஞ்சமே வந்தாலும் நாசர் நச்! இவ்வளவு வகைதொகை இல்லாத ஆக்ஷன் கொஞ்சம் அலுப்பூட்டவே செய்கிறது. படத்தின் மெயின் ட்ராக்கான உடல் உறுப்புகளுக்காக ஆளைக் கொல்லும் ‘ரெட் மார்க்கெட்’ புதுசு. ஆனால் இதையே வடிவேலு ‘கிட்னி காமெடி’யாக செய்துவிட்டது நினைவுக்கு வருகிறது. அருண்விஜய்யின் இவ்வளவு வஞ்சினத்திற்கு காரணம் என்னவோ? ஆத்திரம்தான்… அதற்காக இவ்வளவு கெட்ட வார்த்தைகளையா கொட்டுவது?‘தல’ படம்தான்… கௌதம் மேனன் ‘டச்!’

“என் கண்ணீர் போதவில்லையே…”

என் வீட்டுத் தொலைபேசி ஒலித்தது. தொலைபேசியை எடுக்க மறுமுனையில் இருந்து ‘சார்… நான் கே.பி சாரோட அசிஸ்டென்ட் பேசறேன். நீங்க உடனே காவேரி ஹாஸ்பிட்டலுக்கு வர முடியுமா?’ என தழுதழுத்த குரல் கேட்டது. அந்தக் குரல் ஒலித்த தொனி, ஏதோ நடக்க இருக்கும் ஓர் அசம்பாவிதத்தை உணர்த்துவதுபோல தோன்றியது எனக்கு. மருத்துவமனைக்கு வண்டியைச் செலுத்தச் சொன்னேன் டிரைவரிடம். என் மனத் தடுமாற்றத்தின் வேகத்தைவிட வண்டியின் வேகம் குறைவாக இருந்ததுபோல் தோன்றியது.
ஒருவழியாக மருத்துவமனையை அடைந்து அந்த அறைக்குள் நுழைந்தேன். அங்கு என் குருநாதர் படுக்கையில். அருகில் சென்றேன், என்னைப் பார்த்தவர் எந்தவித சலனமும் இல்லாமல் பார்த்துக்கொண்டே இருந்தார். ‘சார்… எப்படி இருக்கீங்க?’ என்றேன். அவர் குழந்தையைப்போல மலங்க மலங்க என்னைப் பார்க்க, நான் கலங்கிப்போனேன்.
திரையுலகில் அவர் உச்சியில் இருந்த காலகட்டத்தில் அவர் படப்பிடிப்பு அரங்கத்தில் நுழையும்போதே எல்லோரும் நடுங்குவார்கள். அவ்வாறு கர்ஜித்த சிங்கம் இன்று நோய்வாய்ப்பட்ட நிலையில் இருப்பதைப் பார்க்கப் பிடிக்கவில்லை. அந்தக் கம்பீரம் எங்கே தொலைந்துபோனது எனத் தேடினேன். அந்த அறையில் இருந்தவர்கள் கே.பி அவர்களிடம் என்னைச் சுட்டிக்காட்டி, ‘ஐயா, இவர் யாருன்னு தெரியுதா… சொல்லுங்க பார்க்கலாம்’ எனக் கேட்டது, அரிச்சுவடியை குழந்தைக்குக் கற்பிக்கும் ஆசிரியர் கேட்பதுபோல இருந்தது. எத்தனையோ தென் இந்தியத் திரைப்படப் பிரபலங்களை ஆட்டுவித்த அந்த ஆளுமை, இன்று ஸ்தம்பித்து நிற்கிறதே என என் மனம் விம்மியது. நான் அவரையே உற்றுப் பார்க்க, பெற்ற பிள்ளை தாயை ‘அம்மா’ என அழைப்பதைபோல் இருந்தது, அவர் என்னைப் பார்த்து ‘ரஜினி’ எனக் கூறியது.

அகில இந்திய அளவில் என்னை ‘ரஜினி’ என அடையாளம் காட்டிய அந்த ஆத்மா தன்னையே இழந்த நிலை கண்டு தடுமாறினேன். எனக்குப் பேச வார்த்தைகள் வர மறுத்தன. மாறாக, கண்ணீர் மட்டும் என் கண்களின் உத்தரவின்றி வழியத் தொடங்கியது. நானும் அவரிடம் விடைபெற்று, நடை தளர்ந்தபடி கடந்த கால நினைவுகளில் கரைந்தேன்.
மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த நான் அங்கு இருந்த ஊடகங்களுக்கு, ‘கே.பி சார் எனக்குத் தந்தை போன்றவர்’ எனக் கூறினேன். அது உதட்டளவில் வந்த வார்த்தை அல்ல; என் உள்ளத்தில் இருந்து வந்த உண்மை. ஆம்! இருட்டுப் பாதையில் சென்ற இந்த முரட்டு வாலிபனை வெளிச்சத்துக்குக் கொண்டுவந்து வழிகாட்டியவரை, ‘தந்தை’ என்றுதானே கூற முடியும்.
1980-களில் நான் சினிமா மீது வெறுப்புற்று, ‘எனக்கு சினிமாவே வேண்டாம். என்னை விட்டுவிடுங்கள்’ எனக் குழம்பித் தவித்தபோது, ‘டேய்… ஆறு மாசம் பொறுமையா இரு. அதுக்கு அப்புறமா சினிமாலே இருக்கிறதா, வேண்டாமானு நீயே முடிவு செஞ்சுக்க’ எனக் கூறி என் தவறான முடிவை அவர் மட்டும் தடுத்திருக்காவிட்டால், என்னுடைய இன்றைய முகவரி என்றோ தொலைந்துபோயிருக்கும். அப்படிப்பட்ட நல்லவரை இந்த நிலைமையில் பார்க்கும் கொடுமையை நினைக்கும்போது, நான் இந்த உலகில் இருந்தும் இல்லாத நிலைபோல எனக்குத் தோன்றியது. அதுதான் உண்மை. யதார்த்தத்துக்கு ஏன் ஒப்பனை? தேவை இல்லை. டாக்டர்கள் கூறிய ‘கே.பி சார் அபாயக் கட்டத்தைக் கடந்துவிட்டார். இப்போது நலமாக இருக்கிறார்’ என்ற செய்தி அறிந்து அடைந்த மகிழ்ச்சி, நீண்ட நேரம் நீடிக்காமல், பின்னாலேயே மரணச் செய்தி வந்தடைந்தது.

உடனே மருத்துவமனைக்குச் சென்று செய்வதறியாது அவரையே உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தேன். திரையுலகில் எத்தனையோ பேரை ஏற்றிவிட்ட ஏணி சாய்ந்துகிடந்தது. என் வேதனையை, துக்கத்தை எனக்குச் சொல்லத் தெரியவில்லை. ஆனால், ஒன்று மட்டும் உண்மை. இந்த ‘24.12.2014’-தான் என்னைப் பொறுத்தவரையில் ‘கறுப்பு நாள்’. வீட்டுக்கு வந்த பிறகும் எனக்கு இருப்புகொள்ளவில்லை. அவருடைய இழப்பு எனக்கு ஏற்பட்ட பேரிழப்பாகத் தோன்றியது.
அவருடைய இறுதிச் சடங்குகள் முடியும் வரை அவரோடு இருக்க விரும்பி, விடிந்ததும் அவர் வீட்டுக்குச் சென்றேன். வண்டியைவிட்டு நான் இறங்கக்கூட இல்லை. என்னைக் கூட்ட நெரிசலில் அப்படியே இழுத்துச் சென்றவர்கள், அவர் முகத்தை எனக்குக் காட்டிவிட்டு மீண்டும் என்னை இழுத்துவந்து வண்டியில் போட்டுவிட்டுச் சென்றனர்.
சரி, மயானத்துக்குச் சென்று இறுதிச் சடங்கில் கலந்துகொள்ளலாம் எனக் கிளம்பினேன். இறுதி ஊர்வலம் செல்லும் சாலைகளின் இருமருங்கிலும் அவரைக் காண காத்துக்கிடந்த கூட்டத்தைப் பார்த்து, அங்கு இருந்த அனைவரும் பிரமித்துப்போனார்கள். இப்படிப்பட்ட மக்கள் வெள்ளம் எப்படி வந்தது? எந்த ஒரு சினிமா இயக்குநருக்கும் இல்லாத கூட்டம் இவருக்கு மட்டும் எப்படிச் சாத்தியம்? இவரது படைப்புகள் மக்களிடையே ஏற்படுத்திய பாதிப்பின் பிரதிபலிப்புத்தான் அது. திரையுலகப் பயணத்தில் அவர் சேர்த்த செல்வாக்கின் மதிப்பை, அவரின் இறையுலகப் பயணம்தான் நாம் உணரும்படியும் அதிரும்படியும் செய்தது.
ஈமச் சடங்குகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. என்னையும் அறியாமல் என் மனதில் இப்படி ஓர் எண்ணம் தோன்றியது… ‘இவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? இவர் எங்கேயோ பிறந்து சென்னை வந்து திரைப்பட இயக்குநர் ஆனது, நான் சென்னை வந்து அவரைச் சந்திக்க நேர்ந்தது, அவர் என்னைத் திரையுலகில் அறிமுகப்படுத்தி இப்படி ஒரு ஸ்தானத்தில் உட்காரவைத்தது… இவை அனைத்தும் திட்டமிட்டுச் செயல்பட்டதால் நடந்த விஷயங்கள் அல்ல. எனக்கும் அவருக்கும் இடையில் அப்படி ஒரு புரிதல் எப்படி ஏற்பட்டது? இந்தப் பந்தம் இந்த ஜென்மத்தில் மட்டுமல்லாது, எத்தனையோ ஜென்மங்களாகத் தொடர்ந்து வரும் உறவுபோல எனக்குத் தோன்றுகிறது. அவருடைய ஸ்தூல சரீரம்தான் இறந்துகிடக்கிறது. அவரது சூட்சம சரீரம் எனக்குத் துணையாகவும் வழிகாட்டியாகவும் இருப்பதாக நான் உணர்ந்து, என் இரண்டு கைகளையும் கூப்பியபடி உயர்த்தி அவரை வணங்க, ‘சடங்கு முடியப்போகிறது, வாய்க்கரிசி போடுறவங்க போடலாம்’ என்ற குரல் கேட்டது. எனக்கு அன்னம் அளித்த என் ஆசானுக்கு வாய்க்கரிசி போட ஏனோ என் கைகள் நடுங்கின.

‘சடங்கு எல்லாம் முடிஞ்சுபோச்சு. ஒரு சகாப்தத்தை, தீ தனக்கு இரையாக்கிக் கொள்ளப்போகிறதே… கடவுளே! அந்தத் தீயை அணைக்க என் கண்ணீர் போதவில்லையே… நான் என்ன செய்ய?’ என என் தேகம் பதறியது. அந்த அந்திமக் காட்சியை என் கண்கள் காண மறுத்தன. கனத்த இதயத்துடன் திரும்பினேன்.
‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா…
ஆறடி நிலமே சொந்தமடா!’
– பாடல் என் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது.

“இனி ரஜினி இமயமலை போக மாட்டார்!”

தமிழ் ‘லிங்கா’வுக்குத் திருப்திகரமாக சென்சார் சான்றிதழ் பெற்றவிட்ட சந்தோஷத்தை சில நிமிடங்கள்கூடக் கொண்டாடவில்லை இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். ‘இந்தி, தெலுங்கு சென்சார் சர்ட்டிஃபிகேட்ஸ் வாங்கணும், டிரெய்லர் கட் பண்ணணும்’ என பரபரப்பாக இருக்கிறார். திடும்மெனத் தொடங்கி, தடதடவெனத் தயாராகிவிட்டது ‘லிங்கா’ எக்ஸ்பிரஸ்!
” ‘பாட்ஷா’ வெற்றி விழா நிகழ்ச்சியில் ரஜினி அரசியல் வாய்ஸ் கொடுத்த சூழ்நிலையில் ‘முத்து’ படம் இயக்கினீர்கள். அந்தப் படத்தில் அரசியல் டச் வசனங்கள் இருந்தன. இப்போ ‘லிங்கா’ வெளியாகும் சமயம் திரும்பவும் ரஜினியைச் சுற்றி அரசியல் சர்ச்சை. இது திட்டமிட்ட பப்ளிசிட்டினு ஒரு பேச்சு ஓடுதே…”
”நம்மாளுங்க எதையும் தப்பான ஆங்கிள்லதான் பார்ப்பாங்களா? ‘சிவாஜி’, ‘எந்திரன்’ படங்கள் வெளியானப்போ ரஜினி சார் பரபரப்பா ஏதாவது பேசினாரா? இல்லையே! அந்த ரெண்டு படங்களும் வசூலை வாரிக் குவித்ததே. தன் பட ரிலீஸுக்கு முன்னாடி அரசியல் பேசி, பரபரப்பு கிளப்பி, விளம்பரம் தேடும் நிலைமையில் ரஜினி சார் என்னைக்கும் இருந்தது இல்லை. ‘என் படங்களுக்கு வேண்டுமானால் விளம்பரம் தேவைப்படலாம். ஆனால், ரஜினி படத்துக்கு விளம்பரம் தேவையே இல்லை’னு அமிதாப் பச்சனே சொல்லியிருக்கார். இதுக்கு மேல நான் என்ன சொல்ல?!”

” ‘லிங்கா’ இசை வெளியீட்டு விழா திடீர்னு அரசியல் மேடை ஆனது ஏன்?”
”முதல்ல ‘லிங்கா’ படத்தைப் பத்தி மட்டும்தான் எல்லாரும் பேசினாங்க. அமீர் பேச்சுதான் அரசியல் பக்கம் எல்லாரையும் திருப்பிருச்சு. ஆனா, ரஜினி சார் அப்பவும் அரசியல் பத்தி எதுவுமே பேசலையே. ‘அரசியல் எனக்கும் தெரியும்’னு மட்டும்தான் சொன்னார். ‘அரசியலில் இறங்கப்போறேன்’னு எந்த உத்தரவாதமும் கொடுக்கலை!”
”அரசியல் ஆர்வம் இல்லைன்னா, இமயமலைக்குப் போவாரா?”
”இல்லை. இனிமேல் ரஜினி சார் இமயமலைக்குப் போக மாட்டார். அப்படியே ஏதோ ஒரு மாற்றம் விரும்பி போனாலும், ஒரு சுற்றுலாப் பயணியாகத்தான் போவாரே தவிர, சாமியார் மனநிலையில போக மாட்டார்!”
” ‘படையப்பா’வில் ‘என் வழி தனி வழி’ பன்ச் டயலாக் பட ரிலீஸ் வரை யாருக்கும் தெரியாம பார்த்துக்கிட்டீங்க. ‘லிங்கா’வில் அப்படி என்ன சஸ்பென்ஸ் வெச்சிருக்கீங்க?”
”இந்தப் படத்தில் அப்படி ஒரு தொடர் டயலாக் இடம் பெறலை. ஆனா, ‘லிங்கா’ பட சீன்களில் ஆங்காங்கே அசத்தலான பன்ச் இருக்கும். ‘லிங்கா’வுக்காக ரஜினி சார் வித்தியாசமான ஒரு ஸ்டைல் முயற்சி பண்ணியிருக்கார். அது மட்டும் படத்துல அடிக்கடி ரிப்பீட் ஆகும்!”

”படப்பிடிப்பில் எல்லாரையும் கடுமையாத் திட்டி வேலை வாங்குவீங்கனு சொல்றாங்க. அதுக்காக ரஜினி உங்ககிட்ட எதுவும் சொன்னது இல்லையா?”
”2,000 பேர் மத்தியில் ரஜினி சார் நின்னுட்டு வசனம் பேசுற பிரமாண்ட காட்சியைப் படம் பிடிக்கணும்; அணையின் உச்சியில் நின்னு ரஜினி சார் வசனம் பேசணும்; அவ்ளோ உயரத்துக்கு ஏறிப் போறதுக்கே 20 நிமிடங்கள் ஆச்சு. உச்சி வெயில். உயரத்தில் நிற்கிறார் ரஜினி. அணையைச் சுத்தி 2,000 பேரும் பரவி நிக்கணும். ஒவ்வொரு பகுதி ஆளுங்களையும் கத்திக் கத்தி ஒழுங்குபடுத்துறதுக்குள்ள தொண்டைத் தண்ணி வத்திருச்சு. ஆனாலும் திருப்தி இல்லை. அப்புறம் வேற வழியில்லாம காரசாரமாத் திட்ட ஆரம்பிச்சுட்டேன். அப்புறம் விறுவிறு, சுறுசுறுனு வேலை நடந்துச்சு. எல்லாத்தையும் அணை மேல இருந்து ரஜினி பார்த்துட்டே இருந்தார். அதுக்கு முன்னாடி அவர் ஸ்பாட்ல இருக்கிறப்ப நான் அப்படிப் பேசினதே இல்லை. அந்த ஷாட் எடுத்து முடிச்சதும் என் பக்கத்துல வந்த ரஜினி, ‘ரவி… இப்போ எடுத்த சீனை மானிட்டர்ல பார்க்கலாமா?’னு கேட்டார். அவருக்கு பிளே பண்ணோம். பார்த்துட்டு அசந்துட்டார். ‘வாவ்… ஃபென்டாஸ்டிக். நீங்க அப்படித் திட்டினப்போ எனக்கே ஒருமாதிரி இருந்தது. ஆனா, இப்படியொரு பிரமாண்ட காட்சியைப் பார்த்த பிறகு, நீங்க கடுமையா திட்டுனதுல தப்பே இல்லை’னு சொன்னார். ரஜினி சார் உடம்பு சரியில்லாமப் போய் திரும்ப மீண்டு வந்து நடிக்கிறப்ப, அவருக்கு சின்னக் கஷ்டம்கூடக் கொடுக்கக் கூடாதுனு நான் தவிச்சேன். அதனாலதான் சில நேரங்களில் தவிர்க்க முடியாமல் அப்படி நடந்துக்க வேண்டியதாயிருச்சு!”

”இப்போ ரஜினி எப்படி இருக்கார்?”
” சூப்பரா இருக்கார். ‘படையப்பா’ படப்பிடிப்புக்கு காலையில 7 மணிக்கே ஸ்பாட்ல வந்து நிப்பார். ஆனா, ‘லிங்கா’ படப்பிடிப்புக்கு 10 மணிக்கு வந்தா போதும்னு நான் கறாரா சொல்லியிருந்தேன். ஆனாலும் 9 மணிக்கே வந்துடுவார். இருந்தாலும் நான் 10 மணிக்கு மேலதான் அவருக்கு ஷாட் வைப்பேன். மத்தியானம் சாப்பிட்ட பிறகு கொஞ்ச நேரம் தூங்கி ஓய்வெடுக்க நேரம் கொடுத்துருவேன். இப்படி ஒரு நாளைக்கு எட்டு மணி நேரம் மட்டும்தான் அவரை நடிக்கவெச்சோம். ஏன்னா, ரஜினி சார் மேல அவர் குடும்பத்தினருக்கு இருக்கிற அக்கறை, எனக்கும் இருக்கு.
பொதுவா ஒரு ஹீரோவுடன் ஒரு இயக்குநர் வேலைபார்க்கும்போது மட்டுமே நெருக்கமா இருப்பார். அப்புறம் ரெண்டு பேருக்கும் நடுவில் இடைவெளி விழுந்திரும். ஆனா, எனக்கும் ரஜினி சாருக்கும் எப்பவும் அப்படி ஒரு இடைவெளி விழுந்ததே இல்லை. கிட்டத்தட்ட 20 வருஷங்களுக்கு முன்னாடி அவரை வெச்சு ‘முத்து’ இயக்கினேன். அப்புறம் ‘படையப்பா’ பண்ணோம். ரெண்டுமே சூப்பர் ஹிட்.
அப்புறம் ‘ஜக்குபாய்’க்கு பூஜை போட்டோம். விளம்பரம் கொடுத்தோம். ஆனா, திடீர்னு படம் டிராப் ஆகிருச்சு. இடையில கமல் சாரை வெச்சு சொந்தப் படம் பண்ணேன். அப்போ ரஜினி சார் அடிக்கடி என் ஆபீஸுக்கு வருவார். அவர்தான் கமல் படத்துக்கு ‘தெனாலி’னு பேர் வெச்சார். அப்புறம் ‘ராணா’ படம் ஆரம்பிச்சேன். அதுக்கு ரெண்டு பாடல்கள் ரிக்கார்டிங் பண்ணிக் கொடுத்தார் ஏ.ஆர்.ரஹ்மான். அப்போதான் ரஜினி சாருக்கு உடம்பு சரியில்லாமப் போச்சு. அந்தப் படமும் டிராப். ரெண்டு சூப்பர் ஹிட் கொடுத்த பிறகு, ரெண்டு புராஜெக்ட் டிராப் ஆச்சுன்னா, பொதுவா ஒரு இயக்குநருக்கும் ஹீரோவுக்கும் சின்னக் கருத்து வேறுபாடு இருக்கும்ல. ஆனா, எனக்கும் ரஜினி சாருக்கும் அதுக்கு அப்புறம்தான் அன்பும் நட்பும் ஜாஸ்தி ஆச்சு. அந்த அளவுக்கு ரெண்டு பேரும் ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சுவெச்சிருக்கோம். அந்தப் புரிதல்தான் ‘லிங்கா’ங்கிற மெகா புராஜெக்டை ஆறே மாசத்தில் முடிக்கவெச்சிருக்கு!”

சினிமாவும் இங்கே கத்துக் கொடுக்குது!

இதோ காத்திருக்கிறது வசந்தபாலனின் ‘காவியத் தலைவன்!’ ‘‘சமயங்களில் படைப்பு நாம் நினைச்சதைவிடவும் நல்லா வரும். உடலும், உணர்வுமாக என்னுடைய அதிகபட்ச உழைப்பைப் பதிவு செய்திருக்கேன்.

போன படத்தில் கிடைச்சது நல்ல அனுபவம். நான் இப்ப எது மேலேயும் நம்பிக்கை வைக்கிறதில்லை. வெள்ளிக்கிழமை ஒரு மணிக்கு என்ன ரிசல்ட்டோ அதைத்தான் எதிர்பார்க்கிறேன். ‘ஓவர் நம்பிக்கை உடம்புக்கு ஆகாது’ என்பது புதுமொழி!’’ – நிதர்சனமும் நிதானமுமாகப் பேசுகிறார் டைரக்டர் வசந்தபாலன். தமிழின் முக்கியமான ஆளுமைகளில் ஒருவர்.

‘‘ ‘காவியத்தலைவன்’ ஒரு புது அனுபவம் தருகிற படைப்பாக இருக்கும் எனப் பேசப்படுகிறது…’’‘‘ரொம்ப நாட்களுக்குப் பிறகு நல்ல நடிப்பைப் பார்க்கலாம். இது ஆக்டிங் ஸ்கூல் பத்தின படமும் கூட. சித்தார்த், நாசர், பிருத்விராஜ் மூணு பேரும் அவங்களோட அதி அற்புத நடிப்பைத் தந்திருக்காங்க.

மகேந்திரன், பாலுமகேந்திரா போன்றவர்கள் உங்க கை விரலைப் பிடிச்சுக்கிட்டு கதை சொல்லிட்டுப் போற மாதிரி யோசிக்க விடாமல் படம் போகுது. எப்பவும் ‘செல்’லை நோண்டிக்கிட்டு இருக்கிற ஒரு மோசமான தலைமுறைக்கு இந்தக் கதையைச் சொல்ல முயற்சி எடுத்திருக்கேன்…

நம்பிக்கையோடு இருக்கேன். ஒரு ஹோட்டலில் போய் சூடா இரண்டு இட்லி, ஒரு வடை, ஒரு தோசை ஆர்டர் பண்ணிட்டு உட்காருகிற மாதிரி ஏ.ஆர்.ரஹ்மானோடு வேலை செய்திருக்கேன்.

அவர் சமையலறையில் நுழைய முடியாது. ஆனால், ஃபைவ் ஸ்டார் ஹோட்டல் மாதிரி ‘டிஷ்’ பேரைச் சொல்லிட்டா அருமையா பரிமாறுவார் ரஹ்மான். இதுக்கு முன்னாடி ஜி.வி.பிரகாஷ், கார்த்திக்கை அறிமுகப்படுத்தியிருக்கேன். அங்கே சமையல்கட்டுக்கே போய் கையைச் சுட்டுக்கிட்டிருக்கேன். மிளகாய்ப் பொடியைக் கொட்டியிருக்கேன். கீ போர்டில் கையை வச்சு, சிங்கர்களோட நின்னு கரெக்ஷன் சொல்லியிருக்கேன். இதில் அந்த வேலையெல்லாம் இல்ல. ரஹ்மான் பெஸ்ட்!’’

‘‘வெற்றி கொடுத்திருக்கீங்க. நல்ல சினிமாவும் எடுக்கத் தெரியும். ஜாலியா ஒரு படம் பண்ண மனசு இல்லையா? ஒவ்வொரு தடவையும் ரிஸ்க்கை எதிர்பார்க்கிறது கஷ்டமா தெரியலையா?’’

‘‘என் மனைவி கூட இதே கேள்வியைக் கேட்டுட்டு இருக்காங்க. ரொம்ப டிஸிப்ளினோட, ரொம்பவும் ஃபைன் ஃபினிஷிங் படங்கள்தான் எனக்குப் பிடிக்கும். அப்படிப் படங்கள் செய்யணும்னுதான் சினிமாவுக்கு வந்தேன். ‘சங்கராபரணம்’, ‘சிப்பிக்குள் முத்து’, ‘சலங்கை ஒலி’ மாதிரி ஒரு வாழ்க்கையைப் பதிவு செய்யத்தான் ஆசை.

ஆனால், இப்ப எனக்கு இந்த ட்ராக்கிலிருந்து நழுவி ஓடி வந்திடணும்னு தவிப்பு இருந்துக்கிட்டே இருக்கு. இது ‘ரிஸ்க்’கான வேலை. சந்தானம் காமெடி, பட்டையைக் கிளப்புற ஆக்ஷன், ரத்தத்தை சாம்பாரோட அள்ற வயலன்ஸ்… இதெல்லாம் எப்படிப் போய்ச் சேருதுன்னு தெரியுது. எனக்கும் இது தெரியும். ஆனா, வேறு விதமா பயணிக்கலாம்னு நினைக்கிறேன். ரோட்டில் கை, கால் விளங்காத ஒருத்தனை ஒரு பொண்ணு வண்டியில வச்சி தள்ளிக்கிட்டுப் போகுது. அந்தப் பொண்ணோட வலி…

அதற்குள் ஒரு கதையிருக்கு. படம் பண்ணினா, ‘கேன்’ஸில் திரையிடலாம். ஆனால், அந்த எமோஷனைப் பார்க்க ஆடியன்ஸ் இருக்காங்களா? நம்ம எண்ணம் சரியா? தொடர்ந்து இந்தக் கேள்விகள் என்னை சங்கடப்படுத்துது. திரும்பத் திரும்ப அடித்தட்டு மக்கள், யார் பார்வையும் படாத மக்கள் வாழ்க்கைதான் நினைவுக்கு வருது.

இப்பல்லாம் எல்லாரும் தூங்கின பின்னாடி மூணு மணிக்கு கொட்ட கொட்ட ஒரு கொசு மாதிரி முழிச்சிட்டு இருக்கேன். தப்பிக்கணும்!’’‘‘உங்க குரு ஷங்கர் கூட எப்போதும் ஆக்ஷன், கொஞ்சம் சமூகநலன்னுதான் எடுக்கிறார். நீங்க அப்படியில்லை!’’

‘‘என் பாதை இதுதான்னு நினைக்கிறேன். மரத்துல தொங்குற புளியம்பழம் பார்த்திருக்கீங்களா? உள்ளே ஓடும், பழமும் ஒரு துளிகூட ஒட்டாது. உறிஞ்சி சாப்பிட்டால் அப்படி ஒரு டேஸ்ட். கொன்றைப் பூவை சாப்பிட்டால் ஒரு சுவை. இந்தத் தலைமுறை அந்தப் புளிப்பையும், துவர்ப்பையும் அனுபவிச்சிருக்கவே முடியாது. அதையெல்லாம் அனுபவிச்சதாலதான் இப் படி கஷ்டப்படுறேன். டொரன்டினோ மாதிரி, நோலன் மாதிரி எந்தக் கலாசாரத்தின் வேரும் இல்லாமல் படம் பண்ணிட முடியும்.

என்னால் முடியலை. இப்பக்கூட, ஊருக்குப் போயிருந்தப்போ, எங்க வீட்டு வாசல்ல வேகாத வெயிலில் ஒருத்தன் சைக்கிளைத் தள்ளிக்கிட்டு ‘ஐஸ்… ஐஸ்…’னு கத்திக்கிட்டே இருந்தான். அந்தக் குரலும் வலியும் என்னைத் துரத்திக்கிட்டே இருக்கு. தெரிந்தோ… தெரியாமலோ ஜெயமோகன், எஸ்.ரா, லா.ச.ரானு படிச்சிட்டு வந்தது தொந்தரவு பண்ணுது. மறுபடியும் தப்பிக்கணும்!’’

‘‘ஆடியன்ஸ்சை குறை சொல்லக் கூடாதுன்னு சொல்லுவாங்க. ஆனால், அவங்க நுணுக்கத்தை இழந்துட்டாங்களோ..?’’‘‘இங்கே இருக்கிற கல்விக் கூடங்களுக்குப் பிறகு இன்னொரு கல்விக்கூடம் தியேட்டர்தான். வாத்தியார் எவ்வளவு கத்துக்கொடுக்கிறாரோ, அதே அளவு சினிமாவும் கத்துக் கொடுக்குது. என் பையன் ஒண்ணாம் கிளாஸ் படிக்கிறான். அவன் மொழி வேறயா இருக்கு. சினிமா பார்த்து வளர்கிற ஒரு தலைமுறையோடு சேர்ந்து நிக்கிறோம்.

இதில் புத்தகங்களுக்கு இடமேயில்லை. பாலைக் கொடுத்தால் பால்தான். கள்ளைக் கொடுத்தால் கள்ளுதான். நீங்க கொடுத்ததைத்தான் திரும்ப எதிர்பார்க்க முடியும். சினிமா பார்த்துத்தான் மொத்த சென்ஸும் இங்க வளர்ந்துக்கிட்டு இருக்கு. அதனால ஆடியன்ஸ் பத்தி எதுவும் சொல்லக் கூடாது!’’

நா.கதிர்வேலன்

ரஜினிக்கும் எனக்கும் போட்டி இதுவரைக்கும் இருக்கு!

கமல் ஸ்பெஷல் பேட்டி

சென்ற இதழ் தொடர்ச்சி…

‘‘ஒரு கட்டத்தில் கமல், ரஜினி ரெண்டு பேரும் ஒரே மாதிரி படம் தான் பண்ணிக்கிட்டு இருந்தீங்க. திடீர்னு ‘நாயகன்’, ‘குணா’, ‘மகாநதி’ன்னு புது ட்ராக் எப்படிக் கண்டுபிடிச்சீங்க?’’
‘‘ஆரம்பத்திலேயே அப்படித்தான். எனக்கு ஞாபகமிருக்கு. ஒரு வேப்ப மரத்தோட நிழலில் நானும் ரஜினியும் காரசாரமா பேசிக்கிட்டு இருந்த நேரம். இன்னிக்கும் அப்படித்தான். ‘நீ… வா… போ…’ன்னு பேசிக்கிறதை நிறுத்தி நாளாச்சு. 60 வயசில எனக்கு வியப்பு என்னன்னா, எங்க ரெண்டு பேருக்கும் வயசு அப்ப 25தான்.

‘பெரிய ஆளா வரப்போறோம்’னு தன்னம்பிக்கை அப்பவே ரெண்டு பேருக்கும் இருந்தது. நாம ரெண்டு பேரும் ‘வாடா… போடா…’ன்னு சத்தம் போட்டுப் பேசினால், பார்க்கிறவங்களும் அப்படிப் பேசுவாங்கன்னு, புரிஞ்சி, நிறுத்தினோம். வேறு ஒரு சம்பவத்திற்குப் பிறகு, ‘எதுவா இருந்தாலும் நாமதான் பேசிக்கணும், இன்னொருத்தர் தூது வரக்கூடாது’ன்னு பேசிக்கிட்டோம்.

அதனால் 30 வருஷமா எங்க நட்பு நிற்குது. இத்தனைக்கும் நாங்க சக போட்டியாளர்களே. ஒரு சமயம் ‘எல்லாப் படத்திலும் ஸ்டைல் பண்றீங்களே… மாத்திக்கலாமே’ன்னு கேட்டப்போ, ‘இந்த வேலையெல்லாம் வேண்டாம்.

நீங்க எங்கே இருக்கீங்கன்னு தெரியும். அதை நீங்க பண்ணுங்க, இதை நாங்க பண்றோம்’னு சொன்னார். சிரிச்சேன் நான். ‘என்ன?’ன்னு கேட்டார். ‘இல்லை… புரிஞ்சது எனக்கு’ன்னு சொன்னேன். ‘கெட்டிக்காரத்தனமா’ன்னு கேட்டேன். ‘பாருங்க! இதுவும் ஜெயிக்கும், அதுவும் ஜெயிக்கும்’னு சொன்னார். அந்தப் போட்டி இதுவரைக்கும் இருக்கு.

இந்த நட்பில் பொறாமையை விட உத்வேகம் வரும். நல்லா இருந்தா ‘மிகச்சிறப்பு’ன்னு சொல்வேன். அதே மாதிரி அவரும் என் படங்களைச் சொல்வார். சில சமயம் உணர்ச்சிவசப்பட்டு, மாலையெல்லாம் போட்டு இருக்கார். திடீர்னு காலையில் மாலையோடு வந்து நின்னிருக்கார். அவரைப் பத்தி ஏதாவது விமர்சனம் இருந்தால், நேரா போன் எடுத்து சொல்வேன். அவர் மறுப்பார்.

‘இல்லை, நான் பண்ணினது ரைட்’னு சொல்வார். அதனால்தான் எங்க நட்பில் கொஞ்சமும் குறைவு இல்லை!’’‘‘சில நல்ல படங்களை எடுத்து, என்ன காரணத்தாலோ வேற டைரக்டர்களுக்கு அந்தப் படங்களுக்கான சிறப்பை கொடுத்திட்டீங்க. சினிமாவை ரொம்ப தெரிஞ்சவங்களுக்கு வேண்டுமானால் உங்க பங்கு புரியும். ஏன் அப்படி செய்தீங்க?’’

‘‘எனக்கு சினிமா ஒரு சந்தோஷம். எனக்கு சினிமான்னா வீட்டில சமைக்கிற மாதிரி. அக்கா உப்பு போட்டாங்க, தங்கச்சி நறுக்கிக் கொடுத்தா, அம்மா சமையல் பண்ணுவாங்க. எப்படி
யிருந்தது சமையல்னா அம்மாவைத்தான் காட்டுவாங்க. ஒரு நாளைக்கு அப்பாகிட்ட மட்டும் ‘இன்னிக்கு உங்க பொண்ணு சமைச்சது’ன்னு சொல்லுவாங்க. இதையெல்லாம் நான் கத்துக்கிட்டது கே.பி.கிட்ட. அங்கே ரிஃப்ளெக்டர் பிடிச்சிருக்கேன். எடிட்டிங் போயிருக்கேன். ‘புன்னகை மன்னனி’ல் கதாநாயகன் விழுகிற மலை உச்சிக்கு லொகேஷன் பார்க்கப்போனது நான்தான்.

இப்படியெல்லாம் சேர்ந்து வேலை செய்திருக்கோம்னு பெருமை கிடையாது. சொன்னதைக் கேட்டு அதை எடுக்க ஒருத்தர் தயாராக இருந்ததுதான் பெரிய விஷயம். எல்லாத்திலும் பங்கு இருக்கு, இல்லைன்னு சொல்லிடலாம். ‘சொல்லத்தான் நினைக்கிறேன்’ படத்தில் ‘கல்யாணம் கச்சேரி’ பாடலுக்கு டான்ஸ் ஆடியிருக்கேன்.

அதை ‘படியில் இறங்கிட்டே ஆடுறியா’ன்னு கேட்டது கே.பி. ஆட முடியும் என்ற திறமையைக் காட்டினது மட்டும் நான். அப்ளாஸ் எனக்குத்தான் வந்தது. யாரும் கே.பியை நினைச்சு கை தட்டலை. நான் டாலர் தெரிய போன் பண்ணிப் பேசும்போது, இளைஞர்களுக்கு அது குதூகலம்தான். அது என் நடிப்பில்லை. கே.பி. எழுத்தில் அப்படி இருந்தது. அது அவர் பண்ணின காதல். ஆனால் எனக்கு ‘காதல் இளவரசன்’னு பட்டம் வந்துச்சு.

இப்படி எனக்கு வாய்ப்பைக் கொடுத்துக்கிட்டே இருக்காங்க. இப்ப ‘பாபநாசத்தை’ ஜீத்து ஜோஸப் டைரக்டர் பண்றார். என்னுடைய கல்வியில் ஜீத்து செய்யும் நல்ல விஷயங்களும், அவர் செய்யும் தவறுகளும் என் பாடப் பட்டியலில் வந்துடுது. சினிமா ஒரு ஜனநாயகக் கலை. பெயின்டிங் மாதிரி ‘கேன்வாஸ் ஆச்சு, ஓவியர் ஆச்சு’ன்னு ஒதுங்கிட முடியாது. கவிதைன்னா பேனா, பேப்பர், வைரமுத்து… அவ்வளவுதான்! வேற யாரும் அங்கே விளையாட முடியாது. ஆனால், சினிமா அப்படியில்லை.

வைரமுத்து, இளையராஜா எல்லாரும் சேர்ந்தது தான். அந்தப் பாடலை ஒருத்தர் நல்லாவும் படம் பிடிக்கணும். காட்சிகள் வரிசையா போகணும். எல்லாம் பண்ணிட்டு ஹீரோவும், ஹீரோயினும் பிடிக்காமல் முகத்தைத் திருப்பிட்டு நிற்கக் கூடாது. கம்பனின் ராமாயணம் மாதிரி யாராவது ஒரு ஆளுக்குத்தான் பெயர் நிக்கும். கூட இருந்து படி எடுத்தவன் எல்லாம் காணாமல் போயிடுவான். பரவாயில்லை, அவங்க இல்லாமல் கம்பன் இல்லை!’’

‘‘நடிப்பு மாதிரியே உங்க எழுத்தும் தனிமொழி. நாவல் எழுதப்போவதாக செய்தி கசிந்தது. அப்படியா?’’

‘‘ஜெயகாந்தனைத் தொட்டுப் பார்த்திருக்கேன். கை குலுக்கியிருக்கேன். கண்ணதாசனைப் பார்த்திருக்கேன். பாரதியாரைப் பார்த்ததில்லை. இவங்களோடு இருந்ததெல்லாம் கிட்டத்தட்ட பாரதியைத் தொட்ட மாதிரிதான். திருவல்லிக்கேணி யானைக்குக் கிடைச்ச சந்தோஷம் எனக்கும் உண்டு. இரண்டு பேரையும் ஒண்ணா தொட்டது பாரதியாரை முட்டினதுக்கு சமம். நாவல் எழுதுவது பெரிய விஷயம்.

நானும் ஜெயமோகனும் பேசிக்கிட்டு இருந்தோம். 956 பக்கமுள்ள அவர் நாவலைத் திருப்பிப் பார்ப்பேன். வயிற்றைக் கலக்கும். எவ்வளவு பெரிய வேலை! அதைப் பார்த்து அவர்கிட்ட வியக்கும்போது, ‘உங்களுக்கு ஸ்கிரீன்ப்ளே எழுத எத்தனை பக்கம்?’னு கேட்டார். ‘ஒரு ஸ்கிரிப்ட் எழுத 1000 பக்கம் ஆகும்’னேன்.

‘மர்மயோகி’ எழுதும்போது 20 டிராப்ட் எழுதியிருக்கேன். அதுக்கு முக்கியமான பயிற்சி… கவிதை எழுதுறதுதான். ‘எதுக்கு எழுதறீங்க’ன்னு கேட்டா, ‘காதல் பண்றது எதுக்கு?’ன்னு கேட்கிற மாதிரிதான். காதல் இருக்கு, இளமை இருக்கு… இதுதான் பதில். கவிதை எழுதுவதால் திரைக்கதை சிறக்கிறது; சிக்கனப்படுகிறது; முறுக்கேறுகிறது. சுந்தர ராமசாமி இறந்த பிறகு, ‘இந்த மாதிரி ஒருத்தர் இருந்தார்’னு பேசிக்கிறதில் அர்த்தம் இல்லை. இருக்கும்போது நான் எப்படி நாகேஷை சொல்லிக்கிட்டு இருந்தேனோ, அப்படி ஜெயமோகனையும் சொல்லுவேன்.

நான் ‘இளையராஜாவை நல்ல மியூசிக் டைரக்டர்’னு சொல்றது அவருக்கே கேட்கணும். எனக்கே யாராவது ஒருத்தர் ‘நல்ல நடிகர்’னு சொல்லிக் கேட்கணும். அப்பதான் என் நடிப்பு நல்லாயிருக்கும். இப்ப வேண்டாம், கர்வமாகிடுவான்னு சொல்லுவாங்க.

உங்க பாராட்டுதான் என்னை கர்ப்பமாக்கும். அடுத்த பிரசவத்திற்கு அதுதான் விதை!’’‘‘இப்பவும் நீங்கதான் மேக்கப்பிற்கு ரொம்ப முக்கியத்துவம் கொடுக்கிறீங்க…’’‘‘துரோணராக நடிக்கும்போது ஏன் தாடி வைக்கணும்? காந்தியாக வரும்போது கண்ணாடி எதுக்கு… கைத்தடி எதுக்கு? சினிமாவில் எல்லா தொழில்நுட்பமும் வரும்.

பழமைவாதிகள்தான் இதெல்லாம் ‘ஏன்’னு யோசிப்பாங்க. முன்னாடி 14 பாட்டு பாடி, நடிச்சிட்டு இருந்தாங்க. ‘அதை ஏன் நீக்கலை’ன்னு யாரும் கேட்கலை? இன்னும் ஏன் பாட்டு பாடிக்கிட்டிருக்கீங்க? வக்கீலும் டான்ஸ் ஆடுறான்… கணக்குப் பிள்ளையும் டான்ஸ் ஆடுறான். அதை யாரும் விமர்சனம் பண்ணலை. அகத்தியரா நடிக்கிறவர் குள்ளமா இருக்கிறதில் தப்பு கிடையாது. அவருக்கு கையில் கமண்டலம் இருந்தால்தான் புரியும்.

சிவனா நடிச்சா நெத்தியில் ஒரு கண்ணை வரைஞ்சுதான் ஆகணும். அதையெல்லாம் கேள்வி கேட்கிறது மேட்டுக்குடித்தனம். சிவனா நடிச்சா கையில் திரிசூலம் வேணும். நீலக்கலர் அடிக்கணும். திரிசூலம் இல்லைன்னா ராமரா, சிவனான்னு தெரியாது. எல்லாம் சினிமாவுக்கு அவசியம்தான்!’’

‘‘இவ்வளவு பிடிவாதமா நாத்திகத்தை அனுசரிக்கும் விதம் எப்படி கை வந்தது? யாரையும் புண்படுத்தாத நாத்திகம் உங்களோடது…’’‘‘நாத்திகம் கொஞ்சம் புண்படுத்தத்தான் செய்யும். செருப்பு கூட புதுசா இருந்தா புண்படுத்துது. கலவியிலேயே கூட புண் ஆகுது. காரம் கொஞ்சம் அதிகமானா, நாக்கு புண்ணாகும். பாதிப்பு இருக்கத்தான் செய்யும். காலராவுக்கு என்ன காரணம்னா ‘தண்ணீர்’னு முடிக்கிறாங்க. தண்ணீர் விரோதியில்லை; அழுக்கான தண்ணீர்தான் காரணம். ராமானுஜரும், பெரியாரும் அண்ணன் தம்பிதான்.

இருக்கும் சம்பிரதாயங்களை எல்லாம் தூக்கி எறிந்து கோபுரத்தில் ஏறி ‘எல்லோருக்கும் கத்துக் கொடுப்பேன்’னு சொன்னார் ராமானுஜர். ‘யாரடா சூத்திரன், யாரடா தீண்டத்தகாதவன், யாரடா மிலேச்சன், கொண்டு வா அவனை’ன்னு பூணூல் போட்டு பிராமணன் ஆக்கினது நாத்திகம் இல்லையா?

கலைஞர் ‘பராசக்தி’யில் தந்த வசனமும், பைபிளில் இருக்கிற வரியும் ஒரே வரிதான். ‘கோயிலில் குழப்பம் விளைவித்தேன். கோயில் கூடாது என்பதற்காக அல்ல, கோயில் கொடியவர்களின் கூடாரமாக மாறிவிடக்கூடாது’ என சொன்னது. Tent of thievesங்கிற வார்த்தையே அதில் வருது. அவரும் நாத்திகர்தான். என் கணிப்பு இது. அவரை ஆரம்ப கம்யூனிஸ்ட்னு சொல்லலாம்.

புத்தரும் ஒரு காலத்தில் நாத்திகர். பிறகு அவரே மதமாகப் போகிறார்னு அவருக்கு தெரிஞ்சிருக்காது. நாளைக்கு பெரியார் களஞ்சியம் பைபிளா மாறிடக் கூடாது. பாசம் மிகுதியால், பக்தியாகி, அது மதமாகி விடக் கூடாது. மதத்தின் பெயரால் நடக்கும் அக்கிரமங்கள், அது எந்த மதமா இருந்தாலும் எனக்கு சம்மதமில்லை. எனக்கு நாத்திகம் கூட முக்கியம் கிடையாது. மனிதன்தான் முக்கியம். மனிதர்கள் இல்லாமல் என்னால் இருக்க முடியாது.

மதத்தை வியாபாரமாக்கி விளையாடுகிறவர்களை தண்டிக்கிறோமோ இல்லையோ… தள்ளி வைக்கணும். தீண்டக் கூடாதவர்கள் யாரும் இருக்கிறார்களா என்றால், இது மாதிரி துரோகிகள்தான். குழந்தைகளைக் கற்பழிக்கும் சாமியார்கள் கூட இதில் இருக்காங்க. செல்போனில் தன் காமலீலைகளைப் போட்டு வச்சிருக்கிற அந்த சாமியாரிடம் விபூதி வாங்கித் திங்கலைன்னா என்ன கெட்டுப் போச்சு! இது புரியமாட்டேங்குதே… இந்த அக்கிரமத்தை பொறுக்க முடியலையே!’’

(அடுத்த இதழிலும் தொடர்கிறது கமல் மொழி!)

– நா.கதிர்வேலன்