Skip to content

என்னை அறிந்தால் – சினிமா விமர்சனம்

February 12, 2015

மெல்லிசா ஒரு கோட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கும் வில்லன்களை அழிப்பதே… ‘என்னை அறிந்தால்’!
கௌதம் வாசுதேவ் மேனன் ஸ்பெஷல் போலீஸ் கதைகளின் இன்னும் ஓர் அத்தியாயம். ஆனால் ஆச்சர்யமான அஜித் படம்!
கதையை அனுஷ்காவில் ஆரம்பித்து அஜித் – அருண் விஜய் நட்புக்குத் தாவி, மாஃபியா – போலீஸ் சேஸ் அடித்து, த்ரிஷா காதல், ஆசிஷ் பகை, உறுப்புக் கடத்தல்… எனப் பல சுற்றுகளுக்குப் பிறகு க்ளைமாக்ஸ். ‘அதான் அஜித் இருக்காரே… எல்லாம் அவர் பார்த்துப்பார்’ என ஆர்ப்பாட்ட ஆக்ஷன்களை அடுக்காமல், ஒரு போலீஸ் ஆபீஸர், முதிர்ச்சியான காதல், காதலின் இழப்பு தரும் தடுமாற்றம்… என அஜித்தை வேறு ட்ரீட்மென்ட்டில் காட்டியிருக்கிறது கௌதம் மேஜிக்!

படத்தில் அஜித்துக்கு கோட் இல்லை; ஆனால், கோடு இருக்கிறது. மெல்லிசான கோட்டுக்கு அந்தப் பக்கம் முரட்டுப் போலீஸாகவும், இந்தப் பக்கம் நல்ல வில்லனாகவும் மாஸ் காட்டியிருக்கிறார். ஆக்ஷனில் வெடிப்பதும் காதலில் உருகுவதும், மகளின் அப்பாவாகக் கதறுவதுமாக… ‘தல’க்கு படத்தில் பல அவதாரங்கள். ‘விக்டரை எனக்குத் தெரியும். அவன் நிச்சயம் வருவான்…’ என இறுகுவதும், ‘நமக்குனு குழந்தை வேண்டாம். என்ன இப்போ… அடிக்கடி மெடிக்கல் ஷாப்புக்கு ஓட வேண்டியிருக்கும். அவ்வளவுதானே?’ எனக் காதலியைச் சமாதானப்படுத்துவதுமாக… வெல்டன் அண்ட் வெல்கம் அஜித்!
அஜித்துக்கு சவால் கொடுக்கும் செம தில் வில்லனாக உதார் பண்ணுகிறார் அருண் விஜய். மிடுக் உடம்பும் முணுக் கோபமுமாக அனலடிக்கிறது அருணின் ஆவேசம். ‘நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?’ என அஜித் கேட்க, ‘ஊரே பேசுதில்ல’ என்ற த்ரிஷாவின் ரியாக்ஷன்… லவ்லி. ஆறு வயது மகளின் அம்மாவாகவும் பிரியம் ததும்பும் காதலியாகவும்… க்யூட் த்ரிஷா. ‘அய்யோ… அவன் என்னை முதல்தடவை பார்க்கிறப்ப நான் இப்படியா இருக்கணும்?’ எனப் புலம்பும் விமானப் பயணக் காட்சியில் மட்டும் கவனம் ஈர்க்கிறார் அனுஷ்கா.
பிக்பாக்கெட் அடிப்பதுபோல உறுப்புக் கடத்தல் ஒரு முட்டுச் சந்துக்குள் நடப்பதெல்லாம்…மெடிக்கல் மிராக்கிள். பிளாட்பார பிரஜைகளே சல்லிசாகக் கிடைக்கும்போது, போலீஸின் பாதுகாப்பில் இருக்கிற அமெரிக்க ரிட்டர்ன் அனுஷ்காவை அருண் விஜய் கடத்த மெனக்கெடுவது நம்பவே முடியவில்லை. அத்தனை ரணகளத்தில் குழந்தையை பள்ளிக்கு அனுப்புவது… சினிமா மிராக்கிள்!
பெண் மனதின் பிரியம் பேசும் ‘இதயத்தை ஏதோ ஒன்று…’ பாடலில் தாமரையின் ரசனை கற்பனை… கொலுசொலி ஹைக்கூ . ‘தேன்மொழினு பேர் வெச்சுட்டு தமிழ் தெரியலைன்னா, நல்லா இருக்காதுல?’, ‘ஏய் வேணாம்ப்பா… அவன் முதுகுல பேக் எல்லாம் மாட்டியிருக்கான்’ போன்ற க்யூட் குட்டி வசனங்களுக்கு இடையே, பொளேர் பொளேரென விழுது கெட்ட வார்த்தைகள்… காது வேர்க்குது!
பெரும் திருப்பங்களும் ஆச்சர்யங்களும் இல்லாத திரைக்கதையில் ரேஸ் சேஸ் சேர்த்திருக்கிறது டேன் மெக்கார்த்தரின் ஒளிப்பதிவு. பின்னணி இசையில் மிரட்டல் ஸ்கோர் அடித்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.
ரொம்ப உதாரு!

From → Uncategorized

Leave a Comment

Leave a comment