Skip to content

உத்தம வில்லன்

வாழ்க்கையின் இறுதிக்கட்டம் நெருங்கியதை உணரும் நடிகர், தன் வாழ்க்கையின் கடைசி கட்டங்களில் சுடர்விட்டு பிரகாசிக்கும் நினைவுப் பயணமே, ‘உத்தம வில்லன்’. நடிகராக கமல்ஹாசனின் பல பரிமாணங்கள் வாழ்க்கை சம்பவங்களோடு ஊஞ்சல் மாதிரி முன்னும் பின்னுமாய் போய் வருகிற திரைக்கதையில் இருக்கிறது ‘உத்தம வில்லனி’ன் பலம்.

மாறுபட்ட இந்த உத்தியை எந்தக் குழப்பத்திற்கும் இடம் கொடுக்காமல், சுத்தமாகத் தருவதன் மூலம் தன் அனுபவ நுணுக்கத்தைக் காட்டுகிறார் கமல். நுணுக்கமான மனது நுணுக்கமான கலைகளையே தருகிறது என்ற உண்மையே ‘உத்தம வில்லனி’ன் உள்ளடக்கம். ‘மரணம் நெருங்கும்போதே, மனிதர்களோடு நெருங்கி வருகிற அண்மை பலருக்கும் வாய்க்கிறது’ என்கிற உண்மையைப் போட்டு உடைக்கிறார் கமல். அவருக்கு உதவியாக இருந்து படத்தை இயக்கியிருக்கிறார் ரமேஷ் அரவிந்த்.மிகவும் சிரமம் கொண்ட கதாபாத்திரத்தை ஜஸ்ட் லைக் தட் பின்னியிருக்கிறார் கமல்.

அவருடைய வாழ்க்கைதான் கதையோ என்ற பிரமை தந்தாலும், சற்றே வெளி வாழ்க்கையின் சுவடையும் கொடுத்துத் திணற வைக்கிறார் கமல். மிகவும் அபூர்வமான காட்சிகளாக படம் நெடுகிலும் அடுக்கப்பட்டுள்ளன.

கமல் தன் மகளை(!) முதலில் பார்த்துப் பேசுகிற காட்சி, அவளிடம் பேசிக்கொண்டு இருக்கும்போதே நெடுஞ்சாண் கிடையாக அப்படியே பக்கவாதத்தில் விழுகிற இடம், கள்ளக்காதலி என ஆண்ட்ரியாவை கால்களுக்கு இடையில் இழுத்து வைத்து உதட்டில் ‘உம்மா’ கொடுத்து கொஞ்சிக்கொள்ளும் காட்சி, கமல் மகனின் கோபம், பின்பு பாசம், அவனது ஆசை, அவனிடமே தன் உடல்நிலையைச் சொல்லிவிட்டு அவனைத் தேற்றுவது…

நாம் யாருமே முன்னே பின்னே தமிழில் பார்த்திருக்க முடியாத காட்சிகள் இதெல்லாம்! தமிழ் சினிமா நவீனமாகி விட்டதோ என்ற எண்ணம் படம் நடுவில் தோன்றாமல் இல்லை! கமலின் இளமை, ஆண்ட்ரியா சரி போதையில் கமலை நினைத்து வேதனைப்படுவது, காதலிக்கு எழுதிய கடிதம் போய்ச் சேரவில்லை என்றதும் கமல் காட்டும் ரியாக்‌ஷன்… உங்களுக்கு ஈடே யாரும் இங்கே இல்லை கமல்.

சூப்பர் சினிமா நடிகனுக்கு ‘அடங்கிய’ மனைவியாக ஊர்வசி, பிரமாதப்படுத்தியிருக்கிறார். சதா சர்வகாலமும் உடனிருக்கிற செக்ரட்டரி எம்.எஸ்.பாஸ்கரின் இயல்பு நடிப்பை எழுதியெல்லாம் காட்ட முடியாது. டைரக்டராகவே வரும் பாலசந்தர் நடிப்பு, அவரது மறைவை நினைத்து வருந்தச் செய்கிறது.

திரைப்படத்துக்குள் திரைப்படமாக வருகிற இன்னொரு சினிமாதான் கொஞ்சம் சங்கடப்படுத்துகிறது. தெய்யம், கூத்துக்கலை என பாடுபட்டு உழைத்தது ஏனோ ஒட்டவில்லை. நீள நீளமான காட்சிகள் அயர வைப்பதும் உண்மை. நாசரின் இயல்பு நடிப்பில் அயர்ச்சி கொஞ்சம் மறைவதும் உண்மைதான். இரண்டு கலைகளையும் இணைத்துச் செய்ததில் எந்த உணர்வையும் ஏற்படுத்தத் தவறியது ஏன்?

மகளாக கொஞ்ச நேரமே வந்தாலும் பார்வதி நாயர் தருவது பூரண வார்ப்பு. படத்தில் வருகிற ஆண்ட்ரியா மாதிரியானவர்களின் அன்புக்கு எந்த அடையாளமும் கிடைக்கப் பெறாததை காட்சிகளில் கொண்டு நிறுத்துவது அருமை. ஜிப்ரானின் பின்னணியும் பாடல்களும் பெரிதாக நினைவில் நிற்கவில்லை. ஷாம்தத்தின் ஒளிப்பதிவு கண்ணில் நிற்கிற பதிவு.நமக்கென்னவோ நடிகனின் வாழ்க்கைதான் சுவாரஸ்யம் ததும்பியது. ‘உத்தம வில்லன்’… கமலின் அரிய நடிப்பில் பார்க்க நமக்குப் பெரிய வாய்ப்பு.

– குங்குமம் விமர்சனக் குழு

அஜித் ஸ்பெஷல் தகவல்கள்

உலகமே கொண்டாடும் உழைப்பாளர் தினமான மே 1ல் பிறந்தவர் அல்டிமேட் ஸ்டார் அஜித். இவரது உழைப்பை உலகமே கொண்டாடுகிறது. இவரைப்பற்றிய சுவைமிகு தகவல்கள்:

அப்பா சுப்ரமண்யம் மலையாளி, அம்மா மோகினி சிந்தி மொழிக்காரர் என்றாலும் தமிழின்மீது பற்றுக்கொண்டவர்.பத்தாம் வகுப்பை பாதியில் நிறுத்திவிட்டு, மெக்கானிக் ஷாப்பில் வேலைக்குச் சேர்ந்தவர்.பைக் ரேஸில் கலந்துகொள்ள பணம் சேர்ப்பதற்காக சின்னச்சின்ன விளம்பரங்களில் நடித்தார்.

திருப்பூரில் ஆயத்த ஆடை ஏற்றுமதித் தொழிற்சாலையை சொந்தமாகத் தொடங்கினார்.
தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் நடிப்பு வாய்ப்புத்தேடி தீவிரமாக இறங்கினார்.
1990ல் ‘என் வீடு என் கணவர்’ படத்தில், மாணவனாக சிறிய கதாபாத்திரத்தில் நடித்தார்.
1992 ஆம் ஆண்டு, 21 ஆம் வயதில் ‘பிரேம புஸ்தகம்’ தெலுங்குப்படத்தில் நாயகனாக நடித்தார்.

‘பிரேம புஸ்தகம்’ படப்பிடிப்பில் இவரது நடிப்பைப் பார்த்த இயக்குனர் செல்வா ‘அமராவதி’ படத்தின்மூலம் இவரை தமிழில் அறிமுகப்படுத்தினார்.
‘அமராவதி’ படத்தில் இவருக்கு டப்பிங் குரல் கொடுத்தவர் விக்ரம்.
‘அமராவதி’ படப்பிடிப்பு நேரத்தில் பைக் விபத்து ஏற்பட்டு அறுவை சிகிச்சை நடந்தது.
ஒன்றரை வருடம் படுத்த படுக்கையாக இருந்தவருக்கு உடனடியாக அடுத்த வாய்ப்பு கிடைக்கவில்லை.

இயக்குனர் கே.சுபாஷ், ‘பவித்ரா’ படத்தில் நடிக்க வைத்தார். பைக் விபத்தில் அஜித் பாதிக்கப்படுவதுபோல அந்தப்படத்தில் காட்சி இடம்பெற்றது.
வஸந்த் இயக்கத்தில் நடித்த ‘ஆசை’ இவருக்கு கோடம்பாக்கத்தில் ஒரு சீட் பிடித்துக் கொடுத்தது.
‘ஆசை’ படத்தில் இவருக்கு டப்பிங் குரல் கொடுத்தவர், நதியாவுடன் சில படங்களில் நாயகனாக நடித்த சுரேஷ்.

‘ஆசை’ படத்தின் ‘கொஞ்ச நாள் பொறு தலைவா…’ பாடல் காட்சிகளுக்காக தொடர்ந்து ஐந்து நாட்கள் இரவு பகலாக நடித்துக் கொடுத்தார்.
ரொம்ப குண்டாகிவிட்டார் என்ற கமெண்ட் வந்தபோது, ‘ரெட்’ படத்துக்குப்பிறகு 23 கிலோ உடல் எடையைக் குறைத்தார்.
‘ராஜாவின் பார்வையிலே’ படத்தில் விஜய்யுடன் இணைந்து நடித்தார்.

‘நேருக்கு நேர்’ படத்துக்காக 11 நாட்கள் நடித்தபிறகு விலகிக்கொண்டார். இவரது கேரக்டரில் சூர்யா நடித்தார்.
‘வரலாறு’ படத்தில் நடித்த பெண்மை கலந்த கதாபாத்திரத்துக்கு, டான்ஸ் மாஸ்டர் சிவசங்கரை முன்மாதிரியாக எடுத்துக்கொண்டார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய ‘தீனா’ படத்தில் ‘தல’ என்று அழைக்கப்பட்டார். அதற்குப்பிறகு அதுவே அவரைப் பெருமைப்படுத்தும் பெயராக அமைந்துவிட்டது.
‘ரெட்’ படத்தில் பேசிய ‘அது’ என்கிற ஒற்றை வார்த்தை, இவரது ரசிகர்களின் மந்திரச்சொல் ஆனது.

இவர் இந்து, மனைவி ஷாலினி கிறிஸ்தவர் என்றாலும், இந்து- முஸ்லீம்- கிறிஸ்தவ சின்னம் அடங்கிய படத்தை வீட்டு வரவேற்பறையில் வைத்திருக்கிறார்.
‘அமர்க்களம்’ படத்தின்போது ஷாலினியைச் சந்தித்தது 1999 மார்ச் 17, காலை 10.30 மணி என்பதை மறக்காமல் நினைவு கூர்கிறார்.
புத்தகம் படிக்கும் பழக்கம் இல்லை என்பவர், ரஜினி கொடுத்த ‘லிவிங் வித் ஹிமாலயன் மாஸ்டர்ஸ்’ புத்தகத்தைப் படித்தபின் டென்ஷனைக் குறைத்துக்கொண்டதாகச் சொல்கிறார்.

முக்கியமான உதவி தேவைப்பட்டாலும்கூட, பணியாளர்கள் மற்றும் உதவியாளர்களை இரவு ஏழு மணிக்குமேல் அழைக்க மாட்டார்.
பணியாளர்கள், உதவியாளர்கள் அத்தனை பேருக்கும் இடம் வாங்க்ிக் கொடுத்து, சொந்த செலவில் வீடுகளும் கட்டிக்கொடுத்திருக்கிறார்.

-நெல்பா
– See more at: http://www.kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=5213&id1=40&issue=20150427#sthash.AreSjk5H.dpuf

அப்பா ரஜினிதான் என் குழந்தைகளைப் பார்த்துக்கறாங்க!

ஐஸ்வர்யா தனுஷ்

‘3’ படத்திற்குப் பிறகு இயக்குநரா என் அடுத்த முயற்சிக்கு கொஞ்ச காலம் தேவைப்பட்டது. ஏன்னா முதல் படம் என்பது ஒரு வேகம்… மனசில் ரொம்ப நாள் இருந்த தாகம். எனக்கு பெரும் அங்கீகாரத்தை தந்த விதத்தில் ‘3’ என் செல்லக்குழந்தை. இனி அடுத்தது என யோசிக்கும்போது வந்ததுதான் இந்த ‘வை ராஜா வை’. எல்லா மட்டத்திலும் புழக்கத்தில் இருக்கிற வார்த்தை…

என் கதைக்கு ரொம்பப் பொருத்தமா இருந்தது. ஒரு சுவாரசியமான சினிமாவிற்கான எல்லா தகுதியும் இந்தப் படத்தில் இருக்கு. இப்ப என்கிட்ட இருந்த பொறுப்பை நிறைவா செய்திருக்கேன். அது ஒரு மாஸ் சினிமாவுக்கான பொறுப்பு!’’ – நிதானமாகப் பேசுகிறார் இயக்குநர் ஐஸ்வர்யா தனுஷ்.

‘‘திடீரென ‘3’லிருந்து மாறுபட்டு இறங்கிவிட்டீர்களே..?’’‘‘காதல் கதையை மறுபடியும் செய்ய முடியாது என்பதல்ல. கொஞ்சம் யோசித்தால் போதும்… பெரிதாக சிரமம் எடுத்துக்கக் கூட தேவையில்லை. ஆனால், ஒரு டைரக்டராக… வேறு வேறு உலகத்தை… அனுபவங்களைத் தரவேண்டியது என் கடமை. எனக்கு ‘வை ராஜா வை’ ஒரு ஐடியா மாதிரிதான் கைவசம் இருந்தது. என் சிநேகிதி அர்ச்சனா கல்பாத்தியை ஒரு காபி ஹவுசில் சந்திக்கும்போது, பேச்சோடு பேச்சாக இதையும் பேச வேண்டி வந்தது.

அதை அவங்க அப்பாவிடம் சொன்னதும், அவர் ‘ஆபீஸுக்கு வரச்சொல்லு… கேட்கலாம்’ என ஆரம்பிக்க, சடசடவென எல்லாமே நிகழ்ந்தது. எனக்குத் தெரிந்த தமிழ் சினிமா இதுவரை பார்க்காத ஒரு கதைக் கருவை தரணும்னு ஆசை. எவ்வளவுதான் யோசித்தாலும், இப்படி ஒரு தினுசில் படம் வரலை. எனக்கு சைக்காலஜி விஷயங்களில் கொஞ்சம் ஆர்வம் உணடு. அது இதிலேயும் வருது.

கௌதம் கார்த்திக்கிற்கு இருக்கிற சில பவர்… ஒரு தப்பு செய்ய வேண்டிய நிலைமையில் அவர் சிக்கிக் கொள்வது… அதில் எப்படி தப்பிக்கிறார் என்பதுதான் கதை. கதையின் தன்மையைப் பொறுத்து அதை வெளியில் சொல்லவும் இயலாது. சூதாட்டமும் இருக்கு… சில விஷயங்களை எடுத்துக்கொண்டு, புரியும்படியும் செய்திருக்கிறோம். காமெடி, லவ் இருக்கு. இது தவிர, முக்கியமாக கதை இருக்கு!’’‘‘இவ்வளவு பெரிய கதையில் புது கௌதம் கார்த்திக்..?’’

‘‘பொருத்தமாக இருந்தார். கதை உருவாகி முழு வடிவத்திற்கு வந்ததும் முதலும் கடைசியுமாய் பொருந்தியது கௌதம்தான். முதல் படத்திலேயே மணிரத்னம் மாதிரியான பெரிய டைரக்டரின் பிரஷரை தாங்கின தைரியம் எனக்குப் பிடிச்சது. அப்ப சில படங்களில் நடித்துக்கொண்டு இருந்தார். அவரை கம்ப்ளீட் மேக் ஓவர் பண்ண நினைத்தபோது ரொம்ப ஒத்துழைப்பு கொடுத்தார்.

படப்பிடிப்புக்கு வந்தா அவ்வளவு கவனம், முடிஞ்சிட்டா ரகளைன்னு அருமையான மனிதர். இரண்டு வருஷமாக எடுத்ததில் படம் முடியும்போது எல்லோரும் இரண்டு பிறந்த நாட்களைக் கொண்டாடி இருந்தோம். இன்னும் குடும்பம் மாதிரி நெருங்கியிருந்தோம்!’’

‘‘இரண்டு குழந்தைகளுக்குத் தாயாக, ஸ்டார் நடிகருக்கு மனைவியாக இருந்துகொண்டு சினிமா செய்வது கஷ்டம் இல்லையா?’’‘‘வீட்டுக்குப் போயிட்டால் என் செல்போன் அவுட் ஆஃப் ரீச் ஆகிடும். வீட்டுக்கு வெளியே வந்ததும்தான் பேச முடியும். என் யூனிட்ல அத்தனை பேருக்கும் என் குடும்பப் பொறுப்புகள் புரியும். ஷூட்டிங், வேலை, டைரக்டரின் பங்கு…

இதெல்லாம் தனுஷுக்கு நல்லாவே தெரியும். முதல் படத்தில் அவர் என் கூடவே இருந்தது பெரிய தைரியம். என் மாமனார், மாமியார் ஒரு வார்த்தை சொன்னாலும் முகம் சுருங்கிப் போகும். ஆனால், என் படம் நல்லா வரணும்னு எதிர்பார்க்கிற, ஆசீர்வதிக்கிற மனசு அவங்களோடது. அம்மா, அப்பாகிட்டே குழந்தைகளை விட்டுட்டு போயிடுவேன். எங்களை விட அவங்க குழந்தைகளை பார்த்துக்கிறதுதான் சிறப்பு!’’
‘‘கௌதம், ப்ரியா ஆனந்த் காம்பினேஷன் அள்ளுதே?’’

‘‘அது ப்ரியாவோட சின்சியர் எஃபெக்ட். கொடுத்த டயலாக்கையும், பாடல்களையும் எடுத்துப்போய் படிச்சு மனசில் ஏத்திக்கிற அளவுக்கு அக்கறை. கௌதமுக்கு முன்னால் படத்திற்கு ஒப்பந்தமானது அவங்கதான். அவங்க இருக்கிற இடத்தில் உற்சாகம் குடியிருக்கும். இப்ப தமிழ் தெரிஞ்ச ஹீரோயின்கள் எங்கே இருக்காங்க?

ப்ரியா ஆனந்த் மாதிரியானவங்க நமக்கு கிடைச்சது பெரிய ஆறுதல். ஒரு படத்தில் தன்னோட ரோலை புரிஞ்சுக்கவும், ஒத்துழைப்பு தரவும் அவங்க தயங்குவதில்லை. நம்ம ஊர் பாணியில் சொன்னால், நான் பெண் இயக்குநரா இருந்தாலும் என் கதையில் நடிக்கத் தயாராக இருந்த கௌதமிற்கு நன்றி சொல்லணும். அவருக்கான நல்ல இடங்கள் நிறைய இருக்கு. ஒரு குழந்தை மாதிரி அவர் பழகின விதம் மறந்து போகாது!’’
‘‘டாப்ஸியும் இருக்கார்…’’

‘‘மிகவும் முக்கியமான ரோலில் இருக்கார். அவரைத்தான் ‘காஞ்சனா’வில் பார்த்தீங்களே. எப்படி பயமுறுத்தியிருந்தார்? அப்புறம் டேனியல் பாலாஜி. அவருக்கு வந்த ரோல்கள் பிடிக்காமல் கொஞ்ச நாள் நடிப்பை நிறுத்தியிருந்தார்.

இதில் விஸ்வரூபம் எடுத்திருக்கிறார். அவரது அனுபவம் பேசுகிறது. டைரக்டர் வஸந்த் சாரை மறக்க முடியாது. அவர்தான் கௌதமின் அப்பாவாக வருகிறார். தவிர்க்க முடியாதபடிக்கு அவரது போர்ஷனை கொஞ்சம் குறைக்க வேண்டி வந்தது. ஆனாலும், கொஞ்சம் கூட வருத்தப்படவில்லை. அதே மாதிரி விவேக் சார். ‘பாபா’ காரணமோ என்னவோ… அவர் எங்களுக்கு பெரும் உதவியாக இருந்தார்!’’

‘‘அனிருத் இல்லாமல் யுவன் ஏன்?’’‘‘ ‘3’ பாடல்கள் பெரும் புகழ் பெற்றது. அதை இதிலும் எதிர்பார்ப்பார்கள். இருக்கிற பிரஷரோடு இதையும் தாங்க முடியாது. தவிர, யுவனோடு சிறு வயதிலிருந்தே அறிமுகம். நான் என் படத்திற்கு இசையமைக்க கேட்டதும் பேமன்ட், கதை என எதையும் கேட்கவில்லை. உடனே சம்மதம் சொன்னார்.

இளையராஜா என் அப்பா மாதிரியானவர். அவர் ஒரு பாடலைப் பாடியும் கொடுத்தார். எங்களுக்கு யுவன் கொடுத்த பாடல்கள் நேர்த்தியானவை. நான் கேட்டதும் தனுஷ் அவருடைய வேலைகளையும் மீறி ஒரு சிறிய ரோலில் நடித்துக் கொடுத்தார். யாரும் எதிர்பார்க்காத ரோல் அது. எல்லா விதங்களிலும் ‘வை ராஜா வை’ நிறைவோடு இருப்பதுதான் எனக்கு மகிழ்ச்சி!’’

– நா.கதிர்வேலன்

.

“இப்போ நிம்மதியா இருக்கேன் !”

“இப்போ நிம்மதியா இருக்கேன் !”
நா.சிபிச்சக்கரவர்த்தி
படங்கள்: கே.ராஜசேகரன்
”ஒரு வருஷமா ஆழ்நிலை தியானம் மாதிரியான ஒரு அமைதி மனநிலையில் இருந்தேன். இதுவரையிலான என் பயணத்தை நானே திரும்பிப் பார்த்துட்டு இருந்தேன். அதான் கொஞ்சம் இடைவெளி!” – வாஞ்சையாகச் சிரிக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா. சமீபத்தில் சர்ச்சைகளின் ராஜாவாக இருந்தவரிடம், இப்போது முன் எப்போதும் இல்லாத தீர்க்கம்!

”18 வருஷங்களில் 100 படங்கள் தாண்டிட்டேன். என்ன பண்ணியிருக்கேன்னு யோசிச்சா… நான் ஒரு இசையமைப்பாளர். இறைவன் இந்த இசையை எனக்குக் கொடுக்கிறான். அதை நான் மக்களுக்குக் கொடுக்கிறேன். அவ்வளவுதான்!

ம்ம்ம்… நான் எதுக்கு இந்தப் பூமிக்கு வந்திருக்கேன்… இந்த வாழ்க்கையின் அர்த்தம் என்ன… இதான் இப்போ என் தேடல். இசை, சினிமா, புகழ் வெளிச்சம்னு இதெல்லாம் எனக்கு ஒரு விஷயமாகவே தெரியலை. நான் இசையமைக்கும்போது சில டியூன்ஸ் எப்படி வருதுன்னே எனக்கு இன்னமும் தெரியலை. ‘இதெல்லாம் எங்கே இருந்து வருது… எப்படி வருது?’னு அடிக்கடி மனதில் தோணும் கேள்விகளுக்கு, ஆன்மிகத்தில்தான் பதில் கிடைச்சது. என் தேடலும் ஆன்மிகத்தில்தான்!”

‘ ‘எல்லா மதங்களும் அன்பைத்தான் போதிக்கின்றன’னு சொல்வாங்க. அப்படி இருக்கையில் நீங்க இஸ்லாம் மதத்துக்கு மாற தனிப்பட்ட காரணம் எதுவும் இருக்கா?’

”நிறையக் காரணங்கள் இருக்கு.

வீட்டில் நான் செல்லப்பிள்ளை. என் அண்ணனை, பியானோ கிளாஸுக்கு அனுப்பினாங்க. தங்கச்சியை, பாட்டு கிளாஸ்ல சேர்த்துவிட்டாங்க. ஆனா என்னை, எந்த கிளாஸுக்கும் அனுப்பாம ஃப்ரீயா விட்டுட்டாங்க அம்மா. எனக்கு எல்லாமே அம்மாதான். ‘இன்னும் நிறையப் படம் பண்ணு.. இன்னும் நிறைய ஹிட்ஸ் கொடு’னு உற்சாகப்படுத்திட்டே இருப்பாங்க அம்மா. எனக்கு மியூசிக் தெரியாது. மியூசிக் படிக்கலை. ஆனா, எப்படி 100 படங்களுக்கு இசையமைக்க முடிஞ்சது? அம்மாவின் அன்பும் அவங்க கொடுத்த ஊக்கமும்தான் காரணம். அதோடு இறைவனின் அருளும் இருக்கு. அப்படி எனக்கு எல்லாமுமா இருந்த அவங்க இறந்ததும், என் வாழ்க்கையே வேற மாதிரி மாறிடுச்சு.

என் அம்மா ஜீவா இறந்த சமயம், நான் ரொம்ப உடைஞ்சுட்டேன். அவங்க மறைவு எனக்குள் ஒரு பெரிய வெறுமையை உண்டாக்கிருச்சு. அவங்க இல்லாம நான் என்ன ஆகப்போறேன்னு பயம் வந்தது. இனி யார் என்னைப் பார்த்துக்குவாங்க… அடுத்து என் வாழ்க்கையில் என்ன… எல்லாமே குழப்பமா இருந்தது. அப்பதான் குர்ஆன் படிக்க ஆரம்பிச்சேன். குர்ஆன் படிக்கப் படிக்க, என் தேடலுக்குப் பதில் கிடைச்சது. அது கொடுத்த எனர்ஜிதான் என்னை மீட்டுக் கொண்டுவர உதவுச்சு. அப்படியே இஸ்லாம் மார்க்கத்துக்கு மாறிட்டேன்.

யுவன் ஷங்கர் ராஜான்னு ஒருத்தன் இங்கே இருக்கான்னா, அதுக்கு முழுக் காரணம் என் அம்மா மட்டும்தான். அதுவரை நான் மது அப்படிக் குடிச்சதே இல்லை. ஆனா, அம்மா இறந்த சமயம் மூணு, நாலு மாசம் தொடர்ந்து குடிச்சுட்டே இருந்தேன். ஸ்மோக் பண்ணவும் ஆரம்பிச்சேன். அப்ப ஒரு சந்தர்ப்பத்துல, ‘இவன் யுவன் இல்லை’னு என்னால உணர முடிஞ்சது. இப்படியே போயிட்டு இருந்தா, சம்பாதிச்ச பேர், பணம், அடையாளம் எல்லாமே என்னைவிட்டுப் போயிடும்னு உணர்ந்து, அதுல இருந்து மீண்டு வந்தேன். என்னை மீட்டுக் கொடுத்தது இஸ்லாம். எனக்கு இஸ்லாம் கை கொடுத்தது. நான் அதுக்கு என் மனசைக் கொடுத்தேன்!”

”திருமண வாழ்க்கை எப்படி இருக்கு… காதல் கல்யாணமா?”

”மாஷா அல்லாஹ்… நல்லா இருக்கோம். ரொம்ப சந்தோஷமா இருக்கோம். ஆனா, இது காதல் திருமணம் இல்லைங்க. நண்பர்கள் பலரிடம் ‘இந்த மாதிரி பொண்ணு இருந்தா சொல்லுங்க’னு கேட்டிருந்தேன். அப்படி ஒரு நண்பர் மூலம்தான் ஜெஃப்ருனிஸா குடும்பம் அறிமுகமானாங்க. ரெண்டு குடும்பமும் அறிமுகமாகி பரஸ்பரம் ஒண்ணாப் பேசி நடத்திய திருமணம் இது. ஆனா, திருமணப் பேச்சுவார்த்தை நடந்துட்டு இருந்தப்பவே, ‘யுவனுக்கு, மூன்றாவது கல்யாணம்; ரகசியத் திருமணம்’னு வதந்தி கிளம்பிடுச்சு. இந்த விஷயங்கள் என் பெர்சனல்னு நான் நினைக்கிறேன். ஆனா, ஒரு பிரபலத்துக்கு பெர்சனல்னு எதுவும் இல்லைனு மத்தவங்க நினைக் கிறாங்கனு நான் சமாதானப்படுத்திக் கிட்டேன். ஆனா அந்தச் சூழ்நிலை, பொண்ணு வீட்டுல நிர்பந்தத்தை உண்டாக்கிருச்சு. எனக்காக அவங்க ஏன் சங்கடப்படணும்னு தோணுச்சு. தள்ளிப்போடாம உடனே கல்யாணம் பண்ணிக்கலாம்னு அப்பாகிட்ட பேசினேன். எல்லாம் நல்லபடியா முடிஞ்சது. இப்போ சந்தோஷமா இருக்கோம்!”

‘கல்யாணத்துக்கு, அப்பா என்ன சொன்னார்?’

”கல்யாணம் பத்திச் சொன்னதும் வாழ்த்தினார். ‘இன்னும் ரெண்டு நாளில் கல்யாணம் வைச்சுக்கலாம்’னு சொன்னதும், ‘என்னது… இன்னும் ரெண்டு நாள்லயா? உடனே எப்படி வர முடியும்?’னு யோசிச்சார். அப்புறம் அவரே, ‘சரி, நீங்களே கல்யாணம் பண்ணிட்டு வந்துடுங்க’னு சொல்லிட்டார். அப்பா சம்மதத்தோடுதான் எங்க கல்யாணம் நடந்தது!”

‘ ‘இடம் பொருள் ஏவல்’ படத்துக்காக முதல்முறையாக வைரமுத்துடன் இணைந்து வேலைபார்க்கும் அனுபவம் எப்படி இருந்தது?’

”நான் முதலில் ‘பூவெல்லாம் கேட்டுப்பார்’ படத்துக்கே வைரமுத்து சார்கிட்ட கேட்டேன். ‘இன்னும் கொஞ்சம் நாள் ஆகட்டும் தம்பி’னு சொன்னார். இப்பத்தான் நாங்க சேரணும்னு எழுதியிருக்கு. ‘இடம் பொருள் ஏவல்’ படத்துக்கு நான் முதல்ல டியூன்ஸ் கொடுத்துட்டேன். அதைக் கேட்டுதான் வைரமுத்து சார் பாடல்கள் எழுதினார். பிரமாதமான வார்த்தைகள். அப்பாவுடன் அந்தக் காலத்துல வேலைபார்த்த அனுபவங்களைச் சொன்னார். ஆச்சர்யமா இருந்தது!”

‘இசையமைப்பாளர்கள், ஹீரோவா நடிக்கிறாங்களே… நீங்கதான் அப்படி முதல் ஆளா நடிப்பீங்கனு எதிர்பார்த்தோம். இப்பவும் அந்த ஆசை இருக்கா?”

”எனக்கும் நடிக்கிற ஆசை இருந்தது. அம்மா என்னை நடிக்கச் சொல்லிட்டே இருந்தாங்க. அப்போ எனக்கு டைம் இல்ல. இப்பவும் அதே காரணம்தான். வரிசையா நிறையப் படங்கள். ஆனா, மியூசிக் ஆல்பம், ஸ்டேஜ் ஷோக்கள் பண்ணணும்னு ப்ளான். நடிக்கிற ஆசை அப்படியேதான் இருக்கு. பார்ப்போம்!’

‘ ‘மாஸ்’ படத்தில் இருந்து நீங்க விலகிட்டதா ஒரு தகவல்… அப்புறம் அதை மறுத்தார் வெங்கட் பிரபு. என்னதான் நடந்தது?”

”எதுவுமே நடக்கலைங்க. ஒரு இந்திப் பாடலின் ரைட்ஸ் வாங்கி இருந்தாங்க. ஆனா, குறிப்பிட்ட நேரத்துக்குள் அந்தப் பாட்டுக்கு என்னால் இசையமைக்க முடியலை. அந்தச் சமயத்துல தமனை வெச்சு அந்தப் பாட்டை ரீமிக்ஸ் பண்ணாங்க. அவ்வளவுதான்!”

‘ ‘யுவன் நல்லா மியூசிக் பண்ணுவார். ஆனா, ரொம்ப தாமதப்படுத்துறார்’னு ஒரு பேச்சு இருக்கே!”

சின்ன மௌனத்துக்குப் பின்… ”என்னைக் கட்டாயப்படுத்திக்கிட்டு வேலைசெய்ய எனக்குப் பிடிக்காது. நான் இசையமைச்ச 100 படங்களில் ஹிப்ஹாப், மெலடி, கிளாஸிக், குத்து, அது… இதுனு புதுசு புதுசா நிறைய முயற்சிகள் பண்ணியிருக்கேன். ‘மாஸ்’ கம்போஸிங்ல வெங்கட் பிரபுகிட்ட, ‘எந்த மாதிரி ஸ்டைல் வேணும்?’னு கேட்டேன். ‘உன்கிட்ட என்னப்பா கேட்க முடியும்? எல்லா ஜானரும் பண்ணிட்டியே… இன்னும் புதுசா புடி’ன்னார். அதுதான் பிரச்னை. இன்னும் புதுசு…. இன்னும் புதுசுனு யோசிக்கிறப்போ, அந்தச் சவால் பெருசா இருக்கு. அதுதான் நிறைய நேரம் எடுத்துக்குது. அது சிலருக்குப் பிடிக்காமல் எரிச்சலாகிறாங்க; என்னைப் புரிஞ்சுக்கிட்ட இயக்குநர்கள் எனக்குச் சுதந்திரம் கொடுக்கிறாங்க. புதுசா வர்றவங்களும் புரிஞ்சுப்பாங்க. எனக்கு நம்பிக்கை இருக்கு!”

“‘தல’ன்னா அஜித், ‘தளபதி’ன்னா விஜய், ‘மாஸ்’ன்னா சூர்யா!”

” ‘இதுதான் கதை’னு ஆன்லைன்ல அலையடிக்கிற எதுவுமே ‘மாஸ்’ கதை இல்லை. நெட்ல வர்ற நிறையக் கதைகள் இன்ட்ரஸ்டிங்கா இருக்கு. டிஸ்கஷன் டைம்ல கிடைச்சிருந்தா, பட ஸ்கிரிப்ட்ல சேர்த்திருப்பேன். ரொம்ப யோசிக்காதீங்க நெட்டிசன்ஸ்… சம்மர் ஹாலிடேஸ் வரை கொஞ்சம் காத்திருங்க. சீக்கிரமே வந்துடுறோம்!” – ‘மங்காத்தா’ ஆடினாலும் சரி, ‘மாஸ்’ ஆக மாறினாலும் சரி… அதே ‘சென்னை-28’ குறும்புடன் பேசுகிறார் வெங்கட் பிரபு.

சூர்யாவின் ‘மாஸ்’ படத்தை கோடை விடுமுறையில் கொண்டுவரும் முனைப்புடன் பரபரவென இருப்பவரை, டப்பிங் தியேட்டர் டு எடிட்டிங் ஸ்டுடியோ பயணத்தில் பிடித்தேன்.

”இந்த ஸ்கிரிப்டை சூர்யா ஓ.கே பண்ணக் காரணமே இதோட ஒன்லைன்தான். அதை இன்ட்ரஸ்ட்டிங்கான ஸ்கிரீன்பிளேவா பண்ணியிருக்கோம். ஹாரரா, த்ரில்லரானு சின்ன லீடு கொடுத்தாலே நம்ம ரசிகர்கள் அதுக்குள்ள புகுந்து பெரிய வீடே கட்டிடுவாங்க. முதல் ஷோ வரைக்குமாவது படத்துக்கான எதிர்பார்ப்பை தக்கவைக்கவேண்டியிருக்கு. இதுவரை நான் பண்ணின படங்கள், காட்சிகளின் தொகுப்பாத்தான் இருக்கும். ஆனால், ‘மாஸ்’ல முதல்முறையா கதை சொல்ல முயற்சி பண்ணியிருக்கேன்.

‘இந்த உலகத்துல ஏமாத்தினால்தான், பிழைக்க முடியும்; வெற்றிகரமா வாழ முடியும். பணம்தான் பிரதானம்னு நினைக்கிற ஒருத்தன், அவனைக் காலி பண்ணத் துடிக்கிற இன்னொருத்தன். அவங்களைச் சுத்தி நடக்கிறதுதான் ‘மாஸ்’. பொழுதுபோக்கு, பணத்துக்காகத்தான் சினிமா பண்றோம். ‘மாஸ்’ல அதையும் தாண்டி தெளிவான ஒரு கதை சொல்லல் இருக்கும். கண்டிப்பா இது சம்மர் ட்ரீட். இதில் சூர்யாவின் கேரக்டர் பேர்தான் ‘மாஸ்’. எனக்கு ஒரு ஆசை உண்டு. ‘தல’ன்னா அஜித் சார், ‘தளபதி’ன்னா விஜய் சார்னு அவங்களோட ரசிகர்கள் அடையாளப்படுத்துற மாதிரி, ‘மாஸ்’னா சூர்யானு ரசிகர்களால் அடையாளப்படணும்.”

”உங்களோட வழக்கமான டீம்ல இருந்து முதல்முறையா வெளிய வந்து படம் பண்றீங்க. அந்த அனுபவம் எப்படி இருக்கு?”

”உண்மைதான். சிவகுமார் சார்கூட, ‘டேய்… இவன் கார்த்தி மாதிரி கிடையாதுடா. கொஞ்சம் பாத்து நடந்துக்க’னு படம் ஆரம்பிக்கும்போதே சொன்னார். எனக்கும் உள்ளுக்குள்ள அள்ளுதான். ஆனால், சூர்யா சார் இந்தப் படத்துலதான் இப்படி இருக்காரா, இல்லை எப்பவுமே இப்படியானு யோசிக்கவைக்கிற அளவுக்கு செம கூல். வழக்கமா என் பட ஷூட்டிங் ஸ்பாட்னா, ஜாலி கேலியா இருக்கும். அந்த அரட்டை, ‘மாஸ்’ ஸ்பாட்ல கொஞ்சம் மிஸ்ஸிங். ஆனா, நான் அமைதியா இருக்கேன், எங்க எல்லாருக்கும் சேர்த்து சூர்யா சார் ஜாலி பண்ணிட்டு இருக்கார்.

அதேபோல, நயன்தாரா வந்ததும் சுவாரஸ்யம். ‘ஒரு சின்ன கேமியோ பண்ணணும்’னு ‘கோவா’வுக்காகக் கூப்பிட்டப்போ, உடனடியா வந்து நடிச்சுட்டுப் போனாங்க. ‘பெரிய கமர்ஷியல் படம் பண்ணும்போது, கண்டிப்பா உங்களைக் கூப்பிடுவேன்’னு சொல்லியிருந்தேன். அது இப்ப நடந்திருக்கு. கேமராமேன் ஆர்.டி.ராஜசேகர், ஆர்ட் டைரக்டர் ராஜீவன்னு டெக்னீஷியன்கள் உள்பட எல்லாருமே எனக்குப் புதுசு. அது உங்களுக்கும் புது அனுபவம் தரும்னு நம்புறேன்.”

” ‘மங்காத்தா’, ‘பிரியாணி’னு மாஸ் மசாலா பண்ற உங்களுக்கும் சூர்யாவுக்குமான காம்பினேஷன் எப்படி வந்திருக்கு?”

”சூர்யாவின் ஸ்பெஷலே அவரை எல்லா தரப்புக்கும் பிடிக்கும் என்பதுதான். இதில் குழந்தைகளையும் டார்கெட் பண்ணியிருக்கோம். அதனாலதான் சம்மரை மிஸ் பண்ணிடக் கூடாதுனு ஓடிட்டே இருக்கோம். படத்தில் கிராஃபிக்ஸ் வேலைகள் அதிகம். சென்னை, மும்பைனு ரெண்டு இடங்கள்ல பரபரப்பா வேலை நடக்குது. முதல்முறையா எமோஷன்ஸ் முயற்சி பண்ணியிருக்கேன். தனக்கும் இது புது முயற்சினு சூர்யா ஒப்புக்கிறார். அதை நீங்களும் நிச்சயம் வரவேற்பீங்கனு நம்புறேன்.”

”யுவனின் இசை, உங்க படங்களில் தவிர்க்க முடியாதது. ஆனால், அவருக்குப் பதிலா தமன் மியூசிக் பண்றார்னு ஒரு தகவல். யுவனுடன் என்னதான் பிரச்னை?”

” ‘மாஸ்’க்கு யுவன்தான் இசை. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். யுவனை மாத்திட்டதா வந்த தகவல் ஒரு வதந்தி. ‘யுவன்கூட ஒரு பாட்டாவது வொர்க் பண்ணணும்ணா. கேட்டுச் சொல்லுங்க’னு தமன் அடிக்கடி கேட்பான். அதாவது யுவன் டியூனுக்கு இசைக் கலைஞர்களை வெச்சு இசைக்கோர்ப்பு பண்ணணும்னு விரும்பினான். ‘சரோஜா’வில்கூட யுவனோட இரண்டு டியூன்களுக்கு பிரேம்ஜிதான் இசைக்கோர்ப்பு. ‘பிரியாணி’யில் யுவன், இமான், ஜி.வி.பிரகாஷ், விஜய் ஆண்டனி, தமன்னு ஐந்து இசையமைப்பாளர்கள் சேர்ந்து பாடின பாட்டு கம்போஸ் பண்ணும்போது தமன் தன் விருப்பத்தை யுவன்கிட்ட சொல்லியிருக்கான். யுவனும் அதுக்கு ஓ.கே சொல்ல… அப்படித்தான் தமன் இதுல ஒரு பாட்டுக்கு இசைக்கோர்ப்பு பண்ணினான். அது வேறமாதிரி வதந்தியாயிடுச்சு. எனி வே… அந்த ஃப்ரீ பப்ளிசிட்டிக்கும் நன்றி.”

”பார்த்திபன், சமுத்திரக்கனினு காஸ்டிங்ல இயக்குநர்கள் லிஸ்ட் இருக்கே. என்ன ஸ்பெஷல்?”

”சமுத்திரக்கனியின் முதல் படமான ‘உன்னை சரணடைந்தேன்’ல நான்தான் ஹீரோ. இப்ப நான் டைரக்ட் பண்ணும் படத்துல அவர் நடிப்பது எனக்கான பெருமை. ரெண்டு பேருக்குமே எல்லா விஷயங்கள்லயும் செமையா செட் ஆகும் . டைரக்ஷன் பண்ணிட்டு இருந்தாலும் இன்னைக்கு அவர் பிஸியான நடிகர். நான் கேட்டதும் சந்தோஷமா நடிக்க ஒப்புக்கிட்டார். அதேபோல்தான் பார்த்திபன் சாருக்கும் ஒரு செம கேரக்டர்.”

” ‘மங்காத்தா’ ஸ்பாட்ல அஜித்-விஜய் சந்திச்சப்ப, ஒரே படத்துல ரெண்டு பேரையும் இயக்கணும்னு உங்கள் விருப்பத்தை சொன்னீங்களே… என்ன ஆச்சு?”

”தல படம் பண்ணியாச்சு. இப்ப சூர்யா படம் பண்றேன். விஜய் சாருக்குப் படம் பண்ணணும்கிற விருப்பம் இருக்கு. இப்பகூட விஜய் சாரை 90 ரீயூனியன்ல பார்த்தேன். பேசினோம். அவருக்கு ஒரு கதை ரெடி பண்ணிட்டு இருக்கேன். இப்பவே ஒரு பிட்டைப் போட்டுவைப்போம்!”

Superstar’s Meeting with his fan – A heart touching account

தலைவரின் ரசிகர்கள் என்பதில் பெருமை கொள்வோம் !!!
தலைவர் ரஜினியை மட்டுமே நினைவில் கொண்டுவாழும் வியாசர்பாடி ரஜினிபாலா:
தலைவர்ரஜினியை இதுவரை யாரும் பார்த்திராத கோணத்தில் பார்க்கின்ற வாய்ப்பு கிடைத்தது அவரது வெறித்தனமான ரசிகர் ரஜினி பாலாவுக்கு.
சென்னை வியாசர் பாடி உதயசூரியன் நகரைச் சேர்ந்த இளை ஞர் ரஜினிபாலா. ரஜினி யின் ரசிகர் மட்டுமல்ல, வெறியன் மட்டுமல்ல, அதற்கும் மேலே. ரஜினி யைப் பார்க்கலாம் வா என யார் கூப்பிட் டாலும் அவர்களுடன் கிளம்பிவிடுவார். வீட்டில் சதா நேரமும் ரஜினி படம் பார்ப்பது, ரஜினியைப் போல் நடை, உடை, பாவனை, பேச்சு, இப்படி ரஜினியே மூச்சென இருக்கும் ரஜினி பாலா வுக்கு வயது 36. ஆனால் செயல்பாடுகள் எல் லாமே ஒரு குழந்தை யைப் போல்தான். –
சரியாக 10.28-க்கு இண்டர்காம் லைனில் வந்து “”அந்தப் பையன் வந்துட் டாரா?’’என உதவியாளர் சுப்பையாவிடம் விசாரிக்கிறார் தலைவர்ரஜினி. “”இல்ல சார், நக்கீரன்ல யிருந்து வந்துட்டாங்க. அந்தப் பையன் அண்ணா மேம்பாலத் துக்கிட்ட வந்துக்கிட்டிருக்கான்னு தகவல் சார்’’என்கிறார். மீண்டும் 10.40-க்கு ரஜினி விசாரிப்பதற்கும் ரஜினிபாலா குடும்பம் வரு வதற்கும் சரியாக இருந்தது.
“”தம்பி உனக்காக சார் காத்துக்கிட்டிருக்காரு”’என்று சொல்லியபடி, ரஜினிபாலாவுக்கும் அவரது தாயாருக்கும் மோர் கொடுத்து உபசரிக்கிறார் சுப்பையா. சில நிமிடங்கள் கரைகிறது… கதவைத் திறந்து கொண்டு மின்னலென அந்த ஹாலுக்குள் பிரவேசிக்கிறார் ரஜினி.
“”கண்ணா எப்படி இருக்க?”’என கேட்ட படியே ரஜினிபாலாவை கட்டி அணைக்கிறார் ரஜினி.
தலைவா…’’எனக் கூறியபடி சடாரென ரஜினியின் காலில் விழுகிறார் ரஜினிபாலா. மகிழ்ச்சியில் அதிர்ச்சியாகி நின்ற ரஜினி பாலாவின் தாய் பானுமதிக்கு இந்தக் காட்சியை நம்பவே முடியவில்லை.
ரஜினிபாலாவை தூக்கி நிறுத்திய ரஜினி, “”உட்காரு கண்ணா…’’என்றவாறு தன் அருகில் உட்கார வைக்கிறார். “””வெளியில நிக்கிறவங்களை உள்ள வரச்சொல்லுங்க”’’ என ரஜினி சொல்லியதும், ரஜினிபாலாவின் தங்கை மற்றும் உறவினர்கள் உள்ளே அழைத்து வரப்படுகிறார்கள்.
“”தம்பிக்கு வயசு என்ன, ஏன் இப்படி ஆயிட்டான்”’என அக்கறையாக ரஜினிபாலாவின் தாயாரிடம் விசாரித்துவிட்டு, “அந்த ஷாலை கொடுங்க’’என தன் உதவியாளரிடம் சால்வையை வாங்கி ரஜினிபாலாவுக்கு போர்த்தி தன்னுடைய வெறித்தனமான ரசிகனை கவுரவிக்கிறார் ரஜினி.
சடாரென சேரிலிருந்து எழுந்து ரஜினியின் முன்பு தரையில் உட்கார்ந்து, “அண்ணாமலை’ பாம்பு சீன், துள்ளிக் குதித்து எழுந்து “பாட்ஷா’ ஸ்டைல், விசுக்கென ஆள்காட்டி விரலை ஆட்டி “ஆண்டவன் சொல்றான், அருணாச்சலம் செய்றான்’ என விதம் விதமாக நடித்துக் காட்டுகிறான் ரஜினிபாலா. எல்லாவற்றையும் குழந்தை போல் கைதட்டி ரசித்து, வாய் விட்டுச் சிரித்து மகிழ்கிறார் ரஜினி.
அடுத்து கிஃப்ட் பாக்ஸ், ஸ்வீட் பாக்ஸ், கையடக்க ரஜினி சிலை ரஜினிபாலாவுக்கு ரஜினி கொடுக்க, கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாமல் நெக்குருகுகிறது குடும்பம். “”அய்யா ஒங்க பேரைச் சொன்னாத்தான்யா மாத்திரை சாப்பிடுறான்”’என ரஜினிபாலாவின் தங்கை கூறியதும், “”கண்ணா மாத்திரயை ஒழுங்கா சாப்பிடணும், அம்மாகிட்ட நான் விசாரிப்பேன்… என்ன சரியா?”’என்றதும் “இனிமே ஒழுங்கா சாப்பிடுவேன்’’என மழலை மொழியில் சொல்கிறான்
ரஜினிபாலா. “”பார்த்து பத்திரமா கூப்பிட்டுப் போங்க”’என உள்ளத்திலிருந்து வருகிறது ரஜினியின் வார்த்தை கள்.
தலைவர்ரஜினியை மட்டுமே நினைவில் கொண்டுவாழும் வியாசர்பாடி ரஜினிபாலா விரைவில் பூரணகுணம்அடைய கோடிக்கணக்கானரசிகள் பிராத்திப்போம்

Sivakarthikeyan – Vikatan Interview

“ஒரு ஹீரோவை, ஒரே படத்துல காலி பண்ணிட முடியாது!”
”ஃபுல் ஆக்ஷன் சார்… போலீஸ் பைக்ல அப்படியே வீலிங் பண்ணி ஒரு சுமோவை முட்டித் தூக்கிப் பறக்கவிட்டு, வில்லன் பறக்கிற ஹெலிகாப்டரை மோதி வானத்துல தீபாவளி கொண்டாடுறோம். கட் பண்ணா அடுத்த அசைன்மென்ட் அமெரிக்காவுல… இப்படி தயவுசெஞ்சு எதிர்பார்க்காதீங்க. இது வழக்கம்போல நம்ம ஸ்டைல் படம்தான். காமெடிக்கு நடுவுல ஒவ்வொரு படத்துலயும் ஒவ்வொரு ஃப்ளேவர் கொஞ்சம் தூக்கலா இருக்கிற மாதிரி, இந்தப் படத்துல ஆக்ஷன் கொஞ்சம் எக்ஸ்ட்ரா தூக்கல். அவ்வளவுதான்” – கேப் கொடுக்காமல் கலகலக்கிறார் சினாகானா. முதல் போலீஸ் படம், முதல் ஆக்ஷன் படம் என சிவகார்த்திகேயன் ‘காக்கி சட்டை’யில் வருகிறார்.

”காமெடி உங்களுக்கு நல்லா வருதுனு அந்தக் கோட்டைத் தாண்டாமலே படம் பண்றீங்களே… புதுப் புது முயற்சிகள் பண்ற ஐடியா இல்லையா?”

”இந்தா… இப்படியொரு கேள்வி கேட்டுப் புட்டீங்கள்ல! எல்லா ஏரியாவிலும் புகுந்து புறப்பட எனக்கும் ஆசைதான். அதுக்கான முதல் முயற்சி ப்ளஸ் பயிற்சிதான் ‘காக்கி சட்டை’. ‘இவன் பயங்கரமா கதை சொல்வான்’னு எதிர்பார்த்து யாரும் என் படத்துக்கு வர்றது இல்லை. ஜாலியா இருக்கும்னு வர்றாங்க. எங்கே போனாலும், ‘என் மூணு வயசுப் பொண்ணு உங்க ஃபேன்’, ‘என் அஞ்சு வயசுப் பையன் உங்களை மாதிரியே பண்ணுவான்’னு சொல்றாங்க. குழந்தைங்களுக்கு என் காமெடி, பாடி லாங்வேஜ் பிடிச்சிருக்கு. அதனால அவங்களுக்குப் பிடிச்ச மாதிரி படம் பண்ணணும்னு யோசிச்சுத்தான் கதை கேட்கிறேன். வித்தியாசமா பண்றோம்னு ஏடாகூடமா ஏதாவது பண்ணி அவங்களைப் பயமுறுத்திடக் கூடாதுங்கிறதுல கவனமா இருக்கேன். அதே சமயம் ஆக்ஷன், எமோஷன், காதல்னு எல்லா ஃபீல்லயும் அடுத்தடுத்த லெவல் போகணும்னு ஆசை இருக்கு.”

”ஒரு மாஸ் ஹீரோவா நிலைச்சு நிக்க ஆக்ஷன் படம் முக்கியம்னுதான் ‘காக்கி சட்டை’யா?”

”நீங்க சொல்றது கரெக்ட். காமெடி, நம்ம மக்களுக்குப் பிடிக்கும்தான். ஆனா, அதுக்காக முழுநீளக் காமெடி படமா நடிச்சுட்டு இருந்தாலும் போரடிச்சிடும். அதான் வழக்கமான காமெடி ஃபார்முலாவில் ஆக்ஷனைக் கொஞ்சமா சேர்த்திருக்கோம். பார்க்கிறதுக்கும் நிஜ போலீஸ் மாதிரி தெரியணும்னு ஜிம்முக்கு எல்லாம் போய் 69 கிலோவுல இருந்து 76 கிலோவுக்கு வெயிட் ஏத்திக்கிட்டேன். போலீஸ் கதைதான்… ஆனா, கொஞ்ச சீன்லதான் யூனிஃபார்ம் போடுவேன். மத்தபடி வழக்கமான கிண்டல் கேலி இருக்கும். ஒரு சீன்ல ஹீரோயினைப் பத்தி ஃபுல் டீடெய்ல் சொல்வேன். ‘எப்படி என்னைப் பத்தி இவ்வளவு விஷயம் தெரிஞ்சு வைச்சிருக்கே?’ன்னு அவங்க ஆச்சர்யமா கேட்டதும், ‘பொண்ணுங்க பின்னாடி ஃபாலோ பண்ணினதுக்கு புக் பின்னாடி ஃபாலோ பண்ணிருந்தா ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ் என்ன… அமெரிக்க அதிபராவே ஆகியிருப்போம்!’ன்னு காமெடி பன்ச் பேசுவேன். இப்படி காமெடி ஆக்ஷன் பேக்கேஜ்தான் இந்தப் படம். இந்த ஃபார்முலா ஹிட் ஆச்சுன்னா, இதே டிரெண்ட்ல அடுத்தடுத்து படங்கள் பண்ணலாம்… பார்க்கலாம்.”

”தனுஷ், விஜய் சேதுபதியை வெச்சு படம் தயாரிக்கிறார். அதனால தனுஷுக்கும் உங்களுக்கும் பிரச்னைனு வர்ற தகவல்கள் உண்மையா?”

”தோ… இப்போகூட அவர், நான், அனிருத் மூணு பேரும் பசங்களோட சேர்ந்து கிரிக்கெட் விளையாடிட்டு வந்தோம். முன்னாடி எல்லாரும் கொஞ்சம் ஃப்ரீயா இருந்தோம்… சேர்ந்து சுத்தினோம். அதனால ஒண்ணாவே இருக்கிற மாதிரி இருந்துச்சு. இப்போ அவர் இந்தி சினிமா வரைக்கும் பரபரப்பாகிட்டார். நான் அவுட்டோர் படப்பிடிப்புகள்ல மாட்டிக்கிட்டேன். அதனால முன்னாடி மாதிரி அடிக்கடி சந்திச்சுக்க முடியலை. மத்தபடி, நான் எவ்வளவு உயரம் போனாலும் அதைவிட அதிக உயரத்தில் தனுஷ் சாரை என் மனசில் வெச்சிருப்பேன். அவரை சும்மா ‘நண்பர்’னு சொல்லி சுருக்கிட முடியாது. வெல்விஷர்னுகூட சொல்ல முடியாது. எனக்கு எப்பவும் அவர் அதுக்கும் மேல!

‘சிவகார்த்திகேயன் வளர்ச்சியைத் தடுக்க தனுஷ், விஜய் சேதுபதி – நயன்தாராவை வெச்சு ‘நானும் ரௌடிதான்’ படத்தைத் தயாரிக்கிறார்’னு செய்தி வந்தப்ப சிரிப்புதான் வந்துச்சு. தனுஷ் சாரோட ‘வொண்டர் பார்’ தயாரிப்பு நிறுவனம் வெவ்வேறு ஆட்களை வெச்சு நிறையப் படங்கள் தயாரிக்கும். அது சினிமா பிசினஸ். அதுக்கு நடுவுல, ‘நீங்க என் படத்தை மட்டும்தான் தயாரிக்கணும்’னு நான் போய் அவர்கிட்ட சண்டை போட முடியுமா? இன்னொண்ணு… தனுஷ் சார் பல வருஷங்களா சினிமாவுல இருக்கார். ஒரு படத்தைத் தயாரிக்கிறது மூலமா ஒரு ஹீரோவை அழிக்க முடியாதுனு அவருக்கு நல்லாவே தெரியும். அதைவிட முக்கியமா… அவர் அப்படி யோசிக்கிற ஆள் இல்லை. அவர் ரொம்ப நல்ல மனுஷன்.”

”சரி… உங்களுக்குப் போட்டியா விஜய் சேதுபதியை சொல்றாங்க. நீங்க அவரோட சேர்ந்து நடிக்க வாய்ப்பு வந்தா நடிப்பீங்களா… பளிச்னு பதில் சொல்லுங்க?”

”யாருக்கு யார் போட்டிங்கிறதை காலமும் மக்களும்தான் தீர்மானிக்கணும். நானா போய் ‘வாங்க… நாம சண்டை போடலாம்’னு யாரையும் கூப்பிட முடியாது. நடிக்க வந்தப்ப வறுமையை ஜெயிக்கிறது பெரிய விஷயமா இருந்தது. இப்போ முந்தின படங்களைவிட ஒரு படி மேல தாண்டிப் போறது சவாலா இருக்கு. இதுல எங்க போட்டி போட!? நான் ‘எதிர் நீச்சல்’ நடிக்கும்போது, விஜய் சேதுபதி நடிச்ச ‘பீட்சா’ படம் ரிலீஸ் ஆச்சு. அவரோட நம்பர் கேட்டு வாங்கிப் பேசி பாராட்டினேன். நேர்ல பார்த்தா, நல்லா பேசிப்போம். சேர்ந்து நடிக்கணும்னா… இப்போதைக்கு டபுள் ஹீரோ சப்ஜெக்ட் பண்ற ஐடியா இல்லைங்க. முதல்ல தனி ஹீரோவா சக்சஸ் காட்டணும். ரெண்டு பேரையும் ரசிக்கிற மாதிரி சுவாரஸ்யமான ஸ்கிரிப்ட் வந்தா, சேர்ந்து நடிக்கலாம். ஆனா, இதுவரை யாரும் என்கிட்ட அப்படி ஒரு ஐடியாவோடு வரலையே!”

”சிம்பு ஒரு பேட்டியில் பேர் சொல்லாம ‘இன்னொருத்தர் முதுகில் ஏறி வளர்றவரைப் பத்திச் சொல்ல ஒண்ணுமில்லை’னு சொல்லியிருந்தார். அதைப் பத்தி என்ன நினைக்கிறீங்க?”

”இதையெல்லாம்விட பெரிய அடியெல்லாம் பார்த்தாச்சு. இது ஒரு விஷயமா? முதல்ல அந்தப் பேட்டியில் என் பேர் இல்லை. அதனால அதுக்கு நான் ரியாக்ட் பண்ணலை. அப்படியே அவர் என்னைத்தான் குறிப்பிட்டிருந்தாலும், அது அவரோட கருத்து. அவர் கருத்தை அவர் சொல்றதுக்கு அவருக்கு உரிமை உண்டு!”

”ரஜினி, விஜய்னு குழந்தைகளுக்குப் பிடிச்ச ஹீரோ லிஸ்ட்ல உங்க பேர்.. அவங்க இடங்களைப் பிடிக்கிற ஐடியா இருக்கா?”

”சத்தியமா இல்லை. அந்த வரிசையில் என் பெயர் வர்றதே பெரிய சந்தோஷம். மத்தபடி அவங்களோடு என்னை ஒப்பிட்டுப் பேசுறதே தப்பு!”

”கூட நடிச்சதுல பிடிச்ச ஹீரோயின் யார்?”

”என்கூட நடிச்சதுக்காகவே எல்லாரையும் பிடிக்கும் பாஸ்!”

என்னை அறிந்தால்…

தொடர்வெற்றி கண்டுவரும் அஜித்தின் தோள்களில் தொங்கிக்கொண்டிருக்கும் இன்னொரு வெற்றி இந்தப்படம். இயக்குனரின் முந்தைய காக்கிப்படங்களின் காப்பி இதிலும் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்று பேசப்பட்டாலும், ‘இருந்தாலும் என்னவோ இருக்குதுப்பா’ என்று அனைத்துத் தரப்பு ரசிகர்களையும் ஆறுதலடைய வைத்து, ‘தல’யுடைய ரசிகர்களின் அன்புக்குப் பாத்திரமாகியிருக்கிறார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்.

புறத்தோற்றம் குறித்த கோட்டுக்குள் சிக்காமல், இயல்பாக வலம் வந்து, ரசிகர் மனதில் இடம்பிடிக்கிறார் அஜித். அவர் ஏற்றிருக்கும் சத்யதேவ் கதாபாத்திரம், சினிமா உள்ளவரை சிலாகித்துப் பேசப்படும்.

ஒலியடக்கப்பட்டாலும், உதட்டசைவால் புரிந்துகொள்ளக்கூடிய கெட்டவார்த்தையை அவர் பேசும்போது, தியேட்டரில் விசில் ஒலிக்கிறது; கைதட்டல் காதைப் பிளக்கிறது. ஒரு குழந்தைக்குத் தாயாக இருந்துகொண்டு, காதலில் விழும் தடுமாற்றக் கதாபாத்திரத்தில் தடம் மாறாமல் நடித்து, கண்ணியம் சேர்க்கிறார் திரிஷா.அஜித் மீது காதல் வயப்படும் அனுஷ்காவின் நடிப்பை நிச்சயம் ரசிகர்கள் காதலிப்பார்கள்.

விக்டர் என்கிற எதிர் நாயகன் கதாபாத்திரத்தில், தனக்கான புதிய இடத்துக்கு பட்டா போட்டிருக்கிறார் அருண் விஜய். குறைந்த அளவே வாய்ப்பு இருந்தாலும், புதிய தோற்றத்தில் நிறைவான காமெடி வழங்குகிறார் விவேக். அனிகா சுரேந்திரன், பார்வதி நாயர் ஆகியோரின் பங்களிப்பு, கதையின் போக்குக்கு கச்சிதமாகப் பொருந்துகிறது.பாசத் தந்தையாக மனசுக்குள் நிற்கிறார் நாசர்.

சுமன், ஆசிஷ் வித்யார்த்தியின் நடிப்பு கவனத்தை ஈர்க்கிறது.ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் விக்னேஷ் சிவனின் ‘அதாரு…’ பாடல் அமர்க்கள ரகம். தாமரையின் ‘மழை வருதே…’ பாடல் மனதை நனைக்கிறது.ஒளிப்பதிவு செய்திருக்கும் டேன் மெக்கார்த்தர் கவனிக்கத்தக்க கேமராக்காரர். ஸ்டண்ட் சில்வாவின் ஆக்ஷன் காட்சிகள் அதிரடி.எத்தனை முறை எடுத்தாலும் காக்கிச்சட்டையைக் கம்பீரமாகக் காட்டுவேன் என்று உறுதிகூறுகிறார் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன். – See more at: http://www.kungumam.co.in/VArticalinnerdetail.aspx?id=4951&id1=45&issue=20150216#sthash.FcIVLNyo.dpuf

என்னை அறிந்தால் – சினிமா விமர்சனம்

மெல்லிசா ஒரு கோட்டுக்கு அந்தப் பக்கம் இருக்கும் வில்லன்களை அழிப்பதே… ‘என்னை அறிந்தால்’!
கௌதம் வாசுதேவ் மேனன் ஸ்பெஷல் போலீஸ் கதைகளின் இன்னும் ஓர் அத்தியாயம். ஆனால் ஆச்சர்யமான அஜித் படம்!
கதையை அனுஷ்காவில் ஆரம்பித்து அஜித் – அருண் விஜய் நட்புக்குத் தாவி, மாஃபியா – போலீஸ் சேஸ் அடித்து, த்ரிஷா காதல், ஆசிஷ் பகை, உறுப்புக் கடத்தல்… எனப் பல சுற்றுகளுக்குப் பிறகு க்ளைமாக்ஸ். ‘அதான் அஜித் இருக்காரே… எல்லாம் அவர் பார்த்துப்பார்’ என ஆர்ப்பாட்ட ஆக்ஷன்களை அடுக்காமல், ஒரு போலீஸ் ஆபீஸர், முதிர்ச்சியான காதல், காதலின் இழப்பு தரும் தடுமாற்றம்… என அஜித்தை வேறு ட்ரீட்மென்ட்டில் காட்டியிருக்கிறது கௌதம் மேஜிக்!

படத்தில் அஜித்துக்கு கோட் இல்லை; ஆனால், கோடு இருக்கிறது. மெல்லிசான கோட்டுக்கு அந்தப் பக்கம் முரட்டுப் போலீஸாகவும், இந்தப் பக்கம் நல்ல வில்லனாகவும் மாஸ் காட்டியிருக்கிறார். ஆக்ஷனில் வெடிப்பதும் காதலில் உருகுவதும், மகளின் அப்பாவாகக் கதறுவதுமாக… ‘தல’க்கு படத்தில் பல அவதாரங்கள். ‘விக்டரை எனக்குத் தெரியும். அவன் நிச்சயம் வருவான்…’ என இறுகுவதும், ‘நமக்குனு குழந்தை வேண்டாம். என்ன இப்போ… அடிக்கடி மெடிக்கல் ஷாப்புக்கு ஓட வேண்டியிருக்கும். அவ்வளவுதானே?’ எனக் காதலியைச் சமாதானப்படுத்துவதுமாக… வெல்டன் அண்ட் வெல்கம் அஜித்!
அஜித்துக்கு சவால் கொடுக்கும் செம தில் வில்லனாக உதார் பண்ணுகிறார் அருண் விஜய். மிடுக் உடம்பும் முணுக் கோபமுமாக அனலடிக்கிறது அருணின் ஆவேசம். ‘நாம கல்யாணம் பண்ணிக்கலாமா?’ என அஜித் கேட்க, ‘ஊரே பேசுதில்ல’ என்ற த்ரிஷாவின் ரியாக்ஷன்… லவ்லி. ஆறு வயது மகளின் அம்மாவாகவும் பிரியம் ததும்பும் காதலியாகவும்… க்யூட் த்ரிஷா. ‘அய்யோ… அவன் என்னை முதல்தடவை பார்க்கிறப்ப நான் இப்படியா இருக்கணும்?’ எனப் புலம்பும் விமானப் பயணக் காட்சியில் மட்டும் கவனம் ஈர்க்கிறார் அனுஷ்கா.
பிக்பாக்கெட் அடிப்பதுபோல உறுப்புக் கடத்தல் ஒரு முட்டுச் சந்துக்குள் நடப்பதெல்லாம்…மெடிக்கல் மிராக்கிள். பிளாட்பார பிரஜைகளே சல்லிசாகக் கிடைக்கும்போது, போலீஸின் பாதுகாப்பில் இருக்கிற அமெரிக்க ரிட்டர்ன் அனுஷ்காவை அருண் விஜய் கடத்த மெனக்கெடுவது நம்பவே முடியவில்லை. அத்தனை ரணகளத்தில் குழந்தையை பள்ளிக்கு அனுப்புவது… சினிமா மிராக்கிள்!
பெண் மனதின் பிரியம் பேசும் ‘இதயத்தை ஏதோ ஒன்று…’ பாடலில் தாமரையின் ரசனை கற்பனை… கொலுசொலி ஹைக்கூ . ‘தேன்மொழினு பேர் வெச்சுட்டு தமிழ் தெரியலைன்னா, நல்லா இருக்காதுல?’, ‘ஏய் வேணாம்ப்பா… அவன் முதுகுல பேக் எல்லாம் மாட்டியிருக்கான்’ போன்ற க்யூட் குட்டி வசனங்களுக்கு இடையே, பொளேர் பொளேரென விழுது கெட்ட வார்த்தைகள்… காது வேர்க்குது!
பெரும் திருப்பங்களும் ஆச்சர்யங்களும் இல்லாத திரைக்கதையில் ரேஸ் சேஸ் சேர்த்திருக்கிறது டேன் மெக்கார்த்தரின் ஒளிப்பதிவு. பின்னணி இசையில் மிரட்டல் ஸ்கோர் அடித்திருக்கிறார் ஹாரிஸ் ஜெயராஜ்.
ரொம்ப உதாரு!

என்னை அறிந்தால்

அதிரடி போலீஸ் அதிகாரி அஜித்தின் வாழ்க்கையிலே எதிரிகள் புகுந்து அதகளம் செய்ய, பதிலுக்கு அஜித் புகுந்து ரணகளம் செய்வதே ‘என்னை அறிந்தால்’. இந்தத் தடவை கௌதம் துணையோடு இந்த வேட்டை.

நேர்மையும், தூய்மையும் கொண்ட அதிரடி அஜித்திற்கு இடையில் நேர்கிறது இடையூறு. அவருக்கு காதல் துணையாகப் போகும் த்ரிஷா, எதிரிகளின் பழிவாங்கலுக்குப் பணயமாக… அஜித்தின் துணிச்சலுக்கு கேள்விக்குறி இடுகிறார் எதிரி அருண் விஜய். விடுக்கப்பட்ட சவால்களை அஜித் முறியடிப்பதுதான் மொத்தக் கதையே.

போலீஸ் அதிகாரி வேடத்திற்கு கச்சித உடம்பில் பொருந்தாவிட்டாலும், கம்பீரத்தில், தோற்றத்தில், நடையில் சத்யதேவாக நெஞ்சை அள்ளுகிறார் அஜித். முறைத்து விறைத்துக் கொண்டு தான் நிற்கும் சினிமா போலீஸ் என நினைத்தால், ஆச்சரியம் காட்டி மாற்றுகிறார் டைரக்டர் கௌதம்.

ஒரு தகப்பனாக, அருமையான காதலனாக, எதுவும் செய்ய முடியாமல் கதறி நிற்பவராக, இரக்கம் கொண்ட போலீஸ் அதிகாரியாக என மனிதநேயத்தில் பல வண்ணம் காட்டுகிறார் அஜித். கௌதம் மேனனின் துணையின்றி அஜித் இத்தனை இயல்பு காட்டியிருப்பாரா என்பது சந்தேகமே.

அப்படியிருந்தும் ஆக்ஷனில் அஜித் வரும்போது அலறுகிறது தியேட்டர். கதையின் தேவைகளுக்காக தன் ஹீரோயிசத்தைக் குறைத்துக்கொண்ட அழகிற்கே அஜித்திற்கு ஒரு பொக்கே! ‘‘நீங்க இப்படி அழகாகிட்டே போனா, நாங்க என்ன பண்றது?’’ எனப் படத்தில் த்ரிஷா கேட்டிருக்கா விட்டால் நாமே கேட்டிருக்கலாம். பேசும் அத்தனையும் ‘பன்ச்’சாக அடித்து நொறுக்கும் அஜித் இதில் காணாமல் போனது பரவசம்.

நடன ஸ்கூல் நடத்துகிற த்ரிஷா அத்தனை பாந்தம். கண்களிலே காதல் கொட்டும் கனிவு அழகு. குறைந்த பேச்சில், பாவனைகளில் பயணம் செய்யும் த்ரிஷா இன்னும் பளிச்! அனுஷ்கா பெரிய கண்களில் அஜித்தைப் பார்த்து முதல் பார்வையிலேயே மனசைப் பறிகொடுக்கிறார்.

கண்டதும் காதல் க்ளிஷேயெல்லாம் இன்னும் எத்தனை நாளைக்கு பாஸ்?அருண்விஜய்… ஆச்சரியம்! கண்ணில் விழுகிற முடியோடு, வெறி மின்னும் கண்களோடு அதிரடியில் கலங்கடிக்கிறார். கடைசி இருபது நிமிடக் காட்சிகளில் அஜித்திற்கு இணையாக நின்று விளையாடுவது சூப்பர். குழந்தை அனிகா, அஜித்திற்கு பொருத்தமான மகள்.

பாடல்களில் காதல் ததும்பினாலும் காட்சிகளில் வேறு வண்ணம் காட்டுவது புதுமை. இறுதிக்காட்சிகளில் ரகளையான வேகத்தில் வெறியாட்டத்தில் புகுந்து புறப்படுகிற சண்டைக் காட்சிகளுக்காக ஸ்டன்ட் மாஸ்டர் சில்வாவுக்கு சபாஷ்!டேன் மொகார்தர் கேமரா. சமயங்களில் கேமராவும் சண்டையில் இறங்கிவிட்டதோ என்ற அளவுக்கு பரபரப்பு… துறுதுறுப்பு! பின்னணி இசையில் ஹாரிஸ் பின்னுகிறார். பாடல்களில் கொஞ்சமாய் மட்டுமே ஈர்ப்பு. கௌதம், ஹாரிஸ், தாமரை கூட்டணி மீண்டும் சேர்ந்ததற்கு எவ்வளவோ எதிர்பார்த்தோம்… இவ்வளவுதானா?

விவேக்கை வீணடித்திருக்கிறார்கள். கொஞ்சமே வந்தாலும் நாசர் நச்! இவ்வளவு வகைதொகை இல்லாத ஆக்ஷன் கொஞ்சம் அலுப்பூட்டவே செய்கிறது. படத்தின் மெயின் ட்ராக்கான உடல் உறுப்புகளுக்காக ஆளைக் கொல்லும் ‘ரெட் மார்க்கெட்’ புதுசு. ஆனால் இதையே வடிவேலு ‘கிட்னி காமெடி’யாக செய்துவிட்டது நினைவுக்கு வருகிறது. அருண்விஜய்யின் இவ்வளவு வஞ்சினத்திற்கு காரணம் என்னவோ? ஆத்திரம்தான்… அதற்காக இவ்வளவு கெட்ட வார்த்தைகளையா கொட்டுவது?‘தல’ படம்தான்… கௌதம் மேனன் ‘டச்!’